Friday, May 15, 2020

கோழியூர் - உறையூர்

கோழி - கோழியூர் - உறந்தை - உறையூர்


கரிகால் அமைத்த உறையூரின் பண்டைப்பெயர் "கோழி" என்னும் சான்றுகள்.



"முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்"

- சிலம்பு (புகார்க்காண்டம், நாடுகாண் காதை)




பொருள்:
முறம்போலுஞ் செவியினையுடைய யானையை முன்னர்ச் சமரிடத்துக் கெடுத்த, புறத்தே சிறகினையுடைய கோழி என்னும் நகரின்கண் விரும்பிப் புக்கார் என்க.
(கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளோடு, மதுரையை நோக்கிச் செல்கையில் உறையூரையடைந்ததை இளங்கோவடிகள் எழுதியது). புறஞ்சிறை வாரணம் - கோழி.

*************

"குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது
சோழ நன்னாட்டுப் படினே, #கோழி
உயர் நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ,"

- புறநானூறு - 67ஆம் பாட்டு 6 முதல் 9 வரை அடிகள்.


பொருள் : அன்னச்சேவலே, நீ குமரித்துறை அயிரை மீனை உண்டபின்னர் வடமலையை (திருப்பதி) நோக்கிச் செல்வாயாயின் இடையில் கோழி (உறையூர்) நகர் மாடத்தில் தங்கி இளைப்பாறுக.

************

பின்னாளில், தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், உறையூரை மூக்கீச்சரம் என்னும் பெயரில் பாடியுள்ளார். அதில், அவ்வூரை கோழி என்று இரண்டு பாடல்களில் குறிப்பிடுகிறார்.

"தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்" - 4ஆம் பாட்டு

"வடமன்நீடு புகழ்ப்பூழி யன்றென்ன வன்கோழிமன்" - 5ஆம் பாட்டு.

*************

முற்காலத்து ஓர் கோழி கரிகாலின் யானையொடு போரிட்டு வென்ற நகர்க்குக் கோழி என்பது பெயராயிற்று. அந்நகர் காணும்பொழுது சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால் புறஞ்சிறை வாரணம் எனப்பட்டது என்பர் அரும்பதவுரையாசிரியர். இக்காரணக்கதை பொருநராற்றுப்படையிலும், பட்டினப்பாலையிலும் கூறப்படவில்லை.

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

உதவி :

1. சிலப்பதிகாரம் நூல்
2. புறநானூறு நூல்
3. தேவாரம் - இரண்டாம் திருமுறை

படம் : உறையூர் ஐவண்ணத்தப்பர் கோயிற் கருவறையின் வலப்புறவெளிச்சுவற்றிலுள்ள சிற்பம். யானையைக் கோழி கொத்துவதுபோன்றது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

புறநானூறு - பாடல் 192

யாதும் ஊரே யாவரும் கேளிர்


இச்சொற்றொடர் எங்கிருந்து வந்தது? யாரால் பேசப்பட்டது அல்லது பாடப்பட்டது? இதற்கு விடை புறநானூற்றில் 192 ஆம் பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்பாடலை இயற்றியவர் கணியன் பூங்குன்றனார் என்ற புலவர் ஆவார். முற்காலத்தில் பூங்குன்றம் என்று அழைக்கப்பட்டு, தற்காலத்தில் மகிபாலன்பட்டி எனப்படும் ஊரே இவர் பிறந்த ஊர் ஆகும். இவ்வூர் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் இவ்வூரில் பிறந்து, புகழுடன் வாழ்ந்த இன்னொரு தமிழ் மேதை பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் ஆவார்.

பூங்குன்றனார் துன்பம் வந்தபோதும், துயர் வந்த போதும் அயராத உள்ளமும், கலங்காத அமைதியும் கொண்டவர். தனக்கு நல்லது செய்தாரென ஒருவரைப் பாராட்டவும், கெடுதல் செய்தாரென ஒருவரை இகழவும் செய்யாதவர். அதுபோல, பெரியோர், வசதியானவர் என ஒருவரைப் புகழவும், சிறியோர், வசதியற்றவர் என அவரைப் புறக்கணிக்கவும் செய்யமாட்டார். எல்லா மனிதரும் அவரவர் செய்த வினைக்கேற்ப இன்ப துன்பமும், உயர்வு தாழ்வும், செல்வமும் வறுமையும் அடைவார்கள் என்பதை தாம் அறிந்த நூல்களாலும், நடைமுறை வாழ்க்கையாலும் நன்கு தெரிந்தவர்.

அதனால், நல்லிசைப் புலமை மிக்க கணியன் பூங்குன்றனார் எத்தகைய வேந்தரையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடியதில்லை. இதனை அறிந்த அக்காலச் சான்றோர் வியந்து, அவரிடம் வந்து “பாடுபெறு சான்றோராகிய நீவிர் எவரையும் பாடாததற்கு என்ன காரணம்?” என்று கேட்டனர். அதற்குப் பதிலாக, இவர் கூறிய பாடலைப் பார்ப்போம்.



யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

                       - கணியன் பூங்குன்றனார்

பதவுரை: 


யாதும் ஊர் – எல்லா ஊரும் எனக்கு ஊர்

யாவரும் கேளிர் – எல்லா ஊரிலுமுள்ள மக்கள் அனைவருமே எனக்கு உறவினர்தான்

தீதும் நன்றும் பிறர் தர வாரா – நமக்கு நேரும் தீமையும், நன்மையும் வேறு யாரும் தந்து வருவதில்லை

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன – நம் உடலிலும் உள்ளத்திலும் உண்டாகும் வேதனைகளும், அவற்றைப் போக்க நாம் செய்யும் செயல்களும் அத்தன்மைத்ததே, நம் செயல்களினால் ஏற்படும் விளைவுகளே

சாதலும் புதுவது அன்று – இவ்வுலகில் பிறந்தவர் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை, இறப்பதும் ஒன்றும் புதிதல்ல

வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலம் – வாழ்க்கை வாழ்வது மிக இனிதென்று நான் ஆனந்தம் மிக அடைந்ததுவுமல்லை

முனிவின் இன்னாது என்றலும் இலம் – வாழ்க்கை வெறுத்து இவ்வாழ்க்கை வேண்டேன் என்று ஒதுங்கியதுமில்லை

மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது - மின்னலுடன் கூடிய மேகம் குளிர்ந்த மழைத் துளிகளை பெய்ததுடன் நில்லாது

கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று – அங்கங்கே வழியில் இருக்கும் கற்களில் மோதி ஒலி எழுப்பி ஓடும் பெரிய ஆற்றில்

நீர் வழிப்படூஉம் புணை போல் – நீரின் வழியே இழுத்துச் செல்லப்படும் மிதவை போல

ஆர் உயிர் முறை வழிப்படூஉம் என்பது – அருமை பெருமையான நம் உயிர் போக வேண்டிய நேரம் வந்தால் போய்ச் சேரும் என்று

திறவோர் காட்சியின் தெளிந்தனம் – நல்ல நீதிநெறி அறிந்தோர் சொல்லிய நூல்களால் அறிந்து தெளிவுடன் இருக்கிறேன்

ஆகலின் - அதனால்

மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலம் – தங்கள் குணநலன்களால் பேறு பெற்ற பெரியோர்களைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட மாட்டேன்

சிறியோரை இகழ்தல் அதனினும் இலம் -.அதைவிட, குணநலன் இல்லாத மதியற்றோரை ஏளனமாக எண்ணி இகழவும் மாட்டேன்.

பொருளுரை: 


அன்புசால் சான்றோர்களே!

நமக்கு நேரும் தீமையும், நன்மையும் வேறு யாரும் தந்து வருவதில்லை. நம் உடலிலும் உள்ளத்திலும் உண்டாகும் வேதனைகளும், அவற்றைப் போக்க நாம் செய்யும் செயல்களும் அத்தன்மைத்ததே, நம் செயல்களினால் ஏற்படும் விளைவுகளே.

இவ்வுலகில் பிறந்தவர் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை, இறப்பதுவும் ஒன்றும் புதிதல்ல. வாழ்க்கை வாழ்வது மிக இனிதென்று நான் ஆனந்தம் மிக அடைந்ததுவுமல்ல. வாழ்க்கை வெறுத்து இவ்வாழ்க்கை வேண்டேன் என்று ஒதுங்கியதுமில்லை.

மின்னலுடன் கூடிய மேகம் குளிர்ந்த மழைத்துளிகளை பெய்ததுடன் நில்லாது, மழை நீரானது அங்கங்கே வழியில் இருக்கும் கற்களில் மோதி ஒலி எழுப்பி ஓடும் பெரிய ஆற்றில் நீரின் வழியே இழுத்துச் செல்லப்படும் மிதவை போல, அருமை பெருமையான நம் உயிர் போக வேண்டிய நேரம் வந்தால் போய்ச் சேரும் என்று நல்ல நீதிநெறி அறிந்தோர் சொல்லிய நூல்களால் அறிந்து தெளிவுடன் இருக்கிறேன்.

அதனால், தங்கள் குணநலன்களால் பேறு பெற்ற பெரியோர்களை, வசதியானவர்களைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டு புகழவும் மாட்டேன். அதைவிட, குணநலன் இல்லாத மதியற்றோரை, வசதியற்ற எளியவர்களை ஏளனமாக எண்ணி இகழவும் மாட்டேன். எனவே, எல்லா ஊரும் எனக்கு ஊர். எல்லா ஊரிலுமுள்ள மக்கள் அனைவருமே எனக்கு உறவினர்தான்.

நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

Sunday, May 10, 2020

கரிகாற்வளவனின் பெயர்கள் இடம்பெற்ற இலக்கிய வரிகள் சில

கரிகாற்வளவனின் பெயர்கள் :




"வென்வேல் உருவப்பஃறேர் இளையோன் சிறுவன்"
"கண்ணார் கண்ணி கரிகால் வளவன்".
"காவிரி புரக்கும் நாடு கிழவோன்".

                                   - பொருநராற்றுப்படை.


"அரிமா அன்ன அணங்குடைத் துப்பின் திருமாவளவன்".

                                   - பட்டினப்பாலை.


"இருநில மருங்கின் பொருநரைபெறா அச்
செரு வெங் காதலின் திருமாவளவன்".

                                          - சிலப்பதிகாரம்.


"வெறுவரு தானையொடு வேண்டுபுலத்து இறுத்த
பெருவளக் கரிகால்".
"காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால்".
"கழா அர் முன்றுறை கலிகொள் சுற்றமொடு கரிகால்".           

                                                    - பரணர்.

"வளவ.!!! "

           - கருங்குழலாதனார்.


"நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக !!
களி அயல் யானைக் கரிகால் வளவ !! "

                               - வெண்ணிக்குயத்தியார்


மேற்கண்டவை, கரிகாற்பெருவளத்தானின் பெயர்கள் பயின்றுவரும் சில இலக்கிய வரிகள்.

நன்றி. வணக்கம்
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

தமிழிசை அடிப்படைக் குறிப்புகள்

தமிழிசைத்துளி :


தற்காலத்துத்தமிழர் நாம் இயற்றமிழை ஓரளவு காத்தோம். இசைத்தமிழை மறந்தேபோனோம். தமிழிசைப்பாட்டைக்கற்று வருந்தலைமுறைக்கு கற்பித்தல் நங்கடமையே. அதைமுயல்வோம். அதற்கு தமிழிசைப்பற்றியறிதல் இன்றியமையாமையாகும். அங்ஙனம் இசைகற்க விருப்பிலாரும், குறைந்தவளவு தமிழிசைப்பற்றி அறிந்துகொள்ளல்வேண்டும். ஆரியர்கள் நம் தமிழிசையைக் களவாண்டு கருநாடக இசை என்று பெயரிட்டனர்.


இசை:

பாடுபவனின் அல்லது கருவிகள் மூலம் ஒலி இயக்குபவனின் கருத்தும் ஓசையும் கேட்பவனின் செவியில் விழுந்து மனதில் புகுந்து, எண்ணத்தில் கலந்து உள்ளத்தை அந்த கருத்தோசையோடு இசைவிக்கச் செய்வதால் இசை எனப்பட்டது.

இசையாவது கீழுள்ள வகையாகும்:

௧) மிடற்றிசை - குரலிசை
௨) நரம்புக்கருவியிசை - யாழிசை
௩) காற்றுக்கருவியிசை - குழலிசை
௪) தாளயிசை - பறையிசை

பண்: (இராகம்):

நல்லவண்ணம் பண்படுத்தி, செவிக்கு இனிய ஓசையைச் செய்த(பண்ணிய)தால் இன்னிசை பண் எனும் பொதுப்பெயரால் வழங்கப்பட்டது. ஆரியர் இதை (இ)ராகம் என மாற்றிக்கொண்டனர்.

"குரலே துத்தம் கைக்கிளை உழையே இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே" - (திவாகரநிகண்டு)

"வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு
குதிரையும் யானையும்குயிலும்தேனுவும்
ஆடும் என்றிவை ஏழிசை ஓசை" - (பிங்கலநிகண்டு)

விலங்கு மற்றும் பறவை இனங்களின் ஓசைகளைக்கொண்டு ஏழிசையைப்படைத்தனர் பழந்தமிழர். அதைத்திருடி ஆரியர்கள் தமதாக்கிக்கொண்டனர்.

௧) குரல் - சடஜம்
௨) துத்தம் - ரிஷபம்
௩) கைக்கிளை - காந்தாரம்
௪) உழை - மத்திமம்
௫) இளி - பஞ்சமம்
௬) விளரி - தைவதம்
௭) தாரம் - நிஷாதம்

இவற்றைக்குறிக்க கீழுள்ள அலகுகளை வகுத்தனர்.

'ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்ற
ஏழும் ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்'
-- (பிங்கலநிகண்டு)

இயற்றமிழின் உயிர் நெடில் எழுத்துகளாகிய, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகியவை ஏழிசைக்குரிய அலகுகள் என்னும் குறியீடுகளை அமைத்தனர். பின்னர் வசதி, எளிமை கருதி தமிழர்களே ச, ரி, க, ம, ப, த, நி என்ற குறியீட்டு எழுத்துகளை அவற்றிற்கு மாற்றாக வகுத்தனர். இவை சுரங்கள் எனப்பட்டன. சுர் என்ற வேர்ச்சொல்லால் சுரம் என்பது பிறந்தது. அதை ஸ்வரம் என்று மாற்றினர் ஆரியர்.

இவ்வேழ்ச்சுரங்களின் ஏறுநிரல் இறங்குநிரல் - ஆரோசை அமரோசை எனப்பட்டது. அதை ஆரோகணம் அவரோகணம் என்று திரித்தனர்.

இவ்வேழ்ச்சுரங்கள் 12ஆக விரியும்:


1) குரல்
2) மென்துத்தம்
3) வன்துத்தம்
4) மென்கைக்கிளை
5) வன்கைக்கிளை
6) மெல்லுழை
7) வல்லுழை
8 ) இளி
9) மென்விளரி
10) வன்விளரி
11) மென்தாரம்
12) வன்தாரம்



"இசையென்பது நரப்படை வாலுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசைகளும்."
---(சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை)

இச்சுரங்களைக்கொண்டு அமைக்கப்பட்ட பழந்தமிழிசை பண்கள் 103 ஆக இருந்தனவென்பர். அது பின்னர் விரிவடைந்து சிலப்பதிகாரக்காலத்தில் 11991 ஆதிபண்களாக (இராகங்கள்) இருந்தன என்று மேற்கண்ட பாடலால் அறியலாம்.




ஏழ்பெரும்பாலைப்பண்கள் :

௧. செம்பாலை
௨. படுமலைப்பாலை
௩. செவ்வழிப்பாலை
௪. அரும்பாலை
௫. கோடிப்பாலை
௬. விளரிப்பாலை
௭. மேற்செம்பாலை

பழந்தமிழிசைநூல்களுள் சில:

௧. முதுகுருகு - பெருங்குருகு
௨. முதுநாரை - பெருநாரை
௩. இசைநுணுக்கம்
௪. தாளவகையோத்து
௫. இந்திரகாளியம்
௬. பஞ்சமரபு

இசையின் அடிப்படையே இன்னும் மிகுதியாகவுள்ளது. ஆனால், இக்குறிப்புகள் இப்போதைக்கு போதுமென நினைக்கிறேன்.

***********************

உதவிய நூல்கள் :

யாழ்நூல்
தமிழிசையியல்
தமிழிசை இலக்கண மரபு

நன்றி. வணக்கம்
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

உலகத்தமிழிசை மாநாடுகள்

உலகத்தமிழிசை மாநாடுகள்


இருநூறாண்டுகளாகத் தமிழ்நாட்டு இசையரங்குகளில் தமிழரிசைக்கு இடந்தரப்படாமல் வேற்றுமொழிப்பாடல்களே பாடப்பட்டன. அப்போது, 1900 முதல் 1919 வரை "தமிழிசை இயக்கம்" என்னும் பெயரில் தமிழிசைக்கென்று ஒரு இயக்கம் உருவாக்கி, ஏழு தமிழிசை மாநாடுகளை நடத்தினார் ஐயா.ஆபிரகாம் பண்டிதர்.

வாராது வந்த மாமணி ஆபிரகாம் பண்டிதர்



அதற்குப்பிறகு தமிழிசையைப்பற்றி மக்கள் கண்டுகொள்ளவில்லை. அந்நேரத்தில், தில்லையில் 1941ஆம் ஆண்டு, தில்லை சர்.அண்ணாமலையார், சண்முகனார், பெரியார் ஆகியோரின் பெருமுயற்சியால் தமிழிசை மாநாடு நடத்தப்பெற்றது. அம்மாநாட்டில் பெரியார்,

"தமிழனுக்குத் தெரியாத, புரியாதமொழியில் தமிழன் பாட்டைக்கேட்கவேண்டும். இதற்குப்பெயர்தான் கலைவளர்ச்சியாம். அறிஞர்களே, நமக்குப் பாட்டுக்கேட்கக்கூட தெரியாதென்றும், நம்மொழி பாட்டிசைக்கக்கூட பயன்படாதென்று சொன்னால், இவ்விழிசொல் நம் உயிரைப்போயல்லவா கவ்வுகிறதாயிருக்கிறது? என்று மிகவும் வருத்தமாகக் கூறுகிறேன். சுருக்கமாகச்சொன்னால் தமிழன், தான் நுகரும் இசையை தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப்பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதை தமிழர்களுக்கு பயன்படுமாறு பாடு என்கிறேன்" என்று உரையாற்றினர்.

பிறகு, 1942ஆம் ஆண்டு தேவக்கோட்டையில் மீண்டும் தமிழிசை மாநாடு நடத்தப்பட்டது. பலவறிஞர்கள் பங்கேற்றனர்.

அதன்பிறகு, 1943ஆம் ஆண்டு மதராசப்பட்டினத்தில் பெரிய அளவில் தமிழிசை மாநாடு அரங்கேறியது.

******************

இவற்றையெல்லாம் அடிப்படையாகக்கொண்டு தமிழகமெங்கும் தமிழிசை பரவவேண்டுமென்ற எண்ணத்தில், நா.அருணாசலனார் என்பவரால் "பெரியார் தமிழிசை மன்றம்" என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இம்மன்றம், தமிழிசைப்பாணர் ஐயா.புசுபவனம் குப்புசாமி அவர்களின் குரலிசையில் "தமிழிசைப்பாடல்கள் - பகுதி 1 மற்றும் 2 என்னும் இரண்டு பகுதிகளில் 20 தமிழிசைப்பாடல்களை வெளியிட்டுள்ளது. ஐயாவிற்கும், இம்மன்றத்திற்கும், ஒலிப்பதிவு செய்த Vijay Musical's நிறுவனத்திற்கும் அடியேனின் பணிவான நன்றியைத் தெரியவித்துக்கொள்கிறேன். இப்பாடல்கள், புரட்சிக்கவிஞர் பாவேந்தர், உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் முதலானோரால் இயற்றப்பட்டனவாகும்.

*****************

இப்படியெல்லாம் பாடுபட்டு தமிழிசையைக் காக்கும் அறிஞர்களுக்கிடையில் நாமோ பிறமொழிப்பாடல்களைத் தான் இசையரங்குகளில் ஏற்றுகிறோம். நாம் நம் இசையைக்கேட்பது எக்காலம்?


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் உலகத்தமிழிசை மாநாடு, மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் கடந்தவாண்டு 2019ல் திசம்பர் மாதம் 14, 15 ஆகிய நாள்களில் நடைபெற்றது.

*************

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

Saturday, May 9, 2020

முதலாம் பராந்தகன் மதுரையும் ஈழமும் கைப்பற்றல்

மதுரையும் ஈழமுங்கொண்ட கோப்பரகேசரிவர்மன் முதலாம் பராந்தகச்சோழன் : (௯०௭ முதல் ௯௫௩ வரை) - கி.பி. 907 - 953

(ஈழத்தை வெற்றிகொண்ட வரலாற்றுச்சுருக்கம்)


முதலாதித்தசோழனுக்குப்பிறகு அவனின் மகன் முதலாம் பராந்தகசோழன் பரகேசரி என்னும் பட்டங்கொண்டு அரசாளலானான்.



அந்நாளில் பாண்டிநாட்டை மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் ஆண்டுகொண்டிருந்தான். சோழனுக்கும் பாண்டியனுக்கும் தொடர்ந்து பலமுறை போர்மூண்டதாக பலகல்வெட்டுகளால் அறியமுடிகிறது. பராந்தகன் மதுரையை வென்று "மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன்" என்று புகழப்படுகிறான். பராந்தகசோழன் நிகழ்த்திய போரில் இராசசிம்மபாண்டியன் தோல்வியுறவே, இலங்கை மன்னன் ஐந்தாம் காசிபனிடம் உதவிப்படை வேண்டுகிறான். அவனும் சக்கசேனாபதியின் தலைமையில் பெரும்படையை பாண்டியனுக்கு துணையாக அனுப்புகிறான்.

வெள்ளூர் என்ற இடத்தில் இருவருக்கும் போர் நடக்கிறது. பாண்டிப்படையையும் ஈழத்துப்படையையும் பராந்தகசோழன் வெற்றிகொள்கிறான். இராசசிம்மபாண்டியன் இம்முறையும் சோழனிடம் தோல்வியுறுகிறான். இலங்கையிலிருந்து சக்கசேனாபதியின் தலைமையில் வந்த ஈழத்துப்படையில், எஞ்சியிருந்த வீரர்களைக்கொண்டு மீண்டும் சோழனோடு போர்புரிய சக்கசேனாபதி முற்படும்போது ஒருவகை நோயினால் இறந்துவிடுகிறான். இதையறிந்த இலங்கை மன்னன் ஈழத்து எஞ்சியபடையை தன்நாட்டிற்கே அழைத்துக்கொண்டான். இந்த செய்தியை மகாவம்சம் கூறுகிறது. இந்தப்போர் கி.பி.919ல் நடந்திருக்கலாம் என்று கீழைப்பழுவூர், திருப்பாற்கடல் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது.

பாண்டிநாட்டை இழந்த மூன்றாம் இராசசிம்மபாண்டியன் இலங்கைக்குச்சென்று அந்நாட்டரசனாகிய நான்காம் தப்புலனிடம் உதவிபெற இலங்கையில் தங்கியிருந்தான். அவனும் பாண்டியனுக்கு உதவாமல் விருந்தோம்பல் மட்டும் செய்துகொண்டிருக்கிறான். இவன் நமக்கு உதவபோவதில்லை என்பதையுணர்ந்த இராசசிம்மபாண்டியன், தம்முன்னோர்களிடமிருந்து தனக்குக்கிடைத்த சுந்தரமுடியையும் பிற அரசசின்னங்களையும் இலங்கை மன்னன் தப்புலனிடம் அடைக்கலப்பொருளாக வைத்துவிட்டு, தன்தாய் வானவன்மாதேவியின் பிறந்த சேரநாட்டிற்குச்சென்றுவிடுகிறான்.

முதலாம் பராந்தகசோழன் பாண்டிநாடு முழுமையும் வென்று அந்நாட்டின் தலைநகராகிய மதுரையில் முடிசூட்டுவிழா நடத்த முயன்றபோது, பாண்டியர்க்குரிய சுந்தரமுடியும் பிற அரசசின்னங்களும் அங்கு காணப்படவில்லை. அவையெல்லாம் பாண்டிநாட்டைவிட்டுசென்ற இராசசிம்மன் இலங்கையரசனிடம் கொடுத்துள்ளான் என்பதையறிந்த பராந்தகன், அவற்றை வாங்கிவர சிலதூதர்களை இலங்கைக்கு அனுப்புகிறான்.

அப்போது ஈழத்தை ஆண்டுகொண்டிருந்த நான்காம் உதயன் என்பவன் அவற்றை கொடுக்கமறுக்கவே, பராந்தகன் ஈழத்தின் மீது போர்பூண்டு சுந்தரமுடியையும் அரசசின்னங்களையும் மீட்டுவர பெரும்படையொன்றை அனுப்புகிறான்.

அப்போரில் ஈழநாட்டுப்படைத்தலைவன் இறந்துவிடுகிறான், பராந்தகசோழன்படை வெற்றியுறுகிறது. வேறுவழியறியாத  ஈழத்துமன்னன் உதயன், பாண்டியன் கொடுத்துச்சென்ற சுந்தரமுடியையும் அரசசின்னங்களையும் எடுத்துக்கொண்டு ஈழத்தின் அடர்ந்த காடுகளும் மலையும் நிறைந்த தென்கீழ்ப்பகுதியாகிய ரோகண நாட்டிற்குப்போய்விடுகிறான்.

பராந்தகச்சோழன் படைகள் அவற்றைக்கைப்பற்ற முயன்றும் அந்த பகுதிக்கு செல்ல முடியாமல் சோணாட்டிற்கே திரும்புகின்றன. இந்தவரலாற்றை இலங்கையின் மகாவம்ச நூலில் காணலாம். பராந்தகன் ஈழநாட்டை வெற்றிகொண்டும் சுந்தரமுடியைக்  கைப்பற்றும் தன் விருப்பம் அவனுக்கு நிறைவேறவில்லை. பராந்தகன் இந்தப்போரில் ஈழத்தை வெற்றிகொண்டதால் தான் "மதுரையும் ஈழமுங்கொண்ட கோப்பரகேசரிவர்மன்" என்று புகழப்பெறுகிறான். இவனின் 37ஆம் ஆட்சியாண்டிற்குப்பிறகுதான் கல்வெட்டுகளில் இவ்வாறு குறிப்பிடப்பெறுகிறான்.

(பராந்தகச்சோழனின் எண்ணமான சுந்தரமுடியையும் அரசசின்னங்களையும் கைப்பற்றும் விருப்பம், பிற்காலத்தில் இவனுக்குப்பிறகு ஆறாவதாக அரியணை ஏறிய இராசேந்திரசோழனால் நிறைவேற்றப்பட்டது என்பதை அவன் மெய்க்கீர்த்திகளால் அறியலாம்)

முதலாம் பராந்தகன் ஈழத்தை வென்ற வரலாற்றை கலிங்கத்துப்பரணி, குலோத்துங்கசோழனுலா மற்றும் இராசராசசோழனுலா ஆகியவை விளக்குகின்றன.

1.கலிங்கத்துப்பரணி


ஈழ முந்தமிழ்க் கூடலுஞ்சிதைத்
திகல்நடந்ததோர் இசைப ரந்ததும் நரபதியர்

2.குலோத்துங்கசோழனுலா


தாழமுன் சென்று மதுரைத் தமிழ்ப்பதியும்
ஈழமும் கொண்ட இகலாளி எழுபகலில்

3.இராசராசசோழனுலா


ஈழ மெழு நூற்றுக் காதமுஞ் சென்றெறிந்து
வேழந் திரைகொண்டு மீண்டகோன்

இந்த வரலாறு, தி.வை.சதாசிவபண்டாரத்தார் அவர்களால் எழுதப்பெற்று 1949ஆம் ஆண்டில் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட "பிற்காலச்சோழர் வரலாறு" என்னும் நூலிலிருந்து படித்து, அதன் சுருக்கவடிவாக இங்கே பதிவிட்டுள்ளேன்.

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

ஊன்பொதிசோறு (பிரியாணி) - பழந்தமிழர் உணவு

தமிழரின் உணவு ஊன்சோறு (பிரியாணி) சுட்டகறி(தந்தூரி) மற்றும் வேவை(சூப்)


தமிழிலக்கியத்தில் சிறிய ஆய்வுக்கட்டுரை :

ஊன்சோறு என்பது பிறநாட்டாரிடமிருந்து நாம் கற்றுக்கொண்டதல்ல, பழந்தமிழரின் தமிழுணவே. அதை உறுதிசெய்யும் வகையில் தமிழிலக்கியங்களிலுள்ள சான்றுளை ஆய்ந்து பதிவிடுகிறேன். நன்றி.



இவ்வுணவை பழந்தமிழர் பலவாறு அழைத்துள்ளனர்.

௧) ஊன்சோறு
௨) ஊன்றுவையடிசில்
௩) ஊன்பொதிசோறு
௪) புலவு (புலாவ் என்று பின்னர் மருவியது)

இதற்கு இலக்கியகளில் எண்ணிலா சான்றுகள் உள்ளன. அடியேன் சிலவற்றை மட்டும் எடுத்துச் சான்றுகாட்டுகிறேன்.

"மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
 அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்
 பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி"

(புறநானூறு - 113)


மை - காராடு, வெள்ளாடு. விடை - கடா (கெடா) மற்றும் இளங்கோழியையும் குறிக்கும் (விடைக்கோழி - தற்காலவழக்கு) இவற்றின் கறிசோற்றை உண்டதாக சொல்கிறது இப்பாடல்.

"புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த
 மலரா மாலைப் பந்துகண் டன்ன
 ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும்
 செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை"

(புறநானூறு - 33)


"அமிழ்தன மரபின் ஊன்றுவை யடிசில்"

(புறநானூறு - 360)


ஊன்றுவையடிசில் என்றால் ஊனோடு சேர்த்து ஆக்கப்பட்ட அரிசி. அதாவது பிரியானி.

இது புலவின் சிறப்பு வகையாகத் தோன்றுகின்றது.

"விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்
தொடித்தோள் கைத் துடுப்பாக
ஆடுற்ற ஊன்சோறு
நெறி அறிந்த கடிவாலுவன்

- (மதுரைக்காஞ்சி 29-36)


தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களத்தில் பகைவரைக் கொன்று சோறாக்கிய 'கடிவாலுவன்' என இங்குக் குறிப்பிடப்படுகிறான்.

"முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித்
தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு"

(சிலப்பதிகாரம், கால்கோட்காதை)   


"மையூன் தெரிந்த நெய்வெண்புழக்கல்"

(நற்றிணை - 83)


வெண்சோற்றுடன் நெய் கலந்து, இறைச்சியையும் சேர்த்து சமைத்து உண்டனர் என்ற செய்தியை நமக்குச் சொல்கிறது.

இறைச்சி வகைகளுள் உடும்பிறைச்சியைத் தலைசிறந்ததாகத் தமிழர் கொண்டமை, "முழுவுடும்பு, முக்காற்காடை, அரைக்கோழி, காலாடு" என்னும் பழமொழியால் தெரிய வருகின்றது.

"உடும்பிழு தறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
 சீறின் முன்றில் கூறுசெய் திடுமார்
 கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
 மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து"

(புறநானூறு - 325)


உடும்பையும் பன்றியையும் அறுத்துக்கூறுபோட்டு தீயிலிட்டுச்சுட்டுத்தின்பர் என்கிறது இப்பாடல்.

"நாய்கொண்டால், பார்ப்பாரும் தின்பர் உடும்பு"
(பழ. 35)

என்னும் பழமொழிநானூற்றடியும், இதை வலியுறுத்தும்.

சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலர் கையைப் பிடித்து, "உம் கை மெல்லிதாயிருக்கிறதே! கரணியம் என்ன?" என்று வினவியதற்கு, அவர்,

"புலவு நாற்றத்த பைந்தடி
 பூநாற் றத்த புகைகொளீஇ ஊன்றுவை
 கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது
 பிறிதுதொழி லறியா வாகலின் நன்றும்
 மெல்லிய பெரும தாமே......
 ..................................
 செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே."

(புறநானூறு - 14)


நாட்டுமக்களைக்காக்கும் உங்களின் கை வன்மையாக உள்ளது அரசே. என் கை மென்மையாக உள்ளது. ஏனென்றால்… புலால் நாறும் கறித்துண்டைப் பூமணம் கமழும் தீயில் வாட்டி, உணவும், துவையலும், கறிச்சோறுமாக நீ வழங்கியதை உண்டு வருந்தும் தொழில் அல்லது வேறு தொழில் அறியாததால் மென்மையாக உள்ளது.

"நெய்கனி குறும்பூழ் காய மாக
 ஆர்பதம் பெறுக தோழி யத்தை
 பெருங்கல் நாடன் வரைந்தென அவனெதிர்
 நன்றே மகனே யென்றனன்
 நன்றோ போலும் என்றுரைத் தோனே"

(குறுந்தொகை - 389)


என்பதில், நெய்யிற் பொரித்த குறும்பூழ்க்கறி கூறப்பட்டது.

குறும்பூழ் வேட்டுவன் 214ஆம் புறப்பாட்டிற் குறிக்கப்பட்டான். குறும்பூம் = காடை.

மனைக்கோழி 395ஆம் புறப்பாட்டிற் குறிக்கப்பட்டுள்ளது. ஆட்டில் வெள்ளாட்டுக் கடாவையே பண்டைத்தமிழர் சுவையுள்ளதென விரும்பியுண்டனர்.

"மாடந் தோறும் மைவிடை வீழ்ப்ப" (புறம். 33)
"மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்" (புறம். 113)
"நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்" (புறம். 262)
"மைவிடை யிரும்போத்துச் செந்தீச் சேர்த்தி" (புறம். 365)
"விடைவீழ்த்துச் சூடுகிழிப்ப" (புறம். 366)
"மரந்தோறும் மைவீழ்ப்ப" (மதுரைக். 754)
"மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி" (பெரும்பாண்.143)
"செங்கண் மழவிடை கெண்டி" (பெரும்பொருள் விளக்கம்)

(மை = காராடு, வெள்ளாடு. விடை = கடா, வெள்ளாட்டுக் கடா)

"துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை வேவை பருகெனத் தண்டிக்
காழிற் சுட்ட கோழூன் கொழூங்குறை
ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி
அவையவை முனிகுவ மெனினே சுவைய
வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ"

(பொருநாராற்றுப்படை)


பதத்தோடு சுட்டுச் சமைத்த செம்மறியாட்டுக் கறியும் சோறும் கூடிய உணவை அருகிருந்து ஊட்டலானான். அருகம்புல் மேய்ந்த துருவை என்னும் செம்மறியாடு. பராரை எனப்படும் அதன் பருத்த கால்தொடை. அதனைப் புழுக்கிய வேவை. வேவையை இக்காலத்தில் சூப் என்பர். அரசனாயிற்றே என்று அவனிடம் நெருங்கத் தயங்கினோம். அவன் விடவில்லை. பருகுக என்று சொல்லித் தண்டித்தான். காழ் என்பது வைரம் பாய்ந்த கட்டையில் செய்த உண்கலம். கை சுடாமல் இருக்க மரக் கிண்ணத்தில் தந்தான். அதில் கொழுத்த கறித் துண்டுகளும் இருந்தன. சூடு வாயில் சுட்டதால் வாயால் ஊதி ஊதிச் சுவைத்துப் பருகினோம். ஆட்டின் தொடைக்கறியை இரும்புக்கம்பியில் குத்தி தீயில் சுடப்பட்ட கறித்தூண்டுகளையும் உண்ணக்கொடுத்தான்.

*******************************


பாருங்கள் ஊன்சோறு(பிரியாணி), சுட்டகறி(தந்தூரி), வேவை (சூப்) என்பவையெல்லாம் பிறநாட்டாரிடமிருந்து கற்று, தற்காலத்தில் உருவான உணவுவகைகள் என்று நாம் நினைத்துக்கொண்டுள்ளோம். ஆனால், பழந்தமிழரின் விருப்ப உணவாகவே இருந்திருக்கிறது. தமிழனே உலகின் அனைத்திற்கும் முன்னோடியானவன்.

உதவி : பல வலைத்தளங்கள்
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்