வான்பொய்ப்பினும் தான்பொய்யாக் காவிரி:
நூல் : பட்டினப்பாலை, முதலேழுஅடிகள்
நூல்களைப் படிக்கும்போது ஏதோவொரு சொல்லோ, தொடரோ நம் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும். அப்படி பட்டினப்பாலையில் எனக்குப் பெருவியப்பைத்தந்து என் மனத்தில் பதிந்த ஒருதொடர் "வான்பொய்ப்பினும் தான்பொய்யாக் காவிரி" என்னும் சொற்றொடர். தமிழ்நாட்டில் மழைபெய்யாமல் காவிரியில் மட்டும் அளவிறந்த நீர் நமக்கு கிடைக்கிறது என்னும் செய்தியைக்கேட்டதும், என் நினைவிற்கு வந்தது இச்சொற்றொடர் தான்.
பத்துப்பாட்டுள் திருமாவளவனாகிய கரிகாற்பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலையில், சோணாட்டுள் பட்டினமாகிய காவிரிப்பூம்பட்டினத்தை வளஞ்செய்கின்ற காவிரியின் சிறப்பை, நூலின் முதலேழு அடிகளில் பாடி சிறப்புச்செய்கிறார் புலவர்.
"வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவின்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினுந் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்."
உரை :
குற்றமில்லாத புகழுடனே விளங்குகின்ற வெள்ளியாகிய மீன், தன்னுடைய திசையாகிய வடக்கிலிருந்து மாறி தெற்கிற்குப் போனாலும், வானின் நீரை உணவாகவுடைய, தன்னைப்பாடிய வானம்பாடியென்னும் பறவை, உணவின்றி வருந்தும்படி, மழை பெய்தலைத் தவிர்ந்து, வானம்பொய்த்துப் பஞ்சமுண்டானாலும், தான் தவறாமல் காலந்தோறும் பெருக்கெடுத்துவருகின்றதும், குடகுமலையினடத்தே தலையை {தொடக்கத்தை} உடையதும், கடலினிடத்துச் சேர்வதுமான #_காவிரி, தன் நீரைப்பரவி பொன்னைக் கொழிக்கும்.
{வெள்ளிக்கோள் வடதிசையிலிருப்பது இயல்பு. அது, தென்திசை சாய்ந்திருப்பின் அது பஞ்சத்திற்கு அறிகுறியென்று எண்ணுவது பண்டைத்தமிழர் வழக்கு. இது, பதிற்றுப்பத்து மற்றும் இன்னபிற நூல்களால் அறியப்படும் செய்தி}
*****************************
"வானம் பொய்த்துப்போனாலும் காவிரி பொய்க்கமாட்டாள்" என்னும் உருத்திரங்கண்ணனாரின் ஈராயிரமாண்டுகளுக்கு முந்தைய செஞ்சொல்வாக்கும் பொய்க்கவில்லையே. இதை அன்றே கூறிச்சென்ற புலவரை எண்ணி பெருவியப்படைந்தேன். காவிரியாள், தன்மக்களை எப்போதும் கைவிட்டதில்லை, இப்போதும் கைவிடவில்லை. ஆனால் இப்போது, ஆண்டவர்களும் ஆள்பவர்களும் தான் பொன்னி தரும் பொன்னைப் பாதுகாக்காமல் கைவிட்டுவிட்டனர். மேட்டூர் அணை தூர்வாரப்படவேயில்லை, முக்கொம்பு தடுப்பணை இன்னும் சீர்செய்யப்படவில்லை. நீர்வரும்வழிகளைத் தூர்வாரவில்லை, நீரைச்சேமிக்கும் திட்டங்களும் இல்லை, பொதுப்பணித்துறை உயிரோடிருக்கிறதா செத்துத்தொலைந்துவிட்டதாவென்றும் தெரியவில்லை.
******************************
தரவு : பட்டினப்பாலை நூல்
படம் : புகைக்கும்கல் என்னும் ஒகேனக்கல் அருவிகள். அருவிகளையே மூழ்கடித்துப் பாயும் காவிரி.
நன்றி, வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment