Sunday, December 6, 2020

தமிழ்மொழியால் உலகாண்ட சேரன் செங்குட்டுவன்

தமிழ்மொழிகொண்டு உலகாண்ட சேரன் :


"குமரியொடு வட விமயத்து

ஒருமொழி வைத்து உலகாண்ட

சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச்

சோழன்மகள் ஈன்ற மைந்தன்

கொங்கர் செங்களம் வேட்டுக்

கங்கை பேர்யாற்றுக் கரைப்போகிய

செங்குட்டுவன்"


          -- சிலம்பு - வஞ்சி - வாழ்த்துக்காதை.





தென்குமரியோடு வடபனிமலை வரையில் ஒரேமொழியாம் தமிழைக்கொண்டு ஆண்டானாம் சேரன் செங்குட்டுவன். ஆனால் இன்று, நம்மையே இந்தி படிக்கச்சொல்கிறார்கள். நம்மரசு இந்தியை வளர்க்கிறது. 😡😡😡


நன்றி. வணக்கம்

தனித்தமிழாளன்



Thursday, December 3, 2020

ஒன்பான் புலவரும் புரவலரும்

 புரவலரும் புலவரும் :


புலவர்: 

புலவர் என்போர், செய்யுள்களை (நூல்கள்) இயற்றும் புலமையுடையோர்.


புரவலர்: 

புரவலரென்போர் அந்த நூல்களை இயற்றும் புலவர்களுக்கு பொருளுதவியோடு பிறவுதவிகளனைத்தும் செய்வோர். (ஒரு அமைப்பிற்கோ நற்செயலுக்கோ அவற்றின் வளர்ச்சிக்கு உதவுபவர்). கொடையாளர், புரப்போர், பாதுகாப்பவர், ஆதரவாளர் என்பன புரவலரைக்குறிக்கும் பிறசொற்கள்.


"கையது கடன் நிறை யாழே மெய்யது புரவலர் இன்மையின் பசியே" (புற:69-2).


"அரவு உறை புற்றத்து அற்றே நாளும் புரவலர் புன்கண் நோக்காது" (புற:329:7).






புரவலரும் புலவரும் :


௧) பெருஞ்சேரலிரும்பொறையும் அரசில்கிழாரும்



௨) கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும்



௩) கணைக்காலிரும்பொறையும் பொய்கையாரும்


௪) பாரியும் கபிலரும்




௫) அதியமான் நெடுமானஞ்சியும் ஔவையாரும்




௬) சிறுகுடிபண்ணனும் கிள்ளிவளவனும்




௭) குமணனும் பெருந்தலைச்சாத்தனாரும்




௮) சடையப்பனும் கம்பரும்




௯) அநபாயனும் சேக்கிழாரும்




***************************************************


சிறியேன் பிறந்தவாண்டில் அதாவது ௧௯௮௯(1989) ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பிற்கான துணைப்பாடத்திட்டத்தில் ஒன்பது புலவர்கள் மற்றும் அப்புலவரைப்புரந்த புரவலரைப்பற்றிய கதையைப் பாடமாக வைத்திருந்தனர். வீட்டிலிருந்த பழையநூல்களை எடுத்து தூசிதட்டியபோது காணக்கிடைத்தது. 


சொற்கள் நல்லதமிழில் அமைந்திருந்தன. தனிசொற்றொடர்களாகவல்லாமல் பெரும்பாலும் தொடர் மற்றும் கலப்பு சொற்றொடர்களாவே இருந்தன. குறிப்பாக பிறமொழிக்கலப்பில்லை அந்நூலில். அதற்கும் மேலாக அறத்தன்மையும் கொடைத்தன்மையுடைய வரலாறுகளைப்பாடமாக வைத்திருந்தனர்.


 அவ்வாண்டுவரைகூட தமிழ்நாட்டுப்பள்ளிப்பாடநூல்களில் இத்தகைய பிறமொழிக்கலப்பில்லா நல்லதனித்தமிழில் அமைந்திருந்த அறம் சார்ந்த பாடங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் தற்போதோ பிறமொழிச்சொற்களை தமிழ்ச்சொற்களாகவே எண்ணுமளவிற்கு கலப்புடைய நூல்கள் தமிழ்நாட்டுப்பாடநூல் கழகத்தால் தயாரிப்படுகிறது. பள்ளிகளிலேயே இவ்வாறு நிகழ்ந்தால் அதைப்படித்து வளரும் பிள்ளைகளும் அதையே தமிழென்று நினைத்துக்கொண்டு அந்த பிறமொழிகலந்த தமிழையே பேசும்.


தற்போதைய இழிநிலையை மாற்றவேண்டிய கடமை தமிழ்நாட்டரசுக்கேயுரியது. இனத்தின் விழியாம் மொழியைக்காக்க அரசு பாடநூல்க்கழகமும் மக்களும் பாடுபடவேண்டியது இன்றியமையாதது. இதைச்செய்தோமானால் இனிவரும் பிள்ளைகள் பிறமொழிக்கலப்பின்றி நற்றமிழில் பேசும். மொழியும் இனமும் காக்கப்பட்டு நல்லறமும் இலக்கியவளமும் பெருகி பல்லாயிரமாண்டுகள் செழித்தோங்கும். 

நன்றி, வணக்கம்.

தனித்தமிழாளன்

Wednesday, November 18, 2020

சீற்றமுடை முருகன்

 முருகன் சீற்றத்தான் 💪


முருகனை அழகனென்றும், இளைஞனென்றும், மறவனென்றும் கேள்வியுற்றிருப்போம். ஆனால், அவன் பெருஞ்சினமுடையவனென்றும் பகர்கின்றன தமிழவை இலக்கியங்கள்.




"முருகற் சீற்றத் துருகெழு குருசில்"

   --- புறநானூறு - 16


"முருகற் சீற்றத் துருகெழு குருசில்"

   --- பொருநராற்றுப்படை - 131


"முருகி னன்ன சீற்றத்துக் கடுந்திறல்"

   --- அகநானூறு - 158


இன்னும் மிகுதியான சான்றுகளிருக்கும். ஆனால், அடியேன் படிக்கும்போது கிடைத்தவை இம்மூன்று சான்றுகள்.


நன்றி. வணக்கம்.


மாயோள் 🖤


"மாயோள்முன்கை யாய்தொடி"

(பொருநராற்றுப்படை 14)


"மாயோள் பசலை நீக்கினன்"

(ஐங்குறுநூறு - 145)


"ஒடுங்கீ ரோதி மாஅயோளே"

(அகநாநூறு - 86).

Monday, November 16, 2020

புறம் 330 - மதுரை கணக்காயனார்

 புறநானூறு 330 : 🌺


மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடிய தமிழவைப் பாடல்களை நாம் கண்டுள்ளோம். ஆனால், அந்த நக்கீரரின் தந்தையார் மதுரை கணக்காயனார் பாடிய பாட்டைக் கேள்வியுறவில்லை. இதோ அவர் பாடிய ஓர் புறப்பாட்டு.




பாடியவர் : மதுரை_கணக்காயனார்

திணை : வாகை

துறை : மூதின் முல்லை


வேந்துடைத் தானை முனைகெட நெரிதர

ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்,

தன்இறந்து வாராமை விலக்கலின், பெருங்கடற்கு

ஆழி அனையன் மாதோ; என்றும்

பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப்

புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்

தொன்மை சுட்டிய வண்மை யோனே.


விளக்கம் :

அவன் ஒருவனே அவனுக்கு ஈடு. வேந்தும் அவனது படையும் முனைந்து முன்னேறிக்கொண்டிருந்தன. அவன் எதிர்த்து நின்றான். தன்னைக் கடந்து வரமுடியாதபடி எதிர்த்து நின்றான். கடல் சீற்றத்ததைத் தடுக்கும் ஆழிச்சக்கரம் போல நின்றான். அவன் இப்படி என்றால், அவன் ஊரும் இப்படித் திகழ்ந்தது. பாடிச் சென்றோர்கெல்லாம் கொடுத்தும், வாரி வழங்குவதற்கெல்லாம் ஈடுகொடுத்தும் திகழ்வது அவன் சிற்றூர்.


நன்றி. வணக்கம் 🙏

Tuesday, September 8, 2020

கப்பலோட்டிய தமிழரின் தமிழ்ப்பணிகள்

 கப்பலோட்டிய தமிழரின் தமிழ்ப்பணி 🙏


வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரனார் பிறந்தநாள் இன்று (05.09). பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு சுதேசி நீராவிக்கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், விடுதலைப் போராட்ட வீரர். ஐயாவின் தமிழ்ப்பணியைக் காண்போம். 




இயற்றிய நூல்கள் :


இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை


1. மெய்யறம் 1914

2. மெய்யறிவு 1915

3. பாடல் திரட்டு 1915

4. சுயசரிதை 1946


உரைகண்ட நூல்கள் :


1. இன்னிலை 1917

2. சிவஞானபோதம் 1935

3. திருக்குறள் 1935


பதிப்பித்த நூல்கள் :


1. திருக்குறள் (மணக்குடவருரை) - 1917

2. தொல்காப்பியப் பொருளதிகாரம் 

    (இளம்பூரணனாருரை) - 1928


மொழிபெயர்த்த நூல்கள் :


1. மனம் போல் வாழ்வு - 1909

2. அகமே புறம் - 1914

3. வலிமைக்கு மார்க்கம் - 1916

4. சாந்திக்கு மார்க்கம் - 1934


********

நன்றி. வணக்கம்

உதவி : இணையம்

Sunday, August 30, 2020

மதுரைக்காஞ்சியின் ஓணத்திருவிழவு

 மதுரைக்காஞ்சியில் ஓணநன்னாள் : 🏵️


தமிழர்களுக்கு ஓணநன்னாள் வாழ்த்துகள் 🌺


நூல் : மதுரைக்காஞ்சி

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

590 முதல் 610 ஆம் அடிகள் வரை.




பாட்டு :


கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

மாயோன் மேய வோண நன்னாள்

கோணந் தின்ற வடுவாழ் முகத்த

சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை

மறங்கொள் சேரி மாறுபொரு செருவின்


மாறா துற்ற வடுப்படு நெற்றிச்

சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர்

கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்ட

நெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக்

கடுங்கட் டேறன் மகிழ்சிறந்து திரிதர


கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து

பணைத்தேந் திளமுலை யமுத மூறப்

புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு

வளமனை மகளிர் குளநீர் அயரத்

திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழிப் பண்ணிக்


குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி

நுண்ணீ ராகுளி யிரட்டப் பலவுடன்

ஒண்சுடர் விளக்க முந்துற மடையொடு

நன்மா மயிலின் மென்மெல வியலிக்

கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுது

பெருந்தோட் சாலினி மடுப்ப


விளக்கம் :


திரட்சிகொண்ட அவுணரை வென்ற பொன்னாலான மாலையைச் சூடியிருக்கின்ற கருமையான மாயோனுக்குகந்த ஓண நன்னாளில் ஊரார் எடுத்த விழாவில்,


இன்று போர் செய்யவேண்டும் என்றெண்ணும் வீரத்தை உடைய சேரித் தெருவுகளில்  தம்மில் தாம் மாறாய் பொருகின்ற போரில், அடி மாறாமல் நின்றதனால் ஏற்பட்ட வடுக்களை உடைய நெற்றியையும், வண்டுகள் நிறைந்த தும்பையாகிய போர்ப்பூவில் பெரிய விருப்பத்தினையுடைய மறவர்கள்,


தோட்டி வெட்டின வடு இருக்கக்கூடிய முகத்தையும், போரைத் தாங்கும் பெரிய கையினையும் உடைய கடிய களிற்றை ஓட்டும்போது,


கடிய கள்ளையுண்டு மகிழ்ச்சி மிகுந்த பரிக்காரர்கள், அந்த யானையின் விசையைக் காண அந்த யானைகளுக்கு முன்னேயோடுகின்றனர். நெடிய கரையில் இருந்து இதைக்காணுபவர்கள், யானைகள் தம்மேல் வராமல் இருக்க, தம் மடிகளிலிருந்த கப்பணங்களை நிலத்தில் சிந்தியிருக்கின்றனர். (கப்பணங்கள் - நெருஞ்சி முள் போன்ற இரும்பாலானவை என்றனர் உரையாசிரியர்கள்).


செல்வத்தையுடைய மனையிடத்து மகளிர் தம் கணவர்கள் வியக்கும்படி பிள்ளைகளை எந்த சிக்கலும் இன்றி பெற்று, தம்முடைய பெரிய இளமையான முலைகளில் பால்சுரக்கும்படி குளத்தில் நீராடுகின்றனர்.


அதைக்கண்ட, முதற்கருவுற்ற மகளிர், அந்த பெண்களைப்போலவே எந்த சிக்கலும் இன்றி பிள்ளைகளைப் பெறவேண்டும் என்று கருதி, தெய்வத்தை வணங்கி குறைதீர்ந்தபின், சுற்றத்தார் சூழ, பெரியதோளையுடைய சாலினியாகிய தேவராட்டி உடன்வர (சாலினி - தேவராட்டி - தெய்வமேறிய பெண்), 


பூசனை பொருள்கள் பலவற்றுடன், யாழில் செவ்வழி என்னும் பண்ணை இசைத்துக்கொண்டும் அதற்கேற்ற பாடல்களைப் பாடிக்கொண்டும் ஆகுளிப்பறை மற்றும் முழவுகள் முழங்க, நல்ல மயிலைப்போல மெல்ல நடந்துசென்று கைதொழுது படையலை படைக்கின்றனர்.

(செவ்வழிப்பண் - யதுகுல காம்போதி)


ஓணநன்னாள் வாழ்த்துகள் 🏵️🌹🌺🌻🌼🌷


******


நன்றி. வணக்கம்.

தமிழ் கோ விக்ரம்

Friday, August 14, 2020

இந்தியன் என்றால் என்னது தம்பி? - பெருஞ்சித்திரனார்

 இந்தியன் என்றால் என்னது தம்பி?

 

சாதியும் இருக்கும்;

மதமும் இருக்கும்;

சாத்திரம் மக்களை

வேறெனப் பிரிக்கும்!


  மோதலும் இருக்கும்;

  முதலாளி இருப்பான்;

  முன்னேற்றம் சிலர்க்கே

  வாய்ப்பாக இருக்கும்!


குந்தியே தின்பான்

ஒருவன்; மற்றவன்

குடல்வற்றிச் சாவான்

இவற்றிடையே யாவரும்


  இந்தியன் என்றால்

  என்னது தம்பி?

  எல்லாரும் சமமென்றால்

  எப்படித் தம்பி?


கொள்ளையன் ஆள்வான்;

கொடுமைகள் செய்வான்;

கொடுக்கும் உரிமைகள்

கொடாது தடுப்பான்!


  வெள்ளையன் ஆண்டதும்

  வெறியர் ஆள்வதும்

  வேறுபாடின்றி

  விளங்கிடும் தம்பி!


முந்திய ஆட்சியை

அடிமை என்றார்கள்!

முன்னினும் இவர்கள்

அடிமை செய்தார்கள்!


  இந்தியன் என்றால்

  என்னது தம்பி?

  எல்லாரும் சமமென்றால்

  எப்படித் தம்பி?


- பாவலரேறு பெருஞ்சித்திரனார்




ஆங்கிலேயனிடமிருந்து விடுதலைபெற்று இந்தியனிடம் தமிழர்கள் அடிமையாகிய நாள் இன்று. இதற்குப்பெயர் விடுதலைநாளாம்.


பக்கத்து நாடான இந்தியாவின் இந்தியர்களுக்கு விடுதலைநாள் வாழ்த்துக்கள். தமிழர்களுக்கும், சீக்கியர்களுக்கும், காசுமீரிகளுக்கும்,

வங்காளிகளுக்கும், நாகர்களுக்கும், அசாமியர்களுக்கும் பிற தேசிய இனங்களுக்கு தாம் அடிமைப்பட்டநாள் கடைப்பிடிப்பு.


இந்திய ஒன்றியத்திற்குப் போராடி விடுதலை பெற்றுத்தந்த நம் தமிழ்நாட்டு விடுதலைப்போராட்டவீரர்கள், தம் நாடாம் தமிழ்நாட்டிற்கும் சேர்த்து விடுதலை பெற்றிருக்கலாம்.

தமிழ்நாட்டின் சார்பில் இந்திய விடுதலைக்குப்போராடிய வீரர்களுக்கு அன்றே தெரிந்திருந்தால், அப்பெருமக்கள் தமிழ்நாட்டின் விடுதலைக்கு சேர்த்தே போராடியிருப்பர். இந்தியர்களிடம் இப்படி சிக்கித்தவிப்போமென்று பாவம் அவர்களுக்கு எப்படித்தெரியும், இந்த இந்தியர்களிடம் இப்படி அடிமைப்படுவோமென்று? தெரிந்திருந்தால் அப்போதே போராடி தனித்தமிழ்நாட்டைப் பெற்றிருப்பர்.


அவர்களின் உயிர் ஈகத்தைப்போற்றுவேன். ஆனால், இந்தியாவின் விடுதலைநாளைக் கொண்டாடமாட்டேன்.


என்நாடு தமிழ்நாடு. இந்தியாவிலிருந்து தமிழ்நாடு விடுதலையடையும்நாளே தமிழர்களுக்கு விடுதலைநாள். இந்தியாவின் விடுதலைநாள் வாழ்த்தை அருள்கூர்ந்து யாரும் எனக்குக்கூறவேண்டாம்.





(பெரியார் என்னும் ஆவதறிவார் 1947ல் விடுதலை மற்றும் திராவிடன் நாளேட்டில் வெளியிட்ட செய்தியை படங்களாக இணைத்துள்ளேன்)