Saturday, March 2, 2019

இதழகற்குறட்பாக்கள்

இதழகற்குறட்பாக்கள் இருபத்தெட்டு:



இதழகற்குறள், அதாவது ஒலிக்கும்போது இதழ்கள் ஒட்டா வண்ணம் ஒலிக்கும் குறட்பாவென்று ஒரேயொரு குறளைத்தான் சொல்லுவர். அது, துறவு என்னும் அதிகாரத்தின்கீழ் "யாதனின் யாதனி" என்று தொடங்கும் குறள். ஆனால், அப்படியான இதழகற்குறள்கள் இருபத்தெட்டு உள்ளன.
"ப" மற்றும் "ம" வரிசை எழுத்துகள் இடம்பெறாத குறட்பாக்களே இதழகலிகள் எனப்படுகின்றன. அவற்றை பதிவிட்டுள்ளேன்.

யாழ்ப்பாணத்து வேலுப்பிள்ளை என்னும் புலவர் #_திருத்தில்லை_நீரோட்டக_யமகவந்தாதி" என்னும் ஒரு அந்தாதி நூலைச்செய்துள்ளார். அவ்வந்தாதியின் 100 பாக்களும் இதழகல் பாக்களே. அதைப்பற்றி மற்றோர்நாள் பார்க்கலாம். இப்போது இக்குறட்பாக்களைப் படிக்க.

1) தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று. 208

2) வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர். 240

3) அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர். 286

4) இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310

5) யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். 341

6) இன்சொலா லீத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு. 387

7) நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது. 419

8 ) அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர். 427

9) தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். 446

10) ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில். 472

11) எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல். 489

12) செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்.516

13) அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. 523

14) கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது
தூக்கங் கடிந்து செயல். 668

15) வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று. 678

16) நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல். 679

17) கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல். 894

18) எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து. 1080

19) நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து 1082

20) உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண். 1177

21) வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
யாரஞ ருற்றன கண்.1179

22) காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து. 1211

23) நனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி னுண்டென் னுயிர். 1213

24) நனவினா னல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்.1219

25) தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
கொடிய ரெனக்கூற னொந்து. 1236

26) உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் னெஞ்சு. 1249

27) காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல் லவை. 1286

28) தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
தினிய விருந்ததென் னெஞ்சு. 1296

***************************************

நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
உதவி : வலைத்தளம்

No comments:

Post a Comment