Saturday, April 25, 2020

திணையும் நிலமும் வேறு

திணையென்பதும் நிலமென்பதும் ஒன்றல்ல வெவ்வேறு :


நானிலம் :


முல்லை
குறிஞ்சி
மருதம்
நெய்தல்

ஐந்திணை :


முல்லை
குறிஞ்சி
மருதம்
நெய்தல்
பாலை

தொல்காப்பியத்தின் படி, அகத்திணை 7, புறத்திணை 7. திணை என்பதை நிலம் என்று சொல்லவில்லை, மக்களின் ஒழுக்கத்தை வைத்தே வரையறுக்கிறார். திணை என்றால் ஒழுக்கமே, நிலமன்று. இவற்றின் உரிப்பொருள்.

கைக்கிளை - ஒருதலைக்காமம்
முல்லை - இருத்தல்
குறிஞ்சி - புணர்தல்
பாலை - பிரிதல்
மருதம் - ஊடல்
நெய்தல் - இரங்கல்
பெருந்திணை - பொருந்தாக் காமம்

தொல்காப்பியர், இவ்வேழில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலாகிய நான்கனுக்கு மட்டுமே முதற்பொருள் (நிலம்), வகுத்தார். ஆனால், பாலைக்கு நிலம் வகுக்காது பொழுதை மட்டுமே வகுத்தார். பாலைத்திணைக்கு நிலம் பாலை என்று உரையாசிரியன்மார் உரை செய்தனர். கைக்கிளையும், பெருந்திணையும் எல்லா நிலத்தும் சிறுபான்மையாகவும் பெரும்பான்மையாகவும் நிகழ்வதால் இவ்விருதிணைக்கென்று தனியாக நிலம் வகுக்கப்படவில்லையென்று இளம்பூரணனார் உரை செய்துள்ளார்.

வெட்சிதானே குறிஞ்சியது புறனே
வஞ்சிதானே முல்லையது புறனே
ஊழிஞைதானே மருதத்துப் புறனே
தும்பைதானே நெய்தலது புறனே
வாகைதானே பாலையது புறனே
காஞ்சிதானே பெருந்திணைப் புறனே
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே

என்று எவ்வெவ்வகத்திணைக்கு ஒப்பன எவ்வெப்புறத்திணை என்று தொல்காப்பியர் வகுத்தார். இங்கு எப்புறத்திணைக்கு எவ்வகத்திணை என்று வகுத்தாரோ அவ்வகத்திணையின் நிலத்தைக் கொள்ளல்வேண்டும். இங்கும், காஞ்சித்திணையும், பாடாண்திணையும் எந்தவொரு குறிப்பிட்ட நிலத்து மன்னர்க்கு மட்டும் பொருந்துவனவல்ல. நானிலத்து மன்னர்க்கும் பொருந்தும். அதனால் இவ்விருதிணைக்கும் நிலம் வகுக்கவியலாது. இவ்வேழ்புறத்திணையின் ஒழுக்கம் உமக்கே தெரியுமேன நினைக்கிறேன்.
ஆகவே, திணை என்பது நிலத்தைக்குறிப்பதல்ல, மக்கள் மட்டும் மன்னர் ஒழுக்கத்தைக்குறிப்பதே. ஒழுக்கம் என்பதை ஒழுகுதல், முறை, செயல் என்று பொருள்கொள்ளல்வேண்டும்.

மேலும், ஐயமிருப்பின் தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணை, புறத்திணையியல்களைக்காண்க.

No comments:

Post a Comment