Monday, June 6, 2022

தமிழர்களின் அறப்பண்பு

தமிழர்களின் அறப்பண்பு ❤️❤️❤️

நற்றிணை கஎஉ (172)

விளையா டாயமொடு வெண்மண லழுத்தி
மறந்தனந் துறந்த காழ்முளை யகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென்
றன்னை கூறினள் புன்னையது சிறப்பே
யம்ம நாணுது நும்மொடு நகையே
விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலு மிலங்குநீர்த்
துறைகெழு கொண்கநீ நல்கி
னிறைபடு நீழல் பிறவுமா ருளவே.



உரை:-

புதியராய்வந்த பாணர் பாடுகின்ற இளையதாய (மெல்லிய) இசைப்பாட்டுப்போல வெளிய வலம்புரிச்சங்கு ஒலியாநிற்கும் விளங்கிய நீரையுடைய துறைபொருந்திய நெய்தனிலத்தலைவனே, யாம் எம்மொடு விளையாடுகின்ற தோழியரோடுசென்று ஒருநாள் வெள்ளிய மணலிலூன்றினேமாகி மறந்தொழிந்த புன்னைவிதையானது வேரூன்றி முளைத்து முளை தோன்றுதலானே மீண்டும் அதனைநோக்கி மகிழ்ந்து நெய்கலந்த இனியபாலை நீராகவார்த்து இனிமையொடு வளர்க்குநாளில் எமது அன்னை எம்மைநோக்கி 'நீயிர் வளர்த்துவரும் புன்னையானது நும்மினுஞ் சிறந்ததன்றோ, அது நும்முடன்பிறந்த தங்கையாந் தகுதியையுடையது கண்டீர்' என்று இதன் சிறப்பினை விளங்கவுரைத்தனள்; ஆதலின் எமது தங்கையாகிய இப்புன்னையினெதிரில் நும்மொடு நகைத்து விளையாடி மகிழ்வதற்கு யாம் வெட்கமடையாநின்றோம்; அம்மையோ? இவளை அணைந்து நல்குவையோ? நல்குவை யாயின் நிறைந்த மரத்தினிழல் பிறவு மீங்குள்ளன காண்; அவ்வயிற் செல்லுதல் நல்லதொன்றாகும்.

எளிய_உரை (பாடலின் அறக்கருத்து)

நெய்தல் நிலத்தில் தலைவன், தலைவியின் இல்லத்திற்கருகில் ஓர் புன்னைமரத்திடை சந்திக்கின்றனர். அதற்கு, தலைவி தலைவனிடத்தில் சொல்கிறாள், "இனிமேல் இப்புன்னை மரத்தின் அருகில் சந்திக்கவேண்டாம். நான் சிறுவயதில் இந்தப்புன்னை மரத்தை நட்டு, இனிய பாலை ஊற்றி வளர்த்தோம். அப்போது என் அன்னை இப்புன்னை மரத்தை என்னுடைய தங்கையாக எண்ணவேண்டுமென்று புன்னையின் சிறப்பைக் கூறினாள். அப்படி தங்கைபோன்ற புன்னை மரத்தின் அருகில் நாம் மகிழ்ந்து பேசுவது எனக்கு வெட்கமாக இருக்கிறது. தங்கையின் முன்பு காதலர்களாகிய நாம் பேசிக்கொள்வது முறையன்று. அதனால், வேறு மரத்தின் நிழலில் சந்திக்கலாம்". என்று கூறுகிறாள்.

என்னே வியத்தகு தமிழர் அறம். ஒரு பேச்சிற்கு மரத்தை தங்கையென்று எண்ணியதை மதித்து, அதனருகில் மகிழ்ந்து பேசுவதை தவிர்த்த பண்பு வியக்கத்தக்கதே.

நன்றி. வணக்கம்.
தனித்தமிழாளன் நெடுஞ்சேரலாத கரிகாற்பெருவள நெடுஞ்செழியன்

Wednesday, May 25, 2022

கவரி வீசிய காவலன் தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

கவரி வீசிய காவலன் - புறநானூறு 50

பாடியவர் : மோசிகீரனார்.
பாடப்பட்டோன் : சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
திணை : பாடாண்.
துறை : இயன் மொழி.
குறிப்பு : அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் ஒறுத்தல் செய்யாது துயில் எழுந்துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான்; அதுகுறித்து புலவர் பாடிய செய்யுள் இது.

மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையடு, பொலியச் சூட்டிக்,

குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,

இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென

வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே?




விளக்கம் :

 
முகத்தின் தோல் சுருக்கம் இல்லாமல் தோல்வாரால் கட்டப்பட்டது. மருங்குல் என்னும் அதன் அடிப்பகுதியை மயில்தோகை அழகுபடுத்தியது. (போர்முரசு என்பதைக் காட்டும் அடையாளமாக) பொன்னாலான உழிஞைப்பூவும் அதனை அழகுபடுத்தியது.

குருதியில் குளிப்பதற்காக அது வெளியே சென்றிருந்தது. முரசுக்கட்டில் முரசு திரும்புமுன் முரசுக்கட்டில் வெறுமனே இருந்தது. எண்ணெய் நுரைபோல் அதில் மெத்தை இருந்தது. அது முரசுக்கட்டில் என அறியாமல் புலவர் அதன்மேல் உறங்கிவிட்டார்.

முரசுடன் திரும்பிய அரசன் புலவருக்குக் கவரி வீசினான். புலவர் சொல்கிறார் அறியாது கட்டிலேறிய என்னை இரு துண்டாக ஆக்குவதை விட்டதே நல்ல தமிழ்நெறி அறிந்த செயல். அதுவே போதுமானது.

அதனோடு நிறைவடையாமல், பக்கத்திலே வந்து, வலிமைமிக்க உன் தோள்களால் அகன்ற இடமெல்லாம் குளிர்ந்த காற்று வரும்படி, கவரி வீசினாயே! இந்த உலகத்தில் புகழ் உடையோருக்குத்தான் மேலுலகத்தில் வாழும் பேறு கிடைக்கும் என்பார்கள். அதற்கு மாறாக, (குற்றம் செய்த எனக்ககே இந்த உலகத்தில்) மேலுலக வாழ்வு தந்த செயலை என்னென்பேன்?

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நன்றி. வணக்கம்

Wednesday, April 20, 2022

சோழன் நலங்கிள்ளியின் மறத்தையெண்ணி வடநாட்டார் தூங்கார்

வடநாட்டார் தூங்கார் - புறநானூறு 31


பாடியவர் : கோவூர்கிழார்.

பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.

திணை : வாகை.

துறை : அரசவாகை: மழபுல வஞ்சியுமாம்.

சிறப்பு : வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக்கேட்டு அஞ்சிய அச்சத்தால் துஞ்சாக்கண்ணர் ஆயினமை.






சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,

இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை

உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,

நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்

பாசறை யல்லது நீயல் லாயே;

நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்

கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே;

‘போர்’ எனில் புகலும் புனைகழல் மறவர்,

‘காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய;

செல்வேம் அல்லேம்’ என்னார்; ‘கல்லென்

விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்,

குண கடல் பின்ன தாகக், குட கடல்

வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப,

வலமுறை வருதலும் உண்டு’ என்று அலமந்து

நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,

துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.


#_விளக்கம் :

அறத்தைப் பின்தொடர்ந்து பொருளும் இன்பமும் வருவது போல, உன் குடையைப் பின்தொடர்ந்து சேரர், பாண்டியர் குடைகள் வருகின்றன. இதனால் தமிழகமே ஒன்றுபட்டுள்ளது. நீ புகழ் வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டாய். பாசறையில் உள்ளாய். கூர் மழுங்கிய கொம்புகளுடன் போருக்குத் துடிக்கும் உன் களிறு அடங்க மறுக்கிறது. போரை விரும்பும் உன் வீரக்கழல் மறவர் தொலைதூரம் செல்ல விரும்புகின்றனர். கீழைக்கடல் அரசனாகிய நீ தென்கடல் பாண்டியனையும் மேலைக்கடல் சேரனையும் அழைத்துக்கொண்டு வலம் வருவாயோ என்று வடபுலத்து அரசர்கள் நெஞ்சம் நடுங்கித் தூங்காமல் கிடக்கின்றனர்.


நன்றி. வணக்கம் 🙏

Tuesday, January 18, 2022

களிற்றுமேலோன் கடுஞ்சினவேலோன்

களிற்றுமேலோன் கடுஞ்சினவேலோன்


"கடுஞ்சின வாள்வேள் களிறு ஊர்ந்தாங்கு"
( - பதிற்றுப்பத்து 11.6)

"சேயுயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி"
( - பரிபாடல் 5.2)

"கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு"
( - திருமுருகாற்றுப்படை 82)

"ஓடாப் பூட்கை பிணிமுகம் வாழ்த்தி"
( - திருமுருகாற்றுப்படை 247)

நெடுஞ்சேரலாத கரிகாற்பெருவள நெடுஞ்செழியன்