Thursday, January 28, 2021

ஆட்டுகிடாவின் குருதிகலந்து செந்தினை தூவி முருகவழிபாடு

ஆட்டுகிடாவின் குருதிகலந்து செந்தினை தூவி முருகவழிபாடு - முறுகாற்றுப்படுத்துதல் :

சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
(திருமுருகாற்றுப்படை - 46)

சூர்மருங்கு அறுத்த சுடரிலை நெடுவேல்;
சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை (அகநானூறு - 59)




"சேயோன் மேய மைவரை உலகமும்"
                                           - தொல்காப்பியம்



குருதியொடு தூவெள்ளரிசி பலியிடல்

🌺🌺🌺

குருதியோடு செந்தினை கலந்து பரப்பி முருகியப்பறை முழக்கி முருகாற்றுப்படுத்தும் குறமகள் 🙏🌺🌺🌺🙏


"மதவலி நிலைஇய மாத்தாட் கொழவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி
சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துனையுற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட”

      - திருமுருக்காற்றுப்படை 232 - 248 அடிகள்


பிணிமுகம் - யானை
(யானையை ஊர்தியாகக்கொண்ட முருகன்)









ஆட்டின் குருதிகலந்த தினையைப் பலியாக ஏற்கும் வேலன் :


சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழலினு
மார்வல ரேத்த மேலரு நிலையினும்
வேலன் றைஇய வெறியயர் களனுங்

                           - திருமுருகாற்றுப்படை





செந்தினை குருதியொடு தூவி முருகாற்றுப்படுத்தல் :


களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி,
வளநகர் சிலம்பப் பாடிப்பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய், 
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்
(அகநானூறு 22)



நன்றி. வணக்கம்.

தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Thursday, January 21, 2021

தமிழே இறைமொழி - தெய்வத்தமிழ்

இறைவன் தமிழை ஏற்கமாட்டானா?


சமற்கிருதத்தில் தான் குழமுழுக்கு நடத்தவேண்டுமென்று சமற்கிருதத்தில் எழுதாமல் தமிழில் தான் எழுதுகிறார்கள் அறிவிலிகள். சமற்கிருதத்திலேயே எழுதியிருக்கலாமே, எதற்குத் தமிழில் எழுதவேண்டும்? சமற்கிருதத்திலேயே பேசலாமே? எதற்கு தமிழ் தேவைப்படுகிறது இவ்வஞ்சகர்களுக்கு? ஏன் தமிழைப் பயன்படுத்தவேண்டும்?




ஆரியன், அவன் மொழியில் வணங்கட்டும், தமிழர்கள் தம் தமிழ்மொழியில் வணங்குங்கள். செத்தமொழியிடம் எதற்குக் கடன்வாங்கவேண்டும்? இதுவரை யாரும் இதைச்செய்யவில்லையென்று நீங்கள் மறுப்பீராயின், இனிமேல் தமிழில் செய்வோம்.


ஒழிக ஆரியம், ஒழிக வேதம், ஒழிக செத்தமொழி சமற்கிருதம்.


என்றும் நற்றமிழே வாழ்க.


தமிழில் குடமுழுக்குச் செய்யவேண்டாம் என்று இறைவன் சொன்னால், என்மொழி அவனுக்கு தெரியாதென்றால் அவன் எனக்கு இறைவனே ஆகான். தமிழ்க்குடமுழுக்கை மறுப்பானானால் அவ்விறைவனே வந்துசொல்லட்டும். சொல்வானா எம்மிறைவன்? ஒருக்காலுமில்லை.


ஏனெனில்,


"வண்தமிழ்கொண்டு இன்பமர வல்லார்களைத் தன்னை எய்துவிப்பவன்"

                                      - ஞானசம்பந்தர்


"பண்ணிடைத் தமிழொப்பானவன்"

                                                 - அப்பர்


"நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்தவன் பாடலுக்கு இறங்கும் தன்மையாளன்"

                                           - நம்பியாரூரர்


"தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான்"


"உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின்

துறைவாய் நுழைந்தவன்"

                                           - மணிவாசகர்


"செந்தமிழ் மலர் சூடுபவன்" - சேந்தனார்


"ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவரும்

காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலை சூடுபவன்"

                    - கருவூரார்


"தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறு படைத்தவன்"

                                                - திருமூலர்


"செந்தமிழ் செப்பியவர்களைத் தன்னடியடைவைத்து இன்பம் எய்துவிப்பவன்"

                           -- இறைவனால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்காலம்மையார்.


"ஒண்முத்தமிழ் பயந்தவன்"

                   - நம்பியாண்டார் நம்பிகள்


"அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றவர்"

                                        - தெய்வச்சேக்கிழார்


"சொல்லார் தமிழிசை பாடிய தொண்டன் தனை இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு" என்றவன்"

                                          - தெய்வச்சேக்கிழார்


திருமுறையே சைவநெறிக் கருவூலம்

தென்தமிழின் தேன்பா காகும்

திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்

செவிமடுத்த செந்தமிழ் வேதம்

திருமுறையே நடராசன் கரம் வருந்த

எழுதியருள் தெய்வ நூலாம்

திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்

மலர்ந்தருளும் சிறப்புற்றாமால்.


இப்படிச் சிவநெறியருளாளர்கள் தம்திருவாய்மலர்ந்து தமிழுக்கே இறைவன் செவிசாய்ப்பான் என்று ஐயமற நிறுவியுள்ளனர். இனி எவராவது, இறைவன் தமிழை

ஏற்கமாட்டான் என்று கூறுவாரானால் அவர்களின் நாவையறுத்துத் தீயிலிடுவேன்.


*********

தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏

நன்றி. வணக்கம்

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Monday, January 18, 2021

புறநானூற்று மறத்தாய்

புறநானூற்றில் மறத்தாய் ஒருத்தி :


நூல் : புறநானூறு (௨௭௯ - 279)

பாடியவர் : ஒக்கூர் மாசாத்தியார்

திணை : வாகை 

துறை : மூதின் முல்லை 




மூலப்பா (சீர்பிரிக்காத மூலவடிவப்பாடல்) :🏵


கெடுக சிந்தை கடிதிவ டுணிவே

மூதின் மகளி ராத றகுமே

மேனா ளுற்ற செருவிற் கிவடன்னை

யானை யெறிந்து களத்தொழிந் தனனே

நெருநலுற்ற செருவிற் கிவள் கொழுநன்


பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே

இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி

வேல்லைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்

பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி

ஒருமக னல்ல தில்லோள்

செருமுக நோக்கிச் செல்கென விடுமே.


**********************************************


பா (படிக்க எளியவகையில் சீர்பிரித்த வடிவம்) :🌺


கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;

மூதின் மகளிர் ஆதல் தகுமே;

மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,

யானை எறிந்து, களத்துஒழிந் தனனே;

நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,


பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;

இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,

வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,

பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,

ஒருமகன் அல்லது இல்லோள்,

செருமுக நோக்கிச் செல்க என விடுமே!


**********************************************


உரை :

இவள் எண்ணம் கெட்டொழியட்டும். இவளது துணிவான செயல் கடுமையானது. இவள் மூதில் மகளிருள் (மூத்த மறக்குடிப் பெண்டிர்) ஒருத்தியாக இருத்தல் வேண்டும். இவளது கடுமையான எண்ணம் கெட்டொழியட்டும். நேற்றைக்கு முந்தைய மேனாள் நடந்த போரில் இவளது அண்ணன் பகைவரின் யானையை வீழ்த்திய போரில் போர்க்களத்திலேயே மாண்டான். நேற்று நடந்த போரில் இவளது கணவன் பகைவரின் அணிவகுப்பு பிளவு படும்படி விலக்கிக்கொண்டு முன்னேறி அங்கேயே மாண்டான். இன்றும் போர்ப்பறை ஒலி கேட்டவுடன் ஏதாவது செய்யவேண்டும் என்னும் ஆவலுடன் எண்ணிப்பார்த்து, தன் ஒரே ஒரு மகனை, இளம் பிள்ளையை, பரந்துகிடந்த அவன் தலைமுடியை எண்ணெய் வைத்துச் சீவி முடித்து, வெண்ணிற ஆடையை உடுத்திவிட்டு, வேலைக் கையிலே கொடுத்து, “போர்க்களம் நோக்கிச் செல்க” என்று கூறி அனுப்பிவைக்கிறாளே! இவள் சிந்தைத் துணிவு கெட்டொழியட்டும்.


நன்றி. வணக்கம்

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Thursday, January 14, 2021

இலக்கியத்தில் நம்நாடு தமிழ்நாடு

இலக்கியத்தில் தமிழ்நாடு : 


நம்நாட்டிற்கு தமிழ்நாடு என்னும் பெயர், ஈகி சங்கரலிங்கனாரின் உயிர் ஈகத்தாலும், பல தமிழறிஞர்களின் போராட்டத்தாலும், அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரையாரால் 1969ஆம் ஆண்டு இதேநாளில் தான் சூட்டப்பட்டது என்பது நாம் அறிந்ததே. அவ்வீகியருக்கும் அரசுக்கும் நம் நன்றியை உரித்தாக்குவோம். 


ஆனால், இப்போது நாம் அறியவேண்டிய செய்தி யாதெனில், 1969க்கு முன்பும் நம்நாட்டின் பெயர் தமிழ்நாடே. அதற்கான சான்றுகளைத் தான் இப்பதிவில் காணவுள்ளோம். தமிழ்கூறும் நல்லுலகு, தமிழகம், தமிழர்நிலம், தமிழ்மருங்கு, தமிழ் வரைப்பகம் என்றெல்லாம் நம்நாட்டிற்கு பெயர் இருந்ததாக மிகப்பல சான்றுகள் இலக்கியகளிலுண்டு. ஆனால், "தமிழ்நாடு" "தமிழ்நன்னாடு" என்ற பெயரிலேயே இருக்கும் சான்றுகளை மட்டும்தான் ஈண்டு பதிவிடுகிறேன்.


அவை,


௧) பரிபாடல் - மதுரையைப்பற்றிய பாடல்

௨) சிலம்பு - மூன்று சான்றுகள்

௩) இளம்பூரணனாரின் தொல்காப்பிய உரைநூல்




1) பரிபாடல் மதுரையைப்பற்றிய பாட்டு:


தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லா

நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது

குன்றுத லுண்டோ மதுரை கொடித்தேரான்

குன்றமுண் டாகு மளவு.


பொருள்:

பாண்டிய மன்னனின் பொதியில்மலை இருக்குமளவும் மதுரை, குளிர்ந்த தமிழ்மொழியையே 

எல்லையாகவுடைய தமிழ்நாடெங்கும் தன் புகழ் பரவப் பொலிந்து நிற்பதன்றிக் குன்றமாட்டாது.


2) சிலப்பதிகாரம்:

அ) புகார்க்காண்டம் - நாடுகாண்காதை - 58ஆம் அடி


"தென்றமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு"


பொருள்: தெற்கின்கணுள்ள தமிழ் நாட்டின் கண்ணதாகிய குற்றந் தீர்ந்த மதுரைக்கு


ஆ) மதுரைக்காண்டம் காட்சிக்காதை 165ஆம் அடி


"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கி" 


பொருள்: முழங்கும் கடலை வேலியாகவுடைய இந்நிலம் முழுவதையும் தமிழ்நாடாக்க விரும்பி


இ) மதுரைக்காண்டம் காட்சிக்காதை 171ஆம் அடி


"தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி"


தென்றிசைக் கண்ணதாகிய வளமிக்க தமிழ்நாட்டு வில்லுங் கெண்டையும் புலியுமென்னும் இவற்றின் இலச்சினை.


3) இளம்பூரணனாரின் தொல்காப்பியவுரைநூல்:


தொல்காப்பியத்தின் சொல்லதிகார கியவியாக்கத்தில் "செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்னும் நூற்பாவிற்கு உரை எழுதிய இளம்பூரணனார், வினாவும் விடையும் குழப்பமின்றி தெளிவாக இருக்கவேண்டும் என்று இந்தநூற்பாவின் பொருளை விளக்கி, அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறார்.


“நும் நாடு யாது என்றால், #_தமிழ்நாடு என்றல்“ என்று கூறுகிறார். இதில் நாடுயாது என்பது வினாவாம், அதற்கு நேரடியான விடை தமிழ்நாடு என்பதாம். இவ்வாறு விளக்கினார். இவர் 11ஆம் நூற்றாண்டைச்சார்ந்தவர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.


பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் மாக்கதையிலும் தமிழ்நாடென்றே பலவிடங்களில் கூறப்பட்டிருக்கும்.


1969க்குப்பிறகு மட்டுமல்ல ஈராயிரமாண்டுகளாகவே நம் நாடு தமிழ்நாடு தான். நம்நாடு இந்தியா அல்ல நற்றமிழ்நாடு என்போம்.


நன்றி. வணக்கம்.


******************************************************

தரவுகள் உதவி:

1) பரிபாடல் நூல்

2) சிலப்பதிகாரம் நூல்

3) இளம்பூரணனாரின் தொல்காப்பிய உரைநூல்


தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Tuesday, January 12, 2021

தமிழ்மன்னர் கொடைத்திறம்

தமிழ்மன்னர்களின் கொடைத்திறம் : 

நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது இந்த பாடம் எங்கள் தமிழ்ப்பாடத்திட்டத்தில் இருந்தது, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஏனெனில், அத்தமிழ் நூலில் கொடுத்திருந்த படம், புலவர் யானை மீது பொற்காசுகள் கொண்டுவருவார். அதுகண்ட, புலவரின் மனையாளும் மகவும் புலவரை நோக்கி வருவர். அதுமட்டுமின்றி, எந்தமிழாசிரியை அக்கதையை சொல்லும்போது சொன்ன இரண்டு செய்திகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டுள்ளன. புலவர் மன்னனிடம் தம் நல்குரவை எடுத்துச்சொல்லும் தொடர்களாக அமைந்தவை. அவை, 


**என் மகவிற்கு பாலூட்ட இல்லாளுக்கு பாலும் சுரக்கவில்லை**


**எம்பசியை போக்கிக்கொள்ள கொல்லையிலுள்ள குப்பைக்கீரைகளையாவது பறித்து சமைக்கலாமென்றாலும் உப்பிற்கும் வழியில்லை**


😭😭😭


இன்று, புறநானூற்றை படிக்கும்போது இப்பாட்டு என் கண்களில்பட்டது. உடனே நான் என்னுடைய நான்காம் வகுப்பில் இந்த கதையை படித்தது எனக்கு நினைவிற்குவந்தது. இதையும், அந்த பாடலையும் இங்கு நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளலாமென பதிகிறேன். ஓர் அன்பான வேண்டுகோள், இதை முழுவதும் படியுங்கள் நண்பர்களே.


நன்றி.🙏🙏🙏


பெருஞ்சித்திரனார் என்ற புலவர். புலமை பெரிதுடையவர். வறுமையில் வாழ்கின்றார். தன் வறுமையைப் போக்கக் கொடைக்குப் பெயர்பெற்ற குமண வள்ளலிடம் செல்கின்றார்; கணக்கற்ற பரிசுப் பொருட்களோடு வருகின்றார். வந்தவர், அந்தப் பொருட்களைத் தானே வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் இன்பமாக வாழலாம் என்று கனவு கண்டாரா என்றால், அதுதான் இல்லை. வேறென்ன செய்தார்? மனைவியை அழைத்தார்;  செய்ய வேண்டியதைச் சொல்கின்றார்.




“என் மனைக்கு உரியவளே! இந்தப் பொருளையெல்லாம் உன்னிடம் அன்பு காட்டுகின்றவர்களுக்கும், நீ அன்பு செய்பவர்களுக்கும், உன்னுடைய உறவினர்களுக்கும்,  பசியால் நாம் வருந்தியபோது நமக்கு உதவிய நல்லோர்களுக்கும் மற்றும் இவர்கள் நமக்கு உறவினர்- உறவினர் அல்லாதவர் என்று நினைக்காமலும்,  நாம் வளமாக வாழ்வதற்கு இந்தப் பொருளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணாமலும் …இவர்களுக்குக் கொடுக்கலாமா, வேண்டாமா என்று என்னிடமும் கேட்காமல்,  எல்லோருக்கும் கொடுப்பாயாக” என்கின்றார். அவரின் பாடல் இதோ…


பாட்டு:


நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்

பல்மாண் கற்பின் நின் கிளைமுதலோர்க்கும்

கடும்பின் பசிதீர யாழ நின்

நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்

இன்னோர்க்கும் என்னாது, என்னோடும் சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனைக்கிழவோயே

பழம்தூங்கு முதிரத்துக் கிழவன்

திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.


புறநானூற்றின் 163 ஆவது பாடல் இது.


கருத்துரை: 


மனைக்கு உரியவளே!  தொங்குகின்ற பழங்கள் நிறைந்த  முதிரமலைத் தலைவனும் செம்மையான வேலையுடையவனுமாகிய குமணன்,  எனக்குக் கொடுத்த வளத்தையெல்லாம், உன்னிடம் அன்போடு வாழ்பவர்களுக்கும், நீ அன்பு காட்டுபவர்களுக்கும், பல்குணங்களும் மாட்சிமைப்பட வாழுகின்ற உன்னுடைய சுற்றத்தினருக்கும், நம் சுற்றத்தினரின் கடும்பசியைத் தீர்ப்பதற்கான உன் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு உனக்கு உதவியவர்களுக்கும், இவர் இப்படிப்பட்டவர் (நல்லவர், தீயவர்) என்று அவரின் தன்மையை மதிப்பிடாமலும், என்னிடமும் கேட்காமல், இந்தப் பொருட்களையெல்லாம் நாம் வைத்துக்கொண்டு செல்வ வளத்யோடு வாழலாம் என்றும் நினையாது,  நீயும் எல்லோருக்கும் கொடுப்பதற்குக் கருதுவாயாக!


சொற்பொருள் விளக்கம்:


நின் நயந்து- உன்னிடம் அன்பு காட்டி, உறைநர்க்கும்- வாழ்பவர்களுக்கும், நீ நயந்து – நீ அன்பு காட்டி, உறைநர்க்கும் –வாழ்பவர்களுக்கும், பல்மாண்- பல மாட்சிமைப்பட்ட, கற்பின் –சொன்ன சொல்லிலிருந்து மாறுபடாத, நின் கிளைமுதலோர்க்கும்- உன்னுடைய சுற்றத்தினர் முதலானோர்க்கும், கடும்பின் – சுற்றத்தின், பசிதீர –பசியைத் தீர்ப்பதற்கு, நின்நெடும் – உன்னுடைய நெடிய, குறியெதிர்ப்பு- எதிர்பார்ப்பு, நல்கியோர்க்கும் – வழங்கியோருக்கும், இன்னோர்க்கும் என்னாது- இவர் இப்படிப்பட்டவர் என்றும் நினையாமல் , என்னோடும் சூழாது- என்னிடம் கலந்து ஆலோசிக்காமல்,வல்லாங்கு வாழ்தும் – வன்மையாக வாழலாம், என்னாது நீயும்- என்றும் எண்ணாமல், எல்லோர்க்கும்- எல்லோருக்கும், கொடு-கொடுக்க, மதி –கருது, மனைக்கிழவோயே –மனைக்கு உரியவளே, பழம்தூங்கு –பழங்கள் தொங்குகின்ற, முதிரத்துக் கிழவன் –முதிரமலைக்குத் தலைவன், திருந்துவேல் – செம்மையான வேலையுடைய, குமணன் நல்கிய வளனே- குமணவள்ளல் வழங்கிய வளனே.


ஈத்துவக்கும் இன்பம் அறிந்த புலவனின் உண்மை மொழிகள் இவை. அவர் சொல்லுகின்ற ஒவ்வொரு சொல்லிலும் அவரின் உள்ளத்து உயர்வினையே பார்க்க முடிகின்றது.  தன்னுடைய மனைவி,  எங்கே தன்னிடம் கேட்டுவிட்டுத்தான் கொடுக்கவேண்டும் என்று தயக்கம்காட்டி கொடுக்க நினைப்பவர்களுக்குக்கூட கொடுக்காமல் இருந்துவிடுவாளோ என்பதால் முதலிலேயே சொல்லிவிடுகின்றார், “என்னோடும் சூழாது” என்று!


இன்பம் எது? என்பதை உணர்ந்திருந்த அப்பெரியோர்களின் பெற்றியை என்னென்பது?


இலஞ்சமும் ஊழலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படும் கயமையும் வாழ்கின்ற தமிழகத்திலா, இத்தகு சான்றோர்களும் வாழ்ந்தார்கள் என்பது வியப்பாக இருக்கிறதல்லவா?


உதவி : வலைத்தளம்.

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Wednesday, January 6, 2021

மனுநீதிச்சோழனல்லன் தமிழறச்சோழன்

மனுநீதிச்சோழனல்லன் தமிழறச்சோழன்:


இவன் ஆரூரைத் தலைநகராகக்கொண்டு அரசாண்டவன் என்று கூறப்படுகிறது. வடமொழி மனுநூல் வழிநின்று ஆண்டவனனாதலால் இவன் மனுநீதிச்சோழன் என்று அழைக்கப்பட்டானென்று சேக்கிழாரின் திருத்தொண்டர் மாக்கதையால் அறியக்கிடைக்கிறது. ஆனால், இதே நூலில் இம்மன்னன் அந்த மனுநீதிநூல் சொன்ன தீயறத்திற்கு எதிராக நல்லறஞ்செய்தான் என்பதையும் அவரே விளக்குகிறார்.


இம்மன்னனின் வரலாற்றை இயக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறதே தவிர வரலாறு மற்றும் கல்வெட்டுகள் மூலம் அறியுமளவிற்கு தக்கவுறுதிச்சான்றுகள் கிடைத்திலபோலும். இவனின் பெயர் மனுநீதிச்சோழன் என்னுஞ்சான்று யாண்டுமில.



பெருங்காப்பியமான சிலம்பில், நீதிகேட்டு பாண்டியன் அரசவைக்கு சென்ற கண்ணகி, தன்னை எந்நாட்டாளென்றும் யாரென்றும் அறிமுகஞ்செய்யும்போது,


"வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகாரென் பதியே"


என்று கூறுகிறாள். இதுவே இவனைப்பற்றிய முதற்சான்று. ஈண்டு இம்மன்னன் பெயர் யாதென குறிப்பிடப்படவில்லை. .


அடுத்து, இராசராசசோழனுலா, விக்கிரமசோழனுலா, குலோத்துங்கச்சோழனுலா என்பவற்றிலும் இக்கதை வருகிறது. ஆனால், சேக்கிழார் தாமியற்றிய திருத்தொண்டர்மாக்கதையில் தான் இவன் பெயர் மனுநீதிச்சோழனென்றும் இக்கதையை விரிவாகவும் எழுதுகிறார். சேக்கிழார்தான் மனுநூலை இங்கே புகுத்திவிட்டார். பின் அவரே அதை மறுக்கவும் செய்கிறார். அக்காலத்திய சைவ சமயம் வேதத்தையும் மனுநூலையும் ஏற்றவையே அதனோடு தமிழ் அறமும் கலந்ததால் ஏற்றும் எதிர்த்தும் கதை அமைந்துள்ளது.


கதைச்சுருக்கம்:

மன்னனின் மகன் தேராழியில் சிக்கி இளங்கன்று இறந்துவிடுகிறது. அமைச்சர்கள், மன்னனைப்பார்த்து கவலைகொள்ளாதீர், இவ்வாறு ஆவினைக்கொன்றதற்கு மனுநூல் மற்றும் மறைநூலில் சொன்ன மாற்றுவழி அறம் செய்தால் போதும் என்கின்றனர். ஆனால் மன்னனோ, அதை ஏற்காமல் அந்த மறைநூல் சொன்ன மாற்று அறங்கள் ஒருபுறம் கிடக்கட்டும். எந்த மாற்றுவழியறம் செய்தாலும் இந்த ஆவின் துயர் தீருமோ? அப்படிசெய்தால் அறக்கடவுள் தான் ஏற்குமோ? அறம் தான் சலியாதோ? என்று அந்த மறைமனுநூல் சொன்ன தீயறத்தை எதிர்த்துப்பேசுகிறார். 


இவ்வா படும் துயர் போலவே யானும் என் மகனை இழந்து துயருறுவதே இவ்வான்கன்றை கொன்றதற்கு எனக்கும் என்மகனுக்கும் தக்க ஒறுத்தல் என்று தன்புதல்வனை தானே தேர்க்காலிலிட்டு ஊர்ந்து கொல்கிறான் மன்னன்.


அந்த திருத்தொண்டர்மாக்கதையின் மூன்று பாடல்களை இங்கே பதிவிட்டுள்ளேன். படித்தறிக. இனி இவ்வறச்செயல்புரிந்த நம் மன்னனை மனுநீதிச்சோழன் என்று அழைக்காமல் தமிழறச்சோழன் என்று விளிப்போம். நன்றி வணக்கம்.


திருத்தொண்டர்மாக்கதை - பாயிரம் - திருநகரச்சிறப்பில் 119, 120 மற்றும் 129 ஆம் பாட்டுகள்


மந்திரிகள் அதுகண்டு 

மன்னவனை அடிவணங்கிச்

சிந்தைதளர்ந் தருளுவது 

மற்றிதற்குத் தீர்வன்றால்

கொந்தலர்த்தார் மைந்தனைமுன் 

கோவதைசெய் தார்க்குமறை

அந்தணர்கள் விதித்தமுறை 

வழிநிறுத்தல் அறமென்றார்.


பொழிப்புரை :

இவ்வாறெல்லாம், அரசன் அடைந்த துயரத்தைக் கண்ட அமைச்சர்கள் பார்த்து. அம்மன்னவன் திருவடிகளை வணங்கி, இவ்விளைவிற்குத் தாங்கள் மனம் தளர்வது தீர்வாகாது; கொத்தாக அலர்ந்த பூமாலை உடைய நும்மைந்தனை, இதற்குமுன் பசுக்கொலை செய்த பாவிகட்குத் தீர்வாக மறை உணர்ந்தோரால் விதிக்கப்பட்ட ஆணைவழித்தீர்வு செய்வதே நீதியாகும் என்று கூறினர்.


வழக்கென்று நீர்மொழிந்தால் 

மற்றதுதான் வலிப்பட்டுக்

குழக்கன்றை இழந்தலறுங் 

கோவுறுநோய் மருந்தாமோ

இழக்கின்றேன் மைந்தனைஎன்

றெல்லீருஞ் சொல்லியஇச்

சழக்கின்று நானியைந்தால் 

தருமந்தான் சலியாதோ.


பொழிப்புரை :

பசுக்கொலை செய்தார்க்கு, மறைவழிக்காணும் தீர்வு செய்துகொள்ளுதல்தான் உலக வழக்கென்று நீவிர் கூறினால், அத்தீர்வு தானும் தன் இளங்கன்றினை இழந்து மனம் வருந்தி அலமருகின்ற இப்பசுவின் நோய்க்கு மருந்தாகுமோ? ஆகாது. அதனால் என் மகனை யான் இழக்கின்றேன் என்று நீவிரெல்லாம் கூறிய இப்பொய் மொழிக்கு, இன்றுநான் உடன்படுவேனானால் அறக்கடவுள்தான் சலிப்படையாதோ? அடையும்.


ஒருமைந்தன் தன்குலத்துக் 

குள்ளான்என் பதும்உணரான்

தருமம்தன் வழிச்செல்கை 

கடனென்று தன்மைந்தன்

மருமம்தன் தேராழி 

உறவூர்ந்தான் வேந்தன்

அருமந்த அரசாட்சி 

அரிதோமற் றெளிதோதான்.


பொழிப்புரை :

தன் குலத்தில் அரசுரிமை பெற்று ஆட்சி நடத்து தற்கு ஒரு மகன் தான் உளன் என்பதையும் மனத்தில் கொள்ளாமல், அறத்தின்வழி நடத்தலே தனக்குரிய முறைமை என்று கருதித், தன் மகனது மார்பைத் தன் தேர்க்காலானது பொருந்த நடத்தினான் அவ்வேந்தன். இதனால் அரிய மருந்தனைய அரசாட்சியை நடத்துதல் அரியதோ? அல்லது எளியதோ? என்பது எண்ணற்குரியதாம்.


நன்றி. வணக்கம்

தரவு : சிலம்பு மற்றும் திருத்தொண்டர்மாக்கதை

தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Saturday, January 2, 2021

புறநானூற்றுத்தாய் - புறம் 278

புறநானூற்றில் ஓர் வீரத்தாய்


நூல் : புறநானூறு (௨௭௮ - 278)

பாடியவர் : காக்கைபாடினியார் நச்செள்ளையார்

திணை : தும்பை 

துறை : உவகைக் கலுழ்ச்சி 




பா :

நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்

முளரி மருங்கின், முதியோள் சிறுவன்

படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற,

மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்

முலைஅறுத் திடுவென், யான் எனச் சினைஇக்,

கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்,

செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய

படுமகன் கிடக்கை காணூஉ,

ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே!  


உரை :

அவள் நரம்புகள் புடைத்தெழுந்து காய்ந்து வறண்டுபோன தோளை உடைய முதுமகள். தாமரை மலரின் இதழ்களைப் போல் எலும்புகள் தெரியும் இடையை உடையவள். மறக்குடி மூதில் வீரத்தாய். போருக்குச் சென்ற தன் மகன் படையைக் கண்டு பயந்து திரும்பிவிட்டான் என்று பலர் கூறக்கேட்டு, (அப்படி இருக்கமுடியாது என்னும் மன உறுதி கொண்டவளாய்) அப்படிப் போரைக் கண்டு மனம் உடைந்து திரும்பியிருப்பான் ஆயின், அவன் பாலுண்ட என் என் முலையை அறுத்தெரிவேன் என்று சினத்துடன் கூறிக்கொண்டு வாளேந்திய கையளாய்ப், போர்க்களம் சென்று, வாளால் பிணங்களைப் புரட்டுகையில், தன் மகன் வாளால் மார்பில் வெட்டுப்பட்டுக் கிடப்பதைக் கண்டதும் மகிழ்ந்தாள். அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும், விழுப்புண் பட்டு மாண்டதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தாள். 


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இனி சின்னாட்கள் புறநானூற்றில் கூறப்பட்ட வீரத்தாய்மார்கள் பற்றிய பாடல்களைப்பதிகிறேன்.

நன்றி. வணக்கம்🙏

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

கிழமை என்பதன் பொருள் உரிமை

கிழமை = உரிமை


ஞாயிற்றுக்கிழமை :

- ஞாயிற்றுக்கு உரிமையான நாள் (அனைத்து கிழமைகளுக்கும் பொது)


குறிஞ்சிக்கிழவோன் :

- குறிஞ்சி நிலத்திற்கு உரிமையானவன் (முருகன்)


காடுகிழாள் (அ) காடுகிழத்தி :

- காட்டிற்கு உரிமையானவள் (காடமர் செல்வி)


நிலக்கிழார் :

- நிலத்தின் உரிமையாளர்


குண்டையூர்க்கிழார் :

- குண்டையூருக்கு உரிமையாளர் (தேவார நம்பியாரூரர் வரலாற்றோடு தொடர்புடையவர்).


தமிழ்க்கிழவி

- தமிழுக்கு உரிமையானவள் (ஔவை)