Saturday, June 29, 2019

கண்டராதித்தரின் சிவப்பற்று

கண்டராதித்தசோழர் பாடிய திருவிசைப்பா :



முதலாம் பராந்தகருக்குப்பின்னர், அவர் உயிரோடிருக்கும்போதே அரியணை ஏறியவர் பராந்தகரின் மகன் கண்டராதித்தராவார். பராந்தகர் தில்லைச்சிற்றம்பலத்திற்குப் பொன்வேய்ந்தவ சிவநேயச்செல்வர். அவரின் வழியில் கண்டராதித்தரும் சிவநேயச்செல்வராய் விளங்கினார். தில்லை இறைவன்பால் அன்புகொண்டு ஓர் பதிகம் பாடியுள்ளார். அது சைவத்திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பாவாக நம்பியாண்டார்நம்பிகளால் தொகுக்கப்பட்டுள்ளது. சிவஞான கண்டராத்தித்தன் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளார். இவரைப் புகழ்ந்து ஒட்டக்கூத்தர், கண்டன்கோவை மற்றும் கண்டனலங்காரம் என்றும் இருநூல்களைப் பாடியுள்ளார். இவரின் பட்டத்தரசியார் #_செம்பியன்மாதேவியாரும் சிறந்த சிவநேயச்செல்வியாவார். பல மரத்தளிகளை கற்றளிகளாகக் கட்டுவித்தவர். இவருக்குப்பின்வந்த சோழவரசர்கள் சிவநெறியில் மிகுந்த ஈடுபாடுகொள்ளவும் சிவனுக்குப் பெருங்கோயில்கள் எடுப்பிக்கவும் முதன்மைக்காரணம் இவ்வம்மையேயாவார். இனி, கண்டராதித்தர் பாடிய தில்லைத்திருப்பதிகமாம் அத்திருவிசைப்பாவைக்காண்போம்.

********************************

சிவநெறிமரபில் கோயிலென்னும் திருத்தில்லை

பண்: பஞ்சமம்
ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா


மின்னார் உருவம் மேல்வி ளங்க
வெண்கொடி மாளிகைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து
நின்றது போலும்என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
தென்றில்லை யம்பலத்துள்
என்னா ரமுதை எங்கள் கோவை
என்றுகொல் எய்துவதே. 1

ஓவா முத்தீ அஞ்சு வேள்வி
ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்த ணாளர்
ஆகுதி வேட்டுயர்வார்
மூவா யிரவர் தங்க ளோடு
முன்னரங் கேறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக்
கூடுவ தென்றுகொலோ. 2

முத்தீ யாளர் நான்ம றையர்
மூவா யிரவர்நின்னோ
டொத்தே வாழுந் தன்மை யாளர்
ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டு பாடுந்
தென்றில்லை யம்பலத்துள்
அத்தாவுன்றன் ஆடல் காண
அணைவதும் என்றுகொலோ. 3

மானைப் புரையும் மடமென் னோக்கி
மாமலை யாளோடும்
ஆனஞ் சாடுஞ் சென்னி மேல்ஓர்
அம்புலி சூடும்அரன்
றேனைப் பாலைத் தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக் கொழுந்து தன்னைக்
கூடுவ தென்றுகொலோ. 4

களிவான் உலகிற் கங்கை நங்கை
காதலனே அருளென்
றொளிமால் முன்னே வரங்கி டக்க
உன்னடி யார்க்கருளும்
தெளிவா ரமுதே தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே உன்னை நாயேன்
உறுவதும் என்றுகொலோ. 5

பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப்
பதஞ்சலிக் காட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை பங்கன்
மாமறை யோர்வணங்கச்
சீரால் மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத் தாடுகின்ற
காரார் மிடற்றெம் கண்ட னாரைக்
காண்பதும் என்றுகொலோ. 6

இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன்
இருபது தோளும்இற
மலைதான்எடுத்த மற்றவற்கு
வாளொடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன் றெய்த வில்லி
செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொற் கையி னானைக்
காண்பதும் என்றுகொலோ. 7

வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும்
ஈழமுங் கொண்டதிறற்
செங்கோற் சோழன் கோழி வேந்தன்
செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி ஆடும்
அணிதில்லை யம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம்மி றையை
என்றுகொல் எய்துவதே. 8

நெடியா னோடு நான்மு கன்னும்
வானவரும் நெருங்கி
முடியால் முடிகள் மோதி உக்க
முழுமணி யின்திரளை
அடியார் அலகி னால் திரட்டும்
அணிதில்லை யம்பலத்துக்
கடியார் கொன்றை மாலை யானைக்
காண்பதும் என்றுகொலோ. 9

சீரால்மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத் தாடிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன்
தஞ்சையர் கோன்கலந்த
ஆராஇன்சொற் கண்டரா தித்தன்
அருந்தமிழ் மாலைவல்லார்
பேரா உலகில் பெருமை யோடும்
பேரின்பம் எய்துவரே. 10

இறைவன் : அழகியகூத்தர்
இறைவி : சிவகாமத்தழகி

*****************************

நன்றி. வணக்கம் 🙏
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Saturday, June 15, 2019

இராசராசளின் தேவராத்தமிழிசைப்பணி

தமிழிசைப்பதிகம் பாடவைத்த இராசராசன்


இராசராசன் எடுப்பித்த தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழிசைத்தேவாரப்பதிகங்கள் பாட 48 பிடாரர்களையும் உடுக்கை வாசிக்க ஒருவரையும் கொட்டிமத்தளம் வாசிக்க ஒருவரையும் நியமித்து அவர்களுக்கு நெல்வழங்கவும் பணித்துள்ளான். இவர்கள் இறந்தாலும் வேறுநாடுகளுக்கு சென்றாலும் அவர்களின் உறவினர்களுக்கு நெல்வழங்க பணித்து கல்லிலேவெட்டச் செய்துள்ளான். அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளான்.

இராசராசன் காத்த தமிழிசைப்பண்களையும், கோயில்களில் தமிழிசையை பாடச்செய்தல் வேண்டும்.

வெளிச்சுற்றின் மதிலில் வெளிப்புறத்தில் வடமேற்கு மூலையிலுள்ள #_கல்வெட்டு:


ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள்போலப் பெருநிலச்செவ்வியும் தனக்கே யுரிமைபூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி வெங்கைநாடு கங்கபாடியும் தடிகைபாடியும் நுளம்பபாடியும் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் முரட்டெழில் சிங்களர் ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் திண்டிறல்வென்றித் தண்டாற்கொண்ட தன்னெழில் வளரூழியுளெல்லாயாண்டுந் தொழுதகவிளங்கும் யாண்டேசெழியரைத் தேசுகொள் கோராஜகேஸரி வர்ம்மரான ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவதுவரை உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையாருக்குத் திருப்பதியம் விண்ணப்பம்செய்ய உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் குடுத்த பிடாரர்கள் நாற்பத்தெண்மரும் இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும் இவர்களிலே நிலையாய்க் கொட்டி மத்தளம்வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பதின் மர்க்குப்பெயரால் நிசதம் நெல்லு முக்குறுணி நிவந்தமாய் ராஜகேஸரியோடொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் உடையார் உள்ளுர்ப்பண்டாரத்தேய் பெறவும் இவர்களில் செத்தார்க்கும் அநாதேசம்போனார்க்கும் தலைமாறு அவ்வவர்க்கு அடுத்தமுறை கடவார் அந்நெல்லுப்பெற்றுத் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்யவும் அவ்வவர்க்கு அடுத்தமுறை கடவார் தாந்தாம்யோக்யர் அல்லாதுவிடில் யோக்யராயிருப்பாரை ஆளிட்டுத் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்வித்து அந்நெல்லுப்பெறவும் அவ்வவர்க்கு அடுத்தமுறை கடவாரின்றியொழியில் அந்த நியாயத்தாரே யோக்யராயிருப்பாரை திருப்பதியம் விண்ணப்பஞ்செய்ய இட்டு இட்ட அவனே அவ்வர் பெறும்படி நெல்லுப்பெறவும் ஆக இப்படி உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் திருவாய் மொழிந்தருளின படி கல்லில் வெட்டியது.

அந்த ஐம்பதின்மர்:



1. பாலன் திருவாஞ்சியத்தடிகளான ராஜராஜப்பிச்சனானசதாசிவனுக்கு.
2. திருவெணாவல் செம்பொற்சோதியான தக்ஷிணமேருவிடங்கப்பிச்சனான ஞாநசிவனுக்கு
3. பட்டாலகன் அம்பலத்தாடியான மனோத்தமசிவனுக்கு
4. பட்டாலகன் சீருடைக்கழலான பூர்வ்வசிவனுக்கு
5. பொற்சுவரன் திருநாவுக்கரையனான பூர்வ்வசிவனுக்கு
6. மாதேவன் திருநானசம்பந்தனான ஞானசிவனுக்கு
7. கயிலாயன் ஆரூரனான தர்ம்மசிவனுக்கு
8. செட்டி எடுத்தபாதமான சதாசிவனுக்கு
9. ராமன் சம்பந்தனான சத்யசிவனுக்கு
10. அம்பலவன் பத்தர்கள்டனான வாமசிவனுக்கு
11. கம்பன் திருநாவுக்கரையனான சதாசிவனுக்கு
12. நக்கன் சீராளனான வாமசிவனுக்கு
13. அப்பி திருநாவுக்கரையனான நேத்ரசிவனுக்கு
14. சிவக்கொழுந்து சீராளனான தர்ம்மசிவனுக்கு
15. ஐஞ்ஞூற்றுவன் வெண்கடனான சத்பசிவனுக்கு
16. அரையன் அணுக்கனான திருமறைக்கானான தர்ம்மசிவனுக்கு
17. அரையன் அம்பலக்கூத்தனான ஓங்காரசிவனுக்கு
18. ஆரூரன் திருநாவுக்கரையனான ஞாநசிவனுக்கு
19. கூத்தன் மழலைச்சிலம்பான பூர்வ்வசினுக்கு
20. ஐஞ்ஞூற்றுவன் சீயாரூரான தத்புருஷசிவனுக்கு
21. சம்பந்தன் ஆரூரனான வாமசிவனுக்கு
22. அரையன் பிச்சனான தர்ம்மசிவனுக்கு
23. காஸ்யபன் எடுத்தபாதப்பிச்சனான உருத்ரசிவனுக்கு
24. சுப்பிரமண்யன் ஆச்சனான தர்ம்மசிவனுக்கு
25. கூத்தன் அமரபுஜங்கனான சத்யசிவனுக்கு
26. வெண்காடனான அகோரசிவனுக்கு
27. மாதேவன் திருநாவுக்கரையனான விஜ்ஞாநசிவனுக்கு
28. கூத்தன் வெண்காடனான உருத்ரசிவனுக்கு
29. ஐஞ்ஞூற்றுவன் திருவாய்மூரான அகோரசிவனுக்கு
30. திருமலைக்கூத்தனான வாமசிவனுக்கு
31. ஐஞ்ஞூற்றுவன் எடுத்தபாதமான தர்ம்மசிவனுக்கு
32. அரையன் தில்லைக்கரைசான பூர்வ்வசிவனுக்கு
33. காளிசம்பந்தனான தர்ம்மசிவனுக்கு
34. காபாலிகவாலியான ஞாநசிவனுக்கு
35. வெண்காடன் நமசிவாயமான உருத்ரசிவனுக்கு
36. சிவனனந்தனான யோகசிவனுக்கு
37. சிவக்கொழுந்து சம்பந்தனான அகோரசிவனுக்கு
38. இராமன் கணவதியான ஞாநசிவனுக்கு
39. பிச்சன் வெண்காடனான அகோரசிவனுக்கு
40. மறைக்காடன் நம்பிஆரூரனான ஞாநசிவனுக்கு
41. சோமன்சம்பந்தனான ஞாநசிவனுக்கு முக்குறுணி
42. சத்திதிருநாவுக்கரையனான ஈசானசிவனுக்கு
43. பொற்சுவரன் நம்பியாரூரனான தர்ம்மசிவனுக்கு
44. ஆச்சன் திருநாவுக்கரையனான நேத்ரசிவனுக்கு
45. ஐயாறன் பெண்ணோர்பாகனான இருதயசிவனுக்கு
46. ராஜாதித்தன் அம்பலத்தாடியான சிகாசிவனுக்கு
47. செல்வன் கணவதிதெம்பனான தர்ம்மசிவனுக்கு
48. கூத்தன் தில்லைக்கூத்தனான ஞாநசிவனுக்கு
49. உடுக்கைவாசிக்கும் த்வேதைகோம்புரத்து தத்தய கிருமவித்தன்மகன் சூர்யதேவனுக்கு கிருமவித்தனான ஆலவிடங்க உடுக்கை விஜ்ஜாதிரனான சோமசிவனுக்கு
50. கொட்டி மத்தளம்வாசிக்கும் குணப்புகழ்மருதனான சிகாசிவனுக்கு

நன்றி. வணக்கம்.
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்