Wednesday, January 6, 2021

மனுநீதிச்சோழனல்லன் தமிழறச்சோழன்

மனுநீதிச்சோழனல்லன் தமிழறச்சோழன்:


இவன் ஆரூரைத் தலைநகராகக்கொண்டு அரசாண்டவன் என்று கூறப்படுகிறது. வடமொழி மனுநூல் வழிநின்று ஆண்டவனனாதலால் இவன் மனுநீதிச்சோழன் என்று அழைக்கப்பட்டானென்று சேக்கிழாரின் திருத்தொண்டர் மாக்கதையால் அறியக்கிடைக்கிறது. ஆனால், இதே நூலில் இம்மன்னன் அந்த மனுநீதிநூல் சொன்ன தீயறத்திற்கு எதிராக நல்லறஞ்செய்தான் என்பதையும் அவரே விளக்குகிறார்.


இம்மன்னனின் வரலாற்றை இயக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறதே தவிர வரலாறு மற்றும் கல்வெட்டுகள் மூலம் அறியுமளவிற்கு தக்கவுறுதிச்சான்றுகள் கிடைத்திலபோலும். இவனின் பெயர் மனுநீதிச்சோழன் என்னுஞ்சான்று யாண்டுமில.



பெருங்காப்பியமான சிலம்பில், நீதிகேட்டு பாண்டியன் அரசவைக்கு சென்ற கண்ணகி, தன்னை எந்நாட்டாளென்றும் யாரென்றும் அறிமுகஞ்செய்யும்போது,


"வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகாரென் பதியே"


என்று கூறுகிறாள். இதுவே இவனைப்பற்றிய முதற்சான்று. ஈண்டு இம்மன்னன் பெயர் யாதென குறிப்பிடப்படவில்லை. .


அடுத்து, இராசராசசோழனுலா, விக்கிரமசோழனுலா, குலோத்துங்கச்சோழனுலா என்பவற்றிலும் இக்கதை வருகிறது. ஆனால், சேக்கிழார் தாமியற்றிய திருத்தொண்டர்மாக்கதையில் தான் இவன் பெயர் மனுநீதிச்சோழனென்றும் இக்கதையை விரிவாகவும் எழுதுகிறார். சேக்கிழார்தான் மனுநூலை இங்கே புகுத்திவிட்டார். பின் அவரே அதை மறுக்கவும் செய்கிறார். அக்காலத்திய சைவ சமயம் வேதத்தையும் மனுநூலையும் ஏற்றவையே அதனோடு தமிழ் அறமும் கலந்ததால் ஏற்றும் எதிர்த்தும் கதை அமைந்துள்ளது.


கதைச்சுருக்கம்:

மன்னனின் மகன் தேராழியில் சிக்கி இளங்கன்று இறந்துவிடுகிறது. அமைச்சர்கள், மன்னனைப்பார்த்து கவலைகொள்ளாதீர், இவ்வாறு ஆவினைக்கொன்றதற்கு மனுநூல் மற்றும் மறைநூலில் சொன்ன மாற்றுவழி அறம் செய்தால் போதும் என்கின்றனர். ஆனால் மன்னனோ, அதை ஏற்காமல் அந்த மறைநூல் சொன்ன மாற்று அறங்கள் ஒருபுறம் கிடக்கட்டும். எந்த மாற்றுவழியறம் செய்தாலும் இந்த ஆவின் துயர் தீருமோ? அப்படிசெய்தால் அறக்கடவுள் தான் ஏற்குமோ? அறம் தான் சலியாதோ? என்று அந்த மறைமனுநூல் சொன்ன தீயறத்தை எதிர்த்துப்பேசுகிறார். 


இவ்வா படும் துயர் போலவே யானும் என் மகனை இழந்து துயருறுவதே இவ்வான்கன்றை கொன்றதற்கு எனக்கும் என்மகனுக்கும் தக்க ஒறுத்தல் என்று தன்புதல்வனை தானே தேர்க்காலிலிட்டு ஊர்ந்து கொல்கிறான் மன்னன்.


அந்த திருத்தொண்டர்மாக்கதையின் மூன்று பாடல்களை இங்கே பதிவிட்டுள்ளேன். படித்தறிக. இனி இவ்வறச்செயல்புரிந்த நம் மன்னனை மனுநீதிச்சோழன் என்று அழைக்காமல் தமிழறச்சோழன் என்று விளிப்போம். நன்றி வணக்கம்.


திருத்தொண்டர்மாக்கதை - பாயிரம் - திருநகரச்சிறப்பில் 119, 120 மற்றும் 129 ஆம் பாட்டுகள்


மந்திரிகள் அதுகண்டு 

மன்னவனை அடிவணங்கிச்

சிந்தைதளர்ந் தருளுவது 

மற்றிதற்குத் தீர்வன்றால்

கொந்தலர்த்தார் மைந்தனைமுன் 

கோவதைசெய் தார்க்குமறை

அந்தணர்கள் விதித்தமுறை 

வழிநிறுத்தல் அறமென்றார்.


பொழிப்புரை :

இவ்வாறெல்லாம், அரசன் அடைந்த துயரத்தைக் கண்ட அமைச்சர்கள் பார்த்து. அம்மன்னவன் திருவடிகளை வணங்கி, இவ்விளைவிற்குத் தாங்கள் மனம் தளர்வது தீர்வாகாது; கொத்தாக அலர்ந்த பூமாலை உடைய நும்மைந்தனை, இதற்குமுன் பசுக்கொலை செய்த பாவிகட்குத் தீர்வாக மறை உணர்ந்தோரால் விதிக்கப்பட்ட ஆணைவழித்தீர்வு செய்வதே நீதியாகும் என்று கூறினர்.


வழக்கென்று நீர்மொழிந்தால் 

மற்றதுதான் வலிப்பட்டுக்

குழக்கன்றை இழந்தலறுங் 

கோவுறுநோய் மருந்தாமோ

இழக்கின்றேன் மைந்தனைஎன்

றெல்லீருஞ் சொல்லியஇச்

சழக்கின்று நானியைந்தால் 

தருமந்தான் சலியாதோ.


பொழிப்புரை :

பசுக்கொலை செய்தார்க்கு, மறைவழிக்காணும் தீர்வு செய்துகொள்ளுதல்தான் உலக வழக்கென்று நீவிர் கூறினால், அத்தீர்வு தானும் தன் இளங்கன்றினை இழந்து மனம் வருந்தி அலமருகின்ற இப்பசுவின் நோய்க்கு மருந்தாகுமோ? ஆகாது. அதனால் என் மகனை யான் இழக்கின்றேன் என்று நீவிரெல்லாம் கூறிய இப்பொய் மொழிக்கு, இன்றுநான் உடன்படுவேனானால் அறக்கடவுள்தான் சலிப்படையாதோ? அடையும்.


ஒருமைந்தன் தன்குலத்துக் 

குள்ளான்என் பதும்உணரான்

தருமம்தன் வழிச்செல்கை 

கடனென்று தன்மைந்தன்

மருமம்தன் தேராழி 

உறவூர்ந்தான் வேந்தன்

அருமந்த அரசாட்சி 

அரிதோமற் றெளிதோதான்.


பொழிப்புரை :

தன் குலத்தில் அரசுரிமை பெற்று ஆட்சி நடத்து தற்கு ஒரு மகன் தான் உளன் என்பதையும் மனத்தில் கொள்ளாமல், அறத்தின்வழி நடத்தலே தனக்குரிய முறைமை என்று கருதித், தன் மகனது மார்பைத் தன் தேர்க்காலானது பொருந்த நடத்தினான் அவ்வேந்தன். இதனால் அரிய மருந்தனைய அரசாட்சியை நடத்துதல் அரியதோ? அல்லது எளியதோ? என்பது எண்ணற்குரியதாம்.


நன்றி. வணக்கம்

தரவு : சிலம்பு மற்றும் திருத்தொண்டர்மாக்கதை

தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment