மதுரையும் ஈழமுங்கொண்ட கோப்பரகேசரிவர்மன் முதலாம் பராந்தகச்சோழன் : (௯०௭ முதல் ௯௫௩ வரை) - கி.பி. 907 - 953
(ஈழத்தை வெற்றிகொண்ட வரலாற்றுச்சுருக்கம்)
முதலாதித்தசோழனுக்குப்பிறகு அவனின் மகன் முதலாம் பராந்தகசோழன் பரகேசரி என்னும் பட்டங்கொண்டு அரசாளலானான்.
அந்நாளில் பாண்டிநாட்டை மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் ஆண்டுகொண்டிருந்தான். சோழனுக்கும் பாண்டியனுக்கும் தொடர்ந்து பலமுறை போர்மூண்டதாக பலகல்வெட்டுகளால் அறியமுடிகிறது. பராந்தகன் மதுரையை வென்று "மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன்" என்று புகழப்படுகிறான். பராந்தகசோழன் நிகழ்த்திய போரில் இராசசிம்மபாண்டியன் தோல்வியுறவே, இலங்கை மன்னன் ஐந்தாம் காசிபனிடம் உதவிப்படை வேண்டுகிறான். அவனும் சக்கசேனாபதியின் தலைமையில் பெரும்படையை பாண்டியனுக்கு துணையாக அனுப்புகிறான்.
வெள்ளூர் என்ற இடத்தில் இருவருக்கும் போர் நடக்கிறது. பாண்டிப்படையையும் ஈழத்துப்படையையும் பராந்தகசோழன் வெற்றிகொள்கிறான். இராசசிம்மபாண்டியன் இம்முறையும் சோழனிடம் தோல்வியுறுகிறான். இலங்கையிலிருந்து சக்கசேனாபதியின் தலைமையில் வந்த ஈழத்துப்படையில், எஞ்சியிருந்த வீரர்களைக்கொண்டு மீண்டும் சோழனோடு போர்புரிய சக்கசேனாபதி முற்படும்போது ஒருவகை நோயினால் இறந்துவிடுகிறான். இதையறிந்த இலங்கை மன்னன் ஈழத்து எஞ்சியபடையை தன்நாட்டிற்கே அழைத்துக்கொண்டான். இந்த செய்தியை மகாவம்சம் கூறுகிறது. இந்தப்போர் கி.பி.919ல் நடந்திருக்கலாம் என்று கீழைப்பழுவூர், திருப்பாற்கடல் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது.
பாண்டிநாட்டை இழந்த மூன்றாம் இராசசிம்மபாண்டியன் இலங்கைக்குச்சென்று அந்நாட்டரசனாகிய நான்காம் தப்புலனிடம் உதவிபெற இலங்கையில் தங்கியிருந்தான். அவனும் பாண்டியனுக்கு உதவாமல் விருந்தோம்பல் மட்டும் செய்துகொண்டிருக்கிறான். இவன் நமக்கு உதவபோவதில்லை என்பதையுணர்ந்த இராசசிம்மபாண்டியன், தம்முன்னோர்களிடமிருந்து தனக்குக்கிடைத்த சுந்தரமுடியையும் பிற அரசசின்னங்களையும் இலங்கை மன்னன் தப்புலனிடம் அடைக்கலப்பொருளாக வைத்துவிட்டு, தன்தாய் வானவன்மாதேவியின் பிறந்த சேரநாட்டிற்குச்சென்றுவிடுகிறான்.
முதலாம் பராந்தகசோழன் பாண்டிநாடு முழுமையும் வென்று அந்நாட்டின் தலைநகராகிய மதுரையில் முடிசூட்டுவிழா நடத்த முயன்றபோது, பாண்டியர்க்குரிய சுந்தரமுடியும் பிற அரசசின்னங்களும் அங்கு காணப்படவில்லை. அவையெல்லாம் பாண்டிநாட்டைவிட்டுசென்ற இராசசிம்மன் இலங்கையரசனிடம் கொடுத்துள்ளான் என்பதையறிந்த பராந்தகன், அவற்றை வாங்கிவர சிலதூதர்களை இலங்கைக்கு அனுப்புகிறான்.
அப்போது ஈழத்தை ஆண்டுகொண்டிருந்த நான்காம் உதயன் என்பவன் அவற்றை கொடுக்கமறுக்கவே, பராந்தகன் ஈழத்தின் மீது போர்பூண்டு சுந்தரமுடியையும் அரசசின்னங்களையும் மீட்டுவர பெரும்படையொன்றை அனுப்புகிறான்.
அப்போரில் ஈழநாட்டுப்படைத்தலைவன் இறந்துவிடுகிறான், பராந்தகசோழன்படை வெற்றியுறுகிறது. வேறுவழியறியாத ஈழத்துமன்னன் உதயன், பாண்டியன் கொடுத்துச்சென்ற சுந்தரமுடியையும் அரசசின்னங்களையும் எடுத்துக்கொண்டு ஈழத்தின் அடர்ந்த காடுகளும் மலையும் நிறைந்த தென்கீழ்ப்பகுதியாகிய ரோகண நாட்டிற்குப்போய்விடுகிறான்.
பராந்தகச்சோழன் படைகள் அவற்றைக்கைப்பற்ற முயன்றும் அந்த பகுதிக்கு செல்ல முடியாமல் சோணாட்டிற்கே திரும்புகின்றன. இந்தவரலாற்றை இலங்கையின் மகாவம்ச நூலில் காணலாம். பராந்தகன் ஈழநாட்டை வெற்றிகொண்டும் சுந்தரமுடியைக் கைப்பற்றும் தன் விருப்பம் அவனுக்கு நிறைவேறவில்லை. பராந்தகன் இந்தப்போரில் ஈழத்தை வெற்றிகொண்டதால் தான் "மதுரையும் ஈழமுங்கொண்ட கோப்பரகேசரிவர்மன்" என்று புகழப்பெறுகிறான். இவனின் 37ஆம் ஆட்சியாண்டிற்குப்பிறகுதான் கல்வெட்டுகளில் இவ்வாறு குறிப்பிடப்பெறுகிறான்.
(பராந்தகச்சோழனின் எண்ணமான சுந்தரமுடியையும் அரசசின்னங்களையும் கைப்பற்றும் விருப்பம், பிற்காலத்தில் இவனுக்குப்பிறகு ஆறாவதாக அரியணை ஏறிய இராசேந்திரசோழனால் நிறைவேற்றப்பட்டது என்பதை அவன் மெய்க்கீர்த்திகளால் அறியலாம்)
முதலாம் பராந்தகன் ஈழத்தை வென்ற வரலாற்றை கலிங்கத்துப்பரணி, குலோத்துங்கசோழனுலா மற்றும் இராசராசசோழனுலா ஆகியவை விளக்குகின்றன.
1.கலிங்கத்துப்பரணி
ஈழ முந்தமிழ்க் கூடலுஞ்சிதைத்
திகல்நடந்ததோர் இசைப ரந்ததும் நரபதியர்
2.குலோத்துங்கசோழனுலா
தாழமுன் சென்று மதுரைத் தமிழ்ப்பதியும்
ஈழமும் கொண்ட இகலாளி எழுபகலில்
3.இராசராசசோழனுலா
ஈழ மெழு நூற்றுக் காதமுஞ் சென்றெறிந்து
வேழந் திரைகொண்டு மீண்டகோன்
இந்த வரலாறு, தி.வை.சதாசிவபண்டாரத்தார் அவர்களால் எழுதப்பெற்று 1949ஆம் ஆண்டில் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட "பிற்காலச்சோழர் வரலாறு" என்னும் நூலிலிருந்து படித்து, அதன் சுருக்கவடிவாக இங்கே பதிவிட்டுள்ளேன்.
நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment