Friday, December 25, 2020

நீரின் றமையா துலகு - இரு இலக்கியங்களில்

 நீரின்று அமையாது உலகு : 


இச்சொற்றொடரை படித்தும்  பலர்சொல்லக்கேட்டுமிருப்போம் நாம். வள்ளுவப்பெருந்தகை தங்குறளில் வான்சிறப்பின் பத்தாங்குறளில் இத்தொடரை எடுத்தாண்டிருப்பார். ஆகையால், அதைமட்டுமே நாமறிந்திருப்போம். இன்று நற்றிணையைபடிக்கத்தொடங்கியயுடனே,  குறிஞ்சித்திணையின் முதற்பாடலில் இஃதே தொடரைக்கண்டேன். இலக்கியங்களில் இதேபொருளைத்தரும் வேறுபலசொற்றொடர்களால் புலவர் பலருஞ்சொல்லி இருக்கலாம். ஆனால், மாறாது அதேசொற்களை இருவீரும் பயன்படுத்தியுள்ளனர். அந்நற்றிணைப்பாவும் அக்குறளும் இங்கே பதிந்துள்ளேன். நன்றி.




நூல் : நற்றிணை

திணை : குறிஞ்சி


நின்ற சொல்லரநீடுதோன் றினியர்

என்றும் என்றோள் பிரிபறி யலரே

தாமரைத் தண்டா தூதி மீமிசைச்

சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்

புரைய மன்ற புரையோர் கேண்மை

"நீரின் றமையா வுலகம்" போலத்

தம்மின் றமையா நந்நயந் தருளி

நறுநுதல் பசத்த லஞ்சிச்  

சிறுமை உறுபவோ செய்பறி யலரே. 


கூற்று : பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.


 -- குறிஞ்சிக்கபிலர்


கூற்றின் விளக்கம்:

தலைவன் பிரியக் கருதியதை அறிந்த தோழி தலைவியிடம் அதனைத் தெரிவிக்கிறாள். தலைவனது அன்பையும் மனப்போக்கையும் நன்கறிந்திருக்கும் தலைவி, அவன் பிரியமாட்டான் என உறுதியாகக் கூறுகிறாள்.


உரை:

தோழீ ! நம் காதலர் நிலைமை தவறாத வாய்மையுடையவர்; நெடிதாகத் தோன்றுகின்ற இனிமையுடையவர்; எப்பொழுதும் என் தோள்களைப் பிரியும் அன்னதொரு குணக் குறைபாடிலர்; அத்தகைய மேதக்கோருடைய நட்பு; தாமரையின் தண்ணிய தாதினையும் மேலோங்கிய சந்தனத்தின் தாதினையும் ஊதி, அந்தச் சந்தன மரத்தில் வைத்த இனிய தேன் போலத் திண்ணமாக மேதக்கன ஆதலின்; அவர் நீரையின்றியமையாத உலகியல் போலத் தம்மை யின்றியமையாத நம்பால் முன்பு விருப்பமிக வைத்தருளி; பின்பு பிரிதலால் நம் நறிய நுதல் பசலையூர்தற்கு அஞ்சி; செய்வதறியாராய்த் தடுமாற்றமடைவாரோ?; அங்ஙனம் செய்யார்காண்.


திருக்குறள்:


"நீரின் றமையா துலகெனின்" யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு.


- வள்ளுவப்பெருந்தகை


மு.வ உரை: 

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.


நன்றி. வணக்கம்.

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment