அதியமான் நெடுமானஞ்சி ஒளவையாருக்கு அரிய நெல்லிக்கனியை ஈந்த வரலாறுகூறும் புறநானூற்றுப்பாடல் - ௯௧
வணக்கம்,
வள்ளல் அதியமான் நெடுமானஞ்சி ஒளவையாருக்கு நீண்டநாள் வாழவைக்குந் தன்மையுடைய அரியவகை நெல்லிக்கனியை ஈந்தார், அதனாற்றான் நெடுமானஞ்சி கடையெழுவள்ளல்களில் வைத்துப்போற்றப்பெறுகிறான் என்ற கதை நாம் அனைவருமறிவோம். ஆனால், இக்கதை எங்கு, யாரால் கூறப்பட்டது? உண்மையிலேயே நெடுமானஞ்சி நெல்லிக்கனியை ஒளவைக்கு ஈந்தானா இல்லையா? என்று நாம் அறிந்திலோம். அதற்குச்சான்று ஏதேனுமுண்டா என்றும் தேடினோமல்லோம். அதனால், அச்சான்றைத் தேடலாம் என்று புறநானூற்றில் உலாவினேன்.
சான்றுண்டு. இதற்குச்சான்றாக நெல்லிக்கனியைப்பெற்ற ஒளவையாரே நெடுமானஞ்சியை வாழ்த்தி பாடல்பாடியிருக்கிறார். இதோ அச்செய்யுளை இங்கே பதிந்துள்ளேன். அந்நெல்லிக்கனி சாகாத்தன்மையளிக்கவல்லதென்பர், அஃது அறிவுக்கொவ்வாதது. உண்மையில் அது சாகாத்தன்மையுடைத்தாயின் அதையுண்ட ஒளவையார் இந்நாள்வரை சாகாது இருந்திருக்கவேண்டுமே.!!
ஒருக்கால் நீண்டநாள் வாழவைக்கும் அரிய மருத்துவத்தன்மையள்ளதாய் இருந்திருக்கலாம் அன்றி மிகச்சுவையுடையதாய் இருந்திருக்கலாம்.
எது எவ்வாற்றாயினும் நெல்லிக்கனியை ஈந்து நெடுமானஞ்சி வல்லளெனப் போற்றப்பெற்றான் என்பது உண்மை.
இந்நெல்லிகனியீந்த வரலாற்றை, சிறுபாணாற்றுபடையில் ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழிநாட்டு நத்தத்தனார் பாடும்போது,
" .................மால்வரை
கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக் கீந்த
வுரவுச்சினங் கனலுமொளிதிகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும்"
என்று குறிப்பிடுகிறார்.
அதியமான் நெடுமானஞ்சி தகடூரை தலைநகராகக்கொண்டு தகடூர்நாட்டையாண்ட குறுநில மன்னன். தகடூரென்பது தற்போதைய தருமபுரியாகும். இம்மாவட்டத்தில் அதியமான்கோட்டை என்னும் ஊர் தற்போதுமுண்டு.
நன்றி வணக்கம்.
*****************************
புறநானூறு_௯௧(91)
பாடியவர் : ஔவையார்.பாடப்பட்டோன் : அதியமான் நெடுமானஞ்சி.
திணை : தும்பை.
துறை : வாழ்த்தியல்.
செய்யுள்:
வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை,
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.
விளக்கம் :
வெற்றிவாள் ஏந்தி பகைவர் போர்க்களத்திலையே மடியும்படி வென்ற வீரக்கழல் அணிந்தவன் அதியர் கோமான். அதியர் களிப்புக்காக நறவுக்கள்ளை உண்பவர்கள். இவன் போரிலே வென்ற திருவினைப் பொன்மாலையாக்கி அணிந்திருப்பவன். ‘அஞ்சி’ என்னும் பெயர் கொண்டவன். சிவபெருமான் பால்போன்ற வெண்ணிற நெற்றியைக் கொண்டவன். நீலமணி நிறம் கொண்ட தொண்டையை உடையவன். பெருமானே, நீ இந்தச் சிவபெருமான் போல நிலைபெற்று வாழ்வாயாக! தொன்றுதொட்டுப் பெருமலை வெடிப்பு ஒன்றில் பெறுவதற்கு அரிதாக, ‘சிறியிலை நெல்லி’ப் பழம் ஒன்றை, உண்டால் சாகாமல் நீண்டநாள் வாழக்கூடிய அதன் தன்மையை உன் மனத்திலேயே வைத்துப் பூட்டிக்கொண்டு, நான் சாகாமல் நீண்டநாள் வாழவேண்டும் என்று எண்ணி என்னை உண்ணச் செய்தாயே. (அதனால் நீ சிவபெருமானைப் போல வாழ்க).******************************
உதவி : புறநானூறு மற்றும் சிறுபாணாற்றுப்படை நூல்கள்
தொகுப்பு : தனித்தமிழாளன்
படம் : தகடூர் அதியமான்கோட்டை என்னும் ஊரில் நெடுமானஞ்சி மற்றும் ஒளவையாருக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுமண்டபத்திலுள்ள சிலைகள்.
நன்றி. வணக்கம் 🙏
No comments:
Post a Comment