மதுரைக்காஞ்சியில் ஓணநன்னாள் : 🏵️
தமிழர்களுக்கு ஓணநன்னாள் வாழ்த்துகள் 🌺
நூல் : மதுரைக்காஞ்சி
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
590 முதல் 610 ஆம் அடிகள் வரை.
பாட்டு :
கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய வோண நன்னாள்
கோணந் தின்ற வடுவாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறா துற்ற வடுப்படு நெற்றிச்
சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர்
கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக்
கடுங்கட் டேறன் மகிழ்சிறந்து திரிதர
கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து
பணைத்தேந் திளமுலை யமுத மூறப்
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீர் அயரத்
திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழிப் பண்ணிக்
குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி
நுண்ணீ ராகுளி யிரட்டப் பலவுடன்
ஒண்சுடர் விளக்க முந்துற மடையொடு
நன்மா மயிலின் மென்மெல வியலிக்
கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுது
பெருந்தோட் சாலினி மடுப்ப
விளக்கம் :
திரட்சிகொண்ட அவுணரை வென்ற பொன்னாலான மாலையைச் சூடியிருக்கின்ற கருமையான மாயோனுக்குகந்த ஓண நன்னாளில் ஊரார் எடுத்த விழாவில்,
இன்று போர் செய்யவேண்டும் என்றெண்ணும் வீரத்தை உடைய சேரித் தெருவுகளில் தம்மில் தாம் மாறாய் பொருகின்ற போரில், அடி மாறாமல் நின்றதனால் ஏற்பட்ட வடுக்களை உடைய நெற்றியையும், வண்டுகள் நிறைந்த தும்பையாகிய போர்ப்பூவில் பெரிய விருப்பத்தினையுடைய மறவர்கள்,
தோட்டி வெட்டின வடு இருக்கக்கூடிய முகத்தையும், போரைத் தாங்கும் பெரிய கையினையும் உடைய கடிய களிற்றை ஓட்டும்போது,
கடிய கள்ளையுண்டு மகிழ்ச்சி மிகுந்த பரிக்காரர்கள், அந்த யானையின் விசையைக் காண அந்த யானைகளுக்கு முன்னேயோடுகின்றனர். நெடிய கரையில் இருந்து இதைக்காணுபவர்கள், யானைகள் தம்மேல் வராமல் இருக்க, தம் மடிகளிலிருந்த கப்பணங்களை நிலத்தில் சிந்தியிருக்கின்றனர். (கப்பணங்கள் - நெருஞ்சி முள் போன்ற இரும்பாலானவை என்றனர் உரையாசிரியர்கள்).
செல்வத்தையுடைய மனையிடத்து மகளிர் தம் கணவர்கள் வியக்கும்படி பிள்ளைகளை எந்த சிக்கலும் இன்றி பெற்று, தம்முடைய பெரிய இளமையான முலைகளில் பால்சுரக்கும்படி குளத்தில் நீராடுகின்றனர்.
அதைக்கண்ட, முதற்கருவுற்ற மகளிர், அந்த பெண்களைப்போலவே எந்த சிக்கலும் இன்றி பிள்ளைகளைப் பெறவேண்டும் என்று கருதி, தெய்வத்தை வணங்கி குறைதீர்ந்தபின், சுற்றத்தார் சூழ, பெரியதோளையுடைய சாலினியாகிய தேவராட்டி உடன்வர (சாலினி - தேவராட்டி - தெய்வமேறிய பெண்),
பூசனை பொருள்கள் பலவற்றுடன், யாழில் செவ்வழி என்னும் பண்ணை இசைத்துக்கொண்டும் அதற்கேற்ற பாடல்களைப் பாடிக்கொண்டும் ஆகுளிப்பறை மற்றும் முழவுகள் முழங்க, நல்ல மயிலைப்போல மெல்ல நடந்துசென்று கைதொழுது படையலை படைக்கின்றனர்.
(செவ்வழிப்பண் - யதுகுல காம்போதி)
ஓணநன்னாள் வாழ்த்துகள் 🏵️🌹🌺🌻🌼🌷
******
நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment