Thursday, February 14, 2019

தனித்தமிழ்த்திருவாட்டி நீலாம்பிகை அம்மையார்

தனித்தமிழ்த்திருவாட்டி நீலாம்பிகை அம்மையார்



செந்தமிழோடு வடமொழியைச்சேர்த்து எழுதிப்பேசிய மணிப்பிரவாளநடை என்னும் இழிநிலை தமிழுக்கு நேர்ந்தகாலத்து, #_தனித்தமிழியக்கம் தோன்றக்கரணியமாகவிருந்த தனித்தமிழ்த்திருவாட்டி நீலாம்பிகை அம்மையார். மறைமலையடிகளாரின் மகளார். தனித்தமிழையும் பெண்ணுரிமையையும் பேசியவர். ௧௯௩௮ ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாட்டுப்பெண்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர்.

அம்மையார் பதின்மூன்றாண்டுடைய சிறுமியாயிருந்தபோது தம் தந்தையாருடன் தம்முடைய தோட்டத்தில் உலாவிவரும்போது, மறைமலையடிகள், வள்ளலாரின் "பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்" என்னும் பாட்டை பாடிவிட்டு, தம் மகளை நோக்கி, அம்மா, இப்பாடல் நல்ல தனித்தமிழில் உள்ளது. ஆனால், இதில் தேகம் என்னும் வடமொழியை நீக்கி யாக்கை என்னும் தனித்தமிழ்ச்சொல்லை பயன்படுத்தியிருந்தால் மிகவும் இனிமையாக இருந்திருக்கும். இப்படி தமிழில் வடமொழியைக்கலப்பதால் தமிழின் இனிமை கெட்டுவிடுவதோடு காலப்போக்கில் அத்தமிழ்ச்சொற்களும் மறைந்துவிடும் என்று கூறினார். இதைக்கேட்ட அம்மையார், அன்று முதல் தனித்தமிழிலேயே நாம் உரையாடுவோம் என்று தம் தந்தையாரோடு உறுதிபூண்டார். இவ்வரலாற்றை அம்மையாரே தமது "தனித்தமிழ்க்கட்டுரைகள்" என்னும் நூலில் முகவுரையாக எழுதியுள்ளார். அம்மையார் மற்றும் மறைமலையடிகளின் இவ்வுறுதிப்பாடு தனித்தமிழியக்கமாகத் தோன்றி வளர்ந்தது.

தனித்தமிழில் வடசொல் கலந்துவிடக்கூடாதென்பதற்காக வடசொல்லை இனங்கண்டு நீக்கவேண்டி தம் தந்தையாரிடம் வடமொழியைக் கற்றுத்தேர்ந்தவர். பின் அக்காலத்தில் வழக்கிலிருந்த வடமொழிச்சொற்களை நீக்கி அவற்றிற்குத் தனித்தமிழ்ச்சொற்களை பட்டியலிட்டு நூல்களாக வெளியிட்டார். "வடசொற்றமிழ் அகரவரிசை" மற்றும் "வடசொற்றமிழ் அகரவரிசைச்சுருக்கம்" என்பன அவை.

தம் பத்தொன்பதாவது வயதில் தமிழாசிரியரானார்.
தமது தந்தையிடம் தமிழிசைப்பண்களைக் கற்று, தேவாரம், திருவாசகம், திருவருட்பா முதலிய பாடல்களைப்பாடுந்திறம் பெற்றவர். சிவநெறியைப்போற்றிப் பின்பற்றிய அம்மையார்.

* தனித்தமிழ்க்கட்டுரைகள்
* ஆராய்ந்தெடுத்த அறுநூறு
* பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்
* தமிழ்நாடும் தமிழ் மொழியும் முன்னேறுவது எப்படி?
* முப்பெண்மணிகள் வரலாறு
* பட்டினத்தார் பாராட்டிய மூவர்

என தமிழுக்கு அவர்தந்த நூல்கள் பல.

தனித்தமிழ் வளர்ச்சிக்காகவும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய நீலாம்பிகை அம்மையார், தம் நாற்பத்திரண்டாம் அகவையிலேயே இறைவனடியையடைந்துவிட்டார். அவர் மறைந்தாலும் அவரின் தனித்தமிழ்த்தொண்டு தமிழ்மொழி உள்ளளவும் போற்றப்படும்.

அம்மையாரின் வரலாறு அடியேன் ஏழாம் வகுப்பில்படிக்கும்போது பாடமாக வைக்கப்பட்டிருந்தது.

நன்றி. வணக்கம்🙏
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment