கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் பொத்தியாரும் பிறசான்றோரும்
உயிர்நண்பன் என்பதற்குப்பொருள்:
காணாமலே நட்பு பூண்டு, இருவரும் சேர்ந்தே உயிர் துறந்ததால், நம்நாட்டில் நன்நட்பிற்கு எடுத்துக்காட்டாக கோப்பெருஞ்சோழனையும் பிசிராந்தையாரையும் புகழ்கிறோம். ஆனால், இதற்குச் சிறிதும் குறையாது கோப்பெருஞ்சோழனோடே உயிர்துறந்த பொத்தியார் இன்னபிற புலவர்கள் மற்றும் சான்றோர்களையும் நினைவுகூற மறந்துவிட்டோம். இங்கு அவ்வரலாற்றை சுருக்கமாகப் பதிகிறேன்.
உறையூரைத் தலைநகராகக்கொண்டு சோணாட்டையாண்ட மன்னருள் ஒருவன் கோப்பெருஞ்சோழன். சிறந்த தமிழ்ப்பற்றும் வள்ளன்மையும் தமிழ்ப்புலவர்கள்பால் பேரன்பும் கொண்டவன்.
பாண்டிநாட்டுப் புலவரொருவரின் வாயிலாக பிசிராந்தையாரைப்பற்றி அறிந்தான் சோழன். தென்பாண்டிநாட்டில் பிசிர் என்னும் ஊரில் (தற்போது பிசுக்குடி என்றழைக்கப்படுகிறது) வாழ்ந்தவர் ஆந்தையார் என்னுந்தமிழ்ப்புலவர். இல்லறமாகிய நல்லறத்தை இனிது நடத்தும் இல்லாளையும் நன்மக்களையும் சிறந்த மன்னனையும் பெற்று, கவலையின்றி என்றும் இளமையோடு இனிது வாழ்ந்தவர்.
இருவரும் ஒருவரையொருவர் காணாமலேயே அறியப்பெற்று நட்புபூண்டனர். உள்ளுணர்வு ஒத்து நட்பு மேலும் வளர்ந்தது.
கோப்பெருஞ்சோழனுக்கு இருமகன்கள், இருவரும் அரியணைக்கு அவாவுற்று, தந்தையின்மீதே போர்தொடுக்க எண்ணினர். அஃதறிந்த மன்னன் கடுஞ்சினமுற்று, இவ்வாறு அரியணைக்கு விருப்புற்றுப் போர்தொடுக்க முனைந்த இவர்களிடம் சிக்கி சோணாட்டுமக்கள் எத்தகைய அல்லல்களுற நேரிடுமோ, குடிப்பெருமை குலையுமோ என்றஞ்சி, நாட்டு மக்களைக்காக்க தன்மகன்களை எதிர்த்தே போர்புரியத் துணிந்தான்.
இதையறிந்த புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும்புலவர் சோழனிடம், "நீயும் நின் மக்களிருவரும் பகைவர்களல்லர். போரில் உன்மகன்கள் வெற்றிபெற்றால் உன் மானத்திற்கே இழுக்கு. நீ வெற்றிபெற்றால், பிறகு உன்செல்வத்தை எல்லாம் யாருக்குக்கொடுப்பாய்? தந்தை மகன்களே போரிட்டால் உம்குடிக்கன்றோ இழுக்கு. நீ வானுலகு சென்றபிறகு உன் அரியணை உன்மக்களுக்கு தானே! எப்படிப்பார்த்தாலும் இப்போர் நன்றன்று. போரை விட்டுவிடுக" என்று அறங்கூறுகிறார். மன்னனும் அரசுரிமையை மகன்களுக்குக்கொடுத்துவிட்டு, மானக்குறைவு நேர்ந்ததாக நினைத்து வடக்கிருந்து உயிர்விட எண்ணினான்.
சோழனின் மனவுறுதியை மாற்ற முடியாமல் பொத்தியார் என்னும் புலவரும் நட்பாய் இருந்த பிற சான்றோரும் சோழனோடு வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தனர்.
அப்போது கோப்பெருஞ்சோழன், "நண்பர்களே சான்றோரே, என் ஆருயிர் நண்பன் பிசிராந்தையார் நான் நன்றாக இருந்த காலத்தில் வரவில்லை என்றாலும் நான் துன்பமெய்திய இப்போது வருவார்" என்றான். அதற்கு அச்சான்றோர் சிலர், பிசிராந்தையார் வாரார். பாண்டிநாட்டுப் பிசிர் நெடுந்தொலைவிலுள்ளது. நம்முடனேயே பழகியவர்கள்கூட இப்படிப்பட்ட நிலையில் வாரார் இக்காலத்தில். அப்படியிருக்க, காணாமலேயே நட்பான ஆந்தையார் எப்படி வருவார்? என்றனர்.
அதற்குச் சோழன், "உறுதியாக ஆந்தையார் வருவார். நாங்கள் இருவரும் உணர்வால் நண்பர்களானவர்கள். இப்போது நான்படும் இத்துன்பம் அவருக்குத் தெரிந்திருக்கும், உறுதியாக வருவார். என்னருகில் அவருக்கும் வடக்கிருக்க ஒரு இடம் ஒதுக்குங்கள்." என்று சொல்லிமுடிப்பதற்குள் பிசிராந்தையார் அங்கே வந்தடைந்தார்.
அவரின் வரவைக்கண்டு அங்கிருந்த சான்றோர் பெருவியப்புற்றனர்.
முதன்முறையாக சோழனும் ஆந்தையாரும் நேரில் பார்த்து இருவரும் கண்ணீர்மல்க ஆரத்தழுவிக்கொள்கின்றனர்.
பொத்தியார், இவ்வுலகில் இத்தகைய நட்பும் உண்டோ என்று வியப்புறபாடுகிறார். இப்படிப்பட்ட சான்றோரையிழந்து உலகம் என்னாகுமோ என்றும் வருந்துகிறார்.
கண்ணகனார் என்னும் புலவர் பொன்னும், பவளமும், முத்தும், மணியும் வெவ்வேறு இடங்களிலிருந்துவந்து அழகான அணிகலனாயாகும். சான்றோர் சான்றோர் பக்கமும், சால்பில்லார் சால்பில்லார் பக்கமும் இணைந்துவிடுவது உலகியல்பு. அதைப்போல், வெவ்வேறு இடத்தில் இருந்த சான்றோர்கள் ஒன்றாக சேர்ந்தனர் என்று பாடி ஏத்துகிறார்.
பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார் என்னும் புலவர், கோப்பெருஞ்சோழனே! உன்னைப் பின்பற்றி உன்னுடன் சேர்ந்து வடக்கிருக்கும் பலர்மீது நீ, மனைவி கணவனிடம் மாறுபட்டுப் பேசுவது போல் பேசி அவர்களின் செயலைத் தடுக்கக்கூடாதா? என்று பாடுகிறார்.
அங்கிருந்த புலவர்கள் பலர் பிசிராந்தையாரை நோக்கி புலவரே, நாங்கள் சிறுவர்களாய் இருந்தபோதிலிருந்தே உங்களைப்பற்றி கேள்வியுற்று வருகிறோம். எங்களுக்கெல்லாம் நரை, திரை, மூப்பு வந்துவிட்டது. ஆனால், நீரோ இன்னும் இளமையாகவுள்ளீரே, யாது கரணியம்? என்று வினவினர்.
அதற்குப் பிசிராந்தையார், "நல்வாழ்க்கைத்துணையையும் நன்மக்களையும் நல்லறவரசனையும் பெற்று இன்புற்று வாழ்கிறேன். அதனாலேயே நரை, திரை, மூப்பு தோன்றாது இளமையோடு இருக்கிறேன்" என்றார்.
மன்னரும் பிறரும் வடக்கிருந்து உண்ணாநோன்பிருந்து உயிர்விட அமர்ந்தனர். பொத்தியாருக்கு மகன் இல்லாத காரணத்தால், சோழன் அவரை வடக்கிருக்க அனுமதிக்கவில்லை. அவர் உறையூருக்குத் திரும்பினார். கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் பிறரும் உயிர்நீத்தனர்.
அனைவருக்கும் நடுகற்கள் நடப்பட்டன. சோழன் இல்லாத உறையூரையும், சோழனின் நடுகல்லையும் கண்டு பொத்தியார் துயருற பாடித்தீர்க்கிறார்.
பொத்தியாருக்கு மகன் பிறந்தவுடனே, சோழனது நடுகல் நின்ற இடத்திற்குச் சென்று, தாமும் உயிர்விடத் துணிந்த பொத்தியார், 'எனக்கும் இடம் தா' எனக்கேட்டுப்பாடி கோப்பெருஞ்சோழனின் நடுகல்லுக்கு அருகில் தாமும் வடக்கிருந்து உண்ணாது உயிர்விடுகிறார்.
கண்டீரா இந்நட்பை? இத்தகைய நட்பு சான்றோர் இத்தமிழ்நாட்டில் வாழ்ந்தனர் என்னும்போது பெருமையாயும் வியப்பாயும் உள்ளது.
கதையைப்படிக்கும்போது என்னையறியாது என் கண்கள் கண்ணீர் உகுத்தன.
கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் மற்றும் பிறரின் நட்பு சிறந்ததுதான், மறுப்பதற்கில்லை. ஆனாலும், பொத்தியாரை நான் ஏன் இப்போது பேசுகிறேனென்றால், சோழனும், ஆந்தையாரும் பிறரும் உயிர்நீத்த பின்பு, பொத்தியாருக்கு மகன் பிறக்கும் வரையிலும், பிறந்தபின்பும் அவரின் மனத்தை மாற்றிக்கொண்டிருக்கலாம். வடக்கிருக்காமால் இருந்திருக்கலாம். அப்படிச்செய்யாது, பொத்தியாருக்கு மகன் பிறந்த உடனே சென்று மன்னனின் நடுகல்லுக்கு அருகிலேயே வடக்கமர்ந்து உயிர்நீத்தார்.
இக்காலத்தில் உயிர்நண்பன் உயிர்நண்பன் என்று சொல்லிக்கொள்வோர் இவ்வரலாற்றைப்படித்து உயிர்நண்பன் என்பதன் பொருளை அறிந்துகொள்க.
நன்றி. வணக்கம்.
*******************************
இவ்வரலாறு, புறநானூற்றில் 212 முதல் 223 வரை உள்ள பாடல்களில் வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளது.
இக்கதை, 1988ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு துணைப்பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அப்போதெல்லாம் இத்தகைய அறங்கூறும் தமிழ் வரலாறுகளே பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன பாருங்கள்.
நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment