Monday, June 12, 2023

பிறன்மனை நோக்காப் பேராண்மை

பிறன்மனை நோக்காப் பேராண்மை


பொத்தகம் : சிற்றம்பலக்கோவை

அதிகாரம் : 16.உடன்போக்கு (ஓடிப்போகுதல்)

பா : 51 (244) 

இயற்றியவர் : மணிமொழியார் (மணிவாசகர்)




புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்


மீண்டா ரெனஉவந் தேன்கண்டு

    நும்மையிம் மேதகவே

பூண்டா ரிருவர்முன் போயின

    ரேபுலி யூரெனைநின்

றாண்டான் அருவரை ஆளியன்

    னானைக்கண் டேனயலே

தூண்டா விளக்கனை யாயென்னை

    யோஅன்னை சொல்லியதே...244


கொளு

புணர்ந்து டன்வரும் புரவலன் ஒருபால்

அணங்கமர் கோதையை ஆராய்ந்தது.


பொருள் : 


தலைவனோடு உடன்போக்கு(ஓடிப்போன) நிகழ்த்திய தலைவியைத்தேடி செவிலித்தாய் செல்கிறாள். அப்போது, முன்பே புணர்ச்சி நிகழ்த்தி வேறொரு காதலனும் காதலியும் எதிரே வருகின்றனர். அவர்களிடம் தம்மகளைப்பற்றி செவிலித்தாய் வினவுவதாக அமைந்துள்ளது இப்பாட்டு. அதன்பொருள் பின்வருமாறு,


"உடன்போக்கு நிகழ்த்திய இணையர் மீண்டுவந்துவிட்டனரென்று உங்களைக்கண்டு உவகையுற்றேன். இவ்வாறு உங்களைப்போலவே உடன்போக்கு ஒழுக்கத்தைப்பூண்ட இருவர் முன்பு இவ்வழியில் போனார்களா சொல்லுங்கள்?" என செவிலித்தாய் கேட்க, அதற்கு, அக்காதலன்  தன்காதலியிடம் சொல்கிறான்,


"அரியமலையில் இருக்கும் ஆளி(சிங்கம்) போன்றவனை யான்கண்டேன். தூண்டத்தேவையற்ற விளக்கைப்போன்ற என்காதலியே, அந்த ஆளியைப்போன்றவனின் அருகில் யாரோ இருந்தாரென்று இச்செவிலித்தாய் சொல்கிறாள். நீ யாரையாவது கண்டாயா? அதை இந்த அன்னைக்குச் சொல்."


************


தன்காதலியைத் தவிர பிறபெண்களை ஏறெடுத்துங் காணாத பிறன்மனை நோக்காப் பேராண்மையாளர்களாக ஒழுக்கநெறியைப் பின்பற்றி இருந்துள்ளனர் என்னும் செய்தி இப்பாட்டால் அறிய முடிகிறது. எதிரில் வந்த இணையரில் ஆணை மட்டும் பார்த்தானாம், அருகிலிருந்த பெண்ணை நீ பார்த்தாயாவென்று தன்காதலியிடம் கேட்கிறான் காதலன்.


(கொஞ்சம் ஓவர் உருட்டா இருக்கோ) 🤣🤣🤣

No comments:

Post a Comment