தொல்காப்பியத்தின் காலம்:
Milutin Milankovic எனும் செர்பிய அறிஞரின் வானிலை பருவ சுழற்சி கோட்பாட்டு படி தொல்காப்பியத்தின் காலத்தைத் துல்லியமாகக் கணக்கிடவியலும். தொல்காப்பியம் கூறும் ஆறு பெரும்பொழுது(பருவங்)களில் கார்காலத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
"காரும் மாலையும் முல்லை"
என்று வரும் தொல்காப்பிய நூற்பாவுக்குப் பொருளுரைக்கும் இளம் பூரணர்,
“காராவது மழை பெய்யும் காலம். அஃது ஆவணித் திங்களும் புரட்டாசித் திங்களும்.”
என்று வரையறுத்துக் கூறுகிறார்.
இளம்பூரணரின் காலம் கி. பி. 11ஆம் நூற்றாண்டு. இதனால், அவரது உரையில் கூறப்படும் கார்காலத்தில் ஆவணியும் புரட்டாசி யுமே கார்காலமாயிருந்திருக்குமோ எனும் கேள்வி எழத்தான் செய் கிறது.. ஆனால், தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்தில் ஆவணியும் புரட்டாசியும்தான் கார்காலமா யிருந்ததெனக் கூறலாகாது.
இன்றோ, தென்மேற்குப் பருவமழை ஏறத்தாழ சூன் 1 அன்று (வைகாசி மாத இறுதியில்) தென்சேரலத்தில் தொடங்குகிறது. அதாவது, இளவேனில் பருவத்திலேயே அது தொடங்குகிறது. சூலை 15 அன்று (ஆனி மாதத்தின் இறுதியில்) அத் தென்மேற்குப் பருவமழை இந்தியத் துணைக்கண்டம் முழுவதற்குமாகப் படர்கிறது.25
அதேபோன்று, வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 20 அன்று (ஐப்பசி மாதத்தின் பிற்பகுதியில்) தொடங்குகிறது. அதாவது, இன்று அது கூதிர்காலத் தொடக்கத்தில் பெய்யத் தொடங்குகிறது. இப் பருவ மழைக்காலங்களை மே மாதம் முதல் செப்தம்பர் (அதாவது, வைகாசி முதல் புரட்டாசி) வரையில் நீடிக்கிற கோடைப் பருவமழை (Summer Monsoon) என்றும், அக்டோபர் முதல் நவம்பர் (ஐப்பசி-கார்த்திகை) வரை நீடிக்கிற குளிர்காலப் பருவமழை (Winter Monsoon) என்றும் வகைப்படுத்துகின்றனர்.
தமிழர்கள் வரையறுத்த பெரும்பொழுதுகள் (பருவங்கள்) ஆறு. அவை 2014-2015ஆம் ஆண்டில் இவ்வாறு இருந்தன:
2014 சித்திரை ஏப்ரல் 14- மே 14 }
} இளவேனில் வைகாசி மே 15-சூன் 14 }
ஆனி சூன் 15-சூலை 16 }
} முதுவேனில்
ஆடி சூலை 17-ஆகத் 16}
ஆவணி ஆகத் 17-செப் 16 }
} கார்
புரட்டாசி செப் 17-அக்டோ 17}
ஐப்பசி அக்டோ 18-நவம் 16 }
} கூதிர்
கார்த்திகை நவம் 17-திசம்பர் 15}
2014-15 மார்கழி திசம் 16-சன 14 }
} முன்பனி
தை சன 15-பெப் 12 }
மாசி பெப்ரு 13-மார்ச் 14}
} பின்பனி
பங்குனி மார்ச் 15-ஏப்ரல் 13 }
வடவெல்லை
வடவேங்கடம் என்பது விந்தியமலையைக் குறிக்கும். ‘வெப்பத்தைக் கடத்தும் மலை’ என்று பொருள்படுகிற 'வெம்+கடம்' என்பதே ‘வேங்கடம்’ என்றானதாம். ஆனால், 'தென்வேங்கடம்' என்பது திருப்பதி மலையைக் குறிக்கும். இதனடிப்படையில் பார்த்தால்,
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து26
என்ற தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் ‘வடவேங்கடம்’ என்பது விந்தியமலையைத்தான் குறிக்கும். மிகத் தொன்மையான தொல்காப்பியத்திற்குக் கி. மு. 9ஆம் நூற்றாண்டில்தான் பாயிரம் எழுதப்பெற்று நூலின் முன்பு ஒட்டப்பட்டது. 'தொல்காப்பியத்தின் காலம்' எனும் நூலில் நான் அதைப்பற்றி விரிவாக வழக்குரைத்துள்ளேன்.
இளம்பூரணரின் கூற்றின்படி ஆவணியும் புரட்டாசியுமே கார் காலம் என்று இருந்திருக்குமாயின், அது தென்மேற்குப் பருவமழைக் காலத்தின் பிற்பகுதியாகும். சூன் 1 அன்று தென்சேரலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதை வைத்துப் பார்த்தால், வைகாசி பிற்பகுதியிலிருந்து ஆடி முற்பகுதி வரையிலான இரண்டு மாதங்களே தென்னிந்தியாவில் கார்காலமாயிருந்திருக்கும். தென்மேற்குப் பருவமழை சூலை 15 அன்று இந்தியத் துணைக்கண்டம் முழுதுமாகப் படர்வதை வைத்துப் பார்த்தால், அக் கார்காலம் ஏறத்தாழ ஆடியும் ஆவணியும் அடங்கிய இரண்டு மாதங்களாயிருந்திருக்கும்.
சூன் 1 அன்று கார்காலம் தொடங்கியதென வைத்துக்கொண்டால், இளம்பூரணர் சொல்வதைப்போல் ஆவணியும் புரட்டாசியும் கார்காலமாவதற்கு இரண்டரை மாதக் காலம் தள்ளிப் போயுள்ளது.
மீயண்மை ஞாயிறு (Perihelion) இருக்கின்ற இடத்தைத் தழுவி ஒரு பருவம் ஒரு மாதம் தள்ளிப்போவதற்கு 1,800 ஆண்டுகள் பிடிக்குமென 'மிலங்கோவிச் பருவச் சுழற்சிக் கோட்பாடு' கூறுகிறது. அதன்படி, கார்காலம் இரண்டரை மாதங்கள் தள்ளிப்போவதற்கு 4,500 (=2.5x1,800) ஆண்டுகளாகி யிருக்கும்.
இந்தியா முழுவதும் கார்காலம் சூலை 15 அன்று தொடங்கியதென வைத்துக்கொண்டால், இளம்பூரணரின் கூற்றுப்படி ஆவணியும் புரட்டாசியும் கார்காலம் ஆவதற்குக் அக் கார்காலம் ஒன்றரை மாதக் காலம் தள்ளிப் போயுள்ளது. இவ்வாறு ஒன்றரை மாதங்கள் தள்ளிப்போவதற்கு 2,700 (= 1.5x1,800) ஆண்டுகள் பிடித்திருக்கும்.
வடகிழக்குப் பருவமழை என்றாயின் ...
வடகிழக்குப் பருவமழைதான் தமிழகத்தின் தலையாய மழைக்காலமென வைத்துக்கொண்டால், அக்டோபர் 20 அன்று தொடங்கும் அக் கார்காலம் ஐப்பசி மாதத்தின் பிற்பாதியில் (அக்டோபர் முற்பாதி), தொடங்கி மார்கழி மாதத்தின் முற்பாதி (திசம்பர் பிற்பாதி) வரையில் என்ற இரண்டு மாதங்களாயிருக்க வேண்டும். இவ்வாறாயின், இளம்பூரணர் குறிப்பிடும் கார்காலம் இரண்டரை மாதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கார்காலம் இவ்வாறு இரண்டரை மாதங்கள் தள்ளிப்போவ தற்கு 4,500 (=2.5x1,800) ஆண்டுகள் பிடித்திருக்கும்.
கார்காலம் ஆவணியும் (ஆகத்து பிற்பாதி-செப்தம்பர் முற்பாதி) புரட்டாசியும் (செப்தம்பர் பிற்பாதி-அக்டோபர் முற்பாதி) அடங்கிய தெனக் கூறும் இளம்பூரணர், இப்போதைக்கு 900 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர். ஆகவே, இரண்டரை மாதங்கள் தள்ளிப்போவதற்கு ஆகும் 4,500 (=2.5x1,800) ஆண்டுகள், இளம்பூரணரின் காலமாகிய கி. பி. 11ஆம் நூற்றாண்டுடன் (அதாவது, 900 ஆண்டுகளுடன்) பொருந்தவில்லை. அதாவது, அவர் வாழ்ந்த காலத்திற்கும் மேற்கூறிய கணக்கிற்கும் இடையில் 3,600 (4,500 - 900 = 3,600) ஆண்டுகள் துண்டு விழுகிறது.
ஆனால், ஆங்கிலேயர் ஆட்சியின்போதுதான் தமிழகத்தின் வடவெல்லை திருவேங்கடம் (திருப்பதி) என்று தமிழறிஞர்களால் சுருக்கப் பட்டது. திருவேங்கடமே தமிழகத்தின் வடவெல்லை என்றான பிறகே ஐப்பசி மாதப் பிற்பகுதியில் (அக்டோபர் 20 அன்று) தொடங்கும் வட கிழக்குப் பருவமழைக்காலமே தமிழகத்தின் பெருமழைக் காலம் ஆனது. மேலும், அக்டோபர் 20 அன்று பெய்யத் தொடங்குகிற வடகிழக்குப் பருவமழை, வெறும் 50 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கிறது.34
இதனால், இளம்பூரணரின் காலத்தில், வடவேங்கடம் எனப் பட்ட விந்தியமலைதான் தமிழகத்தின் வடவெல்லையாக இருந்திருக்க வேண்டும். அதாவது, தென்மேற்குப் பருவமழையே இளம்பூரணரின் காலத்தில் தமிழரின் தாயகத்திற்குத் தலையாய மழைக்காலமா யிருந் திருக்க வேண்டும்.
இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமென்று இருந்த தமிழரின் தேயம் தேய்ந்து தேய்ந்து இன்று அதன் தென்கோடியில் குன்றி நிற்கிறது. இதனால், தென்மேற்குப் பருவமழைப் பொழிவு தமிழகத்தில் குறைவாயுள்ளது. ஆனால், தமிழரின் தேயம் இந்தியத் துணைக்கண்டம் முழு வதுமென இருந்தபோது, தென்மேற்குப் பருவமழைப் பொழிவே தலையாய மழைக் காலமாயிருந்திருக்கும்.
மீயண்மை ஞாயிறு இன்று முன்பனிக்காலத்தில் (மார்கழியில்) இருக்கிறது. 2015ஆம் ஆண்டில் அது சனவரி 3 அன்று இருந்தது. 1,800 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதத்திலிருந்து அடுத்த மாதத்திற்கு மீயண்மை ஞாயிறு இடம்பெயர்வதை ஏற்கெனவே பட்டியலிட்டுக் காட்டினோம். அதன்படி, தென்மேற்குப் பருவமழை சூலை 15 அன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமாகப் படர்வதையும், 'மீயண்மை ஞாயிறு' 10,800 ஆண்டுகளுக்குமுன் சூலை மாதத்தில் இருந்ததையும் வைத்துப் பார்த்தால், மிலங்கோவிச் பருவச் சுழற்சிக் கணக்கு மெய்ப்படுகிறது. படம் 13 அதனை உறுதிப்படுத்துகிறது.
தொல்காப்பியத்திலுள்ள இடைச்செருகல்களால் வரும் காலக்குழப்பத்தைத் தள்ளிவிட்டு, வானியல் விளைவிக்கும் பருவ மாற்றங்களை மிலங்கோவிச் சுழற்சிகளை வைத்து ஆராய்ந்தால், தொல்காப்பியத்தின் காலத்தைச் சரிவரக் கணிக்க முடியும். அதன்படி, தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலம் இற்றைக்கு 10,800 ஆண்டுகளுக்கு முன்பு என்று இருத்தல் வேண்டும்.
அறிஞர் குணா.
No comments:
Post a Comment