இல்லந்தோரும் தமிழ்நாட்டுக்கொடியேற்றுவீர் :
தமிழ்நாடுநாளைப் பற்றிய வரலாற்றைப் பலரும் பதிவிடுகின்றனர், நன்று. நானும் அதையே பதிவிடாமல் சுருக்கமாக முடிக்கிறேன்.
"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகு" என்று தமிழ்நாட்டெல்லைகளை தொல்காப்பியப் பாயிரம் பாடுகிறது.
"வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,"
என்று புறநானூற்றின் ஆறாம் பாட்டு, தமிழ்நாட்டின் வடக்கெல்லை இமயமலைவரை என்று கூறுகிறது.
மேற்சொன்ன, நம்நாட்டெல்லைகளை காக்காதது நம் இயலாமையே. எனவே நம்நிலம் சுருங்கியது.
ஆங்கிலேயர் நமக்கு விட்டுச்சென்ற, தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த மெட்ராசு மாகாணத்தின் நிலப்பரப்பு 3.67 இலட்சம் சதுர கி.மீ.
இந்தியா 1956 - நவம்பர் 1-ல் நமக்கு அளித்த மெட்ராசு மாநிலம் (பின்பு தமிழ்நாடு) 1.30 இலட்சம் சதுர கி.மீ.
தமிழர்கள் தங்கள் நிலப்பரப்பை இழந்த இந்தநாளை எப்படிக்கொண்டாட முடியுமென்ற எண்ணமே நம்முள் இருந்தது இந்நாள்வரை. ஆனால், இதைக்கொண்டாடாமையால் மனத்திற்குள் ஒரு ஓரமாய் வருத்தம் இருந்துகொண்டுதான் இருந்தது.
பிரிந்துசென்ற பிறரே கொண்டாடும்போது நமக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்த்துக்கொள்ள நாமும் "தமிழ்நாடுநாள்" என்றவொரு நாளை பெருவிழாநாளாகக் கொண்டாடுவோம். மக்களாட்சி ஒன்றியத்தில் நாம் இழந்த மண்ணை இனிமீட்பதென்பது இயலாத ஒன்றே. இருக்கும் மண்ணைக் காத்துக்கொள்வோம். ஆனால், தற்போது நடப்பது வேறு. சட்டத்தின் அடிப்படையில் இல்லையென்றாலும், தமிழ்நாட்டில் அயலாரின் குடியேற்றத்தால் நாம் நம் மண்ணை இழந்துக்கொண்டிருக்கிறோம். இதை முதலில் தடுக்கவேண்டும். தமிழ்நாட்டரசு சிறப்புச்சட்டமியற்றி அயலாரை வெளியேற்றியும், அயலார் இனி இங்கு குடியேறாவண்ணம் தமிழ்நாட்டைச் சட்ட அரண்கொண்டு காக்கவேண்டும்.
நடுவண் பா.ச.க அரசின் கைப்பாவையாக எடப்பாடியாரின் அரசு செயல்பட்டாலும், "தமிழ்நாடுநாள்" அரசகட்டளை பிறப்பித்து கொண்டாடச்செய்த தமிழ்நாட்டரசிற்கு நன்றி.
இவ்வாண்டுமுதல் தமிழ்நாடுவிழாவை வெகுசிறப்பாய் கொண்டாடவேண்டும். அரசால் தமிழ்நாட்டுக்கென்று தனிக்கொடி உருவாக்கி, அரசு அலுவலகங்கள், பள்ளிக்கல்லூரிகளென எங்கும் தமிழ்நாட்டுக்கொடி ஏற்றப்படவேண்டும். பள்ளிநூல்களில் பாடமாக வைக்கவேண்டும்.
தமிழ்நாட்டுப் பொதுமக்கள் தங்கள் இல்லந்தோரும் தெருக்கள்தோரும் ஊர்தோரும் தமிழ்நாட்டுக்கொடியை ஏற்றிவைக்கவேண்டும். மக்கள் அனைவரும் தமிழ்நாடுநாளையும் கொடியையும் அறிந்துவைத்திருக்கவேண்டும்.
நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment