Sunday, August 2, 2020

தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் தமிழிசைப்பணி

ஆபிரகாம் பண்டிதரின் பிறந்தநாள் இன்று

(02.08.1859 – 31.08.1919) 🙏🙏🙏

தமிழுக்குக் கிடைத்த "வாராது வந்த மாமணி" இராவ்சாகேப் மு.ஆபிரகாம் பண்டிதர் அவர்களின் பிறந்தநாள் இன்று.

உலகின் முதலிசை தமிழிசையே என்று உரிய சான்றுகளுடன் உலகிற்கு உரக்கச்சொன்னவர். தமிழ்த்தாயின் மணிவயிற்றில் தோன்றிய தமிழிசை மாமணி.



"கருணாமிர்த சாகரம்" என்னும் பெருநூலை, தமிழிசைப் பேராவணக்கடலை தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈந்த தமிழிசைப் பேரறிஞர்.

தமிழிசையறிஞர், சித்த மருத்துவர், புகைப்படக்கலைஞர், ஆசிரியர். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழிசையை ஆய்ந்த ஆபிரகாம் பண்டிதரின் ஆராய்ச்சி நூல்கள் கருணாமிர்த சாகரத்திரட்டு, தமிழிசை வரலாறு ஆகியனவாகும்.

பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917 இல் பெரும் இசைநூலாகக் "கருணாமிர்த சாகரம்" என்ற பெயரில் வெளியிட்டார். இரண்டு தொகுதிகளைக்கொண்ட அந்நூல் 1720 பக்கங்களைக் கொண்டது. இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது. (அந்நூலின் முதற்பக்கங்களையும் சில நுண்ணிய இசைப்பகுப்பின் பக்கங்களையும் மாநாட்டின் சில படங்களையும் இங்கே இணைத்துள்ளேன்).

தனது இசையுலக தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய தமிழிசை மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார். அதனைத் தொடர்ந்து 1910 முதல் 1914 வரை ஆறு தமிழிசை மாநாடுகளை தம் சொந்தச்செலவில் நடத்தினார்.

தமிழகத்தில் தெலுங்கு மொழியை முதன்மையாகக் கொண்டு கர்நாடக சங்கீதம் என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் இசைமரபு உண்மையில் பழந்தமிழ் இசைமரபே என்பதை உணர்ந்த பண்டிதர் அதனை மெய்ப்பிக்கும் வகையில் பல பழந்தமிழ் இசை நூல்களைக் கற்றுணர்ந்தார். ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி.பிச்சைமுத்து அவர்களின் மாணாக்கராகி மேற்கத்திய இசையையும் கற்றுத்தேர்ந்தார்.

1912 ஆண்டு மே மாதம் 27ஆம் நாள் தஞ்சையில் சங்கீத வித்யா மகாசன சங்கத்தை நிறுவினார். பல்வேறு பாடகர்களையும் இசை நிபுணர்களையும் மேற்கத்திய இசைவல்லுநர்களையும் மாநாடுகளுக்கு அழைத்து விரிவாக உரையாடினார்.

பரதரின் "நாட்டிய சாத்திரம்", சாரங்க தேவரின் "சங்கீத ரத்னாகரம்" முதலிய பிற மொழி இசை நூல்களையும் சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள், கல்லாடம், தண்டியலங்காரம் முதலிய பண்டைத்தமிழ் நூல்களையும் விரிவாகக்கற்ற பண்டிதர் தன் ஆய்வுகளில் இவற்றையெல்லாம் ஆழ்ந்து பரிசீலிக்கிறார்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள் இன்றைய கருநாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் சுட்டிக் காட்டினார். இன்றைய இராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார். இராகங்களை உண்டு பண்ணும் முறை, பாடும் முறை ஆகியவற்றை பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வுசெய்தறிந்து விளக்கிக்காட்டினார். அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், தமிழிசையே வடக்கே இந்துஸ்தானி இசை என்ற பெயரில் விளங்குகிறது என்று நிரூபித்தார். 20-24.3.1916-இல் பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசைமாநாட்டுக்குச் சென்று தன் முடிவுகளைப்பற்றி உரையாற்றினார். இவரது கண்டுபிடிப்புகளை இவரது இரு மகள்கள் வீணையில் இசைத்துக் காட்டி நிரூபித்தனர்.

1917ஆம் ஆண்டு, கருணாமிர்த சாகரத்தின் முதல்தொகுதி வெளியானது. இந்நூலின் இரண்டாம் தொகுதியில் முதல் 3 பகுதிகளையும் எழுதிமுடித்து, அவற்றில் 256 ஆம் பக்கம் வரை அச்சடித்த பின்பு 1919இல் இசைத்தமிழன்னையின் திருவடிகளில் தமிழிசையை இசைக்கச்சென்றார்.

பின்பு அவரது மகளார் மரகதவல்லி துரைப்பாண்டியன் அவர்கள், பண்டிதர் வைத்திருந்த குறிப்புகளைக்கொண்டு நான்காவது பகுதியை எழுதிமுடித்தார். இந்த இரண்டாவது தொகுதி 1946ஆம் ஆண்டு வெளிவந்தது.

பண்டிதரின் பெரும்பணிக்கு இசைத்தமிழுலகம் எந்நாளும் கடப்பாடுடையது. உலகில் இசை உள்ளளவும் எம் தமிழிசைத்தலைமகனின் புகழ் நிலைத்திருக்கும். பண்டிதரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவோம்.

நன்றி. வணக்கம். 🙏🙏🙏












No comments:

Post a Comment