புறநானூறு - பாடல் 192
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இச்சொற்றொடர் எங்கிருந்து வந்தது? யாரால் பேசப்பட்டது அல்லது பாடப்பட்டது? இதற்கு விடை புறநானூற்றில் 192 ஆம் பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்பாடலை இயற்றியவர் கணியன் பூங்குன்றனார் என்ற புலவர் ஆவார். முற்காலத்தில் பூங்குன்றம் என்று அழைக்கப்பட்டு, தற்காலத்தில் மகிபாலன்பட்டி எனப்படும் ஊரே இவர் பிறந்த ஊர் ஆகும். இவ்வூர் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் இவ்வூரில் பிறந்து, புகழுடன் வாழ்ந்த இன்னொரு தமிழ் மேதை பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் ஆவார்.
பூங்குன்றனார் துன்பம் வந்தபோதும், துயர் வந்த போதும் அயராத உள்ளமும், கலங்காத அமைதியும் கொண்டவர். தனக்கு நல்லது செய்தாரென ஒருவரைப் பாராட்டவும், கெடுதல் செய்தாரென ஒருவரை இகழவும் செய்யாதவர். அதுபோல, பெரியோர், வசதியானவர் என ஒருவரைப் புகழவும், சிறியோர், வசதியற்றவர் என அவரைப் புறக்கணிக்கவும் செய்யமாட்டார். எல்லா மனிதரும் அவரவர் செய்த வினைக்கேற்ப இன்ப துன்பமும், உயர்வு தாழ்வும், செல்வமும் வறுமையும் அடைவார்கள் என்பதை தாம் அறிந்த நூல்களாலும், நடைமுறை வாழ்க்கையாலும் நன்கு தெரிந்தவர்.
அதனால், நல்லிசைப் புலமை மிக்க கணியன் பூங்குன்றனார் எத்தகைய வேந்தரையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடியதில்லை. இதனை அறிந்த அக்காலச் சான்றோர் வியந்து, அவரிடம் வந்து “பாடுபெறு சான்றோராகிய நீவிர் எவரையும் பாடாததற்கு என்ன காரணம்?” என்று கேட்டனர். அதற்குப் பதிலாக, இவர் கூறிய பாடலைப் பார்ப்போம்.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
- கணியன் பூங்குன்றனார்
பதவுரை:
யாதும் ஊர் – எல்லா ஊரும் எனக்கு ஊர்
யாவரும் கேளிர் – எல்லா ஊரிலுமுள்ள மக்கள் அனைவருமே எனக்கு உறவினர்தான்
தீதும் நன்றும் பிறர் தர வாரா – நமக்கு நேரும் தீமையும், நன்மையும் வேறு யாரும் தந்து வருவதில்லை
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன – நம் உடலிலும் உள்ளத்திலும் உண்டாகும் வேதனைகளும், அவற்றைப் போக்க நாம் செய்யும் செயல்களும் அத்தன்மைத்ததே, நம் செயல்களினால் ஏற்படும் விளைவுகளே
சாதலும் புதுவது அன்று – இவ்வுலகில் பிறந்தவர் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை, இறப்பதும் ஒன்றும் புதிதல்ல
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலம் – வாழ்க்கை வாழ்வது மிக இனிதென்று நான் ஆனந்தம் மிக அடைந்ததுவுமல்லை
முனிவின் இன்னாது என்றலும் இலம் – வாழ்க்கை வெறுத்து இவ்வாழ்க்கை வேண்டேன் என்று ஒதுங்கியதுமில்லை
மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது - மின்னலுடன் கூடிய மேகம் குளிர்ந்த மழைத் துளிகளை பெய்ததுடன் நில்லாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று – அங்கங்கே வழியில் இருக்கும் கற்களில் மோதி ஒலி எழுப்பி ஓடும் பெரிய ஆற்றில்
நீர் வழிப்படூஉம் புணை போல் – நீரின் வழியே இழுத்துச் செல்லப்படும் மிதவை போல
ஆர் உயிர் முறை வழிப்படூஉம் என்பது – அருமை பெருமையான நம் உயிர் போக வேண்டிய நேரம் வந்தால் போய்ச் சேரும் என்று
திறவோர் காட்சியின் தெளிந்தனம் – நல்ல நீதிநெறி அறிந்தோர் சொல்லிய நூல்களால் அறிந்து தெளிவுடன் இருக்கிறேன்
ஆகலின் - அதனால்
மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலம் – தங்கள் குணநலன்களால் பேறு பெற்ற பெரியோர்களைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட மாட்டேன்
சிறியோரை இகழ்தல் அதனினும் இலம் -.அதைவிட, குணநலன் இல்லாத மதியற்றோரை ஏளனமாக எண்ணி இகழவும் மாட்டேன்.
பொருளுரை:
அன்புசால் சான்றோர்களே!
நமக்கு நேரும் தீமையும், நன்மையும் வேறு யாரும் தந்து வருவதில்லை. நம் உடலிலும் உள்ளத்திலும் உண்டாகும் வேதனைகளும், அவற்றைப் போக்க நாம் செய்யும் செயல்களும் அத்தன்மைத்ததே, நம் செயல்களினால் ஏற்படும் விளைவுகளே.
இவ்வுலகில் பிறந்தவர் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை, இறப்பதுவும் ஒன்றும் புதிதல்ல. வாழ்க்கை வாழ்வது மிக இனிதென்று நான் ஆனந்தம் மிக அடைந்ததுவுமல்ல. வாழ்க்கை வெறுத்து இவ்வாழ்க்கை வேண்டேன் என்று ஒதுங்கியதுமில்லை.
மின்னலுடன் கூடிய மேகம் குளிர்ந்த மழைத்துளிகளை பெய்ததுடன் நில்லாது, மழை நீரானது அங்கங்கே வழியில் இருக்கும் கற்களில் மோதி ஒலி எழுப்பி ஓடும் பெரிய ஆற்றில் நீரின் வழியே இழுத்துச் செல்லப்படும் மிதவை போல, அருமை பெருமையான நம் உயிர் போக வேண்டிய நேரம் வந்தால் போய்ச் சேரும் என்று நல்ல நீதிநெறி அறிந்தோர் சொல்லிய நூல்களால் அறிந்து தெளிவுடன் இருக்கிறேன்.
அதனால், தங்கள் குணநலன்களால் பேறு பெற்ற பெரியோர்களை, வசதியானவர்களைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டு புகழவும் மாட்டேன். அதைவிட, குணநலன் இல்லாத மதியற்றோரை, வசதியற்ற எளியவர்களை ஏளனமாக எண்ணி இகழவும் மாட்டேன். எனவே, எல்லா ஊரும் எனக்கு ஊர். எல்லா ஊரிலுமுள்ள மக்கள் அனைவருமே எனக்கு உறவினர்தான்.
நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment