மகளிர் ஆடவர் அகவையும் பருவங்களும்:
மகளிருக்கும் ஆடவருக்கும் முறையே ஏழேழ் பருவங்களென்றும் இன்னின்ன அகவையோர் இன்னின்ன பருவத்தோரென்று பலரும் அறிந்ததே. ஆயினும் இவ்வகவைகளும் பருவங்களும் பகுத்து இலக்கணங்கூறியது எந்நூலென்றும் யாரென்றும் அறிந்திலோம் நாம். ஆகையினாலே, நென்னலை(நேற்று) யான் இஃதைத்தேடி இணையத்திலுலாவி அறியப்பெற்றேன். அஃதை, முகநூல் நண்பர்கள் நுங்கட்கு அறிவிக்கும்பொருட்டே இப்பதிவை இடுகிறேன். விருப்புளோர் படித்தறிக, வெறுப்புளோர் விடுத்தொழிக.
பன்னிருபாட்டியலும்_திருக்கைலாயஞானவுலாவும்:
திருக்கைலாயஞானவுலா:
பன்னிருபாட்டியல்: இனவியல்:
நூற்பாக்கள்:
பெண்பாற்பருவங்களும் அகவையும்:
பேதை பெதும்பை மங்கை மடந்தை
யரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காத
னோக்கி யுரைப்பது நுண்ணியோர் கடனே. 220
பேதைக் கியாண்டே யைந்துமுத லெட்டே. 221
பெதும்பைக் கியாண்டே யொன்பதும் பத்தும். 222
மங்கைக் கியாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவுஞ் சாற்றும். 223
மடந்தைக் கியாண்டே பதினைந்து முதலாத்
திடம்படு மொன்பதிற் றிரட்டி செப்பும். 224
அரிவைக் கியாண்டே யறுநான் கென்ப. 225
தெரிவைக் கியாண்டே யிருபத்தொன்பது. 226
ஈரைந் திருநான் கிரட்டி கொண்டது
பேரிளம் பெண்டுக் கியல்பென மொழிப. 227
- பொய்கையார்.
ஆண்பாற்பருவங்களும் அகவையும்:
கெல்லையும் பெயரு மியல்புற வாய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரு முளரே. 228
பாலன் யாண்டே யேழென மொழிப. 229
மீளி யாண்டே பத்தியை காறும். 230
மறவோன் யாண்டே பதினான் காகும். 231
திறலோன் யாண்டே பதினைந் தாகும். 232
பதினா றெல்லை காளைக் கியாண்டே. 233
அத்திற மிறந்த முப்பதின் காறும்
விடலைக் காகு மிகினே முதுமகன். 234
நீடிய நாற்பத் தெட்டி னளவு
மாடவர்க் குலாப்புற முரித்தென மொழிப. 235
- அவிநயனார்.
இவ்விருநூற்களை விடுத்து, ஆடவர் மகளிர் அகவைகளைப்பகுத்து பருவங்களைக்கூறும் வேறுநூல்களிருப்பின் அறிந்தோர் விளக்கிப்பதிவிட வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். பதிவில் குற்றங்குறைகளிருப்பின் அடியேனை திருத்தவேண்டுகிறேன். நன்றி. வணக்கம் 🙏
உதவி :
பன்னிருபாட்டியல் நூல்,
திருக்கைலாயஞானவுலா நூல்
மற்றும் வலைத்தளங்கள்.
தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment