Tuesday, February 9, 2021

வழக்குரை காதை

கண்ணகி வழக்குரை காதை :


அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து 

இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே

இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை இழந்தாள் கடையகத் தாளென்று

அறிவிப் பாயே அறிவிப் பாயே 

                                                        - கண்ணகி


அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்

பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி

வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்

அறுவர்க் கிளைய நங்கை இறைவனை

ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்

கானகம் உகந்த காளி தாருகன்

பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்

செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்

பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை இழந்தாள் கடையகத் தாளே

                                                             - வாயிலோன்


நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்

யாரை யோநீ மடக்கொடி யோய்

                                                      - நெடுஞ்செழியன்


தேரா மன்னா செப்புவ துடையேன்

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன் மகனை யாகி

வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு

என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி

கண்ணகி யென்பதென் பெயரே.

                                                        - கண்ணகி


பெண்ணணங்கே

கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று

வெள்வேற் கொற்றங் காண்

                                                - நெடுஞ்செழியன்




நற்றிறம் படராக் கொற்கை வேந்தே

என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே

                                                           - கண்ணகி


தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி

யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே.

                                                  - நெடுஞ்செழியன்


தருகெனத் தந்து தான்முன் வைப்பக்

கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப

மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு

தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்

                                                     - இளங்கோ


பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட

யானோ அரசன் யானே கள்வன் 

மன்பதை காக்குந் தென்புலங் காவல்

என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுள்

                                                      - நெடுஞ்செழியன்


மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்

கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கி

                                                             - இளங்கோ


கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்

                                                           - கோப்பெருந்தேவி


இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி                         

                                                        - இளங்கோ


👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍


சிலம்பு முற்றிற்று.

No comments:

Post a Comment