Saturday, July 20, 2019

சங்க இலக்கியத்தில் மாட்டிறைச்சி

சங்கவிலக்கியத்தில் மாட்டிறைச்சி :




பண்டைத்தமிழர்கள் அனைத்திறைச்சிகளையும் உண்டவர்கள்தாம், அதில் மாட்டிறைச்சியும் விதிவிலக்கன்று. கள்ளும் இறைச்சியும் உண்டுகளித்தோரே தமிழர்களென்பது தமிழவைநூல்கள்வல்ல அறிவுடைச்சான்றோரறிவர். இவ்வாவூனுணவு தமிழர்கள் உண்டவற்றுளொன்றென நிறுவ சங்கவிலக்கியத்துளுள்ள மூவிரண்டு குறிப்புகளைத் தக்கசான்றுகளைக்கொண்டு விரித்துவரைகிறேன். சங்கவிலக்கியத்தில் இறைச்சியைப் பற்றிய குறிப்புகள் எண்ணிலடங்கா. அதில், மாட்டிறைச்சியை பற்றிய குறிப்புகளை மட்டும் தேடினேன். நேரங்கிடைக்காத  காரணத்தால் மிகுதியாகத் தேடவியலவில்லை, பொறுப்பீர்.

********************

#_அகநானூறு - 129 :
"கலங்குமுனைச் சீறூர் கைதலை வைப்ப
கொழுப்பா தின்ற கூர்ம்படை மழவர்"

பொருள் : கலங்குதற்குக் காரணமாகியா போர்முனையையுடைய சிறிய ஊரினர் தலையில் கையை வைத்து வருந்தும்படி, அவர்களுடைய கொழுத்த ஆவினை {மாடு} கவர்ந்துசென்று தின்ற கூரிய படையையுடைய மழவர்.

*****************

அகநானூறு -249 :
"தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகா வீழ்த்துத் திற்றி தின்ற
புலவுக்களந் துழைஇயத் துகள்வாய்க் கோடை"

பொருள் : மயிலின் தோகையிலுடைய இறகுகளை மாலையாகத் தொடுத்து அணிபவர்கள் மழவர்கள். அவர்கள், கன்றினையுடைய பசுவைக் கொன்று அதன் ஊனைச்சுட்டுத்தின்பார்கள். புலால்மணம் வீசும் அந்த இடத்தைத் துழாவியவாறு, புலால் துணுக்குகள் கலந்த புழுதியைத் தன்பால் கொண்டதாக, மேல்காற்று எழுந்து வீசும். {நாகா-நாகு+ஆ.|| நாகு-இளம்பசு,கன்று. ஆ-பசு}

*****************

அகநானூறு - 309 :
"வயவா ளெறிந்து வில்லி னீக்கி
பயநிரை தழீஇய கடுங்கண் மழவ
ரம்புசேட் படுத்து வன்புலத் துய்த்தெனத்
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்
கொழுப்பா வெறிந்து குருதி தூஉய்ப்
புலவுப் புழுக்குண்ட வான்க ணகலறைக்"

பொருள் : வெற்றிவாளினாலே வெட்டிக்கொன்றும், வில்வினைத்தொழினாலே அடித்து வெருட்டியும், பசு மந்தைகளைக் கைகொண்ட அஞ்சாமையாளர்களான மறவர்கள், அம்புகளை தொலைவிற்குச் செல்லுமாறு செலுத்தி நிரைகாவலரை விரட்டியபின், அந்த நிரைகளோடு வன்மையான காட்டு நிலத்தையடைந்தனர்.

அங்கு, தெய்வம் குடிகொண்டிருக்கும் பருத்த அடியினையுடைய வேம்பிற்கு {வேப்பமரம்} ஒரு பசுவினைக் கொன்று பலியிட்டனர். அதன் குருதியைத் தூவித் தெய்வத்தைப் போற்றி வழிபட்டனர். பின், அப்பசுவின் ஊனைப் புழுக்கி உண்டுவிட்டுச்சென்றனர்.

*****************

#_நற்றிணை - 310 :
"...........வல்லை
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை
வள்ளுமைத் தண்ணுமை போல"

பொருள் : விரைவாக ஆன் கன்றை உரித்து உணவாகக் கொள்ளுகின்ற பாணனின் கையிலிருப்பதாகியதும், பெரியதாக உயிர்த்தலை உடையதுமாகிய தண்ணுமைப்போல. {தண்ணுமை - தோலிசைக்கருவி}

*****************

#_சிறுபாணாற்றுப்படை -175-177 :

"எயிற்றியர் சுட்ட இன்புளி வெண்சோறு தேமா
மேனிச் சில் வளையாய மொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்”

பொருள் : முல்லை நிலத்தில் பாணர்களுக்கு எயினர்குலப் பெண்கள்  புளியங்கறியிட்ட சோற்றுடன் ஆமானின் இறைச்சியையும் தந்து அவர்களுடைய  பசியைத் தீர்ததனர்.
{ஆமான் - ஆ+மான் - பசுவும் மானும் கலந்ததுபோல ஒரு விலங்கு - இங்கு முல்லைநிலம் என்பதால் அது ஒருவகை பசுவாகத்தான் இருக்கவேண்டும்}

******************

மற்றும் பிற்காலத்தில் இது கீழ்மையாகப் பார்க்கப்பட்டது. தேவாரத்தில் "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்" - மாட்டையுரித்துத் தின்று அலையும் புலையர்கள் என்று குறிப்பிடுகிறார் நாவுக்கரசர்.

சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் மாக்கதையுள், நந்தனார் என்பவர் சிவபெருமான் கோயிலுக்குத் தோல்பறை செய்துகொடுத்தார் என்றும் குறிப்பிடுகிறார். நந்தனார் பறைக்குடியார் ஆகையால், அவர் செய்துகொடுத்த தோல்பறை, மாட்டைக்கொன்று தின்று அதன் தோல்பறையாகவே இருக்கவேண்டும்.

*******************

இதைப்படித்துவிட்டு, தமிழாலேயே இதை மறுக்கவேண்டுமென அறிவுடையோர் சிலர்,  திருவள்ளுவர் புலான்மறுத்தல், கொல்லாமை என்று அறிவுறுத்தியுள்ளாரென எதிர்ப்பர். அவர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்கிறேன், இவ்விரு அதிகாரங்களையும் துறவறவியலின்கண் வைத்தார் வள்ளுவர். நாங்கள் இல்லறம் நடாத்துகிறோம், துறவு பூணவில்லை. துறவுபூணுங்கால் இவற்றைக் கடைபிடித்துக்கொள்கிறோம்.

வடவர்கள் பசுவைக்கொன்று தின்னவில்லையென்றும் என்னிடம் வாதிடவேண்டாம். யாகம் என்னும் பெயரில் மாட்டிறைச்சி தின்றவர்கள் அவர்கள்.

*************

மேலே குறிப்பிட்ட சங்கவிலக்கிய குறிப்புகளைக் கொண்டெழுதிய இம்மறுப்புப்பதிவை அறுப்போர் தக்கசான்றுகளுடன் அறுக்கலாம். மறுப்பறுப்புகள் வரவேற்கப்படுகின்றன.

நன்றி. வணக்கம்.

பதிவிற்குதவிய நூல்கள்:
1. அகநானூறு
2. நற்றிணை
3. சிறுபாணாற்றுப்படை
4. தேவாரம்
5. திருத்தொண்டர் மாக்கதை

தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment