இந்தியன் என்றால் என்னது தம்பி?
சாதியும் இருக்கும்;
மதமும் இருக்கும்;
சாத்திரம் மக்களை
வேறெனப் பிரிக்கும்!
மோதலும் இருக்கும்;
முதலாளி இருப்பான்;
முன்னேற்றம் சிலர்க்கே
வாய்ப்பாக இருக்கும்!
குந்தியே தின்பான்
ஒருவன்; மற்றவன்
குடல்வற்றிச் சாவான்
இவற்றிடையே யாவரும்
இந்தியன் என்றால்
என்னது தம்பி?
எல்லாரும் சமமென்றால்
எப்படித் தம்பி?
கொள்ளையன் ஆள்வான்;
கொடுமைகள் செய்வான்;
கொடுக்கும் உரிமைகள்
கொடாது தடுப்பான்!
வெள்ளையன் ஆண்டதும்
வெறியர் ஆள்வதும்
வேறுபாடின்றி
விளங்கிடும் தம்பி!
முந்திய ஆட்சியை
அடிமை என்றார்கள்!
முன்னினும் இவர்கள்
அடிமை செய்தார்கள்!
இந்தியன் என்றால்
என்னது தம்பி?
எல்லாரும் சமமென்றால்
எப்படித் தம்பி?
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஆங்கிலேயனிடமிருந்து விடுதலைபெற்று இந்தியனிடம் தமிழர்கள் அடிமையாகிய நாள் இன்று. இதற்குப்பெயர் விடுதலைநாளாம்.
பக்கத்து நாடான இந்தியாவின் இந்தியர்களுக்கு விடுதலைநாள் வாழ்த்துக்கள். தமிழர்களுக்கும், சீக்கியர்களுக்கும், காசுமீரிகளுக்கும்,
வங்காளிகளுக்கும், நாகர்களுக்கும், அசாமியர்களுக்கும் பிற தேசிய இனங்களுக்கு தாம் அடிமைப்பட்டநாள் கடைப்பிடிப்பு.
இந்திய ஒன்றியத்திற்குப் போராடி விடுதலை பெற்றுத்தந்த நம் தமிழ்நாட்டு விடுதலைப்போராட்டவீரர்கள், தம் நாடாம் தமிழ்நாட்டிற்கும் சேர்த்து விடுதலை பெற்றிருக்கலாம்.
தமிழ்நாட்டின் சார்பில் இந்திய விடுதலைக்குப்போராடிய வீரர்களுக்கு அன்றே தெரிந்திருந்தால், அப்பெருமக்கள் தமிழ்நாட்டின் விடுதலைக்கு சேர்த்தே போராடியிருப்பர். இந்தியர்களிடம் இப்படி சிக்கித்தவிப்போமென்று பாவம் அவர்களுக்கு எப்படித்தெரியும், இந்த இந்தியர்களிடம் இப்படி அடிமைப்படுவோமென்று? தெரிந்திருந்தால் அப்போதே போராடி தனித்தமிழ்நாட்டைப் பெற்றிருப்பர்.
அவர்களின் உயிர் ஈகத்தைப்போற்றுவேன். ஆனால், இந்தியாவின் விடுதலைநாளைக் கொண்டாடமாட்டேன்.
என்நாடு தமிழ்நாடு. இந்தியாவிலிருந்து தமிழ்நாடு விடுதலையடையும்நாளே தமிழர்களுக்கு விடுதலைநாள். இந்தியாவின் விடுதலைநாள் வாழ்த்தை அருள்கூர்ந்து யாரும் எனக்குக்கூறவேண்டாம்.
(பெரியார் என்னும் ஆவதறிவார் 1947ல் விடுதலை மற்றும் திராவிடன் நாளேட்டில் வெளியிட்ட செய்தியை படங்களாக இணைத்துள்ளேன்)
No comments:
Post a Comment