தமிழிசைத்துளி :
தற்காலத்துத்தமிழர் நாம் இயற்றமிழை ஓரளவு காத்தோம். இசைத்தமிழை மறந்தேபோனோம். தமிழிசைப்பாட்டைக்கற்று வருந்தலைமுறைக்கு கற்பித்தல் நங்கடமையே. அதைமுயல்வோம். அதற்கு தமிழிசைப்பற்றியறிதல் இன்றியமையாமையாகும். அங்ஙனம் இசைகற்க விருப்பிலாரும், குறைந்தவளவு தமிழிசைப்பற்றி அறிந்துகொள்ளல்வேண்டும். ஆரியர்கள் நம் தமிழிசையைக் களவாண்டு கருநாடக இசை என்று பெயரிட்டனர்.
இசை:
பாடுபவனின் அல்லது கருவிகள் மூலம் ஒலி இயக்குபவனின் கருத்தும் ஓசையும் கேட்பவனின் செவியில் விழுந்து மனதில் புகுந்து, எண்ணத்தில் கலந்து உள்ளத்தை அந்த கருத்தோசையோடு இசைவிக்கச் செய்வதால் இசை எனப்பட்டது.இசையாவது கீழுள்ள வகையாகும்:
௧) மிடற்றிசை - குரலிசை௨) நரம்புக்கருவியிசை - யாழிசை
௩) காற்றுக்கருவியிசை - குழலிசை
௪) தாளயிசை - பறையிசை
பண்: (இராகம்):
நல்லவண்ணம் பண்படுத்தி, செவிக்கு இனிய ஓசையைச் செய்த(பண்ணிய)தால் இன்னிசை பண் எனும் பொதுப்பெயரால் வழங்கப்பட்டது. ஆரியர் இதை (இ)ராகம் என மாற்றிக்கொண்டனர்."குரலே துத்தம் கைக்கிளை உழையே இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே" - (திவாகரநிகண்டு)
"வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு
குதிரையும் யானையும்குயிலும்தேனுவும்
ஆடும் என்றிவை ஏழிசை ஓசை" - (பிங்கலநிகண்டு)
விலங்கு மற்றும் பறவை இனங்களின் ஓசைகளைக்கொண்டு ஏழிசையைப்படைத்தனர் பழந்தமிழர். அதைத்திருடி ஆரியர்கள் தமதாக்கிக்கொண்டனர்.
௧) குரல் - சடஜம்
௨) துத்தம் - ரிஷபம்
௩) கைக்கிளை - காந்தாரம்
௪) உழை - மத்திமம்
௫) இளி - பஞ்சமம்
௬) விளரி - தைவதம்
௭) தாரம் - நிஷாதம்
இவற்றைக்குறிக்க கீழுள்ள அலகுகளை வகுத்தனர்.
'ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்ற
ஏழும் ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்'
-- (பிங்கலநிகண்டு)
இயற்றமிழின் உயிர் நெடில் எழுத்துகளாகிய, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகியவை ஏழிசைக்குரிய அலகுகள் என்னும் குறியீடுகளை அமைத்தனர். பின்னர் வசதி, எளிமை கருதி தமிழர்களே ச, ரி, க, ம, ப, த, நி என்ற குறியீட்டு எழுத்துகளை அவற்றிற்கு மாற்றாக வகுத்தனர். இவை சுரங்கள் எனப்பட்டன. சுர் என்ற வேர்ச்சொல்லால் சுரம் என்பது பிறந்தது. அதை ஸ்வரம் என்று மாற்றினர் ஆரியர்.
இவ்வேழ்ச்சுரங்களின் ஏறுநிரல் இறங்குநிரல் - ஆரோசை அமரோசை எனப்பட்டது. அதை ஆரோகணம் அவரோகணம் என்று திரித்தனர்.
இவ்வேழ்ச்சுரங்கள் 12ஆக விரியும்:
1) குரல்
2) மென்துத்தம்
3) வன்துத்தம்
4) மென்கைக்கிளை
5) வன்கைக்கிளை
6) மெல்லுழை
7) வல்லுழை
8 ) இளி
9) மென்விளரி
10) வன்விளரி
11) மென்தாரம்
12) வன்தாரம்
"இசையென்பது நரப்படை வாலுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசைகளும்."
---(சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை)
இச்சுரங்களைக்கொண்டு அமைக்கப்பட்ட பழந்தமிழிசை பண்கள் 103 ஆக இருந்தனவென்பர். அது பின்னர் விரிவடைந்து சிலப்பதிகாரக்காலத்தில் 11991 ஆதிபண்களாக (இராகங்கள்) இருந்தன என்று மேற்கண்ட பாடலால் அறியலாம்.
ஏழ்பெரும்பாலைப்பண்கள் :
௧. செம்பாலை
௨. படுமலைப்பாலை
௩. செவ்வழிப்பாலை
௪. அரும்பாலை
௫. கோடிப்பாலை
௬. விளரிப்பாலை
௭. மேற்செம்பாலை
பழந்தமிழிசைநூல்களுள் சில:
௧. முதுகுருகு - பெருங்குருகு௨. முதுநாரை - பெருநாரை
௩. இசைநுணுக்கம்
௪. தாளவகையோத்து
௫. இந்திரகாளியம்
௬. பஞ்சமரபு
இசையின் அடிப்படையே இன்னும் மிகுதியாகவுள்ளது. ஆனால், இக்குறிப்புகள் இப்போதைக்கு போதுமென நினைக்கிறேன்.
***********************
உதவிய நூல்கள் :
யாழ்நூல்தமிழிசையியல்
தமிழிசை இலக்கண மரபு
நன்றி. வணக்கம்
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment