Wednesday, August 14, 2019

வான்பொய்ப்பினும் பொய்யாக் காவிரி - பட்டினப்பாலை

வான்பொய்ப்பினும் தான்பொய்யாக் காவிரி:

நூல் : பட்டினப்பாலை முதலேழு அடிகள்


நூல்களைப் படிக்கும்போது நமக்கு ஏதோவொரு சொல்லோ, தொடரோ நம் மனத்தில் பதிந்துவிடும். அப்படி பட்டினப்பாலையில் எனக்குப் பெருவியப்பைத்தந்து மனத்தில் பதிந்த ஒருதொடர் "வான்பொய்ப்பினும் தான்பொய்யாக் காவிரி" என்னும் சொற்றொடர். தமிழ்நாட்டில் மழைபெய்யாமல் காவிரியில் மட்டும் அளவிறந்த நீர் நமக்கு கிடைக்கிறது என்னும் செய்தியைக்கேட்டதும், என் நினைவிற்கு வந்தது இச்சொற்றொடர் தான்.



பத்துப்பாட்டுள் திருமாவளவனாகிய கரிகாற்பெருவளத்தானை கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலையில், சோணாட்டுள் பட்டினமாகிய காவிரிப்பூம்பட்டினத்தை வளஞ்செய்கின்ற காவிரியின் சிறப்பை, நூலின் முதலேழு அடிகளில் பாடி சிறப்புச்செய்கிறார் புலவர்.

"வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவின்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினுந் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்."

உரை :


குற்றமில்லாத புகழுடனே விளங்குகின்ற வெள்ளியாகிய மீன், தன்னுடைய திசையாகிய வடக்கிலிருந்து மாறி தெற்கிற்குப் போனாலும், வானின் நீரை உணவாகவுடைய, தன்னைப்பாடிய வானம்பாடியென்னும் பறவை, உணவின்றி வருந்தும்படி, மழை பெய்தலைத் தவிர்ந்து, வானம்பொய்த்துப் பஞ்சமுண்டானாலும், தான் தவறாமல் காலந்தோறும் பெருக்கெடுத்துவருகின்றதும், குடகுமலையினடத்தே தலையை {தொடக்கத்தை} உடையதும், கடலினிடத்துச் சேர்வதுமான காவிரி, தன் நீரைப்பரவி பொன்னைக் கொழிக்கும்.

{வெள்ளிக்கோள் வடதிசையிலிருப்பது இயல்பு. அது, தென்திசை சாய்ந்திருப்பின் அது பஞ்சத்திற்கு அறிகுறியென்று எண்ணுவது பண்டைத்தமிழர் வழக்கு. இது, பதிற்றுப்பத்து மற்றும் இன்னபிற நூல்களால் அறியப்படும் செய்தி}

*****************************

"வானம் பொய்த்துப்போனாலும் காவிரி பொய்க்கமாட்டாள்" என்னும் உருத்திரங்கண்ணனாரின் ஈராயிரமாண்டுகளுக்கு முந்தைய செஞ்சொல்வாக்கும் பொய்க்கவில்லை. இதை அன்றே கூறிச்சென்ற புலவரை எண்ணி பெருவியப்படைந்தேன். காவிரியாள், தன்மக்களை எப்போதும் கைவிட்டதில்லை, இப்போதும் கைவிடவில்லை. ஆனால் இப்போது, ஆண்டவர்களும் ஆள்பவர்களும் தான் பொன்னி தரும் பொன்னைப் பாதுகாக்காமல் கைவிட்டுவிட்டனர். மேட்டூர் அணை தூர்வாரப்படவேயில்லை, முக்கொம்பு தடுப்பணை இன்னும் சீர்செய்யப்படவில்லை. நீர்வரும்வழிகளைத் தூர்வாரவில்லை, நீரைச்சேமிக்கும் திட்டங்களும் இல்லை, பொதுப்பணித்துறை உயிரோடிருக்கிறதா செத்துத்தொலைந்துவிட்டதாவென்றும் தெரியவில்லை.

******************************

தரவு : பட்டினப்பாலை நூல்
படம் : புகைக்கும்கல் என்னும் ஒகேனக்கல் அருவிகள். அருவிகளையே மூழ்கடித்துப் பாயும் காவிரி.

நன்றி, வணக்கம்.
தனித்தமிழாளன்

Monday, August 12, 2019

கலித்தொகை - தோழிகூற்று

கலித்தொகை - ௧௩௩ 

நெய்தற்கலி - தோழிகூற்று
பாடியவர் : நல்லந்துவனார்


மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன்
கான லணிந்த வுயர்மண லெக்கர்மேற்
சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த
நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப்
பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள்

ஆற்றுதலென்பதொன் றலந்தவர்க் குதவுதல்
போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப்படுவது பாடறிந் தொழுகுத
லன்பெனப் படுவது தன்கிளைசெறாஅமை
யறிவெனப்படுவது பேதையார் சொன்னோன்றல்
செறிவெனப்படுவது கூறியது மறாஅமை
நிறையெனப் படுவது மறைபிறரறியாமை
முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல்
பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்

ஆங்கதையறிந்தனி ராயினென் றோழி
நன்னுத னலனுண்டு துறத்தல் கொண்க
தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைத
னின்றலை வருந்தியா டுயரஞ்
சென்றனை களைமோ பூண்கநின் றேரே.

                                                 - நல்லந்துவனார்

'வரைவு உடம்பட்டோர்க் கடாவல் வேண்டினும்' என்பதனால், தலைவன் தெருளாதவனைத் தெருட்டி, வரைவு கடாயது.




தனக்கு வலியைத்தரும் என்று கருதித் தான் வழிபட்ட தெய்வம் தன்னைச் சேர்ந்தவர்கட்கு நெஞ்சழியும் நோய் கைமிகும்படி வருத்தமாகிய தன்மைபோல நின்னைத்தனக்குவலியென்று வழிபட்டஎன்றோழியை நீ செய்த பழி எங்கும்பரந்து அலர்தூற்றுகையினாலே உண்டான மிக்க நினைவு வருத்த, நீங்குதல் கொடிதுகாணெனத் தோழி வரைவுகடாயினாள்.

பொருள்:


முண்டகப் பூ, தில்லைப் பூக்களோடு சேர்ந்து மலர்ந்திருக்கும் கானல் நிலத்தில் உயர்ந்த மணல் மேட்டில், கையில் கரகம் தொங்கவிட்டுக்கொண்டிருக்கும் முனிவன் போல, தாழம்பூ மலர்ந்து தொங்கும் தொங்கும் துறையை உடையவனே, நான் சொல்வதைக் கேள்.

ஆற்றுதல் என்பது அலைக்கழிவோருக்குத் தொண்டாற்றி உதவுதல். போற்றுதல் என்பது தம்மைப் புணர்ந்தவரைப் பிரியாமல் இருத்தல். பண்பு என்று சொல்லப்படுவது பெருமை தரத்தக்கது எது என அறிந்து அதன்படி நடத்தல்.
அன்பு எனப்படுவது தன் உறவுக்காரர்களை விட்டு விலகாமை. அறிவு என்று சொல்லப்படுவது அறியாவர் சொல்லும் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல்.
செறிவு எனப்படுவது சொன்ன சொல்லை மறுத்துப் பேசாமை. நிறை எனப்படுவது தான் மறைக்கவேண்டடிய நிகழ்வுகளை பிறர் அறியாவண்ணம் நடந்துகொள்ளுதல்.
முறை எனப்படுவது குற்றம் செய்தவனுக்கு இரக்கம் காட்டாமல் அரசன் அவன் உயிரை வாங்குதல். பொறை எனப்படுவது. தன்னைப் போற்றாதவர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்.

இவற்றை இப்படி நீர் அறிந்தவர் ஆயின், என் தோழியின் நலத்தை உண்டபின் அவளைக் கைவிடுதல் என்பது, பால் குடிப்பவர் குடித்த பின்னர் பால் இருந்த பாத்திரத்தைத் தூக்கி எறிதல் போன்றது. உனக்காக அவள் வருந்திக்கொண்டிருக்கிறாள். அவளது துன்பத்தை நீ போக்க வேண்டும். அதற்காக நீ செல்ல உன் தேரைப் பூட்டுக.

இந்தி - இந்திய ஒன்றியத்தின் தேசியமொழியல்ல

இந்தி என்பது இந்தியத்துணைக்கண்டத்தின் தேசியமொழியல்ல.

இந்தியாவிற்கென எந்த தேசியமொழியுமில்லையென்று உறுதிப்படுத்தியது இந்திய அரசு. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட செய்தி.




நன்றி: "இந்தி திணிப்புக்கு எதிரான மக்கள் இயக்கம்" முகநூல் பக்கம்.

ஆடித்திருவாதிரை இராசேந்திரசோழன் பிறந்தநாள்:

ஆடித்திருவாதிரை இராசேந்திரசோழன் பிறந்தநாள்:


"அய்யர் பிறந்து அருளிய ஐப்பிகைச் சதயத் திருவிழா வரைவுக்குத் திருமுளையட்டவும், தீர்த்தத்துக்கு திருச்சுண்ணம் இடிக்கவும், நாம் (இராசேந்திர சோழன்) பிறந்த ஆடித் திருவாதிரை நாளில் திருவிழா வரைவு குருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும்.."

- திருவாரூர்க் கல்வெட்டு.


குறுந்தொகையில் நற்றலைவனின் உறுதிமொழி

குறுந்தொகையின்கண் ஓர் தலைவிக்கு ஓர் நற்றலைவனின் உறுதிமொழி :


நூல் : குறுந்தொகை - 40
திணை : குறிஞ்சி
பாடியவர் : செம்புலப்பெயல்நீரார்

"இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர்ப் பிரிவரெனக்கருதி அஞ்சிய தலைமகளது குறிப்புவேறுபாடுகண்டு தலைமகன் கூறியது".





மூலப்பா:


யாயு ஞாயும் யாரா கியரோ
வெந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதுஞ்
செம்புலப் பெயனீர் போல
வன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.

சீர்பிரித்த எளியவடிவப்பா:


யாயும் யாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

பொருள் : 


தலைவனும் தலைவியும் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த பின்னர், தலைவன் தன்னைவிட்டுப்பிரிந்துவிடுவானோ எனவெண்ணி அஞ்சுகிறாள் தலைவி. தலைவியின் செயல்குறிப்புகளால் அதை உணர்ந்த தலைவன், தலைவிக்குத் 'தான் பிரியமாட்டேன்' என்பதை இப்பாடலால்  உறுதிகூறுகிறான்.

என் தாயும் நின் தாயும் யார்யாரோ. என் தந்தையும் நின் தந்தையும் எம்முறையில் உறவினர்கள்? இதற்கு முன்பு யானும் நீயும் எவ்வழியில் அறிந்தவர்கள்? செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் இயற்கையாக கலந்தது போல, அன்புடைய நம் இருவர் நெஞ்சமும் தாமாகக் கலந்துவிட்டன இப்போது.

இப்படி இயற்கையாகக் கலந்த மண்ணையும் நீரையும் எவ்வாறு பிரிக்கமுடியாதோ, அதுபோல இயற்கையான அன்பால் இணைந்த நம்மிருவரிடையே பிரிவு உண்டாகாது என்று தலைமகளுக்கு மண்ணையும் நீரையும் உவமைகாட்டி மறைபொருளாக உறுதிகூறுகிறான் நற்றலைவன்.

***************

இதைவிட நல்ல அறவுறுதியை நல்லுவமைகூறி புலமையுடனாகிய பாவால் ஈராயிரமாண்டுகளுக்கு முன்பு உலகில் வேறு எம்மொழியாலும் கூறிவிடவியலுமா? இப்பாவை இயற்றிய புலவரின் பெயர் அறியக்கிடைக்கவில்லை. இப்பாட்டின்கண் வரும் "செம்புலப்பெயல்நீர்" என்னும் செவ்வுவமைச்சொல்லால் "செம்புலப்பெயல்நீரார்" என்னும் பெயரால் அடையாளங்காட்டப்படுகிறார். {செம்புலப்பெய்ந்நீர் என்றும் பாடவேறுபாடுண்டு}

பாடியவர் : செம்புலப்பெயல்நீரார்
உரை : தனித்தமிழாளன்

நன்றி. வணக்கம்.

வள்ளுவர் வாக்கில் நட்பு

நட்பை பற்றி வள்ளுவர் உரைத்தவை :


மனிதனுக்கு நட்பென்பது எந்த அளவிற்கு இன்றியமையாததென்பதை விளக்கவே, திருவள்ளுவர் ஐந்து அதிகாரங்களில் ஐம்பது குறட்பாக்களைப்பாடி நட்பை வலியுறுத்தியுள்ளார்.




அதிகாரவெண் மற்றும் அதிகாரம்


௭௯) நட்பு (79)
௮०) நட்பாராய்தல் (80)
௮௧) பழைமை (81)
௮௨) தீநட்பு (82)
௮௩) கூடாநட்பு (83)

நட்பு : 

நட்பின் தன்மையையும் நட்பு எத்தகையதென்றும் நட்பின் சிறப்பை விளக்குகிறார்.

நட்பாராய்தல் : 

நன்கு ஆராய்ந்து நல்லவர்களோடு நட்புகொள்ளல் வேண்டுமென்று அறிவுறுத்துகிறார்.

பழைமை : 

பழைய நண்பர்களை விட்டுவிடக்கூடாதென்றும் அதன் சிறப்பையும் விளக்குகிறார்.

தீநட்பு :

தீயவர்களோடு நட்புகொள்ளக்கூடாதென்றும் அவர்களால் தீமையே ஏற்படும் என்று விளக்குகிறார்.

கூடாநட்பு : 

பொருந்தாத நட்பையும், யார்யாரிடம் நட்புகொள்ளக்கூடாதென்றும் அறிவுறுத்துகிறார்.

வேறு எதற்கும் வள்ளுவர் இத்தனை அதிகாரங்கள் படியாதாகத்தெரியவில்லை.

நட்பை சிறப்பிக்க நண்பர்கள் நாளைக் கொண்டாடும் வழக்கத்தை 1935ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசு தீர்மானம் நிறைவேற்றி ஆங்கிலேயன் கொண்டுவந்திருக்கலாம். ஆனால், மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே நட்பு என்பது யாது? அதன் தன்மை, அது எவ்வாறு இருக்கவேண்டும், எத்தகையோரிடம் நட்புகொள்ளக்கூடாது என்று நட்பிற்கு இலக்கணம் வகுத்து இத்தனை விரிவாக விளக்கிய நம் பேராசான் திருவள்ளுவரைப் பெற்றது தமிழத்தாய் பெற்ற பெரும்பேறேயாம். இதைப்போல் பழைய அறநூல் உலகில் வேறெந்த மொழியிலும் இருக்காதென்று துணிந்துச்சொல்லலாம்.

தமிழ்க்குடியில் பிறந்ததற்கு நாம் மீப்பெருமைகொள்ள வேண்டும். உலகில் பலமொழிகள் தோன்றுவதற்கு முன்னமே மொழியில் சிறந்துவிளங்கி வாழ்வியல் இலக்கணநெறிமுறைகளை வகுத்தோர் பெருமைமிகுதமிழர்களாகிய நாம்.

நண்பர்கள் நாள் வாழ்த்துப்பெருக்கு

தமிழரென நெஞ்சுயர்த்திப் பெருமைகொள் தமிழா

வாழ்க வள்ளுவம், வாழ்க தமிழம்

நன்றி
தனித்தமிழாளன்

தமிழிலக்கியம் புகழ் நண்பர்கள் சிலர்

இலக்கியத்தில் நண்பர்கள் சிலர் :




1. கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையார், பொத்தியார், கண்ணகனார், பெருங்கருவூர்ச்சதுக்கத்துப் பூதநாதனார் ஆகியோரும்.

2. ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனும் மாவன், ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் ஆகியோரும்.

3. பாரியும் கபிலரும்

4. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனும் சிறுகுடிப்பண்ணனும்

5. நன்னனும் மிஞிலியும்

6. இளங்கண்டீரக்கோவும் இளவிச்சிக்கோவும்

7. இளங்கோவடிகளும் சீத்தலைச்சாத்தனாரும்

8. சிவபெருமானும் நம்பியாரூரரும்

9. நம்பியாரூரரும் சேரமான்பெருமாளும்

**************
தொகுப்பு : தனித்தமிழாளன்

தரவு நூல்கள்: 


1. புறநானூறு 70, 71, 113, 151, 173, 212 முதல் 223
2. அகநானூறு 375
3. சிலப்பதிகாரம்
4. தேவாரம், திருத்தொண்டர் மாக்கதை

கலித்தொகையில் தலைவியின் உடன்போக்கு

கலித்தொகை ௯(9)ஆம் பாட்டு


பாலைக்கலி  - சேரமான் பெருங்கடுங்கோ


பண் : பழம்பஞ்சுரம் (இராகம் : சங்கராபரணம்)


கலித்தொகையில் தலைவியின் உடன்போக்கும் செவிலித்தாயின் தேடலும்



எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,
உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!-
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை,

என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
தம்முள்ளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!'
'காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய

மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்;
பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,

நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

எனவாங்கு,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே.

       -- பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோ

பொருளுரை:


தலைவி, தான் விரும்பிய தலைவனுடன் உடன்போக்கு (ஓடிப்போதல்) நிகழ்த்திவிட்டாள். அவர்களைத்தேடி தலைவியின் செவிலித்தாய் செல்கிறாள். அவ்வாறு உடன்போக்கு நிகழ்த்துவோர் பாலைநிலத்திற்குச்செல்வர். பாலைநிலவழியே கள்வர்களும் முக்கோற்பகவர்களும் (துறவிகளும்) செல்வர். தலைவியை தேடிவரும் செலிவித்தாய் எதிர்ப்படும் முக்கோற்பகவரிடம் தம்மகளைப்பற்றி வினவுவதாக அமைந்துள்ளது இப்பாட்டு.

வெயிலில் நிழலுக்காக குடை பிடித்தும், நீர்க்கரகமும், கையிலே முக்கோலையும் பிடித்துக்கொண்டுவரும் துறவிகளே,

"என் மகள் ஒருத்தியும், பிறளின் மகன் ஒருவனும் தங்களுக்குள் காதல்கொண்டவர்கள். அப்படிப்பட்ட இருவரை இவ்வழியே காண்டீர்களா பெருமானே?"

துறவி சொல்கிறார், "காணாமலில்லை. கண்டோம். ஆண் என்பதற்கே உரிய அழகான ஒருவனோடு, சிறந்த அணிகலன்களை அணிந்தபெண்ணின் தாய் நீரே போலும்".

"மலையில் இருக்கும் ஆரம்(சாந்து, சந்தனம்), மலையிலே பிறந்தாலும், அந்த ஆரத்தால் மலைக்கு என்ன பயன்? அதை அரைத்து நறுமணம்வீச பூசிக்கொள்பவர்க்கு அல்லவா சந்தனம் உரிமையுடையது. அப்படி நினைத்தால், உம்மகள் உங்களுக்கு அத்தகையவளே.

கடலில் பிறக்கும் முத்து, அதை அணிந்துகொள்பவர்களுக்கு அல்லது, கடலிலே பிறந்தாலும், அந்த முத்தால் கடலுக்கு என்ன பயன்? அப்படித்தேர்ந்தால், உம்மகள் உங்களுக்கு அத்தகையவளே.

ஏழிசையானது அதைக்கேட்டு இன்புறுபவர்களுக்கன்றி, அவ்வேழிசை யாழிலே பிறந்தாலும் அந்த யாழுக்கு அவ்வேழிசையால் என்ன பயன்? அப்படிப்பார்த்தால், உம்மகள் உங்களுக்கும் அத்தகையவளே.

அதனால், நீங்கள் துன்பம் கொள்ளாதீர். உம்மகள் அவள் விரும்பிய சிறந்த ஆண்மகனோடே சென்றாள். அவ்வுடன்போக்கு அறமே. அவர்களை வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்தியனுப்பினோம் நாங்கள். நீர் துன்பப்படாது வீடு திரும்புக."

என்று அறங்கூறியனுப்பினர்.

********************************

உதவி : கலித்தொகை நூலில் பாலைக்கலி
பாடியவர் : சேரமான் பெருங்கடுங்கோ
உரை : தனித்தமிழாளன்

நன்றி.

Saturday, August 3, 2019

இலக்கியத்தில் பறையின் பெயர்கள்

இலக்கியத்தில் பறையின் பெயர்கள்:


தொல்காப்பியர், திணைகளின் கருப்பொருளை கீழுள்ள நூற்பாவில் தொகுக்கிறார். அவற்றுள் ஒன்று பறை.

"தெய்வம், உணாவே, மா, மரம், புள், #_பறை,
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ,
அவ்வகை பிறவும் கரு' என மொழிப". - 965

அவ்வகையில் பண்டைக்காலத்திருந்த சில பறையின் பெயர்களை ஈண்டு அறிவோம்.. 



குறிஞ்சி:

1. தொண்டகப்பறை
2. முருகியப்பறை
3. வெறியாட்டுப்பறை

முல்லை :

4. ஏறுகோட்பறை

மருதம் :

5. மணமுழாப்பறை
6. நெல்லரிகிணைப்பறை

நெய்தல் :

7. நாவாய்ப்பறை
8. மீன்கோட்பறை

பாலை :

9. ஆறலைப்பறை
10. ஆறெரிப்பறை
11. சூறைகோட்பறை

இவையன்றி,

********
12. அரிப்பறை
13. ஆகுளிப்பறை
14. உவகைப்பறை
15. ஒருகண் பறை
16. கிணைப்பறை
17. குரவைப்பறை
18. குறும்பறை
19. கொடுகொட்டிப்பறை
20. கோட்பறை
21. சாக்காட்டுப்பறை
22. சாப்பறை
23. சிறுபறை
24. செருப்பறை
25. தடாரிப்பறை
26. தணிபறை
27. தலைப்பறை
28. துடிப்பறை
29. தெடாரிப்பறை
30. நிசாளப்பறை
31. பன்றிப்பறை
32. பூசறண்ணுமை
33. முழவுப்பறை
34. மென்பறை
35. வெறுப்பறை

{இதில், ஒரே பறைக்குப் பலபெயர்களுண்டு. அவற்றிற்குத் தனி எண்ணிட்டுள்ளேன்}

இத்தனை பறைகளையும் மறந்துவிட்டு, இன்று நாம் அறிந்திருப்பது சாக்காட்டுப்பறை, சாப்பறை என்னும் சாவுக்கு இசைக்கும் பறையை மட்டுமே.

நன்றி. வணக்கம்.
தொகுப்பு : தனித்தமிழாளன்

*****************

உதவிய நூல்கள்:

1. புறநானூறு
2. தொல்காப்பியம்
3. சிலம்பு
4. நன்னூல்
5. இன்னுஞ்சில நூல்கள்

Friday, August 2, 2019

கலித்தொகையில் ஓர் கவின்மிகு காதற்காட்சி:

கலித்தொகை ௫௧(51) குறிஞ்சிக்கலி - கபிலர்

கலித்தொகையில் ஓர் கவின்மிகு காதற்காட்சி:




சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,
நோ தக்க செய்யும் சிறுபட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!

உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,
'அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள் என, யானும்
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு,

'அன்னாய்! இவனொருவன் செய்தது காண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி,
நகைக் கூட்டம் செய்தான், அக் கள்வன் மகன்.

‘புகாஅக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி, பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ தலைவி, தோழிக்குக் கூறியது.

உரை :

தலைவி தன்தோழியிடம் கூறியதாக அமைந்துள்ளது இப்பா.

ஒளிபொருந்திய வளையலை அணித்தவளே, கேள். ஒருநாள், நானும் என் தாயும் வீட்டில் இருந்தோம். அப்போது, வாசலிலிருந்து ஒரு குரல் கேட்டது. "அம்மா, தாகத்திற்கு தண்ணீர்" என்று. அதைக்கேட்ட என் தாய், யாரோ தண்ணீர் கேட்கிறார்கள், போய்க்கொடு என்றாள்.

தண்ணீர் எடுத்துவந்தேன், வாசலில் நின்ற இளைஞனிடம் செம்பைக்கொடுத்தேன். செம்பை வாங்கியதோடு நிற்காமல் என் செங்கையையும் பற்றி இழுத்தான். "அம்மா", என்று அலறினேன்.

கரம் பற்றி இழுத்தவன் யாரென்று பார்த்தேன். அவன் தான் அந்த சுட்டிப்பயல், நாம் சிறுவயதில் மணல்வீடு கட்டி விளையாடும்போது அதை காலால் உதைத்து சிதைத்து விளையாடுவானே. நம் வரிப்பந்தையையும் எடுத்துக்கொண்டு ஓடுவானே, அந்த நாய்ப்பயல், அவன்தான். கண்ணையும் கருத்தையும் கவரும் கட்டிளம் காளையாகி வந்துநின்றான். கண்டேன் அவனை, உள்ளம் பறிகொடுத்தேன்.

"அம்மா, இவன் செய்வதைப் பார்" என்று நான் அலறியதைக்கேட்ட என் தாய் ஓடிவந்து, என்ன என்று கேட்டாள். என்னசொல்வதென்று விழித்தேன். கையைப்பிடித்து இழுத்தான் என்று சொல்லமுடியுமா. அப்படிச்சொன்னால் அவனை நையப்புடைத்து விரட்டிவிடுவார்களே. அப்படிச்சொல்லக்கூடாது என்று, ஒரு பொய்யைக்கூறினேன்.

"மடமடவென்று தண்ணீர் குடித்தான், அவனுக்கு புரையேறிற்று. எங்கே இவன் இறந்துவிடுவானோ என்று உன்னை அழைத்தேன்" என்று பொய் கூறினேன்.

அதற்கு தாயும், "அப்படியா, என்னப்பா அவசரம்? மெதுவாக தண்ணீர் குடிக்கக்கூடாதா" என்றுகூறி அவன் முதுகில் தடவிக்கொடுத்தாள்.

"அப்போது அந்த திருட்டுப்பயல் என்னசெய்தான் தெரியுமா? என்னைப்பார்த்து கண்ணைச்சிமிட்டினான். புன்முறுவல் பூத்தான்".

*******************************

நன்றி. வாழி
தனித்தமிழாளன்