Saturday, April 25, 2020

நன்றா என்னும் குன்றும் - கபிலர் பெற்ற பரிசும்

நன்றாவென்னுங்குன்றும் கபிலர்பெற்ற பரிசிலும் :


ஆறாம் அல்லது ஏழாம் வகுப்பில் நான் படிக்கும்போது தமிழ்ப்பாடத்தில், "யாரோவொரு மன்னன் யாரோவொரு புலவருக்கு பரிசிலாக ஏதோவொரு குன்றின்மேல் நின்று அங்கிருந்து கண்ணிற்பட்ட நாடுகளெல்லாவற்றையும் கொடுத்தான்" என்று படித்த நினைவிருந்தது எனக்கு. அதுயார் என்ன கதை என்பதைப் பன்னாட்களாகத்தேடி மூவாண்டுகளுக்கு முன்பு கண்டறிந்தேன்.



அது, கபிலருக்கு செல்வக்கடுங்கோ வாழியாதன், தன்னைப் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தை பாடியதற்காகக் கொடுத்த பரிசிலாம். அக்குன்றின் பெயர் #_நன்றா. இந்நன்றாவெனுங்குன்று யாதென தேடிக்கொண்டிருந்தேன். ஒன்றரையாண்டிற்கு முன்பு "செந்தமிழந்தணர் ஐயா இளங்குமரனார்" அவர்கள் அக்குன்று தற்போது ஈரோட்டு பவானி எனப்படும் ஊரிலுள்ள குன்றென்று விளக்கினார். வாழியாதன் கருவூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்டானாம். இது ஒருவாறு ஒத்துப்போகிறது. நன்றா என்னும் குன்று நணா என்று மருவியதாம். அதற்குச்சான்றாயுளது ஞானசம்பந்தர் தேவாரம் "திருநணா" என்று திருக்கடைக்காப்பு பாடியுள்ளார். தற்போது அக்குன்று எப்பெயரால் அழைக்கப்படுகிறதெனத் தெரியவில்லை.

அண்மையில் சேரலத்திற்குச் சுற்றுலாசென்று வருங்கால் அக்குன்று என்கண்ணிற்பட, மேற்சொன்ன அனைத்தும் என் நினைவிற்கு வந்தன. அதனால் அதை ஈண்டு எழுதலாமென எழுதுகிறேன். கபிலர் பரிசில் பெற்ற அச்சான்றுகளைப் பதிகிறேன்.

*****************

பதிற்றுப்பத்துள் ஏழாம்பத்தின் பதிகயிறுதி :


செல்வக்கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது.

"சிறுபுறமென நூறாயிரங்காணங்கொடுத்து நன்றாவென்னுங் குன்றேறிநின்று தன்கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக்கொடுத்தான் அக்கோ. செல்வக்கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்"

சிறிய பரிசாக நூறாயிரம் காசையும், பெரிய பரிசாக நன்றாகுன்றின்மேல் நின்று கண்ட நாட்டையெல்லாம் கொடுத்தாக விளக்குகிறார்.

******************

பதிற்றுப்பத்துள் ஒன்பதாம்பத்தின் ஐந்தாம்பாட்டு :


குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையை பெருங்குன்றூர்கிழார் பாடியது.

"மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவி
னுவலை கூராக் கவலையி னெஞ்சி
னனவிற் பாடிய நல்லிசைப்
கபிலன் பெற்ற வூரினும் பலவே".

இளஞ்சேரலிரும்பொறையை பெருங்குன்றூர்கிழார் பாடும்போது, உன் முன்னோன் வாழியாதனை கபிலன் பாடி பலவூர்களைப்பெற்றான் என்று குறிப்பிடுகிறார்.

*******************

பாரிகாதை : - 1937 இல் இராகவையங்கார் பாடியது


"தானன்றா வாளுந் தனிநாட் டுயர்வடபாற்
றேனன்றா வெற்பின் சிகரம்போய் - மேனின்று
காண்டகுமா நாடீத்துக் காணநூ றாயிரம்பெய்
தாண்டகைசொற் றான்சிறிதென் றாங்கு".

மேற்சொன்ன வரலாற்றைப் பாடியுள்ளார். மேலும் இவர், இக்குன்று அப்போதைய (1937 இல்) சேலம் மாவட்டத்தில் இருக்கிறது என்று கூறுகிறார். 

***************

இதேபோல யானை மீதேறி கவணால் கல்லெறிந்து, அக்கல் சென்ற இடம்வரை புலவருக்கு நெல்கொடுத்தானாம் ஒரு அரசன். இப்படி படித்த நினைவும் உள்ளது. இனி அதைத்தேடவேண்டும். கிடைத்தால் பதிவிடுகிறேன்.

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

*************

பதிவிற்குதவிய நூல்கள் :


1. பதிற்றுப்பத்து
2. பாரிகாதை
3. சம்பந்தர் தேவாரம்

No comments:

Post a Comment