Monday, June 6, 2022

தமிழர்களின் அறப்பண்பு

தமிழர்களின் அறப்பண்பு ❤️❤️❤️

நற்றிணை கஎஉ (172)

விளையா டாயமொடு வெண்மண லழுத்தி
மறந்தனந் துறந்த காழ்முளை யகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென்
றன்னை கூறினள் புன்னையது சிறப்பே
யம்ம நாணுது நும்மொடு நகையே
விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலு மிலங்குநீர்த்
துறைகெழு கொண்கநீ நல்கி
னிறைபடு நீழல் பிறவுமா ருளவே.



உரை:-

புதியராய்வந்த பாணர் பாடுகின்ற இளையதாய (மெல்லிய) இசைப்பாட்டுப்போல வெளிய வலம்புரிச்சங்கு ஒலியாநிற்கும் விளங்கிய நீரையுடைய துறைபொருந்திய நெய்தனிலத்தலைவனே, யாம் எம்மொடு விளையாடுகின்ற தோழியரோடுசென்று ஒருநாள் வெள்ளிய மணலிலூன்றினேமாகி மறந்தொழிந்த புன்னைவிதையானது வேரூன்றி முளைத்து முளை தோன்றுதலானே மீண்டும் அதனைநோக்கி மகிழ்ந்து நெய்கலந்த இனியபாலை நீராகவார்த்து இனிமையொடு வளர்க்குநாளில் எமது அன்னை எம்மைநோக்கி 'நீயிர் வளர்த்துவரும் புன்னையானது நும்மினுஞ் சிறந்ததன்றோ, அது நும்முடன்பிறந்த தங்கையாந் தகுதியையுடையது கண்டீர்' என்று இதன் சிறப்பினை விளங்கவுரைத்தனள்; ஆதலின் எமது தங்கையாகிய இப்புன்னையினெதிரில் நும்மொடு நகைத்து விளையாடி மகிழ்வதற்கு யாம் வெட்கமடையாநின்றோம்; அம்மையோ? இவளை அணைந்து நல்குவையோ? நல்குவை யாயின் நிறைந்த மரத்தினிழல் பிறவு மீங்குள்ளன காண்; அவ்வயிற் செல்லுதல் நல்லதொன்றாகும்.

எளிய_உரை (பாடலின் அறக்கருத்து)

நெய்தல் நிலத்தில் தலைவன், தலைவியின் இல்லத்திற்கருகில் ஓர் புன்னைமரத்திடை சந்திக்கின்றனர். அதற்கு, தலைவி தலைவனிடத்தில் சொல்கிறாள், "இனிமேல் இப்புன்னை மரத்தின் அருகில் சந்திக்கவேண்டாம். நான் சிறுவயதில் இந்தப்புன்னை மரத்தை நட்டு, இனிய பாலை ஊற்றி வளர்த்தோம். அப்போது என் அன்னை இப்புன்னை மரத்தை என்னுடைய தங்கையாக எண்ணவேண்டுமென்று புன்னையின் சிறப்பைக் கூறினாள். அப்படி தங்கைபோன்ற புன்னை மரத்தின் அருகில் நாம் மகிழ்ந்து பேசுவது எனக்கு வெட்கமாக இருக்கிறது. தங்கையின் முன்பு காதலர்களாகிய நாம் பேசிக்கொள்வது முறையன்று. அதனால், வேறு மரத்தின் நிழலில் சந்திக்கலாம்". என்று கூறுகிறாள்.

என்னே வியத்தகு தமிழர் அறம். ஒரு பேச்சிற்கு மரத்தை தங்கையென்று எண்ணியதை மதித்து, அதனருகில் மகிழ்ந்து பேசுவதை தவிர்த்த பண்பு வியக்கத்தக்கதே.

நன்றி. வணக்கம்.
தனித்தமிழாளன் நெடுஞ்சேரலாத கரிகாற்பெருவள நெடுஞ்செழியன்

No comments:

Post a Comment