Saturday, February 20, 2021

உலகமொழிகளின் தாய்மொழி தமிழே

 








உலகத்தாய்மொழி நாள் 21.02.1940

உலகத்தாய்மொழி_நாள் 21.02.1940 வரலாறு:

(உலகத்தமிழ்மொழிநாள்)




உலகத்தாய்மொழிநாள் என்பது வங்கமொழிப்போரில் உயிரிழந்த 5 பேரின்  நினைவாக, வங்காள அரசின் முயற்சியால் ஐக்கிய நாடுகள் அவையின் யுனெசுகோ-வால் 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் நாள் அறிவிக்கப்பட்டு, 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் முதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது என்பது இதுவரை இருக்கிற வரலாறு. ஆனால், அதைவிட 60 ஆண்டுகால பழைய உலகத்தாய்மொழிநாள் வரலாறு தமிழர்களுக்குண்டு. அதையறிந்துகொள்வோம்.

1937ஆம் ஆண்டு இந்தி கட்டாயப்பாடமாக்கப்பட்டு இந்திய அரசால் திணிக்கப்பட்டது. அப்போது மூண்டதே முதல் இந்தி திணிப்பு எதிர்ப்புப்போர். நடத்தியவர் ஐயா பெரியார். தாய்மொழி விருப்பப்பாடமாகவும் இந்தி கட்டாயப்பாடமாகவும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல் இந்தி திணிப்புப்போரைத் தொடங்கினார். மறைமலையடிகளாரையும் நாவலர் சோமசுந்தரபாரதியாரையும் தலைமையேற்றச்செய்து, பெரியார் தொண்டராக இருந்து இப்போராட்டத்தை நடத்தினார்.

இதுவே முதல் இனப்போர், மொழிப்போர். தமிழர்கள் தம் இனம்காக்க மொழிகாக்க ஒன்றரையாண்டுகள் நெடும்போராட்டமாக இந்தி திணிப்பு எதிர்ப்புப்போராட்டத்தை நடத்தினர், பலவுயிர்களை பறிகொடுத்தனர். அதில் உயிரிழந்தவர்கள் தான் ஐயா தாளமுத்துவும் நடராசனாரும். 1940 பிப்ரவரி 21ஆம் நாள் இந்தி கட்டாயப்பாடம் என்பது ஒழிக்கப்பட்டது. தமிழர்கள் மொழிபோரில் வெற்றிகண்டனர். அதன்பிறகு, 1947, 1950 சட்டம், மீண்டும் 1965ல் இரண்டாம் இந்தி திணிப்பு எதிர்ப்புப்போர் உருவானது, இது ஒரு நீண்ட வரலாறு. (படித்தறிக)



ஐ.நா அவையால் வங்கமொழிப்போர் நினைவாக உலகத்தாய்மொழிநாள் அறிவிக்கப்படுவதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தாய்மொழிப்போர் நிகழ்த்தி வெற்றிகண்டு உலகத்தாய்மொழிநாளை உருவாக்கினர். உலகத்து மக்கள் அனைவரும் இத்தாய்மொழிநாளைக் கொண்டாடினாலும், அதற்கு முழு உரிமையுடையவர் தமிழர்களே.

இது மட்டுமின்றி, உலகமொழிகளுக்கெல்லாம் மூத்தமொழியாகவும் தாய்மொழியாகவும் இருப்பது தமிழேயாகையால் இது உலகத்தமிழ்மொழிநாளாகும்.

இந்நாளில் தாய்த்தமிழ்மொழிகாக்க நாம் சில உறுதிகளை பூணவேண்டும்.

தமிழிலேயே பேசவேண்டும்
தமிழிலேயே படிக்கவேண்டும்
தமிழில் பிறமொழி கலப்பைத் தவிர்க்கவேண்டும்
வழிபாட்டுமொழி வழக்காடுமொழி தமிழாகவே இருக்கவேண்டும்.
பிறமொழி தவிர்த்து நற்றமிழிலேயே பெயரிடவேண்டும்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழாகவே இருக்கவேண்டும்.

அனைவருக்கும் உலகத்தாய்மொழிநாள் வாழ்த்துகள்.

நன்றி. வணக்கம்

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Thursday, February 18, 2021

எது மந்திரம்? தொல்காப்பியர், திருவள்ளுவர் விளக்கங்கள்

தொல்காப்பியரும் வள்ளுவரும்: மந்திரம்🙏


தொல்காப்பியர் சொன்ன கருத்தை, அவர்வழியில் வள்ளுவரும் அதே கருத்தை சொல்லியிருக்கிறார்.





தொல்காப்பியம்,

பொருளதிகாரம், செய்யுளியல்-1425


நூற்பா:

'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்

மறைமொழிதானே மந்திரம்' என்ப.


உரை:

நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைசொல்லே மந்திரம் என்பதாகும்.


திருக்குறள், அறம், பாயிரம், நீத்தார்பெருமை - 28


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.


விளக்கம்:

நிறைவான வாக்குப்பெருமையுடைய மேன்மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன  மறைசொற்களே அடையாளம் காட்டிவிடும்.


************************


இருவேறு காலங்களில் வாழ்ந்த இறுவேறு தமிழ்ப்புலவர்களின் ஒன்றுபட்ட கருத்து. என்னே வியப்பு!!! தொல்காப்பியரை அப்படியே பின்பற்றியிருக்கிறார் வள்ளுவர்.


நன்றி. வணக்கம்.

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Saturday, February 13, 2021

காதற்சிறப்பு

 காதற்சிறப்பு : - நற்காதலன் வள்ளுவன் ❤️


திருக்குறள் : காமம்

களவியல் / காதற்சிறப்புரைத்தல் :


1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

          வாலெயி றூறிய நீர்.


இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்துவரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.


1122. உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன

          மடந்தையொ டெம்மிடை நட்பு.


உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு.


1123. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந்

          திருநுதற் கில்லை யிடம்.


நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!


1124. வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத

          லதற்கன்ன ணீங்கு மிடத்து.


ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்.


1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே

          னொள்ளமர்க் கண்ணாள் குணம்.


ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு.


1126. கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருகுவரார்

          நுண்ணியரெங் காத லவர்.


காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்.


1127. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு

          மெழுதேங் கரப்பாக் கறிந்து.


காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப்பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.


1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட

          லஞ்சுதும் வேபாக் கறிந்து.


சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.


1129. இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே

          யேதில ரென்னுமிவ் வூர்.


கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத்தந்த அன்பில்லதாவர் என்று அவரைக்கூறும்.


1130. உவந்துறைவ ருள்ளத்து ளென்று

          மிகந்துறைவ

          ரேதில ரென்னுமிவ் வூர்.


காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.


                              - நற்காதலன் வள்ளுவன் ❤️


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️


நன்றி. வணக்கம்.



தமிழ் நீடுவாழ்க

தமிழ் நீடுவாழ்க ❤️💪😍


காதொளிரும் குண்டலமும் கைக்குவளை

      யாபதியும் கருணை மார்பின்

மீதொளிர்சிந் தாமணியும் மெல்லிடையில்

      மேகலையும் சிலம்பார் இன்பப்

போதொளிர்பூந் தாளினையும் பொன்முடிசூ

      ளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்

      தாங்குதமிழ் நீடு வாழ்க!”




தமிழ்நாடு தமிழர்க்கே உரியது

தமிழ்நாடு தமிழர்க்கே உரியதுபிறருக்கன்று :


புறநானூறு 51 ஆம் பாட்டு :


பாடியவர் : ஐயூர் முடவனார் (அ) ஐயூர் கிழார்

பாடப்பட்டோன் : பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன் வழுதி.

திணை : வாகை.

துறை : அரச வாகை.

குறிப்பு : 'செம்புற்று ஈயல்போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்' என்னும் செறிவான அறவுரையைக் கூறுவது.




பாட்டு :


நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின்,

மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;

வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு

அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,

‘தண் தமிழ் பொது’ எனப் பொறாஅன், போர் எதிர்ந்து,

கொண்டி வேண்டுவன் ஆயின், ‘கொள்க’ எனக்

கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;

அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே;

நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த

செம்புற்று ஈயல் போல,

ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!


விளக்கம் :

மிகுந்துவரும் வெள்ளத்தை தடுக்கவியலாது. மிகுந்துவரும் தீயைத்தடுக்கக் குடைபிடிக்க முடியாது. மிகுந்துவரும் காற்றை எதிர்த்துநிற்கும் வலிமை யாருக்குமில்லை. வெயிலின் பெருவெளிச்சத்தையும் தடுக்கவியலாது. அதுபோல, வழுதியை எதிர்த்துநிற்க யாருமில்லை. தமிழ்நாடு, எல்லா அரசர்களுக்கும் பொது என்பதை இவன் பொறுத்துக்கொள்ளமாட்டான். தமிழ்நாடு முழுவதும் தனக்கே உரியது எனப்போரிடுவான். கொண்டி (திறை) தரவேண்டும் என்பானாயின் கொடுத்த மன்னர் அச்சமின்றி அரசாளலாம். அவனது அரவணைப்பை இழந்தவர் இரக்கங்கொள்ளத்தக்கவர். புற்றிலிருந்து கிளம்பும் ஈயல் ஒருநாள் வாழ்க்கையில் அழிவதுபோல அவர்களின் வாழ்வு அழியும்.


நன்றி. வணக்கம்.

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Tuesday, February 9, 2021

வழக்குரை காதை

கண்ணகி வழக்குரை காதை :


அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து 

இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே

இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை இழந்தாள் கடையகத் தாளென்று

அறிவிப் பாயே அறிவிப் பாயே 

                                                        - கண்ணகி


அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்

பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி

வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்

அறுவர்க் கிளைய நங்கை இறைவனை

ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்

கானகம் உகந்த காளி தாருகன்

பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்

செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்

பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை இழந்தாள் கடையகத் தாளே

                                                             - வாயிலோன்


நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்

யாரை யோநீ மடக்கொடி யோய்

                                                      - நெடுஞ்செழியன்


தேரா மன்னா செப்புவ துடையேன்

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன் மகனை யாகி

வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு

என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி

கண்ணகி யென்பதென் பெயரே.

                                                        - கண்ணகி


பெண்ணணங்கே

கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று

வெள்வேற் கொற்றங் காண்

                                                - நெடுஞ்செழியன்




நற்றிறம் படராக் கொற்கை வேந்தே

என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே

                                                           - கண்ணகி


தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி

யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே.

                                                  - நெடுஞ்செழியன்


தருகெனத் தந்து தான்முன் வைப்பக்

கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப

மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு

தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்

                                                     - இளங்கோ


பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட

யானோ அரசன் யானே கள்வன் 

மன்பதை காக்குந் தென்புலங் காவல்

என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுள்

                                                      - நெடுஞ்செழியன்


மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்

கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கி

                                                             - இளங்கோ


கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்

                                                           - கோப்பெருந்தேவி


இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி                         

                                                        - இளங்கோ


👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍


சிலம்பு முற்றிற்று.