Saturday, April 25, 2020

தமிழர் திருநாள் உருவான வரலாறு

தமிழர் திருநாள் :


தமிழர்கள் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் தமிழ்ப் புத்தாண்டை தை முதல்நாளில் தொடங்க வேண்டுமென 'தமிழ்க்கடல்' மறைமலையடிகள் முழக்கம் எழுப்பினார்.



தமிழ்நாட்டில் தமிழறிஞர்கள் தமிழரின் வீரத்தை - அறத்தை - முற்போக்குக் கருத்துகளை விதைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். “தமிழர் திருநாள்” என்று பொங்கல் திருவிழாவுக்குப் பெயர் சூட்டுவதற்கு முயற்சி எடுத்தவர்கள் அவர்களே!

1921ஆம் ஆண்டு, பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர் நமச்சிவாயனார் நடத்திய மாநாடு - கலந்தாய்வுக்கு, மறைமலையடிகள் தலைமை தாங்கினார். பல அறிஞர்கள் சேர்ந்து தமிழர்களுக்கு ஒரு ஆண்டு முறை வேண்டும், இப்போதுள்ள சமற்கிருத அறுபது ஆண்டு முறை நமக்குப் பொருந்தாது, அதற்கான புராணக் கதைகள் ஆபாசமானவை என்றுகூறி, தமிழர் ஆண்டு முறையை உருவாக்கினார்கள். யாருடைய பெயரால் உருவாக்குவது என ஆய்ந்து, திருவள்ளுவப் பேராசான் பெயரால் உருவாக்கினார்கள்.

அதேபோல், பொங்கல் விழாவை தமிழர் திருநாளாக கடைபிடிக்க முடிவெடுத்தார்கள்.

 1937ஆம் ஆண்டு, திருச்சியில் நடைபெற்ற அனைத்துத் தமிழர் மாநாட்டில், நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமறையடிகள், பெரியார், திரு.வி.க., “முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதன் உள்ளிட்ட பலரும் பலரும் பங்கேற்றனர். மாநாட்டிற்கு நாவலர் பாரதியார் தலைமை தாங்கினார். அதில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்று, தமிழர் திருநாளாக பொங்கல் விழாவைக் கடைபிடிப்பது! இன்னொன்று, தமிழ்நாடு தமிழருக்கே என முழக்கம் கொடுப்பது! இரண்டாவது தீர்மானத்தின் படியே, 1938 சென்னை கடற்கரையில் மறைமலை அடிகள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில், “தமிழ்நாடு தமிழருக்கே” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தை மறைமலையடிகள் முன்மொழிந்தார். பெரியாரும், நாவலர் பாரதியாரும் வழிமொழிந்து பேசினர்.

தைப்பொங்கல் நாளினை தமிழர் திரு நாளாக கொண்டாட முதல் முழக்கம் எழுப்பியவர் பேராசிரியர் கா.நமச்சிவாயர் ஆவார்.

சென்னை நகரில் தமது பதிப்பகத்திற்கு பாடநூல் எழுதித்தரும் தமிழாசிரியர்களுக்கு சிறப்பு செய்திடும் வகையில் 'தமிழர் திருநாள்' பெயரில் ஒரு விழாவினை நமச்சிவாய முதலியார் நடத்தி வந்தார். அதன் பிறகு தமிழர் திருநாள் பெயரில் விழா கண்டவர்கள்
அண்ணல் தங்கோவும், ம.பொ.சி.யும் ஆவார்கள்.

1937ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ உலகத் தமிழ் மக்கள் பேரவையினை தோற்றுவித்து "உலகத் தமிழ் மக்களே ஒன்று சேருங்கள்" என்றும், "தமிழ்த்தாயை தனியரசாள வையுங்கள் " என்றும் கொள்கை முழக்கமாக வரையறுத்தார்.

அவற்றை தமிழர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் அவ்வாண்டிலிருந்தே தமிழர் திருநாள் விழா , தமிழர் நிலப் பெருவிழா என்ற பெயரில் தைத்திங்கள் முதல் நாளில் தமது பேரவையின் சார்பில் விழா நடத்தினார். அவ்விழாவில் தமிழ்ப் பேரறிஞர்களை அழைத்து தமிழ்மொழி , தமிழின உணர்வை ஊட்டினார்.

தமிழறிஞர் கா.நமச்சிவாயர் வழியில் தமிழர் திருநாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் தம் வாழ்நாள் இறுதிவரை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய பெருமை அண்ணல் தங்கோ அவர்களுக்கே உண்டு.

அதேபோல் 1946இல் ம.பொ.சி. "தமிழரசு கழகம்" எனும் பெயரில் அமைப்பொன்றை தொடங்கினார். தமிழர் திருநாள் விழா கொண்டாட அறை கூவல் விடுத்ததுதான் தமிழரசு கழகத்தின் முதல் பணியாகும்.

ம.பொ.சி. அவர்கள் தமிழினத்தை ஒன்றுபடுத்தி தட்டியெழுப்புவதற்காக 'தமிழர் திருநாள்' விழாவினை நடத்த முடிவு செய்தார். தமிழரசு கழகத்தின் சார்பில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்.

அதில்,

"தைத் திங்கள் முதல் நாளைத் தமது நாட்டுத் திருநாளாக கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு அம்முதற் பெருநாள் 1947, சனவரி 14 அன்று வருவதால் இம்முறை தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலும் சிறப்பாக நிகழ்பெறல் வேண்டும். காரணம் அது தமிழ்நாட்டிற்கெனச் சுயநிர்ணய அறிக்கையை யை உறுதி செய்வதாகும்." என்றார்.
1947 சனவரி 14இல் அறிவித்தபடி தமிழர் திருநாள் விழா தமிழகமெங்கும் நடத்தப்பட்டது.

(தகவல்: ம.பொ.சி. எழுதிய 'எனது போராட்டம்' நூலிலிருந்து)

*********

தமிழின் மூன்றுநிலை எழுத்துகளில் எழுதிப்பதிவிட்டுள்ளேன்.


௧) முதல்வரி, ஈராயிரமாண்டுகளுக்கு முன் வழக்கிலிருந்த பழந்தமிழெழுத்து "தமிழி".

௨) இரண்டாம்வரி, ஆயிரமாண்டுகளுக்கு முன் வழக்கிலிருந்த தமிழெழுத்து "வட்டெழுத்துத்தமிழ்".

௩) மூன்றாம்வரி, தற்போது வழக்கிலிருக்கும் தமிழெழுத்து "தமிழ்".


நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment