Sunday, August 30, 2020

மதுரைக்காஞ்சியின் ஓணத்திருவிழவு

 மதுரைக்காஞ்சியில் ஓணநன்னாள் : 🏵️


தமிழர்களுக்கு ஓணநன்னாள் வாழ்த்துகள் 🌺


நூல் : மதுரைக்காஞ்சி

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

590 முதல் 610 ஆம் அடிகள் வரை.




பாட்டு :


கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

மாயோன் மேய வோண நன்னாள்

கோணந் தின்ற வடுவாழ் முகத்த

சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை

மறங்கொள் சேரி மாறுபொரு செருவின்


மாறா துற்ற வடுப்படு நெற்றிச்

சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர்

கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்ட

நெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக்

கடுங்கட் டேறன் மகிழ்சிறந்து திரிதர


கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து

பணைத்தேந் திளமுலை யமுத மூறப்

புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு

வளமனை மகளிர் குளநீர் அயரத்

திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழிப் பண்ணிக்


குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி

நுண்ணீ ராகுளி யிரட்டப் பலவுடன்

ஒண்சுடர் விளக்க முந்துற மடையொடு

நன்மா மயிலின் மென்மெல வியலிக்

கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுது

பெருந்தோட் சாலினி மடுப்ப


விளக்கம் :


திரட்சிகொண்ட அவுணரை வென்ற பொன்னாலான மாலையைச் சூடியிருக்கின்ற கருமையான மாயோனுக்குகந்த ஓண நன்னாளில் ஊரார் எடுத்த விழாவில்,


இன்று போர் செய்யவேண்டும் என்றெண்ணும் வீரத்தை உடைய சேரித் தெருவுகளில்  தம்மில் தாம் மாறாய் பொருகின்ற போரில், அடி மாறாமல் நின்றதனால் ஏற்பட்ட வடுக்களை உடைய நெற்றியையும், வண்டுகள் நிறைந்த தும்பையாகிய போர்ப்பூவில் பெரிய விருப்பத்தினையுடைய மறவர்கள்,


தோட்டி வெட்டின வடு இருக்கக்கூடிய முகத்தையும், போரைத் தாங்கும் பெரிய கையினையும் உடைய கடிய களிற்றை ஓட்டும்போது,


கடிய கள்ளையுண்டு மகிழ்ச்சி மிகுந்த பரிக்காரர்கள், அந்த யானையின் விசையைக் காண அந்த யானைகளுக்கு முன்னேயோடுகின்றனர். நெடிய கரையில் இருந்து இதைக்காணுபவர்கள், யானைகள் தம்மேல் வராமல் இருக்க, தம் மடிகளிலிருந்த கப்பணங்களை நிலத்தில் சிந்தியிருக்கின்றனர். (கப்பணங்கள் - நெருஞ்சி முள் போன்ற இரும்பாலானவை என்றனர் உரையாசிரியர்கள்).


செல்வத்தையுடைய மனையிடத்து மகளிர் தம் கணவர்கள் வியக்கும்படி பிள்ளைகளை எந்த சிக்கலும் இன்றி பெற்று, தம்முடைய பெரிய இளமையான முலைகளில் பால்சுரக்கும்படி குளத்தில் நீராடுகின்றனர்.


அதைக்கண்ட, முதற்கருவுற்ற மகளிர், அந்த பெண்களைப்போலவே எந்த சிக்கலும் இன்றி பிள்ளைகளைப் பெறவேண்டும் என்று கருதி, தெய்வத்தை வணங்கி குறைதீர்ந்தபின், சுற்றத்தார் சூழ, பெரியதோளையுடைய சாலினியாகிய தேவராட்டி உடன்வர (சாலினி - தேவராட்டி - தெய்வமேறிய பெண்), 


பூசனை பொருள்கள் பலவற்றுடன், யாழில் செவ்வழி என்னும் பண்ணை இசைத்துக்கொண்டும் அதற்கேற்ற பாடல்களைப் பாடிக்கொண்டும் ஆகுளிப்பறை மற்றும் முழவுகள் முழங்க, நல்ல மயிலைப்போல மெல்ல நடந்துசென்று கைதொழுது படையலை படைக்கின்றனர்.

(செவ்வழிப்பண் - யதுகுல காம்போதி)


ஓணநன்னாள் வாழ்த்துகள் 🏵️🌹🌺🌻🌼🌷


******


நன்றி. வணக்கம்.

தமிழ் கோ விக்ரம்

Friday, August 14, 2020

இந்தியன் என்றால் என்னது தம்பி? - பெருஞ்சித்திரனார்

 இந்தியன் என்றால் என்னது தம்பி?

 

சாதியும் இருக்கும்;

மதமும் இருக்கும்;

சாத்திரம் மக்களை

வேறெனப் பிரிக்கும்!


  மோதலும் இருக்கும்;

  முதலாளி இருப்பான்;

  முன்னேற்றம் சிலர்க்கே

  வாய்ப்பாக இருக்கும்!


குந்தியே தின்பான்

ஒருவன்; மற்றவன்

குடல்வற்றிச் சாவான்

இவற்றிடையே யாவரும்


  இந்தியன் என்றால்

  என்னது தம்பி?

  எல்லாரும் சமமென்றால்

  எப்படித் தம்பி?


கொள்ளையன் ஆள்வான்;

கொடுமைகள் செய்வான்;

கொடுக்கும் உரிமைகள்

கொடாது தடுப்பான்!


  வெள்ளையன் ஆண்டதும்

  வெறியர் ஆள்வதும்

  வேறுபாடின்றி

  விளங்கிடும் தம்பி!


முந்திய ஆட்சியை

அடிமை என்றார்கள்!

முன்னினும் இவர்கள்

அடிமை செய்தார்கள்!


  இந்தியன் என்றால்

  என்னது தம்பி?

  எல்லாரும் சமமென்றால்

  எப்படித் தம்பி?


- பாவலரேறு பெருஞ்சித்திரனார்




ஆங்கிலேயனிடமிருந்து விடுதலைபெற்று இந்தியனிடம் தமிழர்கள் அடிமையாகிய நாள் இன்று. இதற்குப்பெயர் விடுதலைநாளாம்.


பக்கத்து நாடான இந்தியாவின் இந்தியர்களுக்கு விடுதலைநாள் வாழ்த்துக்கள். தமிழர்களுக்கும், சீக்கியர்களுக்கும், காசுமீரிகளுக்கும்,

வங்காளிகளுக்கும், நாகர்களுக்கும், அசாமியர்களுக்கும் பிற தேசிய இனங்களுக்கு தாம் அடிமைப்பட்டநாள் கடைப்பிடிப்பு.


இந்திய ஒன்றியத்திற்குப் போராடி விடுதலை பெற்றுத்தந்த நம் தமிழ்நாட்டு விடுதலைப்போராட்டவீரர்கள், தம் நாடாம் தமிழ்நாட்டிற்கும் சேர்த்து விடுதலை பெற்றிருக்கலாம்.

தமிழ்நாட்டின் சார்பில் இந்திய விடுதலைக்குப்போராடிய வீரர்களுக்கு அன்றே தெரிந்திருந்தால், அப்பெருமக்கள் தமிழ்நாட்டின் விடுதலைக்கு சேர்த்தே போராடியிருப்பர். இந்தியர்களிடம் இப்படி சிக்கித்தவிப்போமென்று பாவம் அவர்களுக்கு எப்படித்தெரியும், இந்த இந்தியர்களிடம் இப்படி அடிமைப்படுவோமென்று? தெரிந்திருந்தால் அப்போதே போராடி தனித்தமிழ்நாட்டைப் பெற்றிருப்பர்.


அவர்களின் உயிர் ஈகத்தைப்போற்றுவேன். ஆனால், இந்தியாவின் விடுதலைநாளைக் கொண்டாடமாட்டேன்.


என்நாடு தமிழ்நாடு. இந்தியாவிலிருந்து தமிழ்நாடு விடுதலையடையும்நாளே தமிழர்களுக்கு விடுதலைநாள். இந்தியாவின் விடுதலைநாள் வாழ்த்தை அருள்கூர்ந்து யாரும் எனக்குக்கூறவேண்டாம்.





(பெரியார் என்னும் ஆவதறிவார் 1947ல் விடுதலை மற்றும் திராவிடன் நாளேட்டில் வெளியிட்ட செய்தியை படங்களாக இணைத்துள்ளேன்)

Thursday, August 13, 2020

காவிரியின் சிறப்பு

வான்பொய்ப்பினும் தான்பொய்யாக் காவிரி:

நூல் : பட்டினப்பாலை, முதலேழுஅடிகள்


நூல்களைப் படிக்கும்போது ஏதோவொரு சொல்லோ, தொடரோ நம் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும். அப்படி பட்டினப்பாலையில் எனக்குப் பெருவியப்பைத்தந்து என் மனத்தில் பதிந்த ஒருதொடர் "வான்பொய்ப்பினும் தான்பொய்யாக் காவிரி" என்னும் சொற்றொடர். தமிழ்நாட்டில் மழைபெய்யாமல் காவிரியில் மட்டும் அளவிறந்த நீர் நமக்கு கிடைக்கிறது என்னும் செய்தியைக்கேட்டதும், என் நினைவிற்கு வந்தது இச்சொற்றொடர் தான்.




பத்துப்பாட்டுள் திருமாவளவனாகிய கரிகாற்பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலையில், சோணாட்டுள் பட்டினமாகிய காவிரிப்பூம்பட்டினத்தை வளஞ்செய்கின்ற காவிரியின் சிறப்பை, நூலின் முதலேழு அடிகளில் பாடி சிறப்புச்செய்கிறார் புலவர்.


"வசையில்புகழ் வயங்குவெண்மீன்

திசைதிரிந்து தெற்கேகினும்

தற்பாடிய தளியுணவின்

புட்டேம்பப் புயன்மாறி

வான்பொய்ப்பினுந் தான்பொய்யா

மலைத்தலைய கடற்காவிரி

புனல்பரந்து பொன்கொழிக்கும்."


உரை :


குற்றமில்லாத புகழுடனே விளங்குகின்ற வெள்ளியாகிய மீன், தன்னுடைய திசையாகிய வடக்கிலிருந்து மாறி தெற்கிற்குப் போனாலும், வானின் நீரை உணவாகவுடைய, தன்னைப்பாடிய வானம்பாடியென்னும் பறவை, உணவின்றி வருந்தும்படி, மழை பெய்தலைத் தவிர்ந்து, வானம்பொய்த்துப் பஞ்சமுண்டானாலும், தான் தவறாமல் காலந்தோறும் பெருக்கெடுத்துவருகின்றதும், குடகுமலையினடத்தே தலையை {தொடக்கத்தை} உடையதும், கடலினிடத்துச் சேர்வதுமான #_காவிரி, தன் நீரைப்பரவி பொன்னைக் கொழிக்கும்.


{வெள்ளிக்கோள் வடதிசையிலிருப்பது இயல்பு. அது, தென்திசை சாய்ந்திருப்பின் அது பஞ்சத்திற்கு அறிகுறியென்று எண்ணுவது பண்டைத்தமிழர் வழக்கு. இது, பதிற்றுப்பத்து மற்றும் இன்னபிற நூல்களால் அறியப்படும் செய்தி}


*****************************


"வானம் பொய்த்துப்போனாலும் காவிரி பொய்க்கமாட்டாள்" என்னும் உருத்திரங்கண்ணனாரின் ஈராயிரமாண்டுகளுக்கு முந்தைய செஞ்சொல்வாக்கும் பொய்க்கவில்லையே. இதை அன்றே கூறிச்சென்ற புலவரை எண்ணி பெருவியப்படைந்தேன். காவிரியாள், தன்மக்களை எப்போதும் கைவிட்டதில்லை, இப்போதும் கைவிடவில்லை. ஆனால் இப்போது, ஆண்டவர்களும் ஆள்பவர்களும் தான் பொன்னி தரும் பொன்னைப் பாதுகாக்காமல் கைவிட்டுவிட்டனர். மேட்டூர் அணை தூர்வாரப்படவேயில்லை, முக்கொம்பு தடுப்பணை இன்னும் சீர்செய்யப்படவில்லை. நீர்வரும்வழிகளைத் தூர்வாரவில்லை, நீரைச்சேமிக்கும் திட்டங்களும் இல்லை, பொதுப்பணித்துறை உயிரோடிருக்கிறதா செத்துத்தொலைந்துவிட்டதாவென்றும் தெரியவில்லை.


******************************


தரவு : பட்டினப்பாலை நூல்

படம் : புகைக்கும்கல் என்னும் ஒகேனக்கல் அருவிகள். அருவிகளையே மூழ்கடித்துப் பாயும் காவிரி.


நன்றி, வணக்கம்.

தமிழ் கோ விக்ரம்

பண்ணிசைப்பயிற்சி வகுப்புகள்

 பண்ணிசைப்பயிற்சி வகுப்புகள் :


தமிழரிசை பயில விரும்புவோர் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். தமிழிசை என்றாலே திருமுறையிசை, இறைவழிபாட்டுப் பாடல்கள் என்னும் நிலைக்கு வந்துவிட்டது. அப்படியானாலும், இந்த இறைவழிபாட்டுப் பாடல்களே இந்நாள்வரை நம் தமிழிசையை வழிவழியாகக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது நம்மிடம். அப்படி, தேவராத்திருவாசகம் காத்தது 25 பண்கள்.




பண்  - இராகம்


1. நட்டபாடை  - நாட்டை

2. கொல்லி - நவரோசு

3. இந்தளம் - மாயாமாளவகௌளை

4.குறிஞ்சி - அரிகாம்போதி 

5. செந்துருத்தி - மத்யமாவதி 

6. யாழ்முறி - அடானா 

7. சீகாமரம் -நாதநாமக்கிரியா 

8. நட்டராகம் - பந்துவராளி 

9. தக்கராகம் - காம்போதி

10. பழந்தக்கராகம் - சுத்தசாவேரி

11. பழம்பஞ்சுரம் - சங்கராபரணம்

12. தக்கேசி - காம்போதி

13. செவ்வழி - யதுகுல காம்போதி 

14. பியந்தைக் காந்தாரம் - நவரோசு

15. காந்தாரம் - நவரோசு

16. காந்தார பஞ்சமம் - கேதாரகௌளை

17. கொல்லிக்கௌவானம்  - நவரோசு

18. கௌசிகம் - பைரவி

19. பஞ்சமம் - ஆகிரி

20. சாதாரி - பந்துவராளி 

21. புறநீர்மை - பூபாளம்

22. அந்தாளக்குறிஞ்சி - சாமா

23. மேகராகக்குறிஞ்சி - நீலாம்பரி

24. வியாழக் குறிஞ்சி - சௌராஷ்டிரம்

25. முல்லைத்தீம்பாணி - மோகனம்


இழந்த பண்களை(இராகங்களை) மீட்டெடுக்கவேண்டும். இருக்கும் பண்களை பாதுகாக்கவேண்டும். அதற்கு நல்லதொரு வாய்ப்பு இதுபோன்ற இசைவகுப்புகள். விருப்பமுடையோர் இதில் இணைந்து தமிழிசை கற்க முயலுங்கள்.


பண்களைக்கற்று நம் பிற இலக்கியப் பாக்களையும் பண்ணிசைத்துப் பாட முயலவேண்டும். 


நன்றி. வணக்கம். 🙏🙏🙏

யானையின் பெயர்கள் அறுபது

 யானையின் பெயர்கள் 60 :


உலக யானைகள் நாளில் யானையின் பெயர்கள்


1. யானை/ஏனை (கரியது)

2. வேழம் (வெள்ளை யானை)

3. களிறு

4. களபம்

5. மாதங்கம்

6. கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)

7. உம்பர்

8. உம்பல் (உயர்ந்தது)

9. அஞ்சனாவதி

10. அரசுவா

11. அல்லியன்

12. அறுபடை

13. ஆம்பல்

14. ஆனை

15. இபம்

16. இரதி

17. குஞ்சரம்

18. இருள்

19. தும்பு

20. வல்விலங்கு

21. தூங்கல்

22. தோல்

23. கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)

24. எறும்பி

25. பெருமா (பெரிய விலங்கு)

26. வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)

27. புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)

28. ஒருத்தல்

29. ஓங்கல் (மலைபோன்றது)

30. நாக

31. பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)

32. கும்பி

33. தும்பி (துளையுள்ள கையை உடையது)

34. நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)

35. குஞ்சரம் (திரண்டது)

36. கரேணு

37. உவா (திரண்டது)

38. கரி (கரியது)

39. கள்வன் (கரியது)

40. கயம்

41. சிந்துரம்

42. வயமா

43. புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)

44.  தந்தி

45. மதாவளம்

46.  தந்தாவளம்

47. கைம்மலை (கையை உடைய மலை போன்றது)

48. வழுவை (உருண்டு திரண்டது)

49. மந்தமா

50. மருண்மா

51. மதகயம்

52. போதகம்

53. யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)

54. மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)

55. கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)


பெண் யானையின் பெயர்கள்:

56. பிடி

57. அதவை

58. வடவை

59. கரிணி

60. அத்தினி


யானைக்கன்றின் பெயர்கள் (இளமைப் பெயர்கள்)

1. கயந்தலை

2. போதகம்

3. துடியடி

4. களபம்

5. கயமுனி



சான்றுகள் :

1. விலங்கின் பெயர்த்தொகுதி, சூடாமணி நிகண்டு.

2. மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரை :


உம்பல் உயர்ந்தது.

உவா திரண்டது.

ஓங்கல் மலைபோன்றது.

கரி கரியது.

கள்வன் கரியது.

கறையடி உரல் போன்ற பாதத்தை உடையது.

குஞ்சரம் திரண்டது.

கைம்மா துதிக்கை யுடைய விலங்கு

கைம்மலை கையை உடைய மலை போன்றது.

தும்பி துளையுள்ள கையை உடையது.

நால்வாய் தொங்குகின்ற வாயை உடையது.

புகர்முகம் முகத்தில் புள்ளியுள்ளது (ஒரு வகை).

புழைக்கை (பூட்கை) துளையுள்ள கையை உடையது.

பெருமா பெரிய விலங்கு.

பொங்கடி பெரிய பாதத்தை உடையது.

யானை (ஏனை) கரியது.

வழுவை உருண்டு திரண்டது.

வாரணம் சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது.

வேழம் வெள்ளை யானை போலும்.


(நன்றி : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்).


உதவி : விக்கிபீடியா

Wednesday, August 12, 2020

கலித்தொகை 9 - எறித்தரு கதிர் தாங்கி

கலித்தொகை ௯(9)ஆம் பாட்டு :


பாலைக்கலி  - சேரமான்பெருங்கடுங்கோ


பண் : பழம்பஞ்சுரம் (இராகம் : சங்கராபரணம்)


கலித்தொகையில் தலைவியின் உடன்போக்கும் செவிலித்தாயின் தேடலும்




எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல், 

உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும், 

நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக் 

குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!-

வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை,


என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும், 

தம்முள்ளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்; 

அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!' 

'காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை; 

ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய


மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்; 

பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை, 

மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்? 

நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! 

சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,


நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்? 

தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை, 

யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்? 

சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!


எனவாங்கு, 

இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்; 

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்; 

அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே.


         -- பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோ


பொருளுரை:


தலைவி, தான் விரும்பிய தலைவனுடன் உடன்போக்கு (ஓடிப்போதல்) நிகழ்த்திவிட்டாள். அவர்களைத்தேடி தலைவியின் செவிலித்தாய் செல்கிறாள். அவ்வாறு உடன்போக்கு நிகழ்த்துவோர் பாலைநிலத்திற்குச்செல்வர். பாலைநிலவழியே கள்வர்களும் முக்கோற்பகவர்களும் (துறவிகளும்) செல்வர். தலைவியை தேடிவரும் செலிவித்தாய் எதிர்ப்படும் முக்கோற்பகவரிடம் தம்மகளைப்பற்றி வினவுவதாக அமைந்துள்ளது இப்பாட்டு.


வெயிலில் நிழலுக்காக குடை பிடித்தும், நீர்க்கரகமும், கையிலே முக்கோலையும் பிடித்துக்கொண்டுவரும் துறவிகளே,


"என் மகள் ஒருத்தியும், பிறளின் மகன் ஒருவனும் தங்களுக்குள் காதல்கொண்டவர்கள். அப்படிப்பட்ட இருவரை இவ்வழியே காண்டீர்களா பெருமானே?"


துறவி சொல்கிறார், "காணாமலில்லை. கண்டோம். ஆண் என்பதற்கே உரிய அழகான ஒருவனோடு, சிறந்த அணிகலன்களை அணிந்தபெண்ணின் தாய் நீரே போலும்".


"மலையில் இருக்கும் ஆரம்(சாந்து, சந்தனம்), மலையிலே பிறந்தாலும், அந்த ஆரத்தால் மலைக்கு என்ன பயன்? அதை அரைத்து நறுமணம்வீச பூசிக்கொள்பவர்க்கு அல்லவா சந்தனம் உரிமையுடையது. அப்படி நினைத்தால், உம்மகள் உங்களுக்கு அத்தகையவளே.


கடலில் பிறக்கும் முத்து, அதை அணிந்துகொள்பவர்களுக்கு அல்லது, கடலிலே பிறந்தாலும், அந்த முத்தால் கடலுக்கு என்ன பயன்? அப்படித்தேர்ந்தால், உம்மகள் உங்களுக்கு அத்தகையவளே.


ஏழிசையானது அதைக்கேட்டு இன்புறுபவர்களுக்கன்றி, அவ்வேழிசை யாழிலே பிறந்தாலும் அந்த யாழுக்கு அவ்வேழிசையால் என்ன பயன்? அப்படிப்பார்த்தால், உம்மகள் உங்களுக்கும் அத்தகையவளே. 


அதனால், நீங்கள் துன்பம் கொள்ளாதீர். உம்மகள் அவள் விரும்பிய சிறந்த ஆண்மகனோடே சென்றாள். அவ்வுடன்போக்கு அறமே. அவர்களை வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்தியனுப்பினோம் நாங்கள். நீர் துன்பப்படாது வீடு திரும்புக."


என்று அறங்கூறியனுப்பினர்.


********************************


உதவி : கலித்தொகை நூலில் பாலைக்கலி

பாடியவர் : சேரமான் பெருங்கடுங்கோ

உரை : தமிழ் கோ விக்ரம்

நன்றி. வணக்கம்.

நற்றமிழ் கவின்மிகு கபாடங்கள்





 

நால்வருணம் பற்றி கீதையில் கண்ணன் சொன்னது

சூத்திரன்னு கேவலமா சொன்னவனுக்கே

இந்த சூத்திர முண்டங்கள் கிருட்டிண செயந்தி விழா கொண்டாடுதுங்க.


அத்யாயம்4 ஸ்லோகம் 13 :


சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு³ணகர்மவிபா⁴க³ஸ²:|

தஸ்ய கர்தாரமபி மாம் வித்³த்⁴யகர்தாரமவ்யயம் 4-13||


குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அதைப் படைத்தாலும் அதற்கு நான் கர்த்தா அல்லேன் என்று உணர்.


அத்யாயம் 11 ஸ்லோகம் 13,14 :


விப்ரக்ஷத்ரியவித்ஶூத்3ரா முக2பா3ஹுருபாத3ஜா: |

வைராஜாத்புருஷாஜ்ஜாதா ய ஆத்மாசாரலக்ஷணா: || 13 ||

க்3ருஹாஶ்ரமோ ஜக4னதோ ப்3ரமச்ர்ய ஹ்ருதோ3 மம |

வக்ஷ:ஸ்த2லாத்3வனேவாஸ: ஸந்ந்யாஸ: ஶிரஸி ஸ்தி2த: || 14 ||


பிராமணர், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்குவிதமான மனிதர்கள் தோன்றினார்கள். விராட் புருஷனாகிய என்னுடைய முகத்திலிருந்து பிராமணர்களும், கைகளிலிருந்து சத்திரியர்களும், தொடையிலிருந்து வைசியர்களும், பாதங்களிலிருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள்.  இவர்களுடைய வாழ்க்கைமுறையிலிருந்தும், செய்கின்ற செயல்களிலிருந்தும் இவ்வாறு பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். விராட் புருஷனாகிய என்னுடைய தலையிலிருந்து சந்நியாஸ ஆசிரமும், மார்பிலிருந்து வானப்பிரஸ்த ஆசிரமும், இருதயத்திலிருந்து பிரம்மச்சர்ய ஆசிரமும், இடுப்புக்கு கீழே முன்புற பகுதியிலிருந்து கிருஹஸ்தாசிரமும் தோன்றின.


கால்ல மனுசன் பிறப்பானா? கொஞ்சமாவது அறிவு வேணாமா? அப்டி கால்ல பிறந்தவன் ன்னு சொன்ன இந்த வில்லன் கிருட்டிணனுக்கு, கிருட்டிண செயந்தி விழா கொண்டாடுத்துங்க இந்த சூத்திர முண்டங்க. காறிதுப்பணுமா வேணாமா?



Sunday, August 2, 2020

தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் தமிழிசைப்பணி

ஆபிரகாம் பண்டிதரின் பிறந்தநாள் இன்று

(02.08.1859 – 31.08.1919) 🙏🙏🙏

தமிழுக்குக் கிடைத்த "வாராது வந்த மாமணி" இராவ்சாகேப் மு.ஆபிரகாம் பண்டிதர் அவர்களின் பிறந்தநாள் இன்று.

உலகின் முதலிசை தமிழிசையே என்று உரிய சான்றுகளுடன் உலகிற்கு உரக்கச்சொன்னவர். தமிழ்த்தாயின் மணிவயிற்றில் தோன்றிய தமிழிசை மாமணி.



"கருணாமிர்த சாகரம்" என்னும் பெருநூலை, தமிழிசைப் பேராவணக்கடலை தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈந்த தமிழிசைப் பேரறிஞர்.

தமிழிசையறிஞர், சித்த மருத்துவர், புகைப்படக்கலைஞர், ஆசிரியர். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழிசையை ஆய்ந்த ஆபிரகாம் பண்டிதரின் ஆராய்ச்சி நூல்கள் கருணாமிர்த சாகரத்திரட்டு, தமிழிசை வரலாறு ஆகியனவாகும்.

பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917 இல் பெரும் இசைநூலாகக் "கருணாமிர்த சாகரம்" என்ற பெயரில் வெளியிட்டார். இரண்டு தொகுதிகளைக்கொண்ட அந்நூல் 1720 பக்கங்களைக் கொண்டது. இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது. (அந்நூலின் முதற்பக்கங்களையும் சில நுண்ணிய இசைப்பகுப்பின் பக்கங்களையும் மாநாட்டின் சில படங்களையும் இங்கே இணைத்துள்ளேன்).

தனது இசையுலக தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய தமிழிசை மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார். அதனைத் தொடர்ந்து 1910 முதல் 1914 வரை ஆறு தமிழிசை மாநாடுகளை தம் சொந்தச்செலவில் நடத்தினார்.

தமிழகத்தில் தெலுங்கு மொழியை முதன்மையாகக் கொண்டு கர்நாடக சங்கீதம் என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் இசைமரபு உண்மையில் பழந்தமிழ் இசைமரபே என்பதை உணர்ந்த பண்டிதர் அதனை மெய்ப்பிக்கும் வகையில் பல பழந்தமிழ் இசை நூல்களைக் கற்றுணர்ந்தார். ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி.பிச்சைமுத்து அவர்களின் மாணாக்கராகி மேற்கத்திய இசையையும் கற்றுத்தேர்ந்தார்.

1912 ஆண்டு மே மாதம் 27ஆம் நாள் தஞ்சையில் சங்கீத வித்யா மகாசன சங்கத்தை நிறுவினார். பல்வேறு பாடகர்களையும் இசை நிபுணர்களையும் மேற்கத்திய இசைவல்லுநர்களையும் மாநாடுகளுக்கு அழைத்து விரிவாக உரையாடினார்.

பரதரின் "நாட்டிய சாத்திரம்", சாரங்க தேவரின் "சங்கீத ரத்னாகரம்" முதலிய பிற மொழி இசை நூல்களையும் சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள், கல்லாடம், தண்டியலங்காரம் முதலிய பண்டைத்தமிழ் நூல்களையும் விரிவாகக்கற்ற பண்டிதர் தன் ஆய்வுகளில் இவற்றையெல்லாம் ஆழ்ந்து பரிசீலிக்கிறார்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள் இன்றைய கருநாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் சுட்டிக் காட்டினார். இன்றைய இராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார். இராகங்களை உண்டு பண்ணும் முறை, பாடும் முறை ஆகியவற்றை பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வுசெய்தறிந்து விளக்கிக்காட்டினார். அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், தமிழிசையே வடக்கே இந்துஸ்தானி இசை என்ற பெயரில் விளங்குகிறது என்று நிரூபித்தார். 20-24.3.1916-இல் பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசைமாநாட்டுக்குச் சென்று தன் முடிவுகளைப்பற்றி உரையாற்றினார். இவரது கண்டுபிடிப்புகளை இவரது இரு மகள்கள் வீணையில் இசைத்துக் காட்டி நிரூபித்தனர்.

1917ஆம் ஆண்டு, கருணாமிர்த சாகரத்தின் முதல்தொகுதி வெளியானது. இந்நூலின் இரண்டாம் தொகுதியில் முதல் 3 பகுதிகளையும் எழுதிமுடித்து, அவற்றில் 256 ஆம் பக்கம் வரை அச்சடித்த பின்பு 1919இல் இசைத்தமிழன்னையின் திருவடிகளில் தமிழிசையை இசைக்கச்சென்றார்.

பின்பு அவரது மகளார் மரகதவல்லி துரைப்பாண்டியன் அவர்கள், பண்டிதர் வைத்திருந்த குறிப்புகளைக்கொண்டு நான்காவது பகுதியை எழுதிமுடித்தார். இந்த இரண்டாவது தொகுதி 1946ஆம் ஆண்டு வெளிவந்தது.

பண்டிதரின் பெரும்பணிக்கு இசைத்தமிழுலகம் எந்நாளும் கடப்பாடுடையது. உலகில் இசை உள்ளளவும் எம் தமிழிசைத்தலைமகனின் புகழ் நிலைத்திருக்கும். பண்டிதரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவோம்.

நன்றி. வணக்கம். 🙏🙏🙏