தமிழரின் பிறன்மனைநோக்கா அறத்திறத்திற்கு ஓர் சான்று:
நூல் : திருக்கோவையார்
இயற்றியவர் : மணிமொழியார் (மணிவாசகர்)
தலைப்பு : உடன்போக்கு
பாட்டு : ௫௧ ஆம் பாட்டு
புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்
மீண்டா ரெனஉவந் தேன்கண்டு
நும்மையிம் மேதகவே
பூண்டா ரிருவர்முன் போயின
ரேபுலி யூரெனைநின்
றாண்டான் அருவரை ஆளியன்
னானைக்கண் டேனயலே
தூண்டா விளக்கனை யாயென்னை
யோஅன்னை சொல்லியதே.
கொளு:
புணர்ந்து டன்வரும் புரவலன் ஒருபால்அணங்கமர் கோதையை ஆராய்ந்தது.
*******************************
உரை:
நும்மைக்கண்டு என்னால் தேடப்படுகின்றவர்கள் மீண்டாரென்றுகருதி மகிழ்ந்தேன். இவ்வாறு நும்மோடொத்த மேதகவையுடைத்தாகிய இவ்வொழுக் கத்தையே பூண்டார் இருவர் முன்னே போயினரோ? உரைமின் என்று கேட்க,புலியூர்க்கண் ஒரு பொருளாக மதித்து என்னை நின்றாண்டவனது கிட்டுதற்கரிய மலையில் ஆளியை யொப்பானை யான் கண்டேன். தூண்ட வேண்டாத விளக்கையொப்பாய், அவனதயல் அன்னைசொல்லியதி யாது? அதனையவட்குச் சொல்லுவாயாக.
*******************************
மேற்கண்ட உரையை விளக்கிக்கொள்ளவே நமக்கு மற்றோருரை வேண்டியநிலையில் அறிவிலிகளாய் நாமுளோம். ஆகையால், அடியேனின் சிற்றறிவிற்கெட்டிய சிறுவிளக்கம் தருகிறேன்.
பாட்டின் பின்னணி:
தலைவனும் தலைவியும் உடன்போக்கு(ஓடிப்போதல்) நிகழ்த்திவிட்டனர். தலைவியின் செவிலித்தாய் அவர்களைத்தேடி பாலைநிலத்திற்கு செல்கிறாள். வழியில் எதிர்ப்படுவோரையெல்லாம், இவ்வழியில் யாராவது இருவரை கண்டீர்களா என்று கேட்கிறாள். புறா, குறவு, முக்கோல்பகவர்(துறவியர்), பிறகு தன்மகளைப்போன்றே உடன்போக்கு நிகழ்த்தி புணர்ந்துவிட்டு வேறொரு தலைவனும் தலைவியும் எதிரேவருகின்றனர் அவர்களையணுகி கேட்கிறாள் செவிலித்தாய்.பாட்டின் பொருள்:
உங்களைக்கண்டு, நான் தேடுகின்ற உடன்போக்கு நிகழ்த்திய என்மகள்தான் மீண்டு வந்துவிட்டாளென்று மகிழ்ந்தேன். உங்களைப்போலவே காதற்கொண்டு உடன்போக்கு நிகழ்த்திய யாராவது இருவரை முன்னே கண்டீர்களா சொல்லுங்கள் என்று செவிலித்தாய் கேட்கிறாள்.அதற்கு தலைவன் சொல்கிறான்,
மலையில் வாழுகின்ற அரிமாவைப்போல் (சிங்கம்) இருந்த ஒருவனை யான் கண்டேன்.
"அவனின் அருகில் யாரோ ஒருவர் இருந்ததாக இந்த அன்னை சொல்கிறாளே, அது யாரென்று இச்செவிலித்தாய்க்கு சொல்வாயாக" என்று தன் தலைவியைப்பார்த்து சொல்கிறான்.
*******************************
இப்போது விளங்கியதா, தமிழரின் பிறன்மனைநோக்காத்திறமாகிய அறப்பண்பு.
எதிரே ஒரு ஆணும் பெண்ணும் வந்திருக்கின்றனர். ஆனாலும், இவன் அந்த ஆண்மகனை மட்டும் ஏறிட்டு நோக்கி இருக்கிறான். அவனின் அருகிலிருந்த அவனின் காதலியை பார்க்கவேயில்லை. ஏனெனில், தமிழர் பிறனில்விழையா அறப்பண்புகொண்டோர். தம் தலைவியைத்தவிர பிறரின் இல்லாட்களை நோக்காதவர்கள். இவ்வொருபண்பு போதுமே நம்தமிழர் எத்தகைய அறமுடையோரென்று உணர. சங்கவிலக்கியங்களில் இதைப்போல் பலவிடங்களில் பிறனில்விழையா அறப்பண்பு விளக்கப்பட்டிருக்கும் என்று தமிழைக்கற்றறிந்தார் கூறுவர்.
உதவி : மணிவாசகரின் திருக்கோவையார் நூல். இதை வெறும் அன்பிலக்கியம் (பக்தி இலக்கியம்) என்று தமிழறிஞர்கள் ஒதுக்குதல் முறையோ?
நன்றி, வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment