Saturday, May 9, 2020

பாண்டியன் நெடுஞ்செழியனின் ஆட்சி :

குடிமக்கள் குறைதெளிந்த பாண்டியன் நெடுஞ்செழியன் :


அக்கால தமிழரசர்கள் ஆட்சியும், இக்கால அரசுகளின் ஆட்சியும். ஒரே ஒரு சொல்லில் வேறுபடுத்துகிறேன். சிலம்பு, நாமனைவருமறிந்ததொரு காப்பியம், அதிலிருந்தொருசொல்.



சிலம்பு - மதுரைக்காண்டம் - வழக்குரை காதை. 


கணவனையிழந்த கண்ணகி, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்க வாயிற்காவலனை கடந்து அரசவைக்குள்ளே வருகிறாள். வந்த கண்ணகியை கண்ட மன்னன் நெடுஞ்செழியன் அவளை நோக்கி இவ்வாறு பேசத்தொடங்குகிறான்.

"நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்

யாரை யோநீ மடக்கொடி யோய்"


இதன் பொருள், நீரொழுகுகிற கண்ணுடன் எம்முன் வந்தாய், யாரோ நீ மடக்கொடி போன்றவளே?

இதிலுள்ள "நீர்வார் கண்ணை" என்பதுதான் அச்சொல். நாட்டு மக்களுக்கு குறையேதுமில்லா அளவிற்கு மன்னன் செங்கோன்மையாற்றவேண்டும். அதையும் மீறி குடிமக்கள் அரசனை காணவந்தால், அக்குடிமக்கள் வந்தவுடன், அவர்கள் தாமேதம் குறைகளை கூறுவதற்கு முன்னரே அவர்களின் கண்களைக்கண்டே குறைகளை நீக்கவேண்டும். இத்தகைய சிறந்த செங்கோன்மையே அக்கால அரசு. அவ்வாறு கண்ணகி அரசவைக்கு வந்தவுடன், மன்னன் அவளைக்கண்டு, இப்பெண் ஏதோ குறையோடு வந்துள்ளாள் என்றெண்ணி அவளின் கண்களில் நீர்வருவதை கண்டு கேட்கிறான், "நீர்வார் கண்ணை" என்று. குடிமக்களின் கண்களில் இவ்வாறு கண்ணீர் வரும் அளவிற்கு நாம் கொடுங்கோலாட்சி செய்கிறோமோ என்றெண்ணி தன்னைத்தானே வெட்கும் அளவிற்கு இருந்தது கண்ணகியின் நீரொழுகு கண்கள். நாட்டிலுள்ள ஏதோ ஒரேயொரு குடிமகளின் கண்ணீருக்கு இவ்வளவு மதிப்பளித்த நம் தமிழ் மன்னர்கள் எங்கே? தற்போதைய அமைச்சர்கள் எங்கே?



மன்னன் நெடுஞ்செழியன் இவ்வாறுதான் நினைத்தான் என்று ஐயமற கூறமுடியாது. ஏனெனில் என்றோ நடந்த கதையை காப்பியமாக புனைகிறான் இளங்கோ. அது பொய்யென்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால், இக்காப்பியம் செய்த இளங்கோ இவ்வாறு அரசாட்சியிருந்தது என காப்பியம் படைக்கிறான். எத்தகைய மேன்மையுடைய செங்கோன்மை பொருந்தியிருந்தனர் நம் தமிழ் மன்னர்கள் என்பதை இந்த "நீர்வார் கண்ணை" என்னும் ஒரு சொல் விளக்கிவிட்டது.
அடஅட தமிழ் நூற்களைப் படியுங்கள் ஐயா, அன்பும் அறமும் அரசாட்சியும் கற்கலாம். மனிதன் மனிதனாகலாம்.

தமிழ் வாழ்க

பாண்டியனின் அரசவையில் கண்ணகி வழக்குரைத்தல் :


வாயி லோயே வாயி லோயே
அறிவறை போகிய பொறியறு
நெஞ்சத்து  இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே
இணையரிச் சிலம்பொன்றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாளென்று
அறிவிப் பாயே அறிவிப் பாயே; என

வாயிலோன்,
வாழியெங் கொற்கை வேந்தே வாழி 
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்சவ வாழி

அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி 
வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு
சூருடைக் கானகம் உகந்த காளி
தாருகன் பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் 

செற்றனள் போலும்செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே
கணவனை இழந்தாள் கடையகத் தாளே; 
என

வருக மற்றவள் தருக ஈங்கென 
வாயில் வந்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி

நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடியோய் எனத்

தேரா மன்னா செப்புவ துடையேன் 
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறற் புதல்வனை
ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப்
புகாரென் பதியே

அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு 
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரேயெனப்;

பெண்ணணங்கே கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
வெள்வேற் கொற்றங் காண்என

ஒள்ளிழை நற்றிறம் படராக் கொற்கை வேந்தே
என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத்

தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே
தருகெனத் தந்து தான்முன் வைப்பக் 

கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன்
தன்சொற் கேட்ட யானோ அரசன்
யானே கள்வன்

மன்பதை காக்குந்  தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்
கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று 
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.

நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

Tuesday, May 5, 2020

சிலம்பில் கொற்றவை : 


“ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்துக்
கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்—
வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,
ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

(வேட்டுவ வரி, சிலப்பதிகாரம்)




மதுரை நகருக்கு கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலில்தான் தங்குகின்றனர்:

“விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை,
மையறு சிறப்பின் வான நாடி
ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு – என்”

(காடுகாண் காதை, சிலம்பு)


வேட்டுவ வரிப் பாடல் முழுதும் கொற்றவை வருணனை வருகிறது.

கொற்றவை கோவிலில் சாலினி வெறியாடியதை (சாமி ஆடல்)  எல்லோரும் வியப்புடன் பார்த்தனர். கலையமர் செல்விக்கு பலிதந்தால்தான் நன்மைகள் விளையும் என்று அவள் சாமி ஆடுகையில் முழங்குகிறாள். இதோ இளங்கோவின் வரிகள்:


“கலையமர் செல்வி கடன் உணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போள் அல்லள்;
மட்டு உண் வாழ்க்கை வேண்டுதீர் ஆயின்
கட்டு உண் மாக்கள்! கடம் தரும் என் ஆங்கு”

(கலை= மான்)


“பழங்குடிக் குமரியின் முடியை உயர்த்திப் பொன்கயிற்றினால் கட்டினர். காட்டுப் பன்றியின் கொம்பை பிறைச் சந்திரன் போல அவளுக்கு அணிவித்தனர். புலிப்பல் தாலியை அணிவித்து புலித்தோலை ஆடையாகப் போர்த்தி, அவளை மான் மீது ஏற்றி ஊர்வலம் விட்டனர். அவள் கையில் கிளி, கோழி முதலியவற்றைக் கொடுத்து வழிபட்டனர். அவளைத் தொடர்ந்து பெண்கள் பலர், சோறு, எள்ளுருண்டை, நிணச் சோறு, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றைச் சுமந்து வந்தனர். பெரிய வாத்தியங்கள் முழங்கின. இது இளங்கோ அடிகள் நமக்கு அளிக்கும் செய்தி.


“மதியின் வெண்தோடு சூடும் சென்னி
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி, தவளவாள் நகைச்சி,
நஞ்சு உண்டு கறுத்த கண்டி, வெஞ்சினத்து
அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி,
வளியுடைக் கையில் சூலம் ஏந்தி
கரியின் உரிவை போர்த்து, அணங்கு ஆகிய
அரியின் உரிவை மேகலை ஆட்டி
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி,
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை!
இரண்டு வேறு உருவின் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்
அமரி, குமரி, கவுரி, சமரி,
சூலி, நீலி, மால் அவற்கு இளங்கிளை
ஐயை, செய்யவள், வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை, பைந்தொடிப் பாவை;
ஆய்கலைப் பாவை, அருங்கலப் பாவை
தமர் தொழ வந்த குமரிக் கோலத்து
அமர் இளங்குமரியும் அருளினள் –
வரியுறு செய்கை வாய்ந்ததால் எனவே”


பொருள்: சந்திரப் பிறை சூடிய தலை; நெற்றிக் கண்; பவள வாய், முத்துச் சிரிப்பு, நஞ்சுண்ட கறுத்த கழுத்து, பாம்பையே கயிறாகக் கொண்டு மேரு மலையை வில்லாக  வளைத்த வில்லி; துளை அமைந்த பல்லுடைய விஷப் பாம்பையே கச்சு ஆக அணிந்த முலையுடையாள்; வளைகள் அணிந்த கையில் சூலம், யானைத்தோல் போர்வை, புலித்தோல் மேகலை, இடப்புற காலில் சிலம்பு, வலப்புறக் காலில் கழல், வெற்றி கொடுக்கும் வாள் ஏந்திய கை, மகிஷாசுரன் தலையில் நிற்பவள்; எல்லோரும் தொழும்குமரி, கறுப்பி, போரின் அதிதேவதை, சூலம் ஏந்திய பெண்; நீல நிறத்தவள்; எம் தலைவி, செய்யவள், தடக் கையில் கொடிய வாளேந்திய நங்கை; பாயும் மான் மீது ஏறி வருபவள்; மலைமகள், கலைமகள், திருமகளின் உருவம்; இளங்குமரி; அவள் அருள் நமக்குக் கிடைத்துவிட்டது.

அருட்பேரொளி வள்ளற்பெருமான் சாதியை எதிர்த்த பாக்கள் சில

தைப்பூசம் -அருட்பெருஞ்சோதி திருநாள் :


காவிக்கு எதிரான, எம் புரட்சியாளர் வெண்பேரொளி வள்ளற்பெருமான் :

திருவருட்பாவின் திருமுறைகள் ஆறனுள், ஆறாந்திருமுறையையாவது நாம் படிக்கவேண்டும்.
நால்வண்ணம், சாதி, மத, சமய கொடுமைகளை எதிர்த்து நல்வழி(சன்மார்க்கம்) கண்ட வள்ளல். 🙏
சாதி, சமய, சாத்திரங்களை எதிர்த்து பெருமானருளிய வரிகள் சிலவற்றைத் தொகுத்துள்ளேன்.



வள்ளலார் வாய்மொழிகள்:


நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார்
இலைநீ விழித்திதுப்பார் என்றெனக்கு விளம்பியசற் குருவே.

சாதியு மதமுஞ் சமயமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ் சோதி

சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் சோதி

இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்

சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்

இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே

சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
விடுவித்தென் தன்னை ஞான
நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
நிலைதனிலே நிறுத்தி னானைப்

சாதிமதம் சமயம்எனும் சழக்கையும்விட் டடக்கி

சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
சத்தியனே உண்கின்றேன் சத்தியத்தெள் ளமுதே.

சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக
ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.

சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.

சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.

சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற
பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.

சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
மனம்வெளுத்து வாய்வெளுத்து

சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்தியச் சுத்தசன் மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
விளம்பினேன் வம்மினோ விரைந்தே.

சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்
தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்

சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது

சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
சோதியைக் கண்டேன டி - அக்கச்சி
சோதியைக் கண்டேன டி.

சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்

இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்.

**************

அருட்பேரொளி வள்ளற்பெருமான் திருவடிகளே போற்றி போற்றி.

நன்றி. வணக்கம்.🙏
தொகுப்பு : அடியேன் தமிழ் கோ விக்ரம்

அயோத்திதாச பண்டிதர் நினைவுநாள்

அயோத்திதாசர் என்னும் காத்தவராயனார்:


தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். பௌத்தத்திற்கு மாறிய இவர் பறையர்களின் மூலச் சமயம் பௌத்தம் என்றும் அதனால் அவர்கள் பௌத்தத்திற்குத் மாறவேண்டும் அறிவுறுத்தினார். தமிழன் என்னும் பெயரை இனத்திற்கு அடையாளமாக்கிக் காட்டியவர்.



"திராவிட மகாஜன சபை" கி.பி. 1891ல் தாத்தா இரட்டைமலை சீனிவாசனாரோடு சேர்ந்து இச்சபை தொடங்கப்பட்டது. அயோத்தி தாசர் 1885 ஆண்டிலேயே "திராவிட பாண்டியன்" என்னும் இதழைத் தொடங்கினார். அவர் கி.பி. 1886ஆம் ஆண்டில் இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றார். அவர்கள் யாவரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தையும் முன்வைத்தார். அதனால், பஞ்சமர் என்போர் வருணாசிரம முறையில் வராமல், அவர்ணாக்கள் என அழைக்கப்பட்டனர். திராவிட மகாஜன சபையை நிறுவி திராவிட அரசியலைத் தொடங்கி வைத்ததால் திராவிட அரசியலின் முன்னோடி எனவும் கூறப்படுகிறார்.

"ஒருபைசாத் தமிழன்" என்றும், பின்னர் "தமிழன்" என்று பெயர்மாற்றப்பட்ட இதழை நடத்தினார். தமிழ்த்தென்றல் திரு.வி.க வின் குடும்ப மருத்துவருமாவார் இவர். பல்வேறு துறைகளில் பன்முகத்திறமையுடையவர்.

இவருடைய தாத்தா சமையலர் கந்தப்பன், நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன்குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது.

காசிமேடு சதாவதாணி வைரக்கண் வேலாயுதம் புலவர் (1830-1892), வல்லக்காளத்தி வீ. அயோத்தி தாசர் பண்டிதர் (1836-1900) ஆகியோரிடமும் கல்வி கற்றார். தமிழ், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, மற்றும் பாலி போன்ற மொழியறிவும் பெற்று விளங்கினார். தன் ஆசிரியர் மீது கொண்ட மதிப்பால் "காத்தவராயன்" என்ற தனது பெயரை அயோத்தி தாசர் என மாற்றிக் கொண்டார்.

ஐயாவின் நினைவுநாள் இன்று. ஐயா அவர்களை  நினைவிலிருத்திப் போற்றுவோம்.

Monday, May 4, 2020

திருவோணத்திருவிழவு தமிழர் திருவிழவே

தமிழர்விழவு திருவோண நன்னாள்:




திருவோணத்திருவிழவு தமிழரின் நன்னாள் என்பதற்குக் கிடைக்கும் சான்றுகளான சில :

மதுரைக்காஞ்சி, பெரியாழ்வாரின் திருப்பால்லாண்டு, திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு ஆகியன.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய

மதுரைக்காஞ்சி 590 முதல் 605 அடிகள் வரை


"கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய #_வோண_நன்னாள்
கோணந் தின்ற வடுவாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவில்
மாறா துற்ற வடுப்படு நெற்றிச்
சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர்
கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழகம் நிலம்பர லுறுப்ப
கடுங்கட் டேறன் மகிழ்சிறந்து திரிதர
கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து
பணைத்தேந் திளமுலை யமுத மூறப்
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீர் அயரத்
திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணிக்
குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி"

***********************************

நாலாயிரப்பனுவலில் பெரியாழ்வாரின் திருப்பால்லாண்டு :


எந்தைதந்தைதந்தை தந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. 6

உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய் மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தித்
திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 9

***********************************

திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு:


"மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி #_ஓண_விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”

{ஐப்பசியில் ஓணவிழவு கொண்டாடியதாக சம்பந்தர் குறிப்பிடுகிறார்}

************************************

திருவோணத்திருவிழவு தமிழர் திருவிழவே




மதுரைக்காஞ்சி:

(தமிழவை(சங்க) இலக்கியம் - பத்துப்பாட்டு)

"கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய "ஓண நல் நாள்""

-- (மதுரைக் காஞ்சி 590,591)

திருக்கடைக்காப்பு : (தேவாரம்)


மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி "ஓண விழாவும்" அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”

-- (2ஆம் திருமுறை, 47ஆம் பதிகம், 2ஆம் பாட்டு)

திருமழிசையாழ்வார் திருமொழி:


“காணலுற்றேன் கல்லருவி முத்துதிர
"ஓணவிழவில்" ஒலியதிர - பேணி
வருவேங்கடவா என்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று"
                           --- (திருமொழி. 2422)

பெரியாழ்வார் திருமொழி:


"திருவோணத் திருவிழவில்"
படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே”
                           --- (திருமொழி. பல்லாண்டு:9)

இன்னொரு பாசுரத்தில்


“ஆண் ஒப்பார் இவன் நேரில்லை காண்
திருவோணத்தான் உலகாளும் என்பார்களே”

என்று பாடியிள்ளார்.

திருநாவுக்கரசர் தேவாரம்:


“ஓணப்பிரானும் ஒளிர்மா மலர்மிசை உத்தமனும்
காணாப் பராவியுங் காண்கின்றிலர்"


நன்றி. வணக்கம்.

தரவு நூல்கள் : 

1. மதுரைக்காஞ்சி
2. நாலாயிரப்பனுவல், மற்றும்
3. தேவாரம்

தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

தொல்காப்பியவுரையாளர் பேராசிரியர்

தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் எழுதியது :




"ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனடி
பல்காற் பரவுது மெழுத்தொடு
சொல்கா மருபொருட் டொகைதிகழ் பொருட்டே".

- தொல்காப்பியவுரைகண்ட பேராசிரியர்

மங்கல மடந்தை கண்ணகி கோயில்

மங்கல மடந்தை கண்ணகி கோயிலைக் கண்டுபிடித்தவர் பேராசிரியர் ஐயா சி கோவிந்தராசனார் :


கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியே பயணித்து, பதினேழாண்டுகள் நடந்து, கண்ணகி கோயிலைக் கண்டு பிடித்த ஆய்வாளர். தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தவர்.




1945 ஆம் ஆண்டில் பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கி, கால் நடையாகவே ஆராய்ந்தவாறு, நடந்த மதுரைவரை செல்வதற்கே, பன்னிரெண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில், பழங்காலத்தில், இடுகாடாக இருந்த கோவலன் திடல் என்ற பகுதியினையும், செல்லாத்தம்மன் கோயிலில் இருந்த, கண்ணகி சிலையினையும் கண்டு பிடித்தார்.

பிறகு மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி, சேரநாடு நோக்கிச் சென்ற வழியில், இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நடக்கத் தொடங்கினார். வையை ஆறானது, சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள, பாதை வழியாகவே, தடம் மாறாமல் இன்றும் பயணிப்பதைக் கண்டு கொண்டார்.

    சிலப்பதிகார வழிகளின் படி, மதுரையில இருந்து, வையை ஆற்றின் தென் கரையை பின் பற்றி நடந்தார். சுமார் 40 மைலகளுக்கும் மேல் பயணித்த, சுருளி மலைத் தொடரை அடைந்தார். மேல் சுருளி மலையை அடைந்து ஆராயத் தொடங்கினார். சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் என்பதை உறுதிசெய்தார். சித்தன் இருப்பு என்ற பெயருடன் விளங்கிய மலை, ஆவினன் குடியாகி, பின்னர் பொதினி மலையாக மாறி, தொடர்ந்து அதுவும் திரிந்து பழநி மலை என்று ஆனது போலவே, நெடுவேள் குன்றம் என்னு ம்பெயர், மலையில் இருந்து சுருண்டு விழும், அருவியின் பெயரால் சுருளிமலையாக மாறியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

    சுருளி மலை த்தொடராலும், பழநி மலைத் தொடராலும் இணைந்து முப்புறமும் சுவர் வைத்தாற்போல் சூழப்பட்ட பகுதியில், வர்ஷ நாடு எனப்படும், கம்பம் பள்ளத்தாக்கின் காட்டுப் பிரதேசம் பரந்து விரிந்து கிடக்கிறது. வருசநாட்டின் மலை அடிவாரப் பகுதிகளை ஆராய்ந்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கீழக் கூடலூருக்குத் தேற்கே உள்ள கோயிலில் கல் வெட்டு ஒன்றினைக் கண்டுபிடித்தார்.

        கி.பி.14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல்வெட்டு அது. மங்கல தேவி அம்மன் பூசைக்கு, சேர மன்னன் ஒருவன், தானமாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்தி, அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது.
       கண்ணகிக்கு அடைக்கலம் தந்த பொழுது, அவளுக்கு உரிய சிறப்புப் பெயரில் ஒன்றான, மங்கல மடந்தை என்னும் பெயரை, கவுந்தி அடிகள், இடையர் குல மகளான மாதரியிடம் கூறும் காட்சி, இவருக்கு நினைவிற்கு வந்தது.

       1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள், மங்கல தேவி மலையின் மேற்பரப்பிற்குச் சென்றார். கோரைப் புற்காடு எட்டடி உயரத்தற்கு வளர்ந்து மண்டிக் கிடந்தது.
       200  அடி பக்கமுள்ளதாகவும், ஓரளவு சதுரமாக உள்ளதுமாகிய கோட்டத்தைக் கண்டார். கருங்கற்கள் அடுக்கிய நிலையில், யானைகள் உள்ளே வராத வகையில் மதிற்சுவர் அமைந்திருந்தது. உட்பகுதி முழுவதும் புதர் மண்டிக் கிடந்தது.

     செடி கொடிகளால் சூழப்பட்டு சிதைந்த நிலையில் நிற்கும் கற்படைக் கோயில்கள் நான்கு ஆங்காங்கே இருந்தன. இரண்டு கோயில்கள் சிறியதாகவும், அழகுடனும் காட்சியளித்தன.  இக்கோயிலின் உட்பகுதி வேரும், விழுதும், தழை மடிசல்களும், மழை நீரும் நிறைந்து, இடிபாடுகளுடன் இடிந்து கிடந்தது.
     கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஓர் அழகானப் படிக்கட்டு. அதற்கு முன்னர் அரைகுறையாகக் கட்டப்பட்டு குத்துக் கற்களுடன் நிற்கும் வாயில், கோட்டத்திற்கு வெளியே சிறு சுனை.

      சுனையினைச் சூழ்ந்து, அடர்ந்த இருண்டு நிற்கும் காட்டு வேங்கை மரங்கள். மிகப் பழமையோடு கூடியதும், பலி பீடத்துடன் உள்ளதுமாகிய மூன்றாவது கோயிலின் அருகினில் சென்றார்.
      உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில், ஒரே கல்லில், இரண்டு கைகளுடன், இடது காலை பீடத்தில் மடக்கி, வலதுகாலை ஊன்றிய நிலையில், ஒரு பெண்ணின் சிலை. அப்பெண்ணின் தலையில் கிரீடம் இல்லை. விரிந்த கூந்தல். இடதுபுற மார்பு சிறிதாக இருந்தது.

      பல நூற்றாண்டுகளாக, இச்சிலை வழிபாட்டிற்கு உரியதாக இருந்துள்ளது என்பதனை, சிலையில் இருந்த வழவழப்பான தேய்வு புலப்படுத்தியது. இவ்வாறாக பதினேழு ஆண்டு கால அயரா உழைப்பிற்குப் பின், தேடலுக்குப் பின், பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கண்ணகி சிலையினையும், கண்ணகி கோயிலையும் கண்டு பிடித்தார்.

கோவை நன்னெறிக் கழகத்தின் சார்பில், 21.3.1965 அன்று சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், முதல் முதலில் கண்ணகி சிலையினைக் கண்டு பிடித்தது பற்றிய செய்தியை உலகிற்குத் தெரியப் படுத்தினார்.
     
        அன்றைய தமிழக முதல்வர் அவர்கள், இளங்கோவடிகள் சிலைத்திறப்பு விழாவின்போது, பேராசிரியர் சி.கோவிந்தராசனாரின் கண்டுபிடிப்பு பற்றி, தமிழ் உலகிற்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

தகவல் : விக்கிப்பீடியா