Saturday, March 23, 2019

களிற்றையட்டும் யாளி

களிற்றைக்கொல்லும் யாளி:




ஆளி நன்மா னணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்
தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு

- முடத்தாமக்கண்ணியார் பாடிய
பொருநராற்றுப்படை - 139 முதல் 142 அடிகள்

உரை :
யாளியாகிய சிறந்த விலங்கின் வருத்துதலையுடைய குருளையின், கூற்றுவனுடையவலியைக்காட்டிலும் மிகுகின்ற வலியாலே செருக்குக்கொண்டு, முலையுண்ணுதலைக் கைவிடாத இளம்பருவத்தில் விரைவாக, முதன்முதலிற் கொள்வதற்குக் காரணமான வேட்டையிற் களிற்றைக்கொன்றாற் போல, (கரிகாற்சோழன் தன் இளம் பருவத்திலேயே சேரனையும் பாண்டியனையும் வெண்ணிப்போரில் வெற்றிகொண்டான்).

நூல் : பொருநராற்றுப்படை

நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Friday, March 8, 2019

மகளிர் ஆடவர் அகவையும் பருவங்களும்

மகளிர் ஆடவர் அகவையும் பருவங்களும்:




மகளிருக்கும் ஆடவருக்கும் முறையே ஏழேழ் பருவங்களென்றும் இன்னின்ன அகவையோர் இன்னின்ன பருவத்தோரென்று பலரும் அறிந்ததே. ஆயினும் இவ்வகவைகளும் பருவங்களும் பகுத்து இலக்கணங்கூறியது எந்நூலென்றும் யாரென்றும் அறிந்திலோம் நாம். ஆகையினாலே, நென்னலை(நேற்று) யான் இஃதைத்தேடி இணையத்திலுலாவி அறியப்பெற்றேன். அஃதை, முகநூல் நண்பர்கள் நுங்கட்கு அறிவிக்கும்பொருட்டே இப்பதிவை இடுகிறேன். விருப்புளோர் படித்தறிக, வெறுப்புளோர் விடுத்தொழிக.

பன்னிருபாட்டியலும்_திருக்கைலாயஞானவுலாவும்:


திருக்கைலாயஞானவுலா:


திருக்கைலாயஞானவுலா என்பது, சிவநெறியில் (சைவசமயம்) இருக்கும் பன்னிருதிருமுறைநூல்களில் பதினொன்றாம் திருமுறையுள் சேரமான் பெருமாள் என்ற மாக்கோதை நாட்டையாண்ட சேரமன்னர் பாடிய நூல். இவ்வேழ்பருவப்பெண்களை மட்டும் குறிப்பிடுகிறார். அகவைகளை விளக்கவில்லை. இவரின் காலம் 8ஆம் நூற்றாண்டு. தமிழில் எழுந்த முதல் உலாநூலான இஃதை ஆதிவுலாவென்றும் அழைப்பர். இவரின் கதையையும் நூலைப்பற்றியும் திருடத்தொண்டர்மாக்கதை (பெரியபுராணம்) பேசுகிறது. (இங்கு அப்பாக்களை பதிவிடவில்லை).

பன்னிருபாட்டியல்: இனவியல்:


பன்னிருபாட்டியல் என்பது செய்யுளிலக்கணத்தை விளக்கும் ஒருநூல். இஃது 15 புலவர்களால் பாடிய பாக்கள் பின்னோரொருவரால் தொகுக்கப்பட்ட தொகைநூலாகையால் இன்ன பாவை இன்னார் பாடினாரென்று துணிதற்கில்லை. இருப்பினும், பெண்பாற்பருவங்களை பொய்கையார் என்ற புலவரும் ஆண்பாற்பருவங்களை அவிநயனார் என்ற புலவரும் பாடியதாகக்குறிக்கப்பட்டுள்ளது. இந்நூலின் பாக்களின் காலத்தையும் தொகுத்த காலத்தையும் அறுதியிட்டுக்கூறவியலவில்லை.

நூற்பாக்கள்:


பெண்பாற்பருவங்களும் அகவையும்:


ஏழு நிலையு மியம்புங் காலைப்
பேதை பெதும்பை மங்கை மடந்தை
யரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காத
னோக்கி யுரைப்பது நுண்ணியோர் கடனே. 220

பேதைக் கியாண்டே யைந்துமுத லெட்டே. 221

பெதும்பைக் கியாண்டே யொன்பதும் பத்தும். 222

மங்கைக் கியாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவுஞ் சாற்றும். 223

மடந்தைக் கியாண்டே பதினைந்து முதலாத்
திடம்படு மொன்பதிற் றிரட்டி செப்பும். 224

அரிவைக் கியாண்டே யறுநான் கென்ப. 225

தெரிவைக் கியாண்டே யிருபத்தொன்பது. 226

ஈரைந் திருநான் கிரட்டி கொண்டது
பேரிளம் பெண்டுக் கியல்பென மொழிப. 227

                                                    - பொய்கையார்.

ஆண்பாற்பருவங்களும் அகவையும்:


காட்டிய முறையே நாட்டிய வாண்பாற்
கெல்லையும் பெயரு மியல்புற வாய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரு முளரே. 228

பாலன் யாண்டே யேழென மொழிப. 229

மீளி யாண்டே பத்தியை காறும். 230

மறவோன் யாண்டே பதினான் காகும். 231

திறலோன் யாண்டே பதினைந் தாகும். 232

பதினா றெல்லை காளைக் கியாண்டே. 233

அத்திற மிறந்த முப்பதின் காறும்
விடலைக் காகு மிகினே முதுமகன். 234
                 
நீடிய நாற்பத் தெட்டி னளவு
மாடவர்க் குலாப்புற முரித்தென மொழிப. 235
                         
                                             - அவிநயனார்.

இவ்விருநூற்களை விடுத்து, ஆடவர் மகளிர் அகவைகளைப்பகுத்து பருவங்களைக்கூறும் வேறுநூல்களிருப்பின் அறிந்தோர் விளக்கிப்பதிவிட வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். பதிவில் குற்றங்குறைகளிருப்பின் அடியேனை திருத்தவேண்டுகிறேன். நன்றி. வணக்கம் 🙏

உதவி :
பன்னிருபாட்டியல் நூல்,
திருக்கைலாயஞானவுலா நூல்
மற்றும் வலைத்தளங்கள்.
தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

தமிழவை பெண்பாற்புலவர்கள்

தமிழவை பெண்பாற்புலவர்கள்




ஈராயிரமாண்டுகட்கு முன்பே வீரமும் கல்வியில் புலமையும்பெற்றிருந்த பெண்கள் நிறைந்திருந்த குடி உலகிலேயே நம் தமிழ்க்குடியாகத்தான் இருந்திருக்கமுடியும்.

௧) அச்சியத்தை மகள் நாகையார்
௨) ஔவையார்
௩) அள்ளூர் நன்முல்லையார்
௪) ஆதிமந்தி
௫) இளவெயினி
௬) உப்பை ஃ உறுவை
௭) ஒக்கூர் மாசாத்தியார்
௮) கரீனா கண்கணையார்
௯) கவியரசி
௰) கழார் கீரன் எயிற்றியார்
௧௧) கள்ளில் ஆத்திரையனார்
௧௨) காக்கை பாடினியார் நச்செள்ளையார்
௧௩) காமக்கணிப் பசலையார்
௧௪) காரைக்காலம்மையார்
௧௫) காவற்பெண்டு
௧௬) கிழார் கீரனெயிற்றியார்
௧௭) குட புலவியனார்
௧௮) குமிழிநாழல் நாப்பசலையார்
௧௯) குமுழி ஞாழல் நப்பசையார்
௨०) குறமகள் ஃ இளவெயினி
௨௧) குறமகள் ஃ குறிஎயினி
௨௨) குற மகள் இளவெயினியார்
௨௩) கூகைக்கோழியார்
௨௪) தமிழறியும் பெருமாள்
௨௫) தாயங்கண்ணி
௨௬) நக்கண்ணையார்
௨௭) நல்லிசைப் புலமை மெல்லியார்
௨௮) நல்வெள்ளியார்
௨௯) நெட்டிமையார்
௩०) நெடும்பல்லியத்தை
௩௧) பசலையார்
௩௨) பாரிமகளிர் (அங்கவை சங்கவை)
௩௩) பூங்கண்ணுத்திரையார்
௩௪) பூங்கண் உத்திரையார்
௩௫) பூதபாண்டியன் தேவியார்
௩௬) பெண்மணிப் பூதியார்
௩௭) பெருங்கோப்பெண்டு
௩௮) பேய்மகள் இளவெயினி
௩௯) பேயனார்
௪०) பேரெயென் முறுவலார்
௪௧) பொத்தியார்
௪௨) பொன்மணியார்
௪௩) பொன்முடியார்
௪௪) போந்தலைப் பசலையார்
௪௫) மதுவோலைக் கடையத்தார்
௪௬) மாற்பித்தியார்
௪௭) மாற்பித்தியார் (இயற்பெயர் பித்தி)
௪௮) மாறோக்கத்து நாப்பசலையார்
௪௯) முள்ளியூர் பூதியார்
௫०) முன்னியூப் பூதியார்
௫௧) வரதுங்க ராமன் தேவியார்
௫௨) வருமுலையாருத்தி
௫௩) வில்லிபுத்தூர்க் கோதையார்
௫௪) வெண்ணிக் குயத்தியார்
௫௫) வெள்ளி வீதியார்
௫௬) வெறிபாடிய காமக்கண்ணியர்

தொகுப்பு : விக்கிபீடியா.

நன்றி.
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

"பெண்" என்பதன் வேறுசொற்கள்

"பெண்" என்னும் சொல்லின் வேறுசொற்கள்




மகடூஉ, ஆடவள், மாது, மகள் (மகளிர்), தையல், ஆட்டி, ஆயிழை, அணங்கு, பிணவு, பூவை, பாவை, பெண்டு, ஏழை, கிழத்தி, காந்தை, காரிகை, கோதை, சுரிகுழல், நல்லாள், நுண்ணிடை, மடவரல், மடவோள், மாயோள், மானினி, மின், வஞ்சி, நங்கை, விறலி, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண், "பெண்".
பெண் என்னும் சொல்லுக்கு தமிழில் யான் கேள்வியுற்ற வேறுசில சொற்கள்.

நன்றி
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Saturday, March 2, 2019

இதழகற்குறட்பாக்கள்

இதழகற்குறட்பாக்கள் இருபத்தெட்டு:



இதழகற்குறள், அதாவது ஒலிக்கும்போது இதழ்கள் ஒட்டா வண்ணம் ஒலிக்கும் குறட்பாவென்று ஒரேயொரு குறளைத்தான் சொல்லுவர். அது, துறவு என்னும் அதிகாரத்தின்கீழ் "யாதனின் யாதனி" என்று தொடங்கும் குறள். ஆனால், அப்படியான இதழகற்குறள்கள் இருபத்தெட்டு உள்ளன.
"ப" மற்றும் "ம" வரிசை எழுத்துகள் இடம்பெறாத குறட்பாக்களே இதழகலிகள் எனப்படுகின்றன. அவற்றை பதிவிட்டுள்ளேன்.

யாழ்ப்பாணத்து வேலுப்பிள்ளை என்னும் புலவர் #_திருத்தில்லை_நீரோட்டக_யமகவந்தாதி" என்னும் ஒரு அந்தாதி நூலைச்செய்துள்ளார். அவ்வந்தாதியின் 100 பாக்களும் இதழகல் பாக்களே. அதைப்பற்றி மற்றோர்நாள் பார்க்கலாம். இப்போது இக்குறட்பாக்களைப் படிக்க.

1) தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று. 208

2) வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர். 240

3) அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர். 286

4) இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310

5) யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். 341

6) இன்சொலா லீத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு. 387

7) நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது. 419

8 ) அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர். 427

9) தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். 446

10) ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில். 472

11) எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல். 489

12) செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்.516

13) அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. 523

14) கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது
தூக்கங் கடிந்து செயல். 668

15) வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று. 678

16) நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல். 679

17) கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல். 894

18) எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து. 1080

19) நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து 1082

20) உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண். 1177

21) வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
யாரஞ ருற்றன கண்.1179

22) காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து. 1211

23) நனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி னுண்டென் னுயிர். 1213

24) நனவினா னல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்.1219

25) தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
கொடிய ரெனக்கூற னொந்து. 1236

26) உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் னெஞ்சு. 1249

27) காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல் லவை. 1286

28) தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
தினிய விருந்ததென் னெஞ்சு. 1296

***************************************

நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
உதவி : வலைத்தளம்