புறம் 163 - தமிழர்தம்கொடைப்பண்பு :
பாடியவர் : பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டவர் : புலவரின் மனைவி.
திணை : பாடாண்.
துறை : பரிசில்.
நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்,
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்,
இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி-மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.
விளக்கம் :
இவை முதிரமலை அரசன் குமணன் கொடுத்த செல்வங்கள். இவற்றை எல்லாருக்கும் கொடு. உன்னை விரும்பி வாழ்பவர்களுக்கும், நீ யாரை விரும்பி வாழ்கிறாயோ அவர்களுக்கும், உன்னைப் பின்பற்றிக் கற்றுக்கொண்டு வாழும் உன் சுற்றத்தார்களுக்கும், உனக்கும் உன் சுற்றத்தார்களுக்கும் பசி போக்கக் கடனாகக் கொடுத்து உதவியவர்களுக்கும், இன்னாருக்கு என்று கணக்குப் பார்க்காமல், என்னை எதும் கேட்காமல், எல்லாருக்கும் வழங்குவாயாக.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
இப்படி, மன்னனிடம் தான்பெற்ற பரிசிலை புலவர் பெருஞ்சித்திரனார், தன்மனைவியிடம் சொல்லி அனைவருக்கும் கொடுக்கச்சொல்கிறார். இவர் எத்தயை வறுமையில் இருந்தார் என்பதை இப்புறப்பாட்டிற்கு முன்புள்ள நான்கு பாடல்களில் எடுத்துக்கூறுவார். குப்பைக்கீரைகளைச் சமைக்கலாமென்றால், உப்பிற்குக்கூட வழியில்லை என்று மிகுந்த துயரத்துடன் பாடியிருப்பார். வறுமையும் புலமையும் சேர்ந்தேயிருக்குமென்பது மெய்யே போலும். அப்படிப்பட்ட வறுமையின்போதும் பெற்ற பரிசிலை அனைவருக்கும் கொடு என்று மனைவியிடம் கூறுகிறார். இதுவன்றோ தமிழர்தம் கொடைப்பண்பு. யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது. எங்கே போனது அம்மனம்? இப்போது, யார்காலை வாரலாமென்று தான் நம்மக்கள் மாறிப்போயுள்ளனர்.
(நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது, இக்கதை எங்களுக்கு உரைநடைப்பாடமாக இருந்தது. அதில் நான், புலவர் பெருசித்திரனாராக நடித்திருந்தேன்😊).
இக்குமண வள்ளலே, தன் தம்பி இளங்குமணனின் சூழ்ச்சியால் காட்டிலிருந்தபோது, அண்ணனின் தலையை கொண்டுவருவோர்க்கு நூறாயிரம் பொற்காசு வழங்குவேனென்று சொல்லியிருந்த நேரத்தில், அதையறியாத புலவர் பெருந்தலைச் சாத்தனார் குமணனிடம் பாடிப்பரிசில்பெற வந்தபோது, பரிசில் தர என்னிடம் ஏதுமில்லை. என்னுயிர் மட்டுமே உள்ளது. என்தலைக்கு நூறாயிரம் பொன் விலை வைத்துள்ளான் என்தம்பி, என் தலையை வெட்டி என்தம்பியிடம் கொடுத்து பொன்னைப்பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியவன். வறியவர் துயர்தீர தன்னுயிரையும் கொடுக்கத் துணிந்தவன் குமணப்பெருவள்ளல்.
இவையனைத்தும் புறநானூற்றில் தொடர் பாக்களாக தொகுக்கப்பெற்றுள்ளன.
நன்றி. வணக்கம் 🙏
No comments:
Post a Comment