Wednesday, April 22, 2020

நூல்களின் சிறப்பைப்பற்றி அறிஞர்களின் கூற்றுகள்

நூல்களின் சிறப்பு :


உலகப்புகழ்பெற்ற கவிஞர் சேக்சுபியரின் பிறந்தநாள் ஏப்ரல் 23. இதைத்தான் உலகப்புத்தக நாளாகக் கொண்டாடுகிறோம். (ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன் கொண்டாடுகிறோமென்று).


புத்தகங்களைப்பற்றி சிலவறிஞர்கள் கூறியவற்றை இங்கே காணலாம்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் :

“காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீயே(நூல்).. இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீதான்”.

பேரறிஞர் அண்ணா :

"வீட்டுக்கொரு புத்தக சாலை, நாட்டுக்கொரு நல்ல நிலை”.

கவிஞர் வால்ட் விட்மன் :

“புத்தகத்தைக் கையில் எடுக்கும்போது ஒரு மனிதனின் இதயத்தைக் கையில் எடுக்கிறீர்கள்”.

கார்லைல் :

“ஆட்சி அதிகாரத்தையே உலுக்கி விடும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு”.

மார்ட்டின் லூதர்கிங் :

"துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள்.. புத்தகங்கள்”

ஆல்பர்ட் ஐன்சுடீன் :

“மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிகச் சிறந்தது புத்தகம் தான்”.

வின்சுடன் சர்ச்சில் :

"எனது முன்னேற்றங்கள் அனைத்திற்கும் ஒரே ஆசான்.. புத்தகங்கள் தான்”.

“குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கித்தரும் மிகச்சிறந்த பரிசு, புத்தகங்களே.”

சாமுவேல் சான்சன் :

“மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே அற்புதமானதும் அதிக பயனுள்ளதும் புத்தகம் ஒன்றுதான்”.

ஹென்றி வார்ட் பீச்சர் :

“வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.”

பெரியார் :

பெண்கள் முன்னேற என்னதான் வழியென்று கேட்டபோது “முதலில் அவர்கள் கைகளிலுள்ள கரண்டிகளைப் பிடுங்கிவிட்டு புத்தகங்களைக் கொடுங்கள்”.

ஐசக் நியூட்டன் :

"ஒரு புத்தகம் நூறு நண்பர்களுக்குச் சமம்”.

சான் மில்டன் :

“ஒரு புத்தகத்தைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குத்  தருபவனே மனிதகுலத்தின் உண்மையான விடிவெள்ளி”

அம்பேத்கர் :

ஒரு முறை வெளிநாடு சென்றிருந்த போது எங்கு தங்க விரும்புகிறீர்கள் எனக் கேட்டபோது "எந்த இடம் நூலகத்திற்கு அருகில் இருக்கிறது" எனக் கேட்டாராம்.

நேரு:

உங்களை ஒரு தனித் தீவிற்கு நாடு கடத்தினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு “புத்தகங்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பேன்” என்றார்.

லெனின் :

பிறந்தநாள் பரிசு என்னவேண்டுமென மக்கள் கேட்க, "புத்தகம்" என்றாராம். லெனின் இறந்த போது “லெனின் வாசிப்பதை, சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்” என்று கூறினராம்.

பிளேட்டோ :

“ஒருவன் புத்தகங்களைப் படித்து புதிய விசயங்களைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதை விட பிறவாமல் இருப்பதே நல்லது.”

சேம்சு ஆலன் :

“நீ எந்தப் புத்தகத்தைப் படிக்கிறாய், படித்திருக்கிறாய் என்பதைச் சொல்.. நீ யாரென்பதைச் சொல்கிறேன்”.

நன்றி.. வணக்கம்.

****************************************

தகவல் உதவி : வலைத்தளம்

நூல் - தொல்காப்பியம் கூறும் விளக்கம்

நூல் - தொல்காப்பிய விளக்கம் :


இன்று உலக நூல் நாளாம். இந்நாளில் உங்களுக்கெல்லாம் ஒரு உண்மையைச்சொல்கிறேன். எல்லாவற்றையும் நூல் எனச்சொல்லுதல் பிழையாம். நான் சொல்லவில்லை, தொல்காப்பியனார் சொல்கிறார்.


சொற்கள் அடங்கிய தொகுப்பை ஏழாய் பிரித்துள்ளனர். அவையாவன:

௧) பாட்டு
௨) உரை
௩) நூல்
௪) வாய்மொழி
௫) பிசி
௬) அங்கதம்
௭) முதுசொல்

இவற்றுள் ஒன்றுதான் நூல் என்பது. நூல் என்பதன் விளக்கத்தையும் தொல்லாசானே கூறியுள்ளார். அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது, படித்தறிக.

இந்த நூல் என்பது நான்கு வகைப்படும். அவையாவன:


௧) சூத்திரம்
௨) ஓத்து
௩) படலம்
௪) பிண்டம்

இவற்றை விளக்கும் தொல்காப்பிய நூற்பாக்கள் கீழே இணைத்துள்ளேன். கற்றறிக.

==========================================

தொல்காப்பியம் : பொருளதிகாரம் : செய்யுளியல்


'எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின்,
அடி வரை இல்லன ஆறு' என மொழிப. 1411

உரை:
அடிவரையறையில்லாதன வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று. எழுநிலமாவன பாட்டு, உரை, நூல். வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. அவற்றுட் பாட்டொழிந்த ஆறும் அடிவரையில வென்றவாறு.

************

அவைதாம்,
நூலினான, உரையினான,
நொடியொடு புணர்ந்த பிசியினான,
ஏது நுதலிய முதுமொழியான,
மறை மொழி கிளந்த மந்திரத்தான,
கூற்று இடை வைத்த குறிப்பினான. 1412

உரை:
மேற்சொல்லப்பட்ட அறுவகையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வாய்மொழியெனினும் மந்திரமெனினும் ஒக்கும். அங்கதமாவது ` செம்பொருள் கரந்ததென விருவகைத்தே ' (செய்யுளியல் - 120) என்றதனாற் கரந்தவங்கதமெனினுஞ் சொற்குறிப்பெனினு மொக்கும். அவையாமாறு வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும்.

************

நூல் என்பதன் விளக்கம்:


அவற்றுள்,
நூல் எனப்படுவது நுவலும் காலை,
முதலும் முடிவும் மாறுகோள் இன்றி,
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி,
உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து,
நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே.

உரை:
நூலென்று சொல்லப்பட்டது எடுத்துக்கொண்ட பொருளொடு முடிக்கும் பொருண்மை மாறுபடாமற் கருதியபொருளைத் தொகையானும் வகையானுங் காட்டி யதனகத்து நின்றும் விரிந்தவுரையோடு பொருத்த முடைத்தாகி நுண்ணியதாகி விளக்குவது நூற்கியல்பு என்றவாறு.

*************

அதுவே தானும் ஒருநால் வகைத்தே. 1413

'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்,
இன மொழி கிளந்த ஓத்தினானும்,
பொது மொழி கிளந்த படலத்தானும்,
மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று
ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப. 1414

உரை:
மேல் தொகை கொடுக்கப்பட்ட நான்குமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஒருபொருள் நுதலிய சூத்திரத்தானும் என்பது - ஆசிரியன் யாதானு மொருபொருளைக் குறித்துக்கூறுஞ் சூத்திரத்தானும் என்றவாறு.

இனமொழி கிளந்த ஒத்தினானும் என்பது - இனமாகிய பொருள்கள் சொல்லப்படும் ஓத்தினானும் என்றவாறு.

பொதுமொழி கிளந்த படலத்தானும் என்பது-மேற்சொல்லப்பட்ட இனங்கள் பலவற்றையுங் கூறப்படும் படலத்தானும் என்றவாறு.

மூன்றுறுப் படக்கிய பிண்டத்தானும் என்பது - இம்மூன்றனையும் உறுப்பாக அடக்கிய பிண்டத்தானும் என்றவாறு.

நன்றி : தொல்காப்பியம்
பதிவு : தமிழ் கோ விக்ரம்

தமிழவைப் பெண்பாற்புலவர்கள் :

தமிழவை பெண்பாற்புலவர்கள் :


ஈராயிரமாண்டுகட்கு முன்பே வீரமும் கல்வியில் புலமையும்பெற்றிருந்த பெண்கள் நிறைந்திருந்த குடி உலகிலேயே நம் தமிழ்க்குடியாகத்தான் இருந்திருக்கமுடியும்.



௧) அச்சியத்தை மகள் நாகையார்
௨) ஔவையார்
௩) அள்ளூர் நன்முல்லையார்
௪) ஆதிமந்தி
௫) இளவெயினி
௬) உப்பை ஃ உறுவை
௭) ஒக்கூர் மாசாத்தியார்
௮) கரீனா கண்கணையார்
௯) கவியரசி
௰) கழார் கீரன் எயிற்றியார்

௧௧) கள்ளில் ஆத்திரையனார்
௧௨) காக்கை பாடினியார் நச்செள்ளையார்
௧௩) காமக்கணிப் பசலையார்
௧௪) காரைக்காலம்மையார்
௧௫) காவற்பெண்டு
௧௬) கிழார் கீரனெயிற்றியார்
௧௭) குட புலவியனார்
௧௮) குமிழிநாழல் நாப்பசலையார்
௧௯) குமுழி ஞாழல் நப்பசையார்
௨०) குறமகள் ஃ இளவெயினி

௨௧) குறமகள் ஃ குறிஎயினி
௨௨) குற மகள் இளவெயினியார்
௨௩) கூகைக்கோழியார்
௨௪) தமிழறியும் பெருமாள்
௨௫) தாயங்கண்ணி
௨௬) நக்கண்ணையார்
௨௭) நல்லிசைப் புலமை மெல்லியார்
௨௮) நல்வெள்ளியார்
௨௯) நெட்டிமையார்
௩०) நெடும்பல்லியத்தை

௩௧) பசலையார்
௩௨) பாரிமகளிர் (அங்கவை சங்கவை)
௩௩) பூங்கண்ணுத்திரையார்
௩௪) பூங்கண் உத்திரையார்
௩௫) பூதபாண்டியன் தேவியார்
௩௬) பெண்மணிப் பூதியார்
௩௭) பெருங்கோப்பெண்டு
௩௮) பேய்மகள் இளவெயினி
௩௯) பேயனார்
௪०) பேரெயென் முறுவலார்

௪௧) பொத்தியார்
௪௨) பொன்மணியார்
௪௩) பொன்முடியார்
௪௪) போந்தலைப் பசலையார்
௪௫) மதுவோலைக் கடையத்தார்
௪௬) மாற்பித்தியார்
௪௭) மாற்பித்தியார் (இயற்பெயர் பித்தி)
௪௮) மாறோக்கத்து நாப்பசலையார்
௪௯) முள்ளியூர் பூதியார்
௫०) முன்னியூப் பூதியார்

௫௧) வரதுங்க ராமன் தேவியார்
௫௨) வருமுலையாருத்தி
௫௩) வில்லிபுத்தூர்க் கோதையார்
௫௪) வெண்ணிக் குயத்தியார்
௫௫) வெள்ளி வீதியார்
௫௬) வெறிபாடிய காமக்கண்ணியர்

தொகுப்பு : விக்கிபீடியா.

**************************

பெண்பாற்புலவர்களைப்பற்றிய நூல்கள் :




1933ஆம் ஆண்டு, மாபுலவர் இரா.இராகவையங்கார் அவர்கள் "நல்லிசைப்புலமை மெல்லியலார்கள்" என்னும் தலைப்பில் 31 பெண்பாற்புலவர்களைத் தொகுத்து ஒருநூலை எழுதியுள்ளார்.

1953ஆம் ஆண்டு, புலவர் கா.கோவிந்தன் அவர்கள் "பெண்பாற்புலவர்கள்" என்னும் தலைப்பில் 26 பெண்பாற்புலவர்களை பட்டியலிட்டு ஒருநூலை எழுதியுள்ளார்.

அவ்விரு நூல்களின் புலவர்கள் பட்டியலை இங்கு இணைத்துள்ளேன்.

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

தமிழவைக்காலத்துச் சேர சோழ பாண்டிய அரசர்கள் பட்டியல் :

தமிழவைக்காலத்துச்சேரவரசர்கள் சிலர் :



௧. அந்துவஞ்சேரலிரும்பொறை
௨. ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்
௩. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
௪. இளங்குட்டுவன்
௫. இளஞ்சேரலிரும்பொறை
௬. உதியஞ்சேரலாதன்
௭. கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
௮. கணைக்காலிரும்பொறை
௯. கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ்சேரலிரும்பொறை
௰. கருவூர்ச்சாத்தன்
௧௧. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
௧௨. குட்டுவன்கோதை
௧௩. கோக்கோதைமார்பன்
௧௪. கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை
௧௫. செல்வக்கடுங்கோ வாழியாதன்
௧௬. தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை
௧௭. நம்பி குட்டுவனார்
௧௮. பல்யானைச்செல்கெழு குட்டுவன்
௧௯. பாலைபாடிய பெருங்கடுங்கோ
௨௰. மருதம்பாடிய இளங்கடுங்கோ
௨௧. மாந்தரம்பொறையன் கடுங்கோ
௨௨. மாரிவெண்கோ
௨௩. முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்
௨௪. யானைகட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை
௨௫. வஞ்சன்





******************************

தமிழவைக்காலத்துச்சோழவரசர் சிலர் :




௧. இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி
௨. இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி
      சேட்சென்னி
௩. உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி
௪. ஏனாதி திருக்கிள்ளி
௫. கரிகாற்பெருவளத்தான்
௬. குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன்
௭. குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன்
௮. கோப்பெருஞ்சோழன்
௯. செங்கணான்
௰. செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி
௧௧. தித்தன்
௧௨. துலைபுக்கபெரியோன் {சிபி}
௧௩. தூங்கெயிலெறிந்த தொடித்தோட்செம்பியன்
௧௪. நலங்கிள்ளி
௧௫. நல்லுருத்திரன்
௧௬. நெடுங்கிள்ளி
௧௭. நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
௧௮. போரவைக்கோப்பெருநற்கிள்ளி
௧௯. மாவளத்தான்
௨௰. முடித்தலைக்கோப்பெருநற்கிள்ளி
௨௧. வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி



*******************************

தமிழவைக்காலத்துப்பாண்டியவரசர் சிலர்.



௧. அண்டர்மகன் குறுவழுதி
௨. அறிவுடைநம்பி
௩. ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
௪. இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறன்
௫. ஏனாதி நெடுங்கண்ணன்
௬. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
௭. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
௮. கருங்கை ஒள்வாள் பெரும்பெயர்வழுதி
௯. கானப்பேரெயில்கடந்த உக்கிரப்பெருவழுதி
௰. கீரஞ்சாத்தன்
௧௧. குறுவழுதியார்
௧௨. கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதி
௧௩. சித்திரமாடத்துத்துஞ்சிய நன்மாறன்
௧௪. தலையாலங்கானத்துச்செருவென்ற
        நெடுஞ்செழியன்
௧௫. நம்பிநெடுஞ்செழியன்
௧௬. நல்வழுதி
௧௭. நிலந்தருதிருவின் நெடியோன்
௧௮. பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி
௧௯. பொற்கைப்பாண்டியன்
௨௰. மதிவாணன்
௨௧. மாலைமாறன்
௨௨. மாறன்வழுதி
௨௩. முடத்திருமாறன்
௨௪. வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதி
௨௫. வெற்றிவேற்செழியன்



*******************************

நன்றி. வணக்கம்.
உதவி : சங்ககாலவரசர் வரிசை நூல்

புறம் 163 - குமணனின் கொடையும் தமிழர்தம் கொடைப்பண்பும்

புறம் 163 - தமிழர்தம்கொடைப்பண்பு :


பாடியவர் : பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டவர் : புலவரின் மனைவி.
திணை : பாடாண்.
துறை : பரிசில்.

நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்,
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்,
இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி-மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.

விளக்கம் :

இவை முதிரமலை அரசன் குமணன் கொடுத்த செல்வங்கள். இவற்றை எல்லாருக்கும் கொடு. உன்னை விரும்பி வாழ்பவர்களுக்கும், நீ யாரை விரும்பி வாழ்கிறாயோ அவர்களுக்கும், உன்னைப் பின்பற்றிக் கற்றுக்கொண்டு வாழும் உன் சுற்றத்தார்களுக்கும், உனக்கும் உன் சுற்றத்தார்களுக்கும் பசி போக்கக் கடனாகக் கொடுத்து உதவியவர்களுக்கும், இன்னாருக்கு என்று கணக்குப் பார்க்காமல், என்னை எதும் கேட்காமல், எல்லாருக்கும் வழங்குவாயாக.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

இப்படி, மன்னனிடம் தான்பெற்ற பரிசிலை புலவர் பெருஞ்சித்திரனார், தன்மனைவியிடம் சொல்லி அனைவருக்கும் கொடுக்கச்சொல்கிறார். இவர் எத்தயை வறுமையில் இருந்தார் என்பதை இப்புறப்பாட்டிற்கு முன்புள்ள நான்கு பாடல்களில் எடுத்துக்கூறுவார். குப்பைக்கீரைகளைச் சமைக்கலாமென்றால், உப்பிற்குக்கூட வழியில்லை என்று மிகுந்த துயரத்துடன் பாடியிருப்பார். வறுமையும் புலமையும் சேர்ந்தேயிருக்குமென்பது மெய்யே போலும். அப்படிப்பட்ட வறுமையின்போதும் பெற்ற பரிசிலை அனைவருக்கும் கொடு என்று மனைவியிடம் கூறுகிறார். இதுவன்றோ தமிழர்தம் கொடைப்பண்பு. யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது. எங்கே போனது அம்மனம்? இப்போது, யார்காலை வாரலாமென்று தான் நம்மக்கள் மாறிப்போயுள்ளனர்.

(நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது, இக்கதை எங்களுக்கு உரைநடைப்பாடமாக இருந்தது. அதில் நான், புலவர் பெருசித்திரனாராக நடித்திருந்தேன்😊).



இக்குமண வள்ளலே, தன் தம்பி இளங்குமணனின் சூழ்ச்சியால் காட்டிலிருந்தபோது, அண்ணனின் தலையை கொண்டுவருவோர்க்கு நூறாயிரம் பொற்காசு வழங்குவேனென்று சொல்லியிருந்த நேரத்தில், அதையறியாத புலவர் பெருந்தலைச் சாத்தனார் குமணனிடம் பாடிப்பரிசில்பெற வந்தபோது, பரிசில் தர என்னிடம் ஏதுமில்லை. என்னுயிர் மட்டுமே உள்ளது. என்தலைக்கு நூறாயிரம் பொன் விலை வைத்துள்ளான் என்தம்பி, என் தலையை வெட்டி என்தம்பியிடம் கொடுத்து பொன்னைப்பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியவன். வறியவர் துயர்தீர தன்னுயிரையும் கொடுக்கத் துணிந்தவன் குமணப்பெருவள்ளல்.
இவையனைத்தும் புறநானூற்றில் தொடர் பாக்களாக தொகுக்கப்பெற்றுள்ளன.

நன்றி. வணக்கம் 🙏

பன்னிருதிருமுறை சிறப்பைக்கூறும் பாடல்கள்

திருமுறைகள் அருளாளர்கள் சிறப்பை உணர்த்தும் சில அறியப்படாத பாடல்கள் :




மூவர் திருப்பதிகங்களையும் 'தேவாரம்' என்ற பெயரால் முதன் முதல் தெளிவாகக் குறிப்பிட்டு வழங்கியவர் சைவ எல்லப்ப நாவலர் ஆவர். இவர் தாம் பாடிய திருவருணைக் கலம்பகத்து காப்புச் செய்யுளில் சைவ சமய குரவர் நால்வரையும் போற்றிய பா.

"சைவத்தின் மேற்சமயம்வே
        றிலையதில் சார்சிவமாம்
தெய்வத்தின் மேல்தெய்வம் இல்லெனும்
       நான்மறைச் செம்பொருள்வாய்
மைவத்த சீர்திருத் தேவார
       மும்திரு வாசகமும்
உய்வைத் தரஞ்செய்த நால்வர்
       பொற்றாள் உயிர்த்துணையே."

              - சைவ எல்லப்ப நாவலர்

திருவிளையாடற்புராணம்,நாட்டுச் சிறப்பு- 68.

தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை
உண்ட பாலனை அழைத்ததும், எலும்புபெண் உருவாக்
கண்ட தும்மறைக் கதவினைக் திறந்ததும் கன்னித்
தண்டமிழ்ச் சொலோ? மறுபுலச் சொற்களோ? சாற்றீர்!

             - பரஞ்சோதியார்

 வாக்கிற்கு அருணகிரி வாதவூ ரர்கனிவில்
 தாக்கில் திருஞான சம்பந்தர்-நோக்கிற்கு
 நக்கீர தேவர் நயத்திற்குச் சுந்தரனார்
 சொற்குஉறுதிக்கு அப்பர்எனச் சொல்.

       - இயற்றியவர் பெயர் தெரியவில்லை

மொழிக்கு மொழி தித்திப்பாக
மூவர் சொலும் தமிழ்

              - என்று பாராட்டுகின்றார் தாயுமானவர்.

தேவாரத்தில் உள்ள இனிய இசையின் மாண்பை,

வெந்தழல் நீராமால் வெள்ளெலும்பு பெண்ணாமால்
வந்த மதவேழம் வணங்கிடுமால்-சந்தமெழப்
பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு
நீடுலகில் உண்டோ நிகர்.

- இயற்றியவர் பெயர் தெரியவில்லை

திருமுறைகளைத் தொழுது போற்றிக் கற்று, உரை எழுதாமல் முன்னோர்கள் சென்று விட்டனர். திருமுறைகளைக் கற்ற நம் முன்னோர்களிடம், இக்காலத்தார் எங்ஙனம் உரை செய்வர் என்று,

அறம்உரைத் தானும் புலவன்;முப் பாலின்
திறம்உரைத் தானும் புலவன்; - குறுமுனி
தானும் புலவன்; தரணி பொறுக்குமோ
யானும் புலவன் எனில்.

          - இயற்றியவர் பெயர் தெரியவில்லை

நால்வர் நான்மணி மாலையில்

திருவா சகம்இங்கு ஒருகால் ஓதின்,
கருங்கல் மனமும் கரைந்துஉகக் கண்கள்
தொடுமணற் கேணியின் சுரந்துநீர் பாய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப்பு எய்தி
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகின் மற்றையர் இலரே.

         - சிவப்பிரகாச சுவாமிகள்

உதவி: வலைத்தளம்
தொகுப்பு: தமிழ் கோ விக்ரம்

நன்றி. வணக்கம்.

தமிழ் வாழ்க

செல்வத்துப்பயனே ஈதல் - புறம் 189

செல்வத்துப்பயனே ஈதல் : 🙏  புறம் 189


செல்வர்க்கு செல்வம் வாய்த்தமை ஏனெனில், வறியவர்க்கு ஈயும் பொருட்டேயாகும்.

பாடியவர் : மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
திணை : பொதுவியல்
துறை : பொருண்மொழிக் காஞ்சி
(செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது.)




தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி  உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
(அதனால்) செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே.

விளக்கம் : 

ஒருவன் தெளிந்த கடல் சூழ்ந்திருக்கும் உலகம் அனைத்தையும் பிறருக்கு உரிமை இல்லாமல் தனக்கே உரியதாய் தன் வெண்கொற்றக் குடைக்கீழ்க் கொண்டுவந்து ஆண்டு ஆனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

மற்றொருவன் பகல் இரவு என்று பாராமல் நள்ளிரவிலும் உணவுக்கு வேட்டையாட விலங்கினைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். என்று வைத்துக்கொள்வோம்.

யாராய் இருந்தால் என்ன? அவன் உண்பது ஒரு படி உணவு. உடுத்திருப்பவை மேலாடை, கீழாடை என்று இரண்டே துணி. பிறவற்றை எண்ணிப் பார்த்தாலும் இருவர் நுகர்வும் ஒன்றாகவே உள்ளது. அப்படி இருக்கும்போது செல்வத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்யப் போகிறோம். துய்க்கலாம் என்றால் மிஞ்சித் தப்பிவிடுமே. அதனால் செல்வத்துப் பயன் ஈதல் ஒன்றே.

நன்றி. வணக்கம் 🙏