Tuesday, June 30, 2020

பரிமேலழகருரை

திருக்குறள் பரிமேலழகருரை:


பண்டே திருக்குறளுக்குப் பதின்மர் உரைகண்டுள்ளனர். அவர்கள்,

"தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர் - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்கு எல்லையுரை செய்தார் இவர்." ஆவர்.

இப்பதின்மருள் ஐவருரைகள் மட்டுமே கிடைத்து வெளிவந்துள்ளன. இவற்றுள் காலத்தால் முந்தியது, பத்தாம் நூற்றாண்டிலெழுந்த மணக்குடவருரையாகும். காலத்தால் பிந்தியது, பதின்மூன்றாம் நூற்றாண்டிற்றோன்றிய பரிமேலழகருரையாகும். இது, 1847ஆம் ஆண்டு முதன்முதலில் அச்சேறி வெளியானது. {கீழே இணைக்கப்பட்டுள்ள படம் 1885ல் பதிப்பிக்கப்பெற்ற உரைநூலின் ஒருபக்கம் }

மணக்குடவருரையின் அறத்துப்பாலை மட்டும், 1917ஆம் ஆண்டு ஐயா வ.உ.சிதம்பரனார் வெளியிட்டார். பிறகு, 1925ஆம் ஆண்டு மணக்குடவருரையை முழுவதும் ஐயா கா.பொன்னுசாமி என்பவர் பதிப்பித்தார். ஆனால், பிந்திய பரிமேலழகருரையே மக்களிடம் மிகுந்து பரவியது. இவர்தம்முறையில் வைதீகக்கருத்துகளை புகுத்தியிருந்தாரென்றும், மணக்குடவர் தம்முரையில் வடமொழிக்கருத்துகளைக் கூறாது, தமிழ்ச்சார்பாகவே எழுதிஇருப்பாரென்றும் இவ்வுரைநூல்கள்வல்ல தமிழறிஞர்கள் கருதுவர். மணக்குடவருரையையே சிறந்ததென்பர். இவ்வரலாறுகள் நிற்க.

************

ஈண்டு, 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய பரிமேலழகருரையின் முதற்குறளை பதிந்துள்ளேன். இது 715 பக்கங்களைக்கொண்ட திருக்குறளுரைநூல். இவ்வுரையைத் திக்கித்திணறாமல் நம்மால் படிக்கவியலுகிறதாவென்று காண்க. தவறின்றி படித்துப்பொருளுணர்ந்துகொள்ளவே மிகவுஞ்சிக்கல். தமிழாசிரியர்களுக்கே இது கடினமெனவெண்ணுகிறேன். அவர்களுக்கே கடினமெனின் தமிழ்படிக்காத இவ்வறிவிலியேனின் நிலையென்ன? நீங்களும் இதைத் தங்குதடையின்றி தவறின்றிபடித்துப்பொருளுணர முயலுங்கள். தமிழில் எழுதியிருப்பதையே நம்மால் படித்து விளக்கிக்கொள்ளமுடியவில்லையே. இவ்வுரைநூலுக்கே உரைநூல்கேட்டு, அவ்வுரைநூலுக்கும் மூன்றாமெளியவுரைநூல் கேட்குமளவிற்கு அறிவிலிகளாயுள்ளோம். ஆனால், தமிழர்களென்று வாய்கிழியக்கூறி வெற்றுப்பெருமை பேசிக்கொள்கிறோம். இவ்விழிநிலைக்குக்காரணம் நம்மிடை பழநூல்கள் ஓதும்பழக்கம் மறைந்து இலக்கணங்கல்லாமையேயாகும். இலக்கணமும் மறந்தோம், எழுத்துப்புணர்ச்சியை அறவே விடுத்தோம். பிரித்துப்பிரித்தெழுதி புணர்ச்சியிலக்கணந்தவறினோம். மொழியுஞ்சிதைந்தழகுங்கெட்டது.



இலக்கணங்கற்போம் பழநூல்களோதுவோம் மொழியின்தொல்வழக்கங்காப்போம்.

வாழ்க தொல்லிலக்கணப்பழந்தமிழ்

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment