சென்னை என்னும் மாதரசன்பட்டினம் சுருக்கவரலாறு:
மதராசு என்பது சென்னை மாநகரமாக 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆங்கிலேயர்களால் 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி உருவாக்கப்பட்டதாக கருதி, சென்னையின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால், சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, நான் பிறந்த எங்கள் கிருட்டிணகிரி மாவட்டம் பெண்ணேசுவர மடம் கிராமத்தில் 1973-ம் ஆண்டு தமிழகத்தொல்லியல்துறையால் பெரிய பாறைக்கல்வெட்டு ஒன்று படியெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டில், சென்னையில் கடற்கரை ஒட்டி இன்றும் அதே பெயரில் இருக்கும் பல இடங்களின் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் அன்றைய துறைமுக நகரங்களாக இருந்தவை.
விசயநகர ஆட்சியின்போது முளுபாகல் மண்டலேசுவரனாக (ஆளுநர் பதவியில்) இருந்தவர் குமாரகம்பண்ணன். இவர் மதுரையில் சுல்தான்களை ஒழித்தவர். முளுவாய் அரசின் கீழ் பையூர் நாடு இருந்தது. பையூர் சோழர்களின் நிகரிலிச்சோழ மண்டலத்தின் கீழ் இருந்தது.
விசயராசேந்திரனின் கீழ் பையூரில் படைகளை வைத்து ஆட்சிசெய்த சிற்றரசன் மதுராந்தகன் வீரநுளம்பன் ராசநாராயணன் கங்கப்பெருமாள் என்பவர் ஆவார். அவரது கல்வெட்டுகள் பெண்ணேசுவர மடம் பெண்ணைநாயனார் கோயிலில் உள்ளது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பையூர் பகுதி விஜயநகர ஆளுகையின் கீழ் வந்தது. முளுவாய் ஆளுநர் குமாரகம்பண்ண உடையாரின் படைத்தளபதி சோமப்பதண்ட நாயகனின் மகன் கூளிமாராயனின் வீரச் செயல்களை 31 வரிகளில் பெரிய கல்வெட்டாக வெட்டி வைத்துள்ளார். இந்த கல்வெட்டில்தான் சென்னையின் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அக்கல்வெட்டின் 16, 17வது வரிகளில்....
“...சானபட்டணம், புதுப்பட்டினம், மாதரசன் பட்டினம் சத்திக்குவரிய ...பட்டினம், நீலாங்கரையான்பட்டினம், கோவளம் (வரி 16)
மற்றுள்ள பல பட்டினங்களும், கரையும், துறையும் உட்படக் கொண்டு இராசாவின் கைய்யிலே காட்டிக்குடுத்து இராசபதமாந தாந’’ (வரி 17)
என்று குறிப்பிட்டுள்ளது.
இக்கல்வெட்டு 1367-ஆம் ஆண்டு வெட்டப்பட்டது, நீர் பாசனத்துக்காக கண்டரக்கூளிமாராயன் பெருவாய்க்கால் வெட்டிய செய்தி மற்றும் வீரச்செயல்கள் பறைசாற்றுகிறது.
இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்துக்காக, தமிழகத்தில் உள்ள விசயநகர காலத்துக் கல்வெட்டுகளை முனைவர் ஒய்.சுப்பராயலு, தொல்லியல் முனைவர் ராஜவேல், பூங்குன்றன் ஆகியோர், காவேரிப்பட்டினத்தில் நடந்த தமிழகத் தொல்லியல் கழகத்தின் 26-வது கருத்தரங்கில் திரும்பவும் படியெடுத்து மீளாய்வு செய்து சென்னையின் பழைய பெயரான மதராசு என்கிற பெயர் சுமார் 700 ஆண்டுகள் பழமையானது என்பதை உறுதி செய்துள்ளனர்.
(இதே ஊர்க்கல்வெட்டில் தான் கையூட்டு(இலஞ்சம்) வாங்குவோருக்கு மரண தண்டனை கொடுக்க கட்டளையிடும் செய்தியும் கிடைக்கிறது)
சென்னை 380 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு உருவாக்கப்பட்டது என கூறுவது வரலாற்றுப் பிழையாகும். சென்னை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரமாகும். பெண்ணேசவர மடம் கல்வெட்டில் உள்ள குறிப்புகள் மூலம் மதராசப்பட்டினம் (எ) சென்னை 650 வயதை கடந்துள்ளது.
இக்கல்வெட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஊர்கள் புதுப்பட்டினம், நீலாங்கரை, கோவளம் என்னும் பெயரில் தற்போதும் இருப்பது நீங்கள் அறிந்ததே, அதன் வரிசையில் மதராசன் பட்டினம் என்று குறிப்பிட்டது தற்போதைய சென்னையின் ஒரு பகுதி என்பது புலனாகிறது.
இந்த மாதரசன் யார் என்ற குறிப்பு யாண்டும் சரிவர கிடைக்கப்பெறவில்லை. ஆனால், மாதரசன் பட்டினம் என்ற பெயரில் இவ்வூர் 1300களிலும் அதற்கு முன்பும் அழைக்கப்பட்டதற்கான சான்று இக்கல்வெட்டால் கிடைக்கப்பெருகிறது.
அதற்கு முன்பும், இப்பகுதி ஊர்களான திருமயிலை, திருவான்மியூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில், திருவேற்காடு, திருவலிதாயம்(பாடி), திருவல்லிக்கேணி என்னும் பழைய ஊர்கள் இதே பெயரில் அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் தேவாரம் மற்றும் நாலாயிரப்பனுவல்களால் கிடைக்கின்றன.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்கள் ஈராயிரமாண்டுகள் பழைய ஊர்களே.
இனி, இவ்வூர் சென்னை என்று எப்படி மாறியது என்று பார்ப்போம்.
விசயநகர ஆட்சியின்போது அதன்சார்பில் மாதரசன் பட்டினப்பகுதியை வேலூரைக்கோட்டையைத் தலைமையாகக்கொண்டு ஆண்டவர் வெங்கடபதி நாயக்கர். அவர் 1639ல் சென்னையைச் சுற்றியுள்ள நிலத்தை ஆங்கிலேயர்களான பிரான்சிசு டே மற்றும் ஹென்றி ஹோகன் என்ற இருவருக்கு 16000 வராகன் வாங்கிக்கொண்டு பட்டா எழுதிக் கொடுத்தார். எழும்பூர் ஆற்றுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம்தான் அவர் பட்டா எழுதிக் கொடுத்த நிலம்.
அப்படி அந்த நிலத்தை ஆங்கிலேயரிடம் கொடுக்கும் போது, தன்னுடைய தந்தையாரின் பெயரான சென்னப்பன் நாயக்கர் எனும் பெயரில் அந்த இடம் அழைக்கப்பட வேண்டும் என்று எழுதிக் கொடுத்தார்.
வெங்கடபதி நாயக்கரின் தந்தையார் பெயர் சென்னப்பன் நாயக்கர். இந்தச் சென்னப்பன் எனும் பெயரை வைத்து சென்னப்ப பட்டினம் என்று அந்த இடத்திற்கு பெயர் வந்தது. இந்தச் சென்னப்ப பட்டினம்தான் கடைசியில் சென்னப் பட்டினமாக மாறியது. பிறகு சென்னப்பட்டினம் சென்னையாக மாறியது. அந்தச் சமயத்தில்தான் சென்னைப் பட்டினத்திற்கு வடக்கே மதராச பட்டினம் இருந்தது. ஆங்கிலேயர்கள் புனித சார்ச் கோட்டை கட்டி, வணிக நகரமாக்கி வாழ்ந்தனர்.
வெங்கடபதி நாயக்கர் ஆங்கிலேயர்களுக்கு பட்டா போட்டுக்கொடுத்த நாள் 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி, அதைத்தான் சென்னை உருவாக்கப்பட்டதாக நாளாகக்கருதி, சென்னையின் பிறந்தநாள் "சென்னை நாள்" என்ற பெயரில் கொண்டாடுகிறோம். பார்த்தீர்களாக, நம்மண் விலைபோன நாளைத் தான் விழாவாகக் கொண்டாடுகிறோம். என்னே கொடுமை.
1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் நாள் தமிழக அரசே சென்னை மாநகரம் என்று பெயர் மாற்றம் செய்தது.
இனி இதே பெயர் நிலைக்கும். நாம் மாற்ற முடியாது. இருந்தாலும் நாம் இந்தவரலாற்றையெல்லாம் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
உங்களின் பொன்னாநேரத்தையொதுக்கிப் படித்தமைக்கு நன்றி, வணக்கம்.
**********************************
படங்கள் மற்றும் தகவல் உதவி : பல்வேறு வலைத்தளங்கள் மற்றும் கிருட்டிணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் மற்றும் வரலாறு நூல்.
தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment