Sunday, June 7, 2020

கதிரவனுக்குச் சென்றார்களோ தமிழர்!!!

தமிழர் கதிரவனுக்குச் சென்றுவந்தார்களோ?


இப்புறநானூற்றுப்பாடல் நமக்கு பெருவியப்பை ஏற்படுத்துகிறது. சூரியனுக்குச் சென்று அதன் விவரங்களையும் கூறுவாறும் உளர். ஆனால், நின்(நலங்கிள்ளி) புகழளவை பாடமுடியாதவர்கள் புலவர்கள், என்று குறிப்பிடுகிறார் சாத்தனார். ஞாயிறு என்பது சென்றுவரக்கூடிய இடமா என்ன? ஒருவேளை இது மிகுதியாக ஏற்றிக்கூறப்பட்டதாகவிருந்தாலும் சூரியனில் இருக்கும் மண்டலங்கள் அது தாங்கும் சுமை, காற்று திரியும் திசை என்றெல்லாம் கூறுகிறார்களென்றால் தமிழர்கள் எந்த தொழில்நுட்ப விண்வெளி ஆய்வகத்தில் இதை ஆய்ந்தார்கள்? அடியேனுக்கு பெருவியப்பும் மாசிலிர்ப்புமாயுள்ளது.



பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை : பாடாண்.
துறை : இயன்மொழி.
சிறப்பு : தலைவனின் இயல்பு கூறுதல்.

செஞ்ஞா யிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றிவை

சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்,
களிறுகவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட

யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு
மீப்பாய் களையாது, மிசைப் பரந் தோண்டாது,
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!

#உரை:

ஞாயிறு செல்லும் பாதையையும், அந்த ஞாயிறு தாங்கிக்கொண்டிருக்கும் சுமைகளையும், அந்தச் சுமைக்குள் சூழ்ந்திருக்கும் உருண்டை மண்டலங்களையும், காற்று திரியும் திசையையும், ஒன்றுமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் ஆகாயத்தையும் தாமே நேரில் சென்று அளந்து அறிந்தவர் போல இனைத்து என்று அளவு கூறுவாரும் உளர். அவர்களாலும் அளவிட்டுக் கூறமுடியாத அடக்கம் கொண்டவன் நீ. எறிகல் = விளாம்பழம் யானை வாயில் பட்ட விளாம்பழம் போலச் செரிக்கும் வலிமையை மறைத்துக்கொண்டிருப்பவன் நீ. இப்படிப்பட்ட உன்னைப் புலவர் எப்படிப் பாடமுடியும்? கூம்பின் பாய்மரத்தைத் தொய்ய விடாமல் புகார் நகரத்தில் புகுந்த பெருங்கலத்தை (பெருங்கப்பலை)த் தடுத்து நிறுத்தி அதிலுள்ள பண்டங்களை உள்நாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுவந்து கொடுக்கும் கடல்பஃறாரம் (கடல்படு செல்வம்) நிறைந்த நாட்டுக்கு உரியவன் நீ.

உதவி : புறநானூறு நூல்

நன்றி. வணக்கம்

  • தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment