Friday, June 26, 2020

ஆய்தம் என்ற முப்பாற்புள்ளி

நம் கண்முன்னே வழக்கொழிந்த ஓரெழுத்து "ஃ".

இஃதை,

௧) ஆய்தம்
௨) முப்பாற்புள்ளி
௩) முப்புள்ளி
௪) அஃகான்
௫) அஃகேனம்
௬) தனிநிலை
௭) ஒற்று
என்றும் அழைப்பர்.



இஃது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

எ.கா: அஃது, இஃது, பஃறி, எஃகு, அஃறிணை, வெஃகாமை

௧) சொல் ஒலியை நுண்மையாக்கி அதாவது மென்மையாக்கிக் காட்டுவதால் ஆய்தம்

(ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்.
 - தொல்காப்பியம்-உரியியல். - மேற்சொன்னதற்கு இலக்கணம்.)

௨) மூன்று புள்ளிகளால் குறிக்கப்படுவதால் முப்பாற்புள்ளி மற்றும் முப்புள்ளி

௩) கான் என்னும் எழுத்துச்சாரியை பெற்று அஃகான்

௪) உயிரெழுத்துமல்லாமல் மெய்யெழுத்துமல்லாமல் உயிர்மெய்யெழுத்துமல்லாமல் தனியாக நிற்பதால் தனிநிலை

(ஒலிப்பு மாத்திரையளவில் சிலவிடங்களில் அரைமாத்திரையாகவும் சிலவிடங்களில் ஒரு மாத்திரையாகவும் ஒலிக்கும். ஆகையால், தமிழெழுத்து நெடுங்கணக்கில் உயிரெழுத்திற்கும் மெய்யெழுத்திற்கும் இடையில் பொதுவாய் வைக்கப்பட்டிருக்கும்)

௫) ஒற்றாகவும் கொள்வதால் ஒற்று

௬) நன்னூல் இஃதை அஃகேனம் என்று குறிக்கிறது.

முப்பாற்புள்ளியாம் (ஃ) இவ்வெழுத்து வழக்கொழிந்தாற்போல் ஐ மற்றும் ஔ ஆகியவற்றை ஒழிக்க, பலரும் ஐயை #அய் என்றும் ஔவை அவ் என்றும் எழுதி தமிழின் எழுத்துகளை சீர்குலைக்கப்பார்க்கின்றனர். தமிழர்களே மயங்காதீர். அஃகானை மீண்டும் புழங்குவோம். ஐயையும் ஔவையும் சரியாக எழுதுவோம்.



************************************************
உதவி : இணையம்
தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment