Saturday, April 25, 2020

தமிழர் திருநாள் உருவான வரலாறு

தமிழர் திருநாள் :


தமிழர்கள் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் தமிழ்ப் புத்தாண்டை தை முதல்நாளில் தொடங்க வேண்டுமென 'தமிழ்க்கடல்' மறைமலையடிகள் முழக்கம் எழுப்பினார்.



தமிழ்நாட்டில் தமிழறிஞர்கள் தமிழரின் வீரத்தை - அறத்தை - முற்போக்குக் கருத்துகளை விதைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். “தமிழர் திருநாள்” என்று பொங்கல் திருவிழாவுக்குப் பெயர் சூட்டுவதற்கு முயற்சி எடுத்தவர்கள் அவர்களே!

1921ஆம் ஆண்டு, பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர் நமச்சிவாயனார் நடத்திய மாநாடு - கலந்தாய்வுக்கு, மறைமலையடிகள் தலைமை தாங்கினார். பல அறிஞர்கள் சேர்ந்து தமிழர்களுக்கு ஒரு ஆண்டு முறை வேண்டும், இப்போதுள்ள சமற்கிருத அறுபது ஆண்டு முறை நமக்குப் பொருந்தாது, அதற்கான புராணக் கதைகள் ஆபாசமானவை என்றுகூறி, தமிழர் ஆண்டு முறையை உருவாக்கினார்கள். யாருடைய பெயரால் உருவாக்குவது என ஆய்ந்து, திருவள்ளுவப் பேராசான் பெயரால் உருவாக்கினார்கள்.

அதேபோல், பொங்கல் விழாவை தமிழர் திருநாளாக கடைபிடிக்க முடிவெடுத்தார்கள்.

 1937ஆம் ஆண்டு, திருச்சியில் நடைபெற்ற அனைத்துத் தமிழர் மாநாட்டில், நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமறையடிகள், பெரியார், திரு.வி.க., “முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதன் உள்ளிட்ட பலரும் பலரும் பங்கேற்றனர். மாநாட்டிற்கு நாவலர் பாரதியார் தலைமை தாங்கினார். அதில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்று, தமிழர் திருநாளாக பொங்கல் விழாவைக் கடைபிடிப்பது! இன்னொன்று, தமிழ்நாடு தமிழருக்கே என முழக்கம் கொடுப்பது! இரண்டாவது தீர்மானத்தின் படியே, 1938 சென்னை கடற்கரையில் மறைமலை அடிகள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில், “தமிழ்நாடு தமிழருக்கே” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தை மறைமலையடிகள் முன்மொழிந்தார். பெரியாரும், நாவலர் பாரதியாரும் வழிமொழிந்து பேசினர்.

தைப்பொங்கல் நாளினை தமிழர் திரு நாளாக கொண்டாட முதல் முழக்கம் எழுப்பியவர் பேராசிரியர் கா.நமச்சிவாயர் ஆவார்.

சென்னை நகரில் தமது பதிப்பகத்திற்கு பாடநூல் எழுதித்தரும் தமிழாசிரியர்களுக்கு சிறப்பு செய்திடும் வகையில் 'தமிழர் திருநாள்' பெயரில் ஒரு விழாவினை நமச்சிவாய முதலியார் நடத்தி வந்தார். அதன் பிறகு தமிழர் திருநாள் பெயரில் விழா கண்டவர்கள்
அண்ணல் தங்கோவும், ம.பொ.சி.யும் ஆவார்கள்.

1937ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ உலகத் தமிழ் மக்கள் பேரவையினை தோற்றுவித்து "உலகத் தமிழ் மக்களே ஒன்று சேருங்கள்" என்றும், "தமிழ்த்தாயை தனியரசாள வையுங்கள் " என்றும் கொள்கை முழக்கமாக வரையறுத்தார்.

அவற்றை தமிழர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் அவ்வாண்டிலிருந்தே தமிழர் திருநாள் விழா , தமிழர் நிலப் பெருவிழா என்ற பெயரில் தைத்திங்கள் முதல் நாளில் தமது பேரவையின் சார்பில் விழா நடத்தினார். அவ்விழாவில் தமிழ்ப் பேரறிஞர்களை அழைத்து தமிழ்மொழி , தமிழின உணர்வை ஊட்டினார்.

தமிழறிஞர் கா.நமச்சிவாயர் வழியில் தமிழர் திருநாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் தம் வாழ்நாள் இறுதிவரை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய பெருமை அண்ணல் தங்கோ அவர்களுக்கே உண்டு.

அதேபோல் 1946இல் ம.பொ.சி. "தமிழரசு கழகம்" எனும் பெயரில் அமைப்பொன்றை தொடங்கினார். தமிழர் திருநாள் விழா கொண்டாட அறை கூவல் விடுத்ததுதான் தமிழரசு கழகத்தின் முதல் பணியாகும்.

ம.பொ.சி. அவர்கள் தமிழினத்தை ஒன்றுபடுத்தி தட்டியெழுப்புவதற்காக 'தமிழர் திருநாள்' விழாவினை நடத்த முடிவு செய்தார். தமிழரசு கழகத்தின் சார்பில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்.

அதில்,

"தைத் திங்கள் முதல் நாளைத் தமது நாட்டுத் திருநாளாக கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு அம்முதற் பெருநாள் 1947, சனவரி 14 அன்று வருவதால் இம்முறை தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலும் சிறப்பாக நிகழ்பெறல் வேண்டும். காரணம் அது தமிழ்நாட்டிற்கெனச் சுயநிர்ணய அறிக்கையை யை உறுதி செய்வதாகும்." என்றார்.
1947 சனவரி 14இல் அறிவித்தபடி தமிழர் திருநாள் விழா தமிழகமெங்கும் நடத்தப்பட்டது.

(தகவல்: ம.பொ.சி. எழுதிய 'எனது போராட்டம்' நூலிலிருந்து)

*********

தமிழின் மூன்றுநிலை எழுத்துகளில் எழுதிப்பதிவிட்டுள்ளேன்.


௧) முதல்வரி, ஈராயிரமாண்டுகளுக்கு முன் வழக்கிலிருந்த பழந்தமிழெழுத்து "தமிழி".

௨) இரண்டாம்வரி, ஆயிரமாண்டுகளுக்கு முன் வழக்கிலிருந்த தமிழெழுத்து "வட்டெழுத்துத்தமிழ்".

௩) மூன்றாம்வரி, தற்போது வழக்கிலிருக்கும் தமிழெழுத்து "தமிழ்".


நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

தமிழவை நூல்களில் தைத்திங்கள்

தமிழவைநூல்களில் தைத்திருநாள்:


தமிழவைநூல்கள் பலவும் தைத்திருநாளை சிறப்பாக எடுத்தியம்பியிருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை ஈண்டு காண்போம்.



1) தைஇத் திங்கள் தண்கயம் போல’ (புறம்-70)

2) தைஇத் திங்கள் தண்ணிய தரினும் (குறுந்தொகை-196)

3) தைஇத் திங்கள் தண்கயம் படியும்' (நற்றிணை-80)

4) தைஇ கின்ற தண்பெயல் கடை நாள் (அகம்-24)

5) ‘நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து’ (ஐங்குறுநூறு-84)

6) தண்ணீர்த் தைஇ கின்ற பொழுதே' (நற்றிணை-124)

7) ‘வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர் தையூண் இருக்கையின்’ (நற்றிணை)

8 ) ‘வையெயிற்றவர்நாப்பண் வகையணிப் பொலிந்து
நீ தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ’ (கலித்தொகை)

9) ‘இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத்
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள்’ (கலித்தொகை)

10) அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல….’ (புறம் - 22)

என்று குறுங்கோழியூர்க்கிழார் எனும் புலவர் அறுவடை விழாவை சாறுகண்டகளம் என வருணிக்கின்றார்.

11) ‘மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’ (சீவக சிந்தாமணி)

நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

தமிழ்நாடு நாள்

இல்லந்தோரும் தமிழ்நாட்டுக்கொடியேற்றுவீர் :


தமிழ்நாடுநாளைப் பற்றிய வரலாற்றைப் பலரும் பதிவிடுகின்றனர், நன்று. நானும் அதையே பதிவிடாமல் சுருக்கமாக முடிக்கிறேன்.



"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகு" என்று தமிழ்நாட்டெல்லைகளை தொல்காப்பியப் பாயிரம் பாடுகிறது.

"வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,"

என்று புறநானூற்றின் ஆறாம் பாட்டு, தமிழ்நாட்டின் வடக்கெல்லை இமயமலைவரை என்று கூறுகிறது.

மேற்சொன்ன, நம்நாட்டெல்லைகளை காக்காதது நம் இயலாமையே. எனவே நம்நிலம் சுருங்கியது.

ஆங்கிலேயர் நமக்கு விட்டுச்சென்ற, தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த மெட்ராசு மாகாணத்தின் நிலப்பரப்பு 3.67 இலட்சம் சதுர கி.மீ.

இந்தியா 1956 - நவம்பர் 1-ல் நமக்கு அளித்த மெட்ராசு மாநிலம் (பின்பு தமிழ்நாடு) 1.30 இலட்சம் சதுர கி.மீ.

தமிழர்கள் தங்கள் நிலப்பரப்பை இழந்த இந்தநாளை எப்படிக்கொண்டாட முடியுமென்ற எண்ணமே நம்முள் இருந்தது இந்நாள்வரை. ஆனால், இதைக்கொண்டாடாமையால் மனத்திற்குள் ஒரு ஓரமாய் வருத்தம் இருந்துகொண்டுதான் இருந்தது.

பிரிந்துசென்ற பிறரே கொண்டாடும்போது நமக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்த்துக்கொள்ள நாமும் "தமிழ்நாடுநாள்" என்றவொரு நாளை பெருவிழாநாளாகக் கொண்டாடுவோம். மக்களாட்சி ஒன்றியத்தில் நாம் இழந்த மண்ணை இனிமீட்பதென்பது இயலாத ஒன்றே. இருக்கும் மண்ணைக் காத்துக்கொள்வோம். ஆனால், தற்போது நடப்பது வேறு. சட்டத்தின் அடிப்படையில் இல்லையென்றாலும், தமிழ்நாட்டில் அயலாரின் குடியேற்றத்தால் நாம் நம் மண்ணை இழந்துக்கொண்டிருக்கிறோம். இதை முதலில் தடுக்கவேண்டும். தமிழ்நாட்டரசு சிறப்புச்சட்டமியற்றி அயலாரை வெளியேற்றியும், அயலார் இனி இங்கு குடியேறாவண்ணம் தமிழ்நாட்டைச் சட்ட அரண்கொண்டு காக்கவேண்டும்.

நடுவண் பா.ச.க அரசின் கைப்பாவையாக எடப்பாடியாரின் அரசு செயல்பட்டாலும், "தமிழ்நாடுநாள்"  அரசகட்டளை பிறப்பித்து கொண்டாடச்செய்த தமிழ்நாட்டரசிற்கு நன்றி.

இவ்வாண்டுமுதல் தமிழ்நாடுவிழாவை வெகுசிறப்பாய் கொண்டாடவேண்டும். அரசால் தமிழ்நாட்டுக்கென்று தனிக்கொடி உருவாக்கி, அரசு அலுவலகங்கள், பள்ளிக்கல்லூரிகளென எங்கும் தமிழ்நாட்டுக்கொடி ஏற்றப்படவேண்டும். பள்ளிநூல்களில் பாடமாக வைக்கவேண்டும்.

தமிழ்நாட்டுப் பொதுமக்கள் தங்கள் இல்லந்தோரும் தெருக்கள்தோரும் ஊர்தோரும் தமிழ்நாட்டுக்கொடியை ஏற்றிவைக்கவேண்டும். மக்கள் அனைவரும் தமிழ்நாடுநாளையும் கொடியையும் அறிந்துவைத்திருக்கவேண்டும்.

நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

கார்த்திகை என்னும் தெறுகால் விளக்கீடு

தெறுகால் விளக்கீடு - கார்த்திகை விளக்கீடு:



விளக்கிடல் விளக்கீடு ஆனது.

கார்த்திகை மாதத்தைக் குறிக்கும் சொற்கள் :
தெறுகால், தேள், நளி.

கார்த்திகைநாளைக் குறிக்கும் சொற்கள் :
அங்கி, அளக்கர், அளகு, அறுவாய், ஆரல், இறால், எரிநாள், நாவிதன்.

வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுது.
- (நற்றிணை 58)

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல்
சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்
– (பரிபாடல் திரட்டு 10)

ஆடு இயல் அழல் குட்டத்து
–(புறநானூறு 229) பாடலுக்குத் தரப்பட்டுள்ள பழைய உரையும், உ.வே.சா. குறிப்புரையும்

கார்த்திகை நாண்மீன்.
"அரவுக் கண்ணணியுற ழாரன்மீன் றகையொப்ப" (கலித்தொகை 64)

அகலிரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை
 – (மலைபடுகடாம் – 10)

விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப
எரிசடை எழில் வேழம் தலை எனக் கீழிருந்து
தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கை
– (பரிபாடல் 11). இதற்கு உ.வே.சா எழுதியுள்ள குறிப்பு.

"நலம் மிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கு" (கார் 260).

"கொற்றவை ஓர் நாள் மாதமும் கார்த்திகை"
(பிங்கல நிகண்டு :10:325).



*************
நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

கார்த்திகை மாலை-விளக்கு
வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன்.
அவன் மகள் தித்தன்.
அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.)
இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக்காட்டுகிறது.[3]
கார்த்திகை பற்றிச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.

கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டம் காதில் அணியும் மகரக்குண்டலம் போல ஒளிர்ந்தது.[4]

அழல் என்பது கார்த்திகை-நாளைக் குறிக்கும். ஆடு என்னும் மாதத்தில் வரும் அழல்-நாள் என்பது, மேடம் என்னும் சித்திரை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளைக் குறிக்கும்.[5]

ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.[6]

ஆரல் என்னும் பெயரிலும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன.

எரி என்பது கார்த்திகை மாதம். சையம் என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்து வையை ஆற்றில் வெள்ளம் வரும் காலம்.[7]

***************

சங்க இலக்கியம் காட்டும் கார்த்திகை தீபம்.
_______________________________________

தலைவியை பிரிந்து, காட்டு வழியே பயணிக்கிறான் தலைவன். அவன் கண்களில், மலை உச்சியில் நெருப்பென சிவந்து இதழ் விரித்து பூத்திருக்கும் இலவம் பூக்கள் கண்ணில் படுகின்றன. அவன் கண்களுக்கும், அந்தப் பூக்கள், கார்த்திகை தீபத்தின் போது ஏற்றப்படும் நூற்றுக்கணக்கான விளக்குகள் போல் தோன்றுகின்றனவாம். இப்படி தலைவவனின் கண்கொண்டு இந்தப் பாடலைப் பாடியவர், பாலை பாடிய பெருங்கோ. இடம் பெற்ற இலக்கியம், அகநானூறு(185).

ஊரை விட்டு காதலனுடன் காட்டு வழியே செல்கிறாள் தலைவி. அதுவும் நீண்ட தூரம் செல்கிறாள். ஊரை விட்டுப் பிரிந்தது, உற்றாரை விட்டு வந்தது, நடந்து வரும் களைப்பு என, அவள் முகம் சற்றே வாடுகிறது. அதைப் பார்த்து விடுகிறான் காதலன். தன்னை நம்பி வந்தவளின் முகம், எந்த விதத்திலும் வாடிவிடக் கூடாது என்று நினைக்கிறான். அவள் சோர்வடையாமல் இருக்க, சற்று துாரத்தில் தெரியும் அந்தக் காட்சியை விவரிக்கிறான்.'பெண்ணே நீ வாழ்க. மகிழ்ச்சி கொள்வாயாக! அங்கே பார். கார்த்திகைத் திங்களில் வரிசையாக ஏற்றும், தீபத்தின் விளக்கினைப் போல, கோங்கம் மரத்தின் பூக்கள் வரிசையாகப் பூத்திருக்கின்றன. அந்த தீஞ்சுடர் அழகினைப் பார். உன் களைப்பு போகும்' என்று கூறும் அந்தத் தலைவனின் வரிகள்,

'அறுமீன் கெழீய அறம்செய் திங்கள்செல்சுடர் நெடுங்கொடி போலப்பல்பூங் கோங்கம் அணிந்த காடே!'
என்று, நற்றிணையில் இடம் பெற்றுள்ளது (202 -நற்றிணை).

கார்த்திகை மாதத்தில் நடுநிசியில் கூட தெருக்களில் பெண்கள் வரிசையாக விளக்கு ஏற்றி வைத்திருக்கின்றனர். அழகிற்காகவும், மணத்துக்காகவும், வீட்டின் முன், பூ மாலைகள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருக்கின்றன, என்கிறது நக்கீரர் பாடிய அகநானூறுற்றுப் பாடல்.

'அறுமீன் சேரும் அகலிருள் நெடுநாள்மறுகு விளக் குறுத்து மாலை துாக்கி' (அகம் 141)

கோங்கம் மரத்தில் இருந்து காற்றிலாடி மணம் கமழும் பூக்கள் கீழே உதிர்கின்றன. அப்படி விழுந்த பூக்கள், திரியை துாண்டி விட்டால் எரியும் விளக்குப் போல் இருக்கிறது என்கிறார் சேரமான் இளங்குட்டுவன் (அகம் 153).

கார்நாற்பது என்றொரு சங்க இலக்கிய நுால். அதைப் பாடியவர் மதுரை கண்ணங்கூத்தனார். அவர் கண்களுக்கு காந்தள் மலராகிய தோன்றிப் பூ தெரிகிறது. அது விரல்களை குவித்து வைத்திருப்பது போல், செக்கச் சிவந்து மலர்ந்திருக்கிறதாம். அப்படி சிவந்திருக்கும் பூக்கள், நன்மை மிகுந்த கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் விளக்கைப் போல் காட்சித் தருகிறது என்பதை,

'நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்டதலைநாள் விளக்கின் தகயுடைய ஆகிப்புலமெலாம் பூத்தன தோன்றி' (கார்.நாற்: 26)

என்று உவமைப்படுத்தி இருக்கிறார்.

 களவழி நாற்பது பாடியவர் பொய்கையார். போர்க்களத்தில் சோழ அரசன் நீர் நாடன் போரிடுகிறான். போரில் வீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்கின்றனர்; குத்தப்படுகின்றனர். வாளால் தங்களை சேதப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் உடம்பில் இருந்து இரத்த ஆறு ஓடுகிறது. அப்படி ஓடும் ஆறு எண்ண முடியாத அளவிற்கு ஏற்றப்பட்ட கார்த்திகை விளக்கின் தீபச்சுடர் அசைந்தாடுவது போல் இருக்கிறது என்கிறார். அவர் கூறும் வரிகளைப் பாருங்கள்:

'கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவேபோர்க் கொடித் தானை பொருபுனல் நீர்நாடன்' (கள.நாற்பது 17)

இளவேனில் காலத்தில் இலவம் மரத்தில் இலைகள் உதிர்ந்த நிலையில் மலர்ந்த  பூக்கள் செக்கச் சிவந்திருக்கின்றன.பூக்களின் நடுவில் நீட்டிக் கொண்டிருக்கும் மகரந்தக் குழல், எரியும் திரி போல் நீண்டு நிற்கிறது. அதைப் பார்த்த ஔவையாருக்கு. கார்த்திகை திருவிழாவின் போது, பெண்கள் ஒன்று கூடி நின்று ஏற்றுவது தீபங்கள் போல் தோன்றுகிறது.'நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டுஇலையில மலர்ந்த முகையில் இலவம்அருஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி!' (அகம்-11) :தினமலர்.

திணையும் நிலமும் வேறு

திணையென்பதும் நிலமென்பதும் ஒன்றல்ல வெவ்வேறு :


நானிலம் :


முல்லை
குறிஞ்சி
மருதம்
நெய்தல்

ஐந்திணை :


முல்லை
குறிஞ்சி
மருதம்
நெய்தல்
பாலை

தொல்காப்பியத்தின் படி, அகத்திணை 7, புறத்திணை 7. திணை என்பதை நிலம் என்று சொல்லவில்லை, மக்களின் ஒழுக்கத்தை வைத்தே வரையறுக்கிறார். திணை என்றால் ஒழுக்கமே, நிலமன்று. இவற்றின் உரிப்பொருள்.

கைக்கிளை - ஒருதலைக்காமம்
முல்லை - இருத்தல்
குறிஞ்சி - புணர்தல்
பாலை - பிரிதல்
மருதம் - ஊடல்
நெய்தல் - இரங்கல்
பெருந்திணை - பொருந்தாக் காமம்

தொல்காப்பியர், இவ்வேழில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலாகிய நான்கனுக்கு மட்டுமே முதற்பொருள் (நிலம்), வகுத்தார். ஆனால், பாலைக்கு நிலம் வகுக்காது பொழுதை மட்டுமே வகுத்தார். பாலைத்திணைக்கு நிலம் பாலை என்று உரையாசிரியன்மார் உரை செய்தனர். கைக்கிளையும், பெருந்திணையும் எல்லா நிலத்தும் சிறுபான்மையாகவும் பெரும்பான்மையாகவும் நிகழ்வதால் இவ்விருதிணைக்கென்று தனியாக நிலம் வகுக்கப்படவில்லையென்று இளம்பூரணனார் உரை செய்துள்ளார்.

வெட்சிதானே குறிஞ்சியது புறனே
வஞ்சிதானே முல்லையது புறனே
ஊழிஞைதானே மருதத்துப் புறனே
தும்பைதானே நெய்தலது புறனே
வாகைதானே பாலையது புறனே
காஞ்சிதானே பெருந்திணைப் புறனே
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே

என்று எவ்வெவ்வகத்திணைக்கு ஒப்பன எவ்வெப்புறத்திணை என்று தொல்காப்பியர் வகுத்தார். இங்கு எப்புறத்திணைக்கு எவ்வகத்திணை என்று வகுத்தாரோ அவ்வகத்திணையின் நிலத்தைக் கொள்ளல்வேண்டும். இங்கும், காஞ்சித்திணையும், பாடாண்திணையும் எந்தவொரு குறிப்பிட்ட நிலத்து மன்னர்க்கு மட்டும் பொருந்துவனவல்ல. நானிலத்து மன்னர்க்கும் பொருந்தும். அதனால் இவ்விருதிணைக்கும் நிலம் வகுக்கவியலாது. இவ்வேழ்புறத்திணையின் ஒழுக்கம் உமக்கே தெரியுமேன நினைக்கிறேன்.
ஆகவே, திணை என்பது நிலத்தைக்குறிப்பதல்ல, மக்கள் மட்டும் மன்னர் ஒழுக்கத்தைக்குறிப்பதே. ஒழுக்கம் என்பதை ஒழுகுதல், முறை, செயல் என்று பொருள்கொள்ளல்வேண்டும்.

மேலும், ஐயமிருப்பின் தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணை, புறத்திணையியல்களைக்காண்க.

நன்றா என்னும் குன்றும் - கபிலர் பெற்ற பரிசும்

நன்றாவென்னுங்குன்றும் கபிலர்பெற்ற பரிசிலும் :


ஆறாம் அல்லது ஏழாம் வகுப்பில் நான் படிக்கும்போது தமிழ்ப்பாடத்தில், "யாரோவொரு மன்னன் யாரோவொரு புலவருக்கு பரிசிலாக ஏதோவொரு குன்றின்மேல் நின்று அங்கிருந்து கண்ணிற்பட்ட நாடுகளெல்லாவற்றையும் கொடுத்தான்" என்று படித்த நினைவிருந்தது எனக்கு. அதுயார் என்ன கதை என்பதைப் பன்னாட்களாகத்தேடி மூவாண்டுகளுக்கு முன்பு கண்டறிந்தேன்.



அது, கபிலருக்கு செல்வக்கடுங்கோ வாழியாதன், தன்னைப் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தை பாடியதற்காகக் கொடுத்த பரிசிலாம். அக்குன்றின் பெயர் #_நன்றா. இந்நன்றாவெனுங்குன்று யாதென தேடிக்கொண்டிருந்தேன். ஒன்றரையாண்டிற்கு முன்பு "செந்தமிழந்தணர் ஐயா இளங்குமரனார்" அவர்கள் அக்குன்று தற்போது ஈரோட்டு பவானி எனப்படும் ஊரிலுள்ள குன்றென்று விளக்கினார். வாழியாதன் கருவூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்டானாம். இது ஒருவாறு ஒத்துப்போகிறது. நன்றா என்னும் குன்று நணா என்று மருவியதாம். அதற்குச்சான்றாயுளது ஞானசம்பந்தர் தேவாரம் "திருநணா" என்று திருக்கடைக்காப்பு பாடியுள்ளார். தற்போது அக்குன்று எப்பெயரால் அழைக்கப்படுகிறதெனத் தெரியவில்லை.

அண்மையில் சேரலத்திற்குச் சுற்றுலாசென்று வருங்கால் அக்குன்று என்கண்ணிற்பட, மேற்சொன்ன அனைத்தும் என் நினைவிற்கு வந்தன. அதனால் அதை ஈண்டு எழுதலாமென எழுதுகிறேன். கபிலர் பரிசில் பெற்ற அச்சான்றுகளைப் பதிகிறேன்.

*****************

பதிற்றுப்பத்துள் ஏழாம்பத்தின் பதிகயிறுதி :


செல்வக்கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது.

"சிறுபுறமென நூறாயிரங்காணங்கொடுத்து நன்றாவென்னுங் குன்றேறிநின்று தன்கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக்கொடுத்தான் அக்கோ. செல்வக்கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்"

சிறிய பரிசாக நூறாயிரம் காசையும், பெரிய பரிசாக நன்றாகுன்றின்மேல் நின்று கண்ட நாட்டையெல்லாம் கொடுத்தாக விளக்குகிறார்.

******************

பதிற்றுப்பத்துள் ஒன்பதாம்பத்தின் ஐந்தாம்பாட்டு :


குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையை பெருங்குன்றூர்கிழார் பாடியது.

"மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவி
னுவலை கூராக் கவலையி னெஞ்சி
னனவிற் பாடிய நல்லிசைப்
கபிலன் பெற்ற வூரினும் பலவே".

இளஞ்சேரலிரும்பொறையை பெருங்குன்றூர்கிழார் பாடும்போது, உன் முன்னோன் வாழியாதனை கபிலன் பாடி பலவூர்களைப்பெற்றான் என்று குறிப்பிடுகிறார்.

*******************

பாரிகாதை : - 1937 இல் இராகவையங்கார் பாடியது


"தானன்றா வாளுந் தனிநாட் டுயர்வடபாற்
றேனன்றா வெற்பின் சிகரம்போய் - மேனின்று
காண்டகுமா நாடீத்துக் காணநூ றாயிரம்பெய்
தாண்டகைசொற் றான்சிறிதென் றாங்கு".

மேற்சொன்ன வரலாற்றைப் பாடியுள்ளார். மேலும் இவர், இக்குன்று அப்போதைய (1937 இல்) சேலம் மாவட்டத்தில் இருக்கிறது என்று கூறுகிறார். 

***************

இதேபோல யானை மீதேறி கவணால் கல்லெறிந்து, அக்கல் சென்ற இடம்வரை புலவருக்கு நெல்கொடுத்தானாம் ஒரு அரசன். இப்படி படித்த நினைவும் உள்ளது. இனி அதைத்தேடவேண்டும். கிடைத்தால் பதிவிடுகிறேன்.

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

*************

பதிவிற்குதவிய நூல்கள் :


1. பதிற்றுப்பத்து
2. பாரிகாதை
3. சம்பந்தர் தேவாரம்

Friday, April 24, 2020

தொல்காப்பிய காலம்

தொல்காப்பியத்தின் காலம்:


Milutin Milankovic எனும் செர்பிய அறிஞரின் வானிலை பருவ சுழற்சி கோட்பாட்டு படி தொல்காப்பியத்தின் காலத்தைத் துல்லியமாகக் கணக்கிடவியலும்.  தொல்காப்பியம் கூறும் ஆறு பெரும்பொழுது(பருவங்)களில் கார்காலத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். 

"காரும் மாலையும் முல்லை"

என்று வரும் தொல்காப்பிய நூற்பாவுக்குப் பொருளுரைக்கும் இளம் பூரணர்,

“காராவது மழை பெய்யும் காலம்.  அஃது ஆவணித் திங்களும் புரட்டாசித் திங்களும்.”
என்று வரையறுத்துக் கூறுகிறார்.

இளம்பூரணரின் காலம் கி. பி. 11ஆம் நூற்றாண்டு.  இதனால், அவரது உரையில் கூறப்படும் கார்காலத்தில் ஆவணியும்  புரட்டாசி யுமே கார்காலமாயிருந்திருக்குமோ எனும் கேள்வி எழத்தான் செய் கிறது..   ஆனால், தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்தில் ஆவணியும் புரட்டாசியும்தான் கார்காலமா யிருந்ததெனக் கூறலாகாது.

இன்றோ, தென்மேற்குப் பருவமழை ஏறத்தாழ சூன் 1 அன்று (வைகாசி மாத இறுதியில்) தென்சேரலத்தில் தொடங்குகிறது.  அதாவது, இளவேனில் பருவத்திலேயே அது தொடங்குகிறது.  சூலை 15 அன்று (ஆனி மாதத்தின் இறுதியில்) அத் தென்மேற்குப் பருவமழை இந்தியத் துணைக்கண்டம் முழுவதற்குமாகப் படர்கிறது.25

அதேபோன்று, வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 20 அன்று (ஐப்பசி மாதத்தின் பிற்பகுதியில்) தொடங்குகிறது.  அதாவது, இன்று அது கூதிர்காலத் தொடக்கத்தில் பெய்யத் தொடங்குகிறது.  இப் பருவ மழைக்காலங்களை மே மாதம் முதல் செப்தம்பர் (அதாவது, வைகாசி முதல் புரட்டாசி) வரையில் நீடிக்கிற கோடைப் பருவமழை (Summer  Monsoon) என்றும், அக்டோபர் முதல் நவம்பர் (ஐப்பசி-கார்த்திகை) வரை நீடிக்கிற குளிர்காலப் பருவமழை  (Winter Monsoon) என்றும் வகைப்படுத்துகின்றனர்.
தமிழர்கள் வரையறுத்த பெரும்பொழுதுகள் (பருவங்கள்) ஆறு.  அவை 2014-2015ஆம் ஆண்டில் இவ்வாறு இருந்தன:

 2014  சித்திரை   ஏப்ரல் 14- மே 14 }
                           }    இளவேனில்    வைகாசி   மே 15-சூன்     14  }

    ஆனி           சூன் 15-சூலை 16  } 
                              }   முதுவேனில்
     ஆடி           சூலை 17-ஆகத் 16} 

      ஆவணி   ஆகத் 17-செப் 16    }
                               }  கார்
      புரட்டாசி   செப் 17-அக்டோ 17}
       
     ஐப்பசி   அக்டோ 18-நவம் 16 }
                                 } கூதிர்
      கார்த்திகை நவம் 17-திசம்பர் 15}

2014-15 மார்கழி    திசம் 16-சன 14        }
                                 } முன்பனி
          தை            சன 15-பெப் 12         }

         மாசி    பெப்ரு 13-மார்ச்  14}
                                               }  பின்பனி   
          பங்குனி   மார்ச் 15-ஏப்ரல் 13  } 

வடவெல்லை

வடவேங்கடம் என்பது விந்தியமலையைக் குறிக்கும்.  ‘வெப்பத்தைக் கடத்தும் மலை’ என்று பொருள்படுகிற 'வெம்+கடம்' என்பதே ‘வேங்கடம்’ என்றானதாம்.  ஆனால், 'தென்வேங்கடம்' என்பது திருப்பதி மலையைக் குறிக்கும்.  இதனடிப்படையில் பார்த்தால்,

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து26

என்ற தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் ‘வடவேங்கடம்’ என்பது விந்தியமலையைத்தான் குறிக்கும்.  மிகத் தொன்மையான தொல்காப்பியத்திற்குக் கி. மு. 9ஆம் நூற்றாண்டில்தான் பாயிரம் எழுதப்பெற்று நூலின் முன்பு ஒட்டப்பட்டது.  'தொல்காப்பியத்தின் காலம்' எனும் நூலில் நான் அதைப்பற்றி விரிவாக வழக்குரைத்துள்ளேன். 

இளம்பூரணரின் கூற்றின்படி ஆவணியும் புரட்டாசியுமே கார் காலம் என்று இருந்திருக்குமாயின், அது தென்மேற்குப் பருவமழைக் காலத்தின் பிற்பகுதியாகும்.  சூன் 1 அன்று தென்சேரலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதை வைத்துப் பார்த்தால்,  வைகாசி பிற்பகுதியிலிருந்து ஆடி முற்பகுதி வரையிலான இரண்டு மாதங்களே தென்னிந்தியாவில் கார்காலமாயிருந்திருக்கும்.  தென்மேற்குப் பருவமழை சூலை 15 அன்று இந்தியத் துணைக்கண்டம் முழுதுமாகப் படர்வதை வைத்துப் பார்த்தால், அக் கார்காலம் ஏறத்தாழ ஆடியும் ஆவணியும் அடங்கிய இரண்டு மாதங்களாயிருந்திருக்கும்.

சூன் 1 அன்று கார்காலம் தொடங்கியதென வைத்துக்கொண்டால்,  இளம்பூரணர் சொல்வதைப்போல் ஆவணியும் புரட்டாசியும் கார்காலமாவதற்கு இரண்டரை மாதக் காலம் தள்ளிப் போயுள்ளது.

மீயண்மை ஞாயிறு (Perihelion) இருக்கின்ற இடத்தைத் தழுவி ஒரு பருவம் ஒரு மாதம் தள்ளிப்போவதற்கு 1,800 ஆண்டுகள் பிடிக்குமென 'மிலங்கோவிச் பருவச் சுழற்சிக் கோட்பாடு' கூறுகிறது.  அதன்படி, கார்காலம் இரண்டரை மாதங்கள் தள்ளிப்போவதற்கு 4,500 (=2.5x1,800) ஆண்டுகளாகி யிருக்கும்.

இந்தியா முழுவதும் கார்காலம் சூலை 15 அன்று தொடங்கியதென வைத்துக்கொண்டால்,  இளம்பூரணரின் கூற்றுப்படி ஆவணியும் புரட்டாசியும் கார்காலம் ஆவதற்குக் அக் கார்காலம் ஒன்றரை மாதக் காலம் தள்ளிப் போயுள்ளது.  இவ்வாறு ஒன்றரை மாதங்கள் தள்ளிப்போவதற்கு 2,700 (= 1.5x1,800) ஆண்டுகள் பிடித்திருக்கும்.

வடகிழக்குப் பருவமழை  என்றாயின் ...

வடகிழக்குப் பருவமழைதான் தமிழகத்தின் தலையாய மழைக்காலமென வைத்துக்கொண்டால், அக்டோபர் 20 அன்று தொடங்கும்  அக் கார்காலம் ஐப்பசி மாதத்தின் பிற்பாதியில் (அக்டோபர் முற்பாதி), தொடங்கி மார்கழி மாதத்தின் முற்பாதி (திசம்பர் பிற்பாதி) வரையில் என்ற இரண்டு மாதங்களாயிருக்க வேண்டும்.  இவ்வாறாயின், இளம்பூரணர் குறிப்பிடும் கார்காலம்  இரண்டரை மாதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கார்காலம் இவ்வாறு இரண்டரை மாதங்கள் தள்ளிப்போவ தற்கு 4,500 (=2.5x1,800) ஆண்டுகள் பிடித்திருக்கும். 

கார்காலம் ஆவணியும் (ஆகத்து பிற்பாதி-செப்தம்பர் முற்பாதி) புரட்டாசியும் (செப்தம்பர் பிற்பாதி-அக்டோபர் முற்பாதி) அடங்கிய தெனக் கூறும் இளம்பூரணர், இப்போதைக்கு 900 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர்.  ஆகவே, இரண்டரை மாதங்கள் தள்ளிப்போவதற்கு ஆகும் 4,500 (=2.5x1,800) ஆண்டுகள், இளம்பூரணரின் காலமாகிய கி. பி. 11ஆம் நூற்றாண்டுடன் (அதாவது, 900 ஆண்டுகளுடன்) பொருந்தவில்லை.  அதாவது, அவர் வாழ்ந்த காலத்திற்கும் மேற்கூறிய கணக்கிற்கும் இடையில் 3,600 (4,500 - 900 = 3,600) ஆண்டுகள் துண்டு விழுகிறது. 

ஆனால், ஆங்கிலேயர் ஆட்சியின்போதுதான் தமிழகத்தின் வடவெல்லை திருவேங்கடம் (திருப்பதி) என்று தமிழறிஞர்களால் சுருக்கப் பட்டது.  திருவேங்கடமே தமிழகத்தின் வடவெல்லை என்றான பிறகே ஐப்பசி மாதப் பிற்பகுதியில் (அக்டோபர் 20 அன்று) தொடங்கும் வட கிழக்குப் பருவமழைக்காலமே தமிழகத்தின் பெருமழைக் காலம் ஆனது.  மேலும், அக்டோபர் 20 அன்று பெய்யத் தொடங்குகிற வடகிழக்குப் பருவமழை, வெறும் 50 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கிறது.34

இதனால், இளம்பூரணரின் காலத்தில், வடவேங்கடம் எனப் பட்ட விந்தியமலைதான் தமிழகத்தின் வடவெல்லையாக இருந்திருக்க வேண்டும்.  அதாவது, தென்மேற்குப் பருவமழையே இளம்பூரணரின் காலத்தில் தமிழரின் தாயகத்திற்குத் தலையாய மழைக்காலமா யிருந் திருக்க வேண்டும்.

இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமென்று இருந்த தமிழரின் தேயம் தேய்ந்து தேய்ந்து இன்று அதன் தென்கோடியில் குன்றி நிற்கிறது.  இதனால், தென்மேற்குப் பருவமழைப் பொழிவு தமிழகத்தில் குறைவாயுள்ளது.  ஆனால், தமிழரின் தேயம் இந்தியத் துணைக்கண்டம் முழு வதுமென இருந்தபோது, தென்மேற்குப் பருவமழைப் பொழிவே தலையாய மழைக் காலமாயிருந்திருக்கும். 

மீயண்மை ஞாயிறு இன்று முன்பனிக்காலத்தில் (மார்கழியில்) இருக்கிறது.   2015ஆம் ஆண்டில் அது சனவரி 3 அன்று இருந்தது.  1,800 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதத்திலிருந்து அடுத்த மாதத்திற்கு மீயண்மை ஞாயிறு இடம்பெயர்வதை ஏற்கெனவே பட்டியலிட்டுக் காட்டினோம்.  அதன்படி, தென்மேற்குப் பருவமழை சூலை 15 அன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமாகப் படர்வதையும்,  'மீயண்மை ஞாயிறு' 10,800 ஆண்டுகளுக்குமுன் சூலை மாதத்தில் இருந்ததையும் வைத்துப் பார்த்தால், மிலங்கோவிச் பருவச் சுழற்சிக் கணக்கு மெய்ப்படுகிறது.  படம் 13 அதனை உறுதிப்படுத்துகிறது. 

தொல்காப்பியத்திலுள்ள இடைச்செருகல்களால் வரும் காலக்குழப்பத்தைத் தள்ளிவிட்டு, வானியல் விளைவிக்கும் பருவ மாற்றங்களை மிலங்கோவிச் சுழற்சிகளை வைத்து ஆராய்ந்தால், தொல்காப்பியத்தின் காலத்தைச் சரிவரக் கணிக்க முடியும்.  அதன்படி, தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலம் இற்றைக்கு 10,800 ஆண்டுகளுக்கு முன்பு என்று இருத்தல் வேண்டும்.

அறிஞர் குணா.