கலித்தொகை ௯(9)ஆம் பாட்டு :
பாலைக்கலி - சேரமான்பெருங்கடுங்கோ
பண் : பழம்பஞ்சுரம் (இராகம் : சங்கராபரணம்)
கலித்தொகையில் தலைவியின் உடன்போக்கும் செவிலித்தாயின் தேடலும்
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,
உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!-
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை,
என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
தம்முள்ளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!'
'காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்;
பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
எனவாங்கு,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே.
-- பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோ
பொருளுரை:
தலைவி, தான் விரும்பிய தலைவனுடன் உடன்போக்கு (ஓடிப்போதல்) நிகழ்த்திவிட்டாள். அவர்களைத்தேடி தலைவியின் செவிலித்தாய் செல்கிறாள். அவ்வாறு உடன்போக்கு நிகழ்த்துவோர் பாலைநிலத்திற்குச்செல்வர். பாலைநிலவழியே கள்வர்களும் முக்கோற்பகவர்களும் (துறவிகளும்) செல்வர். தலைவியை தேடிவரும் செலிவித்தாய் எதிர்ப்படும் முக்கோற்பகவரிடம் தம்மகளைப்பற்றி வினவுவதாக அமைந்துள்ளது இப்பாட்டு.
வெயிலில் நிழலுக்காக குடை பிடித்தும், நீர்க்கரகமும், கையிலே முக்கோலையும் பிடித்துக்கொண்டுவரும் துறவிகளே,
"என் மகள் ஒருத்தியும், பிறளின் மகன் ஒருவனும் தங்களுக்குள் காதல்கொண்டவர்கள். அப்படிப்பட்ட இருவரை இவ்வழியே காண்டீர்களா பெருமானே?"
துறவி சொல்கிறார், "காணாமலில்லை. கண்டோம். ஆண் என்பதற்கே உரிய அழகான ஒருவனோடு, சிறந்த அணிகலன்களை அணிந்தபெண்ணின் தாய் நீரே போலும்".
"மலையில் இருக்கும் ஆரம்(சாந்து, சந்தனம்), மலையிலே பிறந்தாலும், அந்த ஆரத்தால் மலைக்கு என்ன பயன்? அதை அரைத்து நறுமணம்வீச பூசிக்கொள்பவர்க்கு அல்லவா சந்தனம் உரிமையுடையது. அப்படி நினைத்தால், உம்மகள் உங்களுக்கு அத்தகையவளே.
கடலில் பிறக்கும் முத்து, அதை அணிந்துகொள்பவர்களுக்கு அல்லது, கடலிலே பிறந்தாலும், அந்த முத்தால் கடலுக்கு என்ன பயன்? அப்படித்தேர்ந்தால், உம்மகள் உங்களுக்கு அத்தகையவளே.
ஏழிசையானது அதைக்கேட்டு இன்புறுபவர்களுக்கன்றி, அவ்வேழிசை யாழிலே பிறந்தாலும் அந்த யாழுக்கு அவ்வேழிசையால் என்ன பயன்? அப்படிப்பார்த்தால், உம்மகள் உங்களுக்கும் அத்தகையவளே.
அதனால், நீங்கள் துன்பம் கொள்ளாதீர். உம்மகள் அவள் விரும்பிய சிறந்த ஆண்மகனோடே சென்றாள். அவ்வுடன்போக்கு அறமே. அவர்களை வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்தியனுப்பினோம் நாங்கள். நீர் துன்பப்படாது வீடு திரும்புக."
என்று அறங்கூறியனுப்பினர்.
********************************
உதவி : கலித்தொகை நூலில் பாலைக்கலி
பாடியவர் : சேரமான் பெருங்கடுங்கோ
உரை : தமிழ் கோ விக்ரம்
நன்றி. வணக்கம்.
Nice one
ReplyDeleteசிறந்த உரை
ReplyDelete