Saturday, December 26, 2020
திருப்புகழ் 1124
திருப்புகழ் 1124 🌺🌺🌺
தனதனன தந்தந்த தத்ததன
தனதனன தந்தந்த தத்ததன
னதனன தந்தந்த தத்ததன ...... தத்ததன தான
🌷🌷🌷🌺🌺🌺🌹🌹🌹🏵️🏵️🏵️🌷🌷🌷
அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு ...... மாய
அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு ...... காலம்
நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு ...... மானும்
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் ...... வாயே
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
குதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு ...... தீதோ
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
ரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி ...... யாவும்
மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு ...... கோடி
முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த ...... பெருமாளே.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
பாடுபவர் : சிவத்திரு (சிவஸ்ரீ கந்தப்பிரகாசு)
இடையீர் போகா இளமுலை யாளையோர்
புடையீ ரேபுள்ளி மானுரி
உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்
சடையீ ரேயும தாளே.
-- காழியர்கோன்
"வைய மீன்ற தொன்மக்க ளுளத்தினைக்
கையினா லுரை கால மிரிந்திடப்
பைய நாவை யசைத்த பசுந்தமிழ்
ஐயை தாடலைக் கொண்டு பணிகுவாம்”
வையம் ஈன்ற தொன்மக்கள் உளத்தினை
கையினாலுரை காலம் இரிந்திட
பைய நாவை அசைத்த பசுந்தமிழ்
ஐயை தாள்தலைக் கொண்டு பணிகுவாம்.
--- பெரும்புலவர் நீ.கந்தசாமியார்
"கரந்தைக்கட்டுரைகள்" என்னும் நூலிலிருந்து
தொல்காப்பியம் - மொழிமுதல் மொழியீறு விதிகள்
தொல்காப்பியம் - மொழிமுதலாகும் மற்றும் மொழியீறாகும்
தொல்காப்பியத்தில் மொழிமுதலாகும் மற்றும் மொழியீறாகும் எழுத்துகள் அதாவது சொற்கள் தொடங்கும் மற்றும் முடியும் எழுத்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் விரிவு பின்வருமாறு.
நூல் : தொல்காப்பியம்
அதிகாரம் : எழுத்து
இயல் : மொழிமரபு
மொழிமுதலாகும் எழுத்துகள் : முதனிலை
பன்னீர் உயிரும் மொழி முதல் ஆகும். 26
உயிர் மெய் அல்லன மொழி முதல் ஆகா. 27
க த ந ப ம எனும் ஆவைந்து எழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே. 28
சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே
அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே. 29
உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர்
வ என் எழுத்தொடு வருதல் இல்லை. 30
ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய. 31
ஆவொடு அல்லது யகரம் முதலாது. 32
முதலா ஏன தம் பெயர் முதலும். 33
குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். 34
முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது
அப் பெயர் மருங்கின் நிலையியலான. 35
மொழியீறாகும் எழுத்துகள் : இறுதிநிலை
உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும். 36
க வவொடு இயையின் ஔவும் ஆகும். 37
எ என வரும் உயிர் மெய் ஈறாகாது. 38
ஒவ்வும் அற்றே ந அலங்கடையே. 39
ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை. 40
உ ஊகாரம் ந வவொடு நவிலா. 41
உச் சகாரம் இரு மொழிக்கு உரித்தே. 42
உப் பகாரம் ஒன்று என மொழிப
இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே. 43
எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே. 44
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும்
அப் பதினொன்றே புள்ளி இறுதி. 45
உச் சகாரமொடு நகாரம் சிவணும். 46
உப் பகாரமொடு ஞகாரையும் அற்றே
அப் பொருள் இரட்டாது இவணையான. 47
வகரக் கிளவி நான் மொழி ஈற்றது. 48
மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப
புகர் அறக் கிளந்த அஃறிணை மேன. 49
இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் பின்வரும் நூற்பாக்களையும் யாத்தார் தொல்காப்பியர்
தொல்காப்பியம் - எழுத்து - புணரியல்
மூன்று தலை இட்ட முப்பதிற்று எழுத்தின்,
இரண்டு தலை இட்ட முதல் ஆகு இருபஃது,
அறு-நான்கு ஈ-ற்றொடு நெறி நின்று இயலும்
எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்,
மெய்யே, உயிர், என்று ஆயீர் இயல.1
அவற்றுள்,
மெய் ஈறு எல்லாம் புள்ளியொடு நிலையல். 2
பொருள்:
நூன்மரபினுட் கூறப்பெற்ற முப்பத்து மூன்று எழுத்துக்களுள் இருபத்திரண்டு எழுத்துக்களை முதலாகவும், இருபத்து நான்கு எழுத்துக்களை ஈ-றாகவும் கொண்டு நெறியாக இயங்கும் எல்லா மொழிகட்கும், இறுதியும் முதலுமாக நிற்கும் எழுத்துக்கள் (தொகுத்துநோக்கின்) மெய்யும் உயிரும் என்று சொல்லப்பட்ட அவ்இரண்டு இலக்கணத்தனவாகும்.
எழுத்துவகையான் இருபத்திரண்டும் இருபத்து நான்கும் என நின்றவை இனக்குறியீட்டு வகையான் இரண்டாக நிற்கும் என்றவாறு.
முதலாகும் இருபத்திரண்டாவன:
உயிர் பன்னிரண்டு,
மெய் ஒன்பது,
மொழி முதற் குற்றுகரம் ஒன்றுமாம்.
ஈறாகும் இருபத்துநான்காவன:
உயிர் பன்னிரண்டு,
மெய் பதினொன்று,
மொழியிறுதிக் குற்றியலுகரம் ஒன்றுமாம்.
முதனிலையும் இறுதி நிலையும் நோக்கி மெய்யெனப் பொதுப்படக் கூறினாராயினும் "அப்பதி னொன்றே புள்ளி யிறுதி"எனவும், “மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்"எனவும், "உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா"எனவும் கூறுதலான். இறுதி நிற்பது புள்ளிமெய் என்றும், முதல் நிற்பது உயிர்மெய் என்றும் உணர்ந்துகொள்க.
மேலும் புணரியலில்,
குற்றியலுகரமும் அற்று என மொழிப. 3
உயிர்மெய் ஈறும் உயிர் ஈற்று இயற்றே. 4
உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும்
உயிர் இறு சொல் முன் மெய் வரு வழியும்
மெய் இறு சொல் முன் உயிர் வரு வழியும்
மெய் இறு சொல் முன் மெய் வரு வழியும் என்று
இவ் என அறியக் கிளக்கும் காலை
நிறுத்த சொல்லே குறித்து வரு கிளவி என்று
ஆயீர் இயல புணர் நிலைச் சுட்டே. 5
என்றும் நிறுவுகிறார்.
நன்றி. வணக்கம்.
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
உதவி: தொல்காப்பியம் நூல் மற்றும் வலைத்தளம்
மனு(அ)தர்ம சாத்திரம் எரிப்புநாள்
மனுநூல் எரிப்புநாள் இன்று (25.12.1927)
"மனுசுமிருதியிலும் இவை போன்ற நூல்களிலும் கூறப்பட்டுள்ள செய்திகள் நாகரிகமற்றவையாகவும் இழிவினும் இழிவானவையாகவும் உள்ளன. இதைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அவற்றை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தக் கண்டனத்துக்கு அறிகுறியாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தத் தீர்மானிக்கிறோம்" என்று முழக்கமிட்டு மகாராட்டிரா மாநிலம் மகத் நகரில் கூடிய சத்யாகிரகிகளின் மாநாட்டில் அம்பேத்கர் தலைமையில் மனுசுமிருதியை எரித்த நாள் 1927 டிசம்பர் 25.
சகஸ்திரபுத்தே என்கிற பார்ப்பனர், சூத்திரர்களுக்கான நியதிகள் குறித்து மனு(அ)நீதியில் கூறப்பட்டுள்ளதை படித்துக்காட்டி அம்பேத்கரின் கருத்துக்கு வலுசேர்த்தார். இந்தப் பின்னணியிலேயே மனு(அ)தர்மம் நூல் எரிக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு முன்பே, மனுசுமிருதியை கொளுத்தி சாம்பலை கடலில் கரைத்துவிட வேண்டும் என்கிற முதல் கலகக்குரல் 17.10.1927இல் காட்பாடியில் நடந்த ஆதிதிராவிடர் மாநாட்டில் ம.சி.ராசாவிடமிருந்து வெடித்தது. மகத்துக்கும் முன்னதாகவே 4.12.1927இல் குடியாத்தத்தில் கூடிய சுயமரியாதைக்காரர் மாநாட்டில் ஜே.எஸ்.கண்ணப்பர் மனுசுமிருதியைக் கொளுத்தினார். ஆனால், மகத்தில் மனுசுமிருதி எரிக்கப்பட்டதால் நாடே அதிர்ந்தது.
வெறும் நூலை நாம் எரிக்கிறோம். ஆனால், மக்களின் மனங்களில் இந்த இழிநால்வண்ணக்கோட்பாட்டையும், அதன் கொடுமைகளையும் இன்னும் எரிக்கமுடியவில்லை.
Friday, December 25, 2020
திருக்காழியின் பன்னிருபெயர்கள்
காழியின் பன்னிருபெயர்கள் :
சொல்லினிய ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்கள்ஊர் வேலொத்த கண்ணார் விளங்கும்ஊர் - ஆலித்து மன்னிருகால் வேலை வளர்வெள்ளத் தும்பரொடும் பன்னிருகால் நீரில் மிதந்தவூர்
௧) மன்னும் பிரமனூர்
௨) வேணுபுரம்
௩) பேரொலிநீர் சண்பை
௪) அரன்மன்னு தண்காழி
௫) அம்பொற் சிரபுரம்
௬) பூந்தராய்க்
௭) கொச்சைவயம்
௮) வெங்குருப்
௯) பொங்குபுனல் வாய்ந்தநல் தோணி புரம்
௰) மறையோர் ஏய்ந்த புகலி
௧௧) கழுமலம்
௧௨) பூம்புறவம்
என்றிப் பகர்கின்ற பண்புற்ற தாகித் திகழ்கின்ற மல்லைச் செழுநகரம் மன்னவும்...
-- நாரையூர் நம்பியாண்டார் நம்பிகள்
நீரின் றமையா துலகு - இரு இலக்கியங்களில்
நீரின்று அமையாது உலகு :
இச்சொற்றொடரை படித்தும் பலர்சொல்லக்கேட்டுமிருப்போம் நாம். வள்ளுவப்பெருந்தகை தங்குறளில் வான்சிறப்பின் பத்தாங்குறளில் இத்தொடரை எடுத்தாண்டிருப்பார். ஆகையால், அதைமட்டுமே நாமறிந்திருப்போம். இன்று நற்றிணையைபடிக்கத்தொடங்கியயுடனே, குறிஞ்சித்திணையின் முதற்பாடலில் இஃதே தொடரைக்கண்டேன். இலக்கியங்களில் இதேபொருளைத்தரும் வேறுபலசொற்றொடர்களால் புலவர் பலருஞ்சொல்லி இருக்கலாம். ஆனால், மாறாது அதேசொற்களை இருவீரும் பயன்படுத்தியுள்ளனர். அந்நற்றிணைப்பாவும் அக்குறளும் இங்கே பதிந்துள்ளேன். நன்றி.
நூல் : நற்றிணை
திணை : குறிஞ்சி
நின்ற சொல்லரநீடுதோன் றினியர்
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
"நீரின் றமையா வுலகம்" போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி
நறுநுதல் பசத்த லஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பறி யலரே.
கூற்று : பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.
-- குறிஞ்சிக்கபிலர்
கூற்றின் விளக்கம்:
தலைவன் பிரியக் கருதியதை அறிந்த தோழி தலைவியிடம் அதனைத் தெரிவிக்கிறாள். தலைவனது அன்பையும் மனப்போக்கையும் நன்கறிந்திருக்கும் தலைவி, அவன் பிரியமாட்டான் என உறுதியாகக் கூறுகிறாள்.
உரை:
தோழீ ! நம் காதலர் நிலைமை தவறாத வாய்மையுடையவர்; நெடிதாகத் தோன்றுகின்ற இனிமையுடையவர்; எப்பொழுதும் என் தோள்களைப் பிரியும் அன்னதொரு குணக் குறைபாடிலர்; அத்தகைய மேதக்கோருடைய நட்பு; தாமரையின் தண்ணிய தாதினையும் மேலோங்கிய சந்தனத்தின் தாதினையும் ஊதி, அந்தச் சந்தன மரத்தில் வைத்த இனிய தேன் போலத் திண்ணமாக மேதக்கன ஆதலின்; அவர் நீரையின்றியமையாத உலகியல் போலத் தம்மை யின்றியமையாத நம்பால் முன்பு விருப்பமிக வைத்தருளி; பின்பு பிரிதலால் நம் நறிய நுதல் பசலையூர்தற்கு அஞ்சி; செய்வதறியாராய்த் தடுமாற்றமடைவாரோ?; அங்ஙனம் செய்யார்காண்.
திருக்குறள்:
"நீரின் றமையா துலகெனின்" யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.
- வள்ளுவப்பெருந்தகை
மு.வ உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
நன்றி. வணக்கம்.
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
தமிழிலக்கியத்தில் கடற்கோள் குறிப்புகள்
தமிழிலக்கியத்தில் கடற்கோள் குறிப்புகள் :
பண்டைத்தமிழ்நாடு தன்னளவு சுருங்கியதற்கு கடற்கோளே முதற்கரணியம். இந்நாடு நான்கு பெருங்கடற்கோள்களைக் கண்டதென்று கருதுவர். (அதற்குத் தக்கவுறுதிச்சான்றுகள் இல). இருப்பினும், கடற்கோள் நிகழ்ந்தமைக்கு கலித்தொகையின் முல்லைக்கலியும் மற்றும் சிலப்பதிகாரமும் சான்றுகாட்டி நிற்கின்றன. அவற்றை இங்கே பதிவிட்டுள்ளேன். இற்றைக்குப் பதினாறாண்டுகட்கு முன்பு நாமும் நம்வாழ்வில் ஆழிப்பேரலையோடு ஒருசிறிய கடற்கோளையும் கண்டுவிட்டோம்.
நூல் : கலித்தொகை
கலி : முல்லைக்கலி
பாட்டெண் : 104
"மலிதிரை யூர்ந்துதன்மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்றுமேவார் நாடிடம்படப்
புலியோடு வின்னீக்கிப்புகழ்பொறிந்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கியவாடாச்சீர்த் தென்னவன்"
பொருள்:
முற்காலத்தில் கடல்பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. மேலெசென்று அருகிலுள்ள சேர, சோழ நாடுகளை வென்று புலிக்கொடி, வில்கொடியை நீக்கி புகழுடைய மீன்கொடிநாட்டி பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான்.
*****************
நூல் : சிலப்பதிகாரம்
காண்டம் : மதுரைக்காண்டம்
காதை : காடுகாண்காதை
அடிகள் : 19 - 22
"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையுமிமயமுங் கொண்டு
தென்னிசை யாண்ட தென்னவன்வாழி"
பொருள் :
கொடுங்கடல் சினந்தெழுந்து பஃறுளியாற்றுடனே பல பக்க மலைகளையுடைய குமரிமலையினையும் கொண்து. அதற்குப் பின்னர் பாண்டிய மன்னன் வடதிசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றி கொண்டான்.
உதவி : கலித்தொகை மற்றும் சிலப்பதிகாரம்
தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
*********************
நன்றி. வணக்கம்
Wednesday, December 23, 2020
பாவாணர் போற்றிய பெரியார்
தேவநேயப்பாவாணர் போற்றிய பெரியார் :
தமிழினத்தை முன்னேற்ற மூவர் தோன்றினர். திருவள்ளுவர் தலை, உயர்நிலை மக்கட்குரிய தொண்டாற்றியவர். மறைமலையடிகள் இடைநிலை மக்கட்குரிய தொண்டாற்றியவர். பெரியார் கடைநிலை மக்கட்குரிய தொண்டாற்றியவர்... எனக் கூறிய பாவாணர் இக்கருத்தைக் கீழ்க்கண்டவாறு கவிதையாகவும் வடித்தார்.
தமிழன் விடுதலைத் தலைவர் மூவருள்
அமரும் ஈகையர் அறநூல் வள்ளுவர்
தமியின் மொழியினர் தவநன் மறைமலை
இமிழ்தன் மானியர் இராமசாமியார்
அரிய செயல்களை ஆற்றுவார் தமை
பெரியர் எனச்சொலும் பிறங்கு திருக்குறள்
உரியர் இப்பெயர்க் கொருவர் நேரினே
இரியீ ரோடையர் இராமசாமியார்
இல்லத் திருந்துநல் லின்ப வாழ்வுதும்
செல்வச் சிறப்பினில் சிறிதும் வேட்டிலர்
வல்லைத் தமக்கென வாழ்வு நீக்கினார்
ஒல்லும் வகையெல்லாம் உழைக்க இனவர்க்கே!
மல்லைப் பதவிகொள் மாட்சி யிருப்பினும்
அல்லிற் பகலினில் அடுத்த வழியெலாம்
கல்லிற் சாணியிற் கடுத்த வசவுறுஞ்
சொல்லிற் படும் பொறைச் சூர வாழ்க்கையர்!
மலையெனும் மறை மலையென் அடிகளும்
தலையென் சோமசுந்தரபா ரதியும்பின்
தொலையும் இந்தியைத் தொடர்ந்தொக்கினும்
நிலைசிறந்த திராம சாமியால்!
குடிசெய் வார்க்கிலை கூறும் பருவமே
மடிசெய் தேயவர் மானம் கொளக்கெடும்
இடிசெய் உடம்பு பல்இடும்பைக் கலமெனத்
துடிசெய் தேயவர் தொண்டு பூண்டுளார்!
தானமிட்ட தன் தலைவன் நிலைகெட
ஈனச் சூத்திரன் என்னுந் தீயனை
வானங்காட்டென வணங்குத் தமிழன்தன்
மானங்கெட்டு வழமை கடிந்துளார்!
படிமை மேல்மிகு பாலை ஊற்றலும்
குடுமி மலையெரி கோநெய் கொட்டலும்
கடவுள் தேரினைக் கடத்தலும் முனோர்
கொடை மடம் பகுத்தறிவில் கோளென்றார்!
கட்டுக் கதைகளைக் கடவுள் தொன்மத்தைப்
பாட்டுப் பிட்டவை பிதற்றல் புரட்டலை
வெட்ட வெளிச்சமாய் விளக்கினார் முனம்
பட்டப் படிப்பெலாம் பயனில் குப்பையே!
அடரும் தமிழரோ டணையுந் திரவிடர்
மடமை தவிர்ந்து தன்மான வாழ்வுற
இடர்கொள் ஆர்வலர் இராமசாமியார்
கடவுள் இலையெனக் கழறும் எல்லையே!
- (தமிழிலக்கிய வரலாறு பாவாணர்)
புண்ணூற்றுக் கல்லடியும் சாணக் குண்டும்
பொறுத்தலருஞ் சொல்லடியும் புகழ்போற்
மண்ணாற்றில் கலஞ்செலுத்தும் கடுஞ்செய்கைபோல்
கைதூக்கி தென்னவரை கரையிலேற்றி
தொண்ணூற்று மூன்றாண்டு தொடர்ந்தபின்னும்
துளங்காது துலங்குபகுத் தறிவுத் தொண்டால்
நண்ணூற்றைத் தாண்டவரும் நோற்றலாற்றின்
நானிலத்துப் பெரியாரை வாழ்த்துவோமே!
- (பாவாணர் முதன்மொழி -1:3:1)
******************
நன்றி. வணக்கம்.
Monday, December 21, 2020
சோழர் கண்டராதித்தர் பாடிய தில்லைத்திருவிசைப்பா
கண்டராதித்தசோழர் பாடிய திருவிசைப்பா :
முதலாம் பராந்தகருக்குப்பின்னர், அவர் உயிரோடிருக்கும்போதே அரியணை ஏறியவர் பராந்தகரின் மகன் கண்டராதித்தராவார். பராந்தகர் தில்லைச்சிற்றம்பலத்திற்குப் பொன்வேய்ந்தவ சிவநேயச்செல்வர். அவரின் வழியில் கண்டராதித்தரும் சிவநேயச்செல்வராய் விளங்கினார். தில்லை இறைவன்பால் அன்புகொண்டு ஓர் பதிகம் பாடியுள்ளார். அது சைவத்திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பாவாக நம்பியாண்டார்நம்பிகளால் தொகுக்கப்பட்டுள்ளது. சிவஞான கண்டராத்தித்தன் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளார். இவரைப் புகழ்ந்து ஒட்டக்கூத்தர், கண்டன்கோவை மற்றும் கண்டனலங்காரம் என்றும் இருநூல்களைப் பாடியுள்ளார். இவரின் பட்டத்தரசியார் செம்பியன்மாதேவியாரும் சிறந்த சிவநேயச்செல்வியாவார். பல மரத்தளிகளை கற்றளிகளாகக் கட்டுவித்தவர். இவருக்குப்பின்வந்த சோழவரசர்கள் சிவநெறியில் மிகுந்த ஈடுபாடுகொள்ளவும் சிவனுக்குப் பெருங்கோயில்கள் எடுப்பிக்கவும் முதன்மைக்காரணம் இவ்வம்மையேயாவார். இனி, கண்டராதித்தர் பாடிய தில்லைத்திருப்பதிகமாம் அத்திருவிசைப்பாவைக்காண்போம்.
********************************
சிவநெறிமரபில் கோயிலென்னும் திருத்தில்லை
பண்: பஞ்சமம்
ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா
மின்னார் உருவம் மேல்வி ளங்க
வெண்கொடி மாளிகைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து
நின்றது போலும்என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
தென்றில்லை யம்பலத்துள்
என்னா ரமுதை எங்கள் கோவை
என்றுகொல் எய்துவதே. 1
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி
ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்த ணாளர்
ஆகுதி வேட்டுயர்வார்
மூவா யிரவர் தங்க ளோடு
முன்னரங் கேறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக்
கூடுவ தென்றுகொலோ. 2
முத்தீ யாளர் நான்ம றையர்
மூவா யிரவர்நின்னோ
டொத்தே வாழுந் தன்மை யாளர்
ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டு பாடுந்
தென்றில்லை யம்பலத்துள்
அத்தாவுன்றன் ஆடல் காண
அணைவதும் என்றுகொலோ. 3
மானைப் புரையும் மடமென் னோக்கி
மாமலை யாளோடும்
ஆனஞ் சாடுஞ் சென்னி மேல்ஓர்
அம்புலி சூடும்அரன்
றேனைப் பாலைத் தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக் கொழுந்து தன்னைக்
கூடுவ தென்றுகொலோ. 4
களிவான் உலகிற் கங்கை நங்கை
காதலனே அருளென்
றொளிமால் முன்னே வரங்கி டக்க
உன்னடி யார்க்கருளும்
தெளிவா ரமுதே தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே உன்னை நாயேன்
உறுவதும் என்றுகொலோ. 5
பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப்
பதஞ்சலிக் காட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை பங்கன்
மாமறை யோர்வணங்கச்
சீரால் மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத் தாடுகின்ற
காரார் மிடற்றெம் கண்ட னாரைக்
காண்பதும் என்றுகொலோ. 6
இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன்
இருபது தோளும்இற
மலைதான்எடுத்த மற்றவற்கு
வாளொடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன் றெய்த வில்லி
செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொற் கையி னானைக்
காண்பதும் என்றுகொலோ. 7
வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும்
ஈழமுங் கொண்டதிறற்
செங்கோற் சோழன் கோழி வேந்தன்
செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி ஆடும்
அணிதில்லை யம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம்மி றையை
என்றுகொல் எய்துவதே. 8
நெடியா னோடு நான்மு கன்னும்
வானவரும் நெருங்கி
முடியால் முடிகள் மோதி உக்க
முழுமணி யின்திரளை
அடியார் அலகி னால் திரட்டும்
அணிதில்லை யம்பலத்துக்
கடியார் கொன்றை மாலை யானைக்
காண்பதும் என்றுகொலோ. 9
சீரால்மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத் தாடிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன்
தஞ்சையர் கோன்கலந்த
ஆராஇன்சொற் கண்டரா தித்தன்
அருந்தமிழ் மாலைவல்லார்
பேரா உலகில் பெருமை யோடும்
பேரின்பம் எய்துவரே. 10
இறைவன் : அழகியகூத்தர்
இறைவி : சிவகாமவழகி
*****************************
நன்றி. வணக்கம் 🙏
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
தமிழரின் மானவுணர்வும் வீரமும்
புறநானூறு ௭௪(74)
நாம் அனைவரும், தமிழரின் வீரத்திற்குச் சான்றாக ஒரு செய்தியை காலங்காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அது, தமிழர்குடியில் ஒரு குழந்தை இறந்துப்பிறந்தாலோ அல்லது பிறந்து குழந்தையாகவே இறந்தாலோ, அதை அப்படியே புதைக்காமல் வீரத்தின் அடையாளமாக அக்குழந்தையின் நெஞ்சை வாளால் கீறி, விழுப்புண்படுத்தியபிறகே புதைப்பராம். அப்பேர்ப்பட்ட வீரஞ்செறிந்தவர்கள் நாங்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம்.
ஆம். உண்மைதான். அதற்கு சான்று ஏது? எப்படி இதைச் சொல்கின்றனர்? இவ்வழக்கம் தமிழர் பண்பாட்டில் இருந்ததென்று யார்சொன்னது? வரலாற்றுச்சான்றுகள் எங்குள்ளது? என்ற இந்த வினாக்களைத்தொடுத்தால் நம் யாருக்கும் விடை தெரியாது. ஆனால், இச்செய்தியை மட்டும் சொல்லிக்கொண்டு பெருமைபேசமட்டும் நன்றாகத்தெரியும். சான்றில்லாமல் எதையும் பேசக்கூடாது.
இதையெல்லாம் தெரிந்துவைத்திருக்கவேண்டுமென்று அறிவிலியேன் யான் அவாவுற்றிருந்தேன். பன்னாட்களாகத் தேடியும்வந்தேன். இன்று, புறநானூற்றைப் புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்தபோது, அவ்வரிய சான்றுடைய பாட்டொன்று என்கண்களில் தென்பட்டது. அதுவே புறநானூற்றுத்தொகுப்பில் 74ஆவதாகிய இப்பாட்டு. இதுபோல் பலபாட்டுகளிருக்கலாம், ஆனால் என்கண்களில்பட்டது இஃதொன்றே.
இதோ நான் கண்ணுற்ற அப்பாட்டை உங்கள் பார்வைக்குப் பதிகிறேன்.
சேரமான் கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணானோடு போர்புரிந்து குடவாயிற்கோட்டத்துச் சிறையில் கிடந்து, மானமிழந்ததாகவெண்ணி 'தண்ணீர் தா' என்று கேட்காமல் நீர் குடிக்காது தன்னை மாய்த்துக்கொள்வதற்குமுன் பாடிய பாட்டு.
புறம் 74:
பாடியவர் : சேரமான் கணைக்காலிரும்பொறை
திணை : பொதுவியல்
துறை : முதுமொழிக்காஞ்சி
'தாமே தாங்கிய தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவார் இளம்பூரணர்.
செய்யுள் :
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?
விளக்கம் :
பிறந்த குழந்தை இறந்தாலும், உணவுப் பிண்டமாகக் குழந்தை பிறந்தாலும் பிறந்தது வீரம் உடையதன்று என எண்ணி அதனை வீரமுடையதாக ஆக்க அதனை வாளாள் வெட்டி ஈமக்கடன் செய்வது வழக்கம். நானோ சங்கிலியால் கட்டிய நாய்போல் இழுத்துக் கொண்டுவரப்பட்டேன். மேலும் நெஞ்சில் உரம் இல்லாமல் என் வயிற்றுப்பசி அடங்க சிறுபதம்(தண்ணீர்) கேட்டு உண்ணும் நிலைக்கு ஆளானேன். இந்த ஈன நிலையைப் பெறவேண்டுமா?
(சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டு, குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து, 'தண்ணீர் தா' என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக் கொண்டிருந்து
உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு)
நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
Sunday, December 6, 2020
தமிழ்மொழியால் உலகாண்ட சேரன் செங்குட்டுவன்
தமிழ்மொழிகொண்டு உலகாண்ட சேரன் :
"குமரியொடு வட விமயத்து
ஒருமொழி வைத்து உலகாண்ட
சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச்
சோழன்மகள் ஈன்ற மைந்தன்
கொங்கர் செங்களம் வேட்டுக்
கங்கை பேர்யாற்றுக் கரைப்போகிய
செங்குட்டுவன்"
-- சிலம்பு - வஞ்சி - வாழ்த்துக்காதை.
தென்குமரியோடு வடபனிமலை வரையில் ஒரேமொழியாம் தமிழைக்கொண்டு ஆண்டானாம் சேரன் செங்குட்டுவன். ஆனால் இன்று, நம்மையே இந்தி படிக்கச்சொல்கிறார்கள். நம்மரசு இந்தியை வளர்க்கிறது. 😡😡😡
நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன்
Thursday, December 3, 2020
ஒன்பான் புலவரும் புரவலரும்
புரவலரும் புலவரும் :
புலவர்:
புலவர் என்போர், செய்யுள்களை (நூல்கள்) இயற்றும் புலமையுடையோர்.
புரவலர்:
புரவலரென்போர் அந்த நூல்களை இயற்றும் புலவர்களுக்கு பொருளுதவியோடு பிறவுதவிகளனைத்தும் செய்வோர். (ஒரு அமைப்பிற்கோ நற்செயலுக்கோ அவற்றின் வளர்ச்சிக்கு உதவுபவர்). கொடையாளர், புரப்போர், பாதுகாப்பவர், ஆதரவாளர் என்பன புரவலரைக்குறிக்கும் பிறசொற்கள்.
"கையது கடன் நிறை யாழே மெய்யது புரவலர் இன்மையின் பசியே" (புற:69-2).
"அரவு உறை புற்றத்து அற்றே நாளும் புரவலர் புன்கண் நோக்காது" (புற:329:7).
புரவலரும் புலவரும் :
௧) பெருஞ்சேரலிரும்பொறையும் அரசில்கிழாரும்
௨) கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும்
௩) கணைக்காலிரும்பொறையும் பொய்கையாரும்
௪) பாரியும் கபிலரும்
௫) அதியமான் நெடுமானஞ்சியும் ஔவையாரும்
௬) சிறுகுடிபண்ணனும் கிள்ளிவளவனும்
௭) குமணனும் பெருந்தலைச்சாத்தனாரும்
௮) சடையப்பனும் கம்பரும்
௯) அநபாயனும் சேக்கிழாரும்
***************************************************
சிறியேன் பிறந்தவாண்டில் அதாவது ௧௯௮௯(1989) ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பிற்கான துணைப்பாடத்திட்டத்தில் ஒன்பது புலவர்கள் மற்றும் அப்புலவரைப்புரந்த புரவலரைப்பற்றிய கதையைப் பாடமாக வைத்திருந்தனர். வீட்டிலிருந்த பழையநூல்களை எடுத்து தூசிதட்டியபோது காணக்கிடைத்தது.
சொற்கள் நல்லதமிழில் அமைந்திருந்தன. தனிசொற்றொடர்களாகவல்லாமல் பெரும்பாலும் தொடர் மற்றும் கலப்பு சொற்றொடர்களாவே இருந்தன. குறிப்பாக பிறமொழிக்கலப்பில்லை அந்நூலில். அதற்கும் மேலாக அறத்தன்மையும் கொடைத்தன்மையுடைய வரலாறுகளைப்பாடமாக வைத்திருந்தனர்.
அவ்வாண்டுவரைகூட தமிழ்நாட்டுப்பள்ளிப்பாடநூல்களில் இத்தகைய பிறமொழிக்கலப்பில்லா நல்லதனித்தமிழில் அமைந்திருந்த அறம் சார்ந்த பாடங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் தற்போதோ பிறமொழிச்சொற்களை தமிழ்ச்சொற்களாகவே எண்ணுமளவிற்கு கலப்புடைய நூல்கள் தமிழ்நாட்டுப்பாடநூல் கழகத்தால் தயாரிப்படுகிறது. பள்ளிகளிலேயே இவ்வாறு நிகழ்ந்தால் அதைப்படித்து வளரும் பிள்ளைகளும் அதையே தமிழென்று நினைத்துக்கொண்டு அந்த பிறமொழிகலந்த தமிழையே பேசும்.
தற்போதைய இழிநிலையை மாற்றவேண்டிய கடமை தமிழ்நாட்டரசுக்கேயுரியது. இனத்தின் விழியாம் மொழியைக்காக்க அரசு பாடநூல்க்கழகமும் மக்களும் பாடுபடவேண்டியது இன்றியமையாதது. இதைச்செய்தோமானால் இனிவரும் பிள்ளைகள் பிறமொழிக்கலப்பின்றி நற்றமிழில் பேசும். மொழியும் இனமும் காக்கப்பட்டு நல்லறமும் இலக்கியவளமும் பெருகி பல்லாயிரமாண்டுகள் செழித்தோங்கும்.
நன்றி, வணக்கம்.
தனித்தமிழாளன்