தமிழ்நாடு தமிழர்க்கே உரியதுபிறருக்கன்று :
புறநானூறு 51 ஆம் பாட்டு :
பாடியவர் : ஐயூர் முடவனார் (அ) ஐயூர் கிழார்
பாடப்பட்டோன் : பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன் வழுதி.
திணை : வாகை.
துறை : அரச வாகை.
குறிப்பு : 'செம்புற்று ஈயல்போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்' என்னும் செறிவான அறவுரையைக் கூறுவது.
பாட்டு :
நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின்,
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,
‘தண் தமிழ் பொது’ எனப் பொறாஅன், போர் எதிர்ந்து,
கொண்டி வேண்டுவன் ஆயின், ‘கொள்க’ எனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;
அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே;
நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த
செம்புற்று ஈயல் போல,
ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!
விளக்கம் :
மிகுந்துவரும் வெள்ளத்தை தடுக்கவியலாது. மிகுந்துவரும் தீயைத்தடுக்கக் குடைபிடிக்க முடியாது. மிகுந்துவரும் காற்றை எதிர்த்துநிற்கும் வலிமை யாருக்குமில்லை. வெயிலின் பெருவெளிச்சத்தையும் தடுக்கவியலாது. அதுபோல, வழுதியை எதிர்த்துநிற்க யாருமில்லை. தமிழ்நாடு, எல்லா அரசர்களுக்கும் பொது என்பதை இவன் பொறுத்துக்கொள்ளமாட்டான். தமிழ்நாடு முழுவதும் தனக்கே உரியது எனப்போரிடுவான். கொண்டி (திறை) தரவேண்டும் என்பானாயின் கொடுத்த மன்னர் அச்சமின்றி அரசாளலாம். அவனது அரவணைப்பை இழந்தவர் இரக்கங்கொள்ளத்தக்கவர். புற்றிலிருந்து கிளம்பும் ஈயல் ஒருநாள் வாழ்க்கையில் அழிவதுபோல அவர்களின் வாழ்வு அழியும்.
நன்றி. வணக்கம்.
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment