Wednesday, April 22, 2020

நூல் - தொல்காப்பியம் கூறும் விளக்கம்

நூல் - தொல்காப்பிய விளக்கம் :


இன்று உலக நூல் நாளாம். இந்நாளில் உங்களுக்கெல்லாம் ஒரு உண்மையைச்சொல்கிறேன். எல்லாவற்றையும் நூல் எனச்சொல்லுதல் பிழையாம். நான் சொல்லவில்லை, தொல்காப்பியனார் சொல்கிறார்.


சொற்கள் அடங்கிய தொகுப்பை ஏழாய் பிரித்துள்ளனர். அவையாவன:

௧) பாட்டு
௨) உரை
௩) நூல்
௪) வாய்மொழி
௫) பிசி
௬) அங்கதம்
௭) முதுசொல்

இவற்றுள் ஒன்றுதான் நூல் என்பது. நூல் என்பதன் விளக்கத்தையும் தொல்லாசானே கூறியுள்ளார். அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது, படித்தறிக.

இந்த நூல் என்பது நான்கு வகைப்படும். அவையாவன:


௧) சூத்திரம்
௨) ஓத்து
௩) படலம்
௪) பிண்டம்

இவற்றை விளக்கும் தொல்காப்பிய நூற்பாக்கள் கீழே இணைத்துள்ளேன். கற்றறிக.

==========================================

தொல்காப்பியம் : பொருளதிகாரம் : செய்யுளியல்


'எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின்,
அடி வரை இல்லன ஆறு' என மொழிப. 1411

உரை:
அடிவரையறையில்லாதன வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று. எழுநிலமாவன பாட்டு, உரை, நூல். வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. அவற்றுட் பாட்டொழிந்த ஆறும் அடிவரையில வென்றவாறு.

************

அவைதாம்,
நூலினான, உரையினான,
நொடியொடு புணர்ந்த பிசியினான,
ஏது நுதலிய முதுமொழியான,
மறை மொழி கிளந்த மந்திரத்தான,
கூற்று இடை வைத்த குறிப்பினான. 1412

உரை:
மேற்சொல்லப்பட்ட அறுவகையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வாய்மொழியெனினும் மந்திரமெனினும் ஒக்கும். அங்கதமாவது ` செம்பொருள் கரந்ததென விருவகைத்தே ' (செய்யுளியல் - 120) என்றதனாற் கரந்தவங்கதமெனினுஞ் சொற்குறிப்பெனினு மொக்கும். அவையாமாறு வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும்.

************

நூல் என்பதன் விளக்கம்:


அவற்றுள்,
நூல் எனப்படுவது நுவலும் காலை,
முதலும் முடிவும் மாறுகோள் இன்றி,
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி,
உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து,
நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே.

உரை:
நூலென்று சொல்லப்பட்டது எடுத்துக்கொண்ட பொருளொடு முடிக்கும் பொருண்மை மாறுபடாமற் கருதியபொருளைத் தொகையானும் வகையானுங் காட்டி யதனகத்து நின்றும் விரிந்தவுரையோடு பொருத்த முடைத்தாகி நுண்ணியதாகி விளக்குவது நூற்கியல்பு என்றவாறு.

*************

அதுவே தானும் ஒருநால் வகைத்தே. 1413

'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்,
இன மொழி கிளந்த ஓத்தினானும்,
பொது மொழி கிளந்த படலத்தானும்,
மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று
ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப. 1414

உரை:
மேல் தொகை கொடுக்கப்பட்ட நான்குமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஒருபொருள் நுதலிய சூத்திரத்தானும் என்பது - ஆசிரியன் யாதானு மொருபொருளைக் குறித்துக்கூறுஞ் சூத்திரத்தானும் என்றவாறு.

இனமொழி கிளந்த ஒத்தினானும் என்பது - இனமாகிய பொருள்கள் சொல்லப்படும் ஓத்தினானும் என்றவாறு.

பொதுமொழி கிளந்த படலத்தானும் என்பது-மேற்சொல்லப்பட்ட இனங்கள் பலவற்றையுங் கூறப்படும் படலத்தானும் என்றவாறு.

மூன்றுறுப் படக்கிய பிண்டத்தானும் என்பது - இம்மூன்றனையும் உறுப்பாக அடக்கிய பிண்டத்தானும் என்றவாறு.

நன்றி : தொல்காப்பியம்
பதிவு : தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment