தமிழரின் தன்னிகரற்ற விருந்தோம்பும் பண்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு இளையான்குடிமாறனாரும் அவர்தம் இல்லாளும்🙏
(இக்கதையில் இறைவன், சிவனடியார் என்னும் சமயநோக்குள்ள கதைமாந்தர்களை விடுத்து, இக்கதை கூறும் தமிழர்தம் விருந்தோம்பலின் பெருமையை மட்டும் பகுத்துணர்க. நன்றி)
இளையான்குடி என்னும் சிற்றூரில் மாறனார் என்ற வேளாண் சிவனடியார் தன் மனைவியோடு, 'இல்லறமல்லது நல்லறமன்று’ என்ற முதுமொழிக்கேற்ப வாழ்ந்து வந்தனர். தன்னைத் தேடிவரும் சிவனடியார் யாராக இருந்தாலும் அவர்களை அன்போடு அழைத்து விருந்தோம்புவர். இவர்களுடைய மேன்மையை உலகுக்கு அறிவிக்க எண்ணம் கொண்டார் தில்லையெம்பெருமான். குன்றுபோலிருந்த செல்வடத்தைக் குன்றிமணியாக்கினார்.
"இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான் குடி
மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும்
தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின்
முன்னை மாறில் திருப்பணிக் கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார்"
--- (திருத்தொண்டர் மாக்கதை - 446)
பணம் போனால் என்ன? மனம் போகவில்லையே! தனம் சுருங்கியது. மனம் சுருங்கவில்லை. எந்தெந்தப் பொருட்களை விற்க முடியுமோ அதை விற்கிறார்கள். அடகு வைக்க முடிந்ததை அடகு வைக்கிறார்கள் தன்னையே அடகு வைக்கவும் தயங்கவில்லை.
இவர்களை மேலும் சோதிக்க எண்ணுகிறார் ஈசன். இறைவன் நற்றவர் வேடம் பூண்டு கொண்டு நடு இரவில் வருகிறார். நல்ல மழையில் இரவு நேரத்தில் இளையான்குடி மாறனின் கதவைத் தட்டுகிறார். கதவைத் திறக்கிறார் மாறனார். வந்த விருந்தினரை ஈரம் போகத் துடைத்து விட்டு மாற்றுடை கொடுத்து, மனைவியிடம், ”இவரின் அரும்பசியைத் தீர்க்க என்ன செய்யலாம்?” என்று கேட்கிறார்.
வீட்டிலே உணவில்லை என்பது அவருக்கும் தெரியும். என்றாலும் மனைவி யிடம் யோசனை கேட்கிறார். நேரமோ இருட்டி விட்டது. மழையும் பெய் கிறது. வீட்டிலும் ஒன்றுமில்லை. அண்டை வீட்டுக் காரகளிடம் இனியும் கடன் கேட்க முடியாது. ஏற்கனவே நிறையக் கடன் வாங்கியாகி விட்டது என்ன செய்யலாம்? சட்டென்று ஒரு வழி கண்டு பிடித்து விடுகிறாள். இந்தச் சிக்கல்தீரவேண்டுமானால் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. "இன்று காலை விதைத்த நெல் இந்நேரம் மழையில் மிதந்து கொண்டிருக்கும் நீங்கள் சென்று அதை அரித்து வாரிக்கொண்டு வந்தால் அதை என்னால் முடிந்த அளவு பக்குவப் படுத்தி சமைத்துத் தருகிறேன். இதைத் தவிர வேறு வழி ஒன்றும் தெரியவில்லை" என்கிறாள்.
’செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்நெல்
மல்லல் நீர்முளை வாரிக்கொடு வந்தால்
வல்லவாறு அமுதாக்கலும் ஆகும் மற்(று)
அல்லது ஒன்றறியேன் என்று அயர்வுற".
-- (திருத்தொண்டர் மாக்கதை - 452)
என்கிறாள். இதைக் கேட்ட மாறனார், மனைவியின் நல்ல யோசனையை ஏற்றுக் கொண்டு வயலுக்குச் செல்லப் புறப்படுகிறார். மழை வேறு. இருள் வேறு, மாறனார் ஒரு கூடையைத் தன் தலையில் கவிழ்த்துக் கொண்டு செல்கிறார். மெது வாகக் காலால் தடவித் தடவிச் சென்று கைகளால் அந்த விதைகளை அரித்து எடுத்துக் கூடையில் போட்டுச் சுமந்து கொண்டு விரைந்து வருகிறார்.
"வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கிச்
சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி
வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர்
அந்தமில் மனையில் நீடும் அலகினை அறுத்து வீழ்த்தார்"
-- (திருத்தொண்டர் மாக்கதை - 458)
வந்தவரை வாயிலில் எதிர் கொண்ட அவர் மனைவி அவ்விதைகளை வாங்கி அதிலிருந்த சேறு சகதிகளையெல்லாம் போகும்படி நன்கு கழுவி எடுக்கிறாள் நெல் வந்து விட்டது. அதைச் சமைக்க விறகு வேண்டுமே! தயங்கிய படியே மாறனாரிடம் சொல்கிறாள்.
மாறனார் சிறிதும் தாமதிக்காமல் #வீட்டின்_கூரையிலிருந்த_வரிச்சுகளை_வாளால்_வெட்டி_எடுக்கிறார். (வரிச்சு - புற்களால் வேய்ந்த கூரை) அதைக் கொண்டு ஒருவாறு அடுப்பைப் பற்றவைத்துப் பின் ஈரநெல்லை வறுக்கிறாள். அதை அரிசியாக்கி உலையில் போட்டு சோறாக்கு கிறாள். சரி, உணவு தயாராகி விடும். வந்த விருந்தினருக்கு வெறும் சோற்றை மட்டும் எப்படிக் கொடுப்பது? யோசிக்கிறாள். மறுபடியும் கணவரிடம் போய் காய்கறி ஒன்றும் இல்லையே, என்ன செய்யலாம்? என்று இருவரும் சேர்ந்து யோசிக்கிறார்கள்
’வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே
அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று
குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப்
பழி முதல் பறிப்பார் போலப் பறித்து அவை கறிக்கு நல்க
-- (திருத்தொண்டர் மாக்கதை - 460)
வந்த விருந்தினர் வழி நடந்த களைப்பால் மிகவும் களைத்திருப்பார். அவருக்கு வெறும் சோறு மட்டும் கொடுத்தால் போதாது என்று நினைக்கின்றனர்.
அதை வாங்கிக் கொண்ட மாறனார் மனைவி அக்கீரையை நன்குகழுவி விதவிதமாகச் சமைக்கிறாள். பின் மாறனாரிடம் சென்று, ‘நம் இல்லத்திற்கு எழுந்தருளி யிருக்கும் ஈடு இணையற்ற சிவனடியாரை அழைத்து வாருங்கள் அவருக்கு விருந்து படைப்போம்” என்கிறாள். நடந்து வந்த களைப்பினால் உறங்கிக் கொண்டிருந்த அடியவரிடம் சென்று, ”அடியனேன் உய்ய என்பால் எழுந்தருளிய பெரியோய்! அமுது செய்யுங்கள்” என்று அழைக்கிறார். அடியவர் மறைந்து விடுகிறார். சோதி தோன்றுகிறது.மாறனாரும் அவர் மனைவியும் திகைத்து நிற்கிறார்கள்.
இறைவன் இளையான்குடிமாறனாரை நோக்கி
”அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும்
என் பெரும் உலகம் எய்தி இருநிதிக் கிழவன் தானே
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப
இன்பம் ஆர்ந்து இருப்பீ ராமென் றருள் செய்தான் எவர்க்கு மிக்கான்"
--- (திருத்தொண்டர் மாக்கதை - 465)
என்று வரமளிக்கிறார்.
உதவி : சேக்கிழாரருளிய திருத்தொண்டர் மாக்கதை
நன்றி வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்