Wednesday, May 25, 2022

கவரி வீசிய காவலன் தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

கவரி வீசிய காவலன் - புறநானூறு 50

பாடியவர் : மோசிகீரனார்.
பாடப்பட்டோன் : சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
திணை : பாடாண்.
துறை : இயன் மொழி.
குறிப்பு : அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் ஒறுத்தல் செய்யாது துயில் எழுந்துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான்; அதுகுறித்து புலவர் பாடிய செய்யுள் இது.

மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையடு, பொலியச் சூட்டிக்,

குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,

இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென

வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே?




விளக்கம் :

 
முகத்தின் தோல் சுருக்கம் இல்லாமல் தோல்வாரால் கட்டப்பட்டது. மருங்குல் என்னும் அதன் அடிப்பகுதியை மயில்தோகை அழகுபடுத்தியது. (போர்முரசு என்பதைக் காட்டும் அடையாளமாக) பொன்னாலான உழிஞைப்பூவும் அதனை அழகுபடுத்தியது.

குருதியில் குளிப்பதற்காக அது வெளியே சென்றிருந்தது. முரசுக்கட்டில் முரசு திரும்புமுன் முரசுக்கட்டில் வெறுமனே இருந்தது. எண்ணெய் நுரைபோல் அதில் மெத்தை இருந்தது. அது முரசுக்கட்டில் என அறியாமல் புலவர் அதன்மேல் உறங்கிவிட்டார்.

முரசுடன் திரும்பிய அரசன் புலவருக்குக் கவரி வீசினான். புலவர் சொல்கிறார் அறியாது கட்டிலேறிய என்னை இரு துண்டாக ஆக்குவதை விட்டதே நல்ல தமிழ்நெறி அறிந்த செயல். அதுவே போதுமானது.

அதனோடு நிறைவடையாமல், பக்கத்திலே வந்து, வலிமைமிக்க உன் தோள்களால் அகன்ற இடமெல்லாம் குளிர்ந்த காற்று வரும்படி, கவரி வீசினாயே! இந்த உலகத்தில் புகழ் உடையோருக்குத்தான் மேலுலகத்தில் வாழும் பேறு கிடைக்கும் என்பார்கள். அதற்கு மாறாக, (குற்றம் செய்த எனக்ககே இந்த உலகத்தில்) மேலுலக வாழ்வு தந்த செயலை என்னென்பேன்?

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நன்றி. வணக்கம்

Wednesday, April 20, 2022

சோழன் நலங்கிள்ளியின் மறத்தையெண்ணி வடநாட்டார் தூங்கார்

வடநாட்டார் தூங்கார் - புறநானூறு 31


பாடியவர் : கோவூர்கிழார்.

பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.

திணை : வாகை.

துறை : அரசவாகை: மழபுல வஞ்சியுமாம்.

சிறப்பு : வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக்கேட்டு அஞ்சிய அச்சத்தால் துஞ்சாக்கண்ணர் ஆயினமை.






சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,

இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை

உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,

நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்

பாசறை யல்லது நீயல் லாயே;

நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்

கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே;

‘போர்’ எனில் புகலும் புனைகழல் மறவர்,

‘காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய;

செல்வேம் அல்லேம்’ என்னார்; ‘கல்லென்

விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்,

குண கடல் பின்ன தாகக், குட கடல்

வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப,

வலமுறை வருதலும் உண்டு’ என்று அலமந்து

நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,

துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.


#_விளக்கம் :

அறத்தைப் பின்தொடர்ந்து பொருளும் இன்பமும் வருவது போல, உன் குடையைப் பின்தொடர்ந்து சேரர், பாண்டியர் குடைகள் வருகின்றன. இதனால் தமிழகமே ஒன்றுபட்டுள்ளது. நீ புகழ் வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டாய். பாசறையில் உள்ளாய். கூர் மழுங்கிய கொம்புகளுடன் போருக்குத் துடிக்கும் உன் களிறு அடங்க மறுக்கிறது. போரை விரும்பும் உன் வீரக்கழல் மறவர் தொலைதூரம் செல்ல விரும்புகின்றனர். கீழைக்கடல் அரசனாகிய நீ தென்கடல் பாண்டியனையும் மேலைக்கடல் சேரனையும் அழைத்துக்கொண்டு வலம் வருவாயோ என்று வடபுலத்து அரசர்கள் நெஞ்சம் நடுங்கித் தூங்காமல் கிடக்கின்றனர்.


நன்றி. வணக்கம் 🙏

Tuesday, January 18, 2022

களிற்றுமேலோன் கடுஞ்சினவேலோன்

களிற்றுமேலோன் கடுஞ்சினவேலோன்


"கடுஞ்சின வாள்வேள் களிறு ஊர்ந்தாங்கு"
( - பதிற்றுப்பத்து 11.6)

"சேயுயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி"
( - பரிபாடல் 5.2)

"கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு"
( - திருமுருகாற்றுப்படை 82)

"ஓடாப் பூட்கை பிணிமுகம் வாழ்த்தி"
( - திருமுருகாற்றுப்படை 247)

நெடுஞ்சேரலாத கரிகாற்பெருவள நெடுஞ்செழியன்








 

Thursday, April 22, 2021

சிந்துவில் சிவவழிபாடு - நீறுபூசிய முகம்

 சிந்து எழுத்தில் 

      திருநீறு  பூசிய முகம் .


     சிவனிய வழிபாட்டின் 

   5000 - ஆண்டுகள்  தொன்மை . 






    வாழ்வின் எதார்த்தம் சில போது நமக்கு நம்ப முடியாத வியப்பைத் தரும் . அப்படி ஒரு வியப்பளிக்கும் தருணம்  என்னை எதிர் கொண்டது . என் குடும்பம் பகுத்தறிவுப் பாதையில் முற்போக்கானஇடதுசாரிச் சிந்தனையுள்ளவர்களைக் கொண்டது . எனக்கு நினைவு தெரிந்து என் வீட்டில் இறை வழிபாடு செய்ததே இல்லை . அப்பா பொதுவுடைமைச் சிந்தனையும் , இறை மறுப்புக் கொள்கையும் கொண்டவர் . அப்போதே மாதத்திற்கு நூற்றுக் கணக்கான உரூபாய் செலவு செய்து பல்துறை நூல்களும் , அரசியல் இலக்கியங்களும் ,  எளிமையான தொல்லியல் , இலக்கிய நூல்களும் எங்களுக்கு வாங்கித் தருவார் . வழிபாடு இறைவணக்கம் தொடர்பான நூல்கள் வாங்கியதே இல்லை .


      சினிமா நடிகர்கள் , இறைவுருவப் படங்கள் எங்கள் வீட்டில் மாட்டக் கூடாது என்பது எங்கள் வீட்டின் எழுதப்படாத சட்டம் . கல்லூரியில் சேரும்வரை  வீரபாண்டியக் கட்டபொம்மன் ,  கப்பலோட்டியத் தமிழன் , சிவகங்கைச் சீமை என்று கைவிட்டு எண்ணக்கூடிய சில திரைப்படங்களே பார்த்துள்ளேன் . ஆனால் தமிழ்நாட்டின் தலையாய எழுத்தாளர்கள் அனைவரது நூல்களையும் வாங்கித் தருவார் . என் திருமணத்திற்குப் பிறகு  எனது மனைவியும் சகோதரர்கள்  இருவரது மனைவியரென்று   எங்கள்  வீட்டு மருமகள்களே எங்கள் வீட்டுக்கு இறைவழிபாட்டைக் கொண்டு வந்தார்கள் . என் மனைவி நான் அவர்  சாமி கும்பிடுவதைத் தடை செய்துவிட்டதாகவும் , தனக்கு அதில் விருப்பம் என்று என் தந்தையிடம் முறையிட்டபோது என்னை அழைத்து " நம் போன்ற நாத்திகர்களே பிறரது கருத்துகளுக்கு மதிப்பளிப்பவர்கள் . இது அவள் உரிமையில் தலையிடுவதாகும் . உன் தனிப்பட்ட கருத்துரிமை போல அவளுக்கும் அவளது கருத்துகளைக் கடைப்பிடிக்க உரிமையுண்டு "  என்று சொல்லி என்னிடம் அவள் உரிமையைப் பெற்றுக் கொடுத்தார் . 


      இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் எனது சிந்து நாகரிக எழுத்தாய்வில்  தமிழ்ச் சிந்து மக்கள் முற்ற முழுக்கத்  தங்கள் வழிபாடு சார்ந்தே முத்திரைகள் வெளியிட்டுள்ளார்கள் என்றறிந்த போது  என மனையாளுக்கு நான் கொடுத்த அதே உரிமையைச் சிந்து மக்களின் வழிபாட்டுரிமையை எத்தடையுமின்றி வெளிப்படுத்தி அவர்களுக்கும் தந்து இந்த  உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உறுதியேற்றேன் . என் குடும்பச் சூழலறிந்த நண்பர்களுக்கு வியப்பு . என் கருத்துப்போலச் செய்திகளை  எத்தயக்கமும் இன்றி நான் எழுதுவதாகக் கூறுகின்றனர் .   மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர் .


      இப்போது நான் படித்துக் காட்டப்போகும் முத்திரையும் அப்படி வியப்புக்குரியதுதான் . சிந்து எழுத்தில் படவுருக்கள்  லோகோகிராபிக் சொல் வடிவங்களாக உள்ளன என்பதும் நாமறிவோம் . அவை  ஒலிநிலை வடிவங்களுக்குத் துணையாக இயங்குகின்றன .  இந்த முத்திரையும்  அத்தகைய  மூன்று  படவுருக்களை -  சொல்லசையன்   வடிவங்களை மட்டுமே  கொண்டு எழுதப்பட்டுள்ளது .  மூன்று வடிவங்களையும் நீங்கள் எளிதாக அடையாளம் கண்டு பொருளுணரலாம் . வலமிருந்து முதல் வடிவம் தேள் வடிவமும் ,  அதனோடு இணைந்த இரண்டு அசைகளுடன் ண்(ன்) - அ இணைந்து தேளண்அ =  தேளன -  தேள் அன்ன  என்னும்  சொல்லசையனாக -  Logosyllabic -  சொல் வடிவமாகவும் ,  இரண்டாவது முக ( முகம் ) என்னும் சொல்வடிவமாகவும் ,  மூன்றாவது வடிவம் வாவல் ( வௌவால் ) என்னும் சொல் வடிவமாகவும்  இணைந்து               =  தேளன்ன  முக  வாவன்  .  என்று எழுதப் பட்டுள்ளது .


      இது  மறைபொருட் குறியீட்டு முத்திரை . இதன் பொருள்  தேள்  ஓரையின் முகம் போன்ற முகம் கொண்ட  வாவன்  = தாண்டவன் என்று பொருள் . வாவல் என்ற சொல்லுக்கு  தாண்டுதல் ,  கூத்து என்று பொருளுண்டு . தாண்டி அல்லது குதித்துக் குதித்து சிவன் ஆடும் நடனமே  தாண்டவம் .  இதனை ஊர்த்துவ தாண்டவம் என்பர் . காலை உயயரத் தூக்கி ஆடுவது .  விருச்சிகம் செவ்வாயை அதிபதியாகக் கொண்டது .  இது  முருகனின் விண்மீன் . எனவே     இவை சிவ  -  முருக  வழிபாட்டுடன் தொடர்புடையவையாகும் .  விருச்சிகன் என்று சூரியனும் பிற்காலத்தில் அழைக்கப்பட்டான் . சிந்து மக்கள் தேளையும் வழிபட்டனர் .  தேளன் ,  தேளண்ண என்னும் சொற்கள் பேரளவில் காணப்படுவதோடு ,  தேளின் படமுள்ள முத்திரைகளும் மிகுதியாக உள்ளன .  


      முக வடிவைப் பாருங்கள் . முகம் என்பது  நெற்றி , மூக்கு ஆகியவை இணைந்த  படவுருவாக எழுதப்படுகிறது .  இம்முத்திரை  சிவனியம்  சார்ந்தது என்று  எளிதாகத் தெரிகிறது .  முகத்தை வரைந்த  எழுத்துக் கலைஞன்  முகத்தின் நெற்றியில்  மூன்று  கோடுகளை இட்டுள்ளான் . இது திருநீறு பூசிய நெற்றி என்றே கருத  வேண்டியுள்ளது . 


   மொக 1226 :   வாவ  -  முக  -  தேளண 

       =   தேளன்ன  முக வாவன் . 


தேள் போன்ற முகத்தோற்றமுடைய  வாவன் ஆகிய  சிவன்  என்பது பொருள் .  


      இம்முத்திரை வடிவம் நெற்றியில் முக்கோடாகத் திருநீறு  இட்டுள்ளது என்பது தெளிவு .  உள்ள இரண்டொரு  முகப்  படவுருவனிலும்  ஒன்றிரண்டில் மட்டுமே  திருநீறு  பூசிய நெற்றியுள்ளது .  சிந்து எழுத்தில்  ஒரு சிறு  கோடு  மாறுவதுகூட  பொருள் மாற்றம் தரும் . வாவன் என்பவர் சிவன் என்று குறிக்கவே  இத்திருநீறு  பூசிய  நெற்றியை  அம்மக்கள் பதிவிட்டுள்ளனர்  என்பதே உண்மை .  எனவே  நெற்றியில்   திருநீறு  இடும் வழக்கம்  சிந்துவெளி நாகரிகக் காலத்துக்கும் முன்பிருந்தே வழக்கில் உள்ளதென உறுதிபடக் கூறலாம் . குறைந்தது இக்காலம்  5000  ஆண்டுகள் என்று உறுதிபடக் கூறலாம் . சிவனியம்  இந்தியாவின் மிகத் தொன்மையான  சமயமென்று  உறுதிபடுகிறது  .  தமிழர்கள்  திருநீறு  இடும்  இவ்வழக்கத்தைப் பழங்காலம் தொட்டே கடைப்பிடித்து வருகின்றனர் .

Friday, April 9, 2021

வேத எதிர்ப்பே சித்தர் மரபு

 சித்தர்மரபு என்னும் வேத எதிர்ப்பு மரபு ❤️


சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரம் பல

தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்

விதம் வித மானவனான வேறு நூல்களும்

வீணான நூல்களை என்று ஆடு பாம்பே.


                                     - (பாம்பாட்டிச் சித்தர்)


பொய் வேதம் தன்னைப் பாராதே - அந்தப்

போதகர் சொற்புத்தி போத வாராதே


                                      - (கடுவெளிச் சித்தர்)


பார்ப்பனர்கள் கட்டிய பாழான வேதத்தைச்

சோதித்துத் தள்ளடி - குதம்பாய்

சோதித்துத் தள்ளடி            


                                      - (குதம்பைச் சித்தர்)


நேமங்கள் நிட்டைகள் 'வேதங்கள்' ஆகம நீதிநெறி ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்திர யோக நிலை நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே

சாமங்கள் தோறும் இவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே


                                     - (பட்டினத்தார்)


சாத்திரத்தைச் சுட்டு சதுர்மறையப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்


                                      - (பத்திரகிரியார்)




Monday, March 8, 2021

பெண்மையைப்பற்றி சிவவாக்கியர்

பெண்மையைப்பற்றி சிவவாக்கியர் :


பெண்களை தீட்டென்றும், தீண்டத்தகாதவர்களென்றும், பாவ யோனியில் பிறந்தவர்களென்றும், இழிபிறப்பாளர்களென்றும் ஆரிய வேதங்களும் பகவத்கீதையும் இழித்துரைக்கின்றன.


இதோ எம் தமிழ்ச்சிவவாக்கியம் யாரை எதைத்தீட்டென்கிறாய் என்று மூடர்களை இடித்துரைக்கிறார்.





அறையினில் கிடந்தபோது அன்றுதூய்மை என்றிலீர்,

துறைஅறிந்து நீர்குளித்த அன்றுதூமை என்றிலீர்,

பறையறிந்து நீர்பிறந்த அன்றுதூமை என்றிலீர்,

புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே.


48


தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!

தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?

ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்

தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.


49


சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்

மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்

சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்

செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே.


50


மாதாமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்

மாதம்அற்று நின்றுலோ வளர்ந்துரூபம் ஆனது?

நாதம்ஏது, வேதம்ஏது, நற்குலங்கள் ஏதடா?

வேதம்ஓதும் வேதியர் விளைந்தவாறு பேசடா?


134


தூமைஅற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது?

ஆண்மைஅற்று நின்றலோ வழக்கமற்று நின்றது?

தாண்மைஅற்று ஆண்மைஅற்று சஞ்சலங்கள் அற்றுநின்ற

தூமைதூமை அற்றகாலம் சொல்லும்அற்று நின்றதே!


135


ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற சீவனை

வேறுபேசி மூடரே விளைந்தவாறது ஏதடா?

நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன?

சீறுகின்ற மூடனே அத்தூமைநின்ற் கோலமே.


136


தீமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே

சீமைஎங்கும் ஆணும்பெண்ணும் சேர்ந்துலகம் கண்டதே.

தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை

தூமைஅற்று கொண்டிருந்த தேசம்ஏது தேசமே?


137


ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;

கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே

மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்

துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே.


205


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


நன்றி. வணக்கம்.

கீதையிலும் மனுநீதியிலும் பெண்கள்

 மனுஅநீதியில் பெண்கள்


மகளிர்நாளை யார் கொண்டாடலாம்? தமிழர்கள் கொண்டாடலாம், இரசிய, ஐரோப்ப, செர்மானியர்கள் கொண்டாடலாம். பெண்மையை மதிக்கும் எந்த இனமும் கொண்டாடலாம். ஆனால், ஆரியமும் ஆரியச்சார்பும் உடையவர்கள் கொண்டாடலாமா? பெண்ணை இழிபிறவி என்று கூறி ஒடுக்கியது ஆரியம். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது மகளிர்நாளைக் கொண்டாட? 😡😡😡


பெண்களைப்பற்றி_பகவான்_கிருட்டிணர்:😡




பகவத்கீதையின் 9ஆவது அத்தியாயத்தில் சுலோகம் 32 இப்படிச் சொல்கிறது.


"மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்யயே அபிஸ்யு பாப யோனய ஸ்திரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபியாந்திபராம் கதிம்"


அதாவது பெண்களும் சூத்திரர்களும் வைசிகர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பகவத்கீதைகளில் "பாவ யோனி" என்பதை "கீழான பிறப்பு", "இழி பிறப்பு" என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் நேரடியாகவே "born out of the womb of sin" என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.


பகவத் கீதையின் பார்வையிலும் பெண் என்பவள் இழி பிறப்புத்தான். அவள் ஒரு பார்ப்பன வீட்டில் பிறந்திருந்தாலும், அது செல்லுபடியாகாது.


கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான உரிமைகள் பெண்களுக்கும் மறுக்கப்பட்டுள்ளது.


முற்பிறப்பில் செய்த பாவத்தின் பயனாகத்தான் ஒருவன் பெண்ணாகவோ சூத்திரனாகவோ பிறக்கிறான் என்றுதான் இந்துமத வேதங்கள் சொல்கின்றன. அந்த வகையில் சூத்திரர்களை இழிவுபடுத்துகின்ற வேதங்கள், சாத்திரங்கள், மந்திரங்கள் போன்றவை பெண்களையும் இழிவுபடுத்துவதில் வியப்பு ஒன்றும் இல்லை.


கீதையில் 4, 5 இடங்களில் மட்டுமே பெண்களைப் பற்றி குறிப்பிடுகின்றனர். அத்தனை இடங்களிலும் பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள், இழிபிறவிகள், ஆணுக்கு அடிமையானவள் என்றே இழித்துக்கூறப்படுகிறாள்.


இவ்விழிநூல் கீதை இப்படி பெண்களை இழிவுபடுத்தும் நிலையில் பெண்களே தற்காலத்தில் இந்நூலை புனிதனமானதென்று கருதி படித்துக்கொண்டிருப்பதுதான் பேரவலம். அறமுடைய எவரும் இவ் இழிநூலைப் புனிதநூலென்று கருதலாகுமா?