திருமுறைகள் அருளாளர்கள் சிறப்பை உணர்த்தும் சில அறியப்படாத பாடல்கள் :
மூவர் திருப்பதிகங்களையும் 'தேவாரம்' என்ற பெயரால் முதன் முதல் தெளிவாகக் குறிப்பிட்டு வழங்கியவர் சைவ எல்லப்ப நாவலர் ஆவர். இவர் தாம் பாடிய திருவருணைக் கலம்பகத்து காப்புச் செய்யுளில் சைவ சமய குரவர் நால்வரையும் போற்றிய பா.
"சைவத்தின் மேற்சமயம்வே
றிலையதில் சார்சிவமாம்
தெய்வத்தின் மேல்தெய்வம் இல்லெனும்
நான்மறைச் செம்பொருள்வாய்
மைவத்த சீர்திருத் தேவார
மும்திரு வாசகமும்
உய்வைத் தரஞ்செய்த நால்வர்
பொற்றாள் உயிர்த்துணையே."
- சைவ எல்லப்ப நாவலர்
திருவிளையாடற்புராணம்,நாட்டுச் சிறப்பு- 68.
தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை
உண்ட பாலனை அழைத்ததும், எலும்புபெண் உருவாக்
கண்ட தும்மறைக் கதவினைக் திறந்ததும் கன்னித்
தண்டமிழ்ச் சொலோ? மறுபுலச் சொற்களோ? சாற்றீர்!
- பரஞ்சோதியார்
வாக்கிற்கு அருணகிரி வாதவூ ரர்கனிவில்
தாக்கில் திருஞான சம்பந்தர்-நோக்கிற்கு
நக்கீர தேவர் நயத்திற்குச் சுந்தரனார்
சொற்குஉறுதிக்கு அப்பர்எனச் சொல்.
- இயற்றியவர் பெயர் தெரியவில்லை
மொழிக்கு மொழி தித்திப்பாக
மூவர் சொலும் தமிழ்
- என்று பாராட்டுகின்றார் தாயுமானவர்.
தேவாரத்தில் உள்ள இனிய இசையின் மாண்பை,
வெந்தழல் நீராமால் வெள்ளெலும்பு பெண்ணாமால்
வந்த மதவேழம் வணங்கிடுமால்-சந்தமெழப்
பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு
நீடுலகில் உண்டோ நிகர்.
- இயற்றியவர் பெயர் தெரியவில்லை
திருமுறைகளைத் தொழுது போற்றிக் கற்று, உரை எழுதாமல் முன்னோர்கள் சென்று விட்டனர். திருமுறைகளைக் கற்ற நம் முன்னோர்களிடம், இக்காலத்தார் எங்ஙனம் உரை செய்வர் என்று,
அறம்உரைத் தானும் புலவன்;முப் பாலின்
திறம்உரைத் தானும் புலவன்; - குறுமுனி
தானும் புலவன்; தரணி பொறுக்குமோ
யானும் புலவன் எனில்.
- இயற்றியவர் பெயர் தெரியவில்லை
நால்வர் நான்மணி மாலையில்
திருவா சகம்இங்கு ஒருகால் ஓதின்,
கருங்கல் மனமும் கரைந்துஉகக் கண்கள்
தொடுமணற் கேணியின் சுரந்துநீர் பாய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப்பு எய்தி
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகின் மற்றையர் இலரே.
- சிவப்பிரகாச சுவாமிகள்
உதவி: வலைத்தளம்
தொகுப்பு: தமிழ் கோ விக்ரம்
நன்றி. வணக்கம்.
தமிழ் வாழ்க
No comments:
Post a Comment