Sunday, April 14, 2019

தொல்லாசான் சொன்ன பெயர்மரபு :


பொருளதிகாரத்து மரபியல் நூற்பாக்கள்




இளமைப்பெயர்கள் ஒன்பது:


மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற்
பார்ப்பும் பறழுங் குட்டியுங் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறிமென்
றொன்பதுங் குழவியொ டிளமைப் பெயரே....1

பொருள் : பார்ப்பு, பறள், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என்னுமிவ்வொன்பதும் உயிர்களின் இளமைப்பெயர்களாம்.

ஆண்பாற்பெயர்கள் பதினைந்து:


ஏறு மேற்றையு மொருத்தலுங் களிறுஞ்
சேவுஞ் சேவலு மிரலையுங் கலையும்
மோத்தையுந் தகரு முதளு மப்பரும்
போத்துங் கண்டியுங் கடுவனும் பிறவும்
யாத்த ஆண்பாற் பெயரென மொழிப....2

பொருள் : ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்னுமிப்பதினைந்தும் பிறவும் உயிர்களில் ஆண்பாற்பெயர்களென அறிஞர்கள் மொழிவராம். இன்னுமுளதாம். ஆனால், தொல்லாசிரியர் இப்பதினைந்தோடு நின்றார்.

பெண்பாற்பெயர்கள் பதின்மூன்று:


பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்
மூடும் நாகுங் கடமையு மளகும்
மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்
அந்தஞ் சான்ற பிடியொடு பெண்ணே....3

பொருள் : பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்னுமிப்பதின்மூன்றும் உயிர்களில் பெண்பாற்பெயர்களாம்.

*****************************************
உலகில் வேறெந்த மொழியிலும் இத்தனை பொதுப்பெயர்வகைகளிருக்க ஒருக்காலும் வாய்ப்பில்லையெனத் துணியலாம் தமிழர்கள்.

நன்றி. வணக்கம்.
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment