Monday, June 12, 2023

பிறன்மனை நோக்காப் பேராண்மை

பிறன்மனை நோக்காப் பேராண்மை


பொத்தகம் : சிற்றம்பலக்கோவை

அதிகாரம் : 16.உடன்போக்கு (ஓடிப்போகுதல்)

பா : 51 (244) 

இயற்றியவர் : மணிமொழியார் (மணிவாசகர்)




புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்


மீண்டா ரெனஉவந் தேன்கண்டு

    நும்மையிம் மேதகவே

பூண்டா ரிருவர்முன் போயின

    ரேபுலி யூரெனைநின்

றாண்டான் அருவரை ஆளியன்

    னானைக்கண் டேனயலே

தூண்டா விளக்கனை யாயென்னை

    யோஅன்னை சொல்லியதே...244


கொளு

புணர்ந்து டன்வரும் புரவலன் ஒருபால்

அணங்கமர் கோதையை ஆராய்ந்தது.


பொருள் : 


தலைவனோடு உடன்போக்கு(ஓடிப்போன) நிகழ்த்திய தலைவியைத்தேடி செவிலித்தாய் செல்கிறாள். அப்போது, முன்பே புணர்ச்சி நிகழ்த்தி வேறொரு காதலனும் காதலியும் எதிரே வருகின்றனர். அவர்களிடம் தம்மகளைப்பற்றி செவிலித்தாய் வினவுவதாக அமைந்துள்ளது இப்பாட்டு. அதன்பொருள் பின்வருமாறு,


"உடன்போக்கு நிகழ்த்திய இணையர் மீண்டுவந்துவிட்டனரென்று உங்களைக்கண்டு உவகையுற்றேன். இவ்வாறு உங்களைப்போலவே உடன்போக்கு ஒழுக்கத்தைப்பூண்ட இருவர் முன்பு இவ்வழியில் போனார்களா சொல்லுங்கள்?" என செவிலித்தாய் கேட்க, அதற்கு, அக்காதலன்  தன்காதலியிடம் சொல்கிறான்,


"அரியமலையில் இருக்கும் ஆளி(சிங்கம்) போன்றவனை யான்கண்டேன். தூண்டத்தேவையற்ற விளக்கைப்போன்ற என்காதலியே, அந்த ஆளியைப்போன்றவனின் அருகில் யாரோ இருந்தாரென்று இச்செவிலித்தாய் சொல்கிறாள். நீ யாரையாவது கண்டாயா? அதை இந்த அன்னைக்குச் சொல்."


************


தன்காதலியைத் தவிர பிறபெண்களை ஏறெடுத்துங் காணாத பிறன்மனை நோக்காப் பேராண்மையாளர்களாக ஒழுக்கநெறியைப் பின்பற்றி இருந்துள்ளனர் என்னும் செய்தி இப்பாட்டால் அறிய முடிகிறது. எதிரில் வந்த இணையரில் ஆணை மட்டும் பார்த்தானாம், அருகிலிருந்த பெண்ணை நீ பார்த்தாயாவென்று தன்காதலியிடம் கேட்கிறான் காதலன்.


(கொஞ்சம் ஓவர் உருட்டா இருக்கோ) 🤣🤣🤣

Monday, June 6, 2022

தமிழர்களின் அறப்பண்பு

தமிழர்களின் அறப்பண்பு ❤️❤️❤️

நற்றிணை கஎஉ (172)

விளையா டாயமொடு வெண்மண லழுத்தி
மறந்தனந் துறந்த காழ்முளை யகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென்
றன்னை கூறினள் புன்னையது சிறப்பே
யம்ம நாணுது நும்மொடு நகையே
விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலு மிலங்குநீர்த்
துறைகெழு கொண்கநீ நல்கி
னிறைபடு நீழல் பிறவுமா ருளவே.



உரை:-

புதியராய்வந்த பாணர் பாடுகின்ற இளையதாய (மெல்லிய) இசைப்பாட்டுப்போல வெளிய வலம்புரிச்சங்கு ஒலியாநிற்கும் விளங்கிய நீரையுடைய துறைபொருந்திய நெய்தனிலத்தலைவனே, யாம் எம்மொடு விளையாடுகின்ற தோழியரோடுசென்று ஒருநாள் வெள்ளிய மணலிலூன்றினேமாகி மறந்தொழிந்த புன்னைவிதையானது வேரூன்றி முளைத்து முளை தோன்றுதலானே மீண்டும் அதனைநோக்கி மகிழ்ந்து நெய்கலந்த இனியபாலை நீராகவார்த்து இனிமையொடு வளர்க்குநாளில் எமது அன்னை எம்மைநோக்கி 'நீயிர் வளர்த்துவரும் புன்னையானது நும்மினுஞ் சிறந்ததன்றோ, அது நும்முடன்பிறந்த தங்கையாந் தகுதியையுடையது கண்டீர்' என்று இதன் சிறப்பினை விளங்கவுரைத்தனள்; ஆதலின் எமது தங்கையாகிய இப்புன்னையினெதிரில் நும்மொடு நகைத்து விளையாடி மகிழ்வதற்கு யாம் வெட்கமடையாநின்றோம்; அம்மையோ? இவளை அணைந்து நல்குவையோ? நல்குவை யாயின் நிறைந்த மரத்தினிழல் பிறவு மீங்குள்ளன காண்; அவ்வயிற் செல்லுதல் நல்லதொன்றாகும்.

எளிய_உரை (பாடலின் அறக்கருத்து)

நெய்தல் நிலத்தில் தலைவன், தலைவியின் இல்லத்திற்கருகில் ஓர் புன்னைமரத்திடை சந்திக்கின்றனர். அதற்கு, தலைவி தலைவனிடத்தில் சொல்கிறாள், "இனிமேல் இப்புன்னை மரத்தின் அருகில் சந்திக்கவேண்டாம். நான் சிறுவயதில் இந்தப்புன்னை மரத்தை நட்டு, இனிய பாலை ஊற்றி வளர்த்தோம். அப்போது என் அன்னை இப்புன்னை மரத்தை என்னுடைய தங்கையாக எண்ணவேண்டுமென்று புன்னையின் சிறப்பைக் கூறினாள். அப்படி தங்கைபோன்ற புன்னை மரத்தின் அருகில் நாம் மகிழ்ந்து பேசுவது எனக்கு வெட்கமாக இருக்கிறது. தங்கையின் முன்பு காதலர்களாகிய நாம் பேசிக்கொள்வது முறையன்று. அதனால், வேறு மரத்தின் நிழலில் சந்திக்கலாம்". என்று கூறுகிறாள்.

என்னே வியத்தகு தமிழர் அறம். ஒரு பேச்சிற்கு மரத்தை தங்கையென்று எண்ணியதை மதித்து, அதனருகில் மகிழ்ந்து பேசுவதை தவிர்த்த பண்பு வியக்கத்தக்கதே.

நன்றி. வணக்கம்.
தனித்தமிழாளன் நெடுஞ்சேரலாத கரிகாற்பெருவள நெடுஞ்செழியன்

Wednesday, May 25, 2022

கவரி வீசிய காவலன் தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

கவரி வீசிய காவலன் - புறநானூறு 50

பாடியவர் : மோசிகீரனார்.
பாடப்பட்டோன் : சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
திணை : பாடாண்.
துறை : இயன் மொழி.
குறிப்பு : அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் ஒறுத்தல் செய்யாது துயில் எழுந்துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான்; அதுகுறித்து புலவர் பாடிய செய்யுள் இது.

மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையடு, பொலியச் சூட்டிக்,

குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,

இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென

வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே?




விளக்கம் :

 
முகத்தின் தோல் சுருக்கம் இல்லாமல் தோல்வாரால் கட்டப்பட்டது. மருங்குல் என்னும் அதன் அடிப்பகுதியை மயில்தோகை அழகுபடுத்தியது. (போர்முரசு என்பதைக் காட்டும் அடையாளமாக) பொன்னாலான உழிஞைப்பூவும் அதனை அழகுபடுத்தியது.

குருதியில் குளிப்பதற்காக அது வெளியே சென்றிருந்தது. முரசுக்கட்டில் முரசு திரும்புமுன் முரசுக்கட்டில் வெறுமனே இருந்தது. எண்ணெய் நுரைபோல் அதில் மெத்தை இருந்தது. அது முரசுக்கட்டில் என அறியாமல் புலவர் அதன்மேல் உறங்கிவிட்டார்.

முரசுடன் திரும்பிய அரசன் புலவருக்குக் கவரி வீசினான். புலவர் சொல்கிறார் அறியாது கட்டிலேறிய என்னை இரு துண்டாக ஆக்குவதை விட்டதே நல்ல தமிழ்நெறி அறிந்த செயல். அதுவே போதுமானது.

அதனோடு நிறைவடையாமல், பக்கத்திலே வந்து, வலிமைமிக்க உன் தோள்களால் அகன்ற இடமெல்லாம் குளிர்ந்த காற்று வரும்படி, கவரி வீசினாயே! இந்த உலகத்தில் புகழ் உடையோருக்குத்தான் மேலுலகத்தில் வாழும் பேறு கிடைக்கும் என்பார்கள். அதற்கு மாறாக, (குற்றம் செய்த எனக்ககே இந்த உலகத்தில்) மேலுலக வாழ்வு தந்த செயலை என்னென்பேன்?

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நன்றி. வணக்கம்

Wednesday, April 20, 2022

சோழன் நலங்கிள்ளியின் மறத்தையெண்ணி வடநாட்டார் தூங்கார்

வடநாட்டார் தூங்கார் - புறநானூறு 31


பாடியவர் : கோவூர்கிழார்.

பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.

திணை : வாகை.

துறை : அரசவாகை: மழபுல வஞ்சியுமாம்.

சிறப்பு : வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக்கேட்டு அஞ்சிய அச்சத்தால் துஞ்சாக்கண்ணர் ஆயினமை.






சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,

இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை

உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,

நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்

பாசறை யல்லது நீயல் லாயே;

நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்

கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே;

‘போர்’ எனில் புகலும் புனைகழல் மறவர்,

‘காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய;

செல்வேம் அல்லேம்’ என்னார்; ‘கல்லென்

விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்,

குண கடல் பின்ன தாகக், குட கடல்

வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப,

வலமுறை வருதலும் உண்டு’ என்று அலமந்து

நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,

துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.


#_விளக்கம் :

அறத்தைப் பின்தொடர்ந்து பொருளும் இன்பமும் வருவது போல, உன் குடையைப் பின்தொடர்ந்து சேரர், பாண்டியர் குடைகள் வருகின்றன. இதனால் தமிழகமே ஒன்றுபட்டுள்ளது. நீ புகழ் வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டாய். பாசறையில் உள்ளாய். கூர் மழுங்கிய கொம்புகளுடன் போருக்குத் துடிக்கும் உன் களிறு அடங்க மறுக்கிறது. போரை விரும்பும் உன் வீரக்கழல் மறவர் தொலைதூரம் செல்ல விரும்புகின்றனர். கீழைக்கடல் அரசனாகிய நீ தென்கடல் பாண்டியனையும் மேலைக்கடல் சேரனையும் அழைத்துக்கொண்டு வலம் வருவாயோ என்று வடபுலத்து அரசர்கள் நெஞ்சம் நடுங்கித் தூங்காமல் கிடக்கின்றனர்.


நன்றி. வணக்கம் 🙏

Tuesday, January 18, 2022

களிற்றுமேலோன் கடுஞ்சினவேலோன்

களிற்றுமேலோன் கடுஞ்சினவேலோன்


"கடுஞ்சின வாள்வேள் களிறு ஊர்ந்தாங்கு"
( - பதிற்றுப்பத்து 11.6)

"சேயுயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி"
( - பரிபாடல் 5.2)

"கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு"
( - திருமுருகாற்றுப்படை 82)

"ஓடாப் பூட்கை பிணிமுகம் வாழ்த்தி"
( - திருமுருகாற்றுப்படை 247)

நெடுஞ்சேரலாத கரிகாற்பெருவள நெடுஞ்செழியன்








 

Thursday, April 22, 2021

சிந்துவில் சிவவழிபாடு - நீறுபூசிய முகம்

 சிந்து எழுத்தில் 

      திருநீறு  பூசிய முகம் .


     சிவனிய வழிபாட்டின் 

   5000 - ஆண்டுகள்  தொன்மை . 






    வாழ்வின் எதார்த்தம் சில போது நமக்கு நம்ப முடியாத வியப்பைத் தரும் . அப்படி ஒரு வியப்பளிக்கும் தருணம்  என்னை எதிர் கொண்டது . என் குடும்பம் பகுத்தறிவுப் பாதையில் முற்போக்கானஇடதுசாரிச் சிந்தனையுள்ளவர்களைக் கொண்டது . எனக்கு நினைவு தெரிந்து என் வீட்டில் இறை வழிபாடு செய்ததே இல்லை . அப்பா பொதுவுடைமைச் சிந்தனையும் , இறை மறுப்புக் கொள்கையும் கொண்டவர் . அப்போதே மாதத்திற்கு நூற்றுக் கணக்கான உரூபாய் செலவு செய்து பல்துறை நூல்களும் , அரசியல் இலக்கியங்களும் ,  எளிமையான தொல்லியல் , இலக்கிய நூல்களும் எங்களுக்கு வாங்கித் தருவார் . வழிபாடு இறைவணக்கம் தொடர்பான நூல்கள் வாங்கியதே இல்லை .


      சினிமா நடிகர்கள் , இறைவுருவப் படங்கள் எங்கள் வீட்டில் மாட்டக் கூடாது என்பது எங்கள் வீட்டின் எழுதப்படாத சட்டம் . கல்லூரியில் சேரும்வரை  வீரபாண்டியக் கட்டபொம்மன் ,  கப்பலோட்டியத் தமிழன் , சிவகங்கைச் சீமை என்று கைவிட்டு எண்ணக்கூடிய சில திரைப்படங்களே பார்த்துள்ளேன் . ஆனால் தமிழ்நாட்டின் தலையாய எழுத்தாளர்கள் அனைவரது நூல்களையும் வாங்கித் தருவார் . என் திருமணத்திற்குப் பிறகு  எனது மனைவியும் சகோதரர்கள்  இருவரது மனைவியரென்று   எங்கள்  வீட்டு மருமகள்களே எங்கள் வீட்டுக்கு இறைவழிபாட்டைக் கொண்டு வந்தார்கள் . என் மனைவி நான் அவர்  சாமி கும்பிடுவதைத் தடை செய்துவிட்டதாகவும் , தனக்கு அதில் விருப்பம் என்று என் தந்தையிடம் முறையிட்டபோது என்னை அழைத்து " நம் போன்ற நாத்திகர்களே பிறரது கருத்துகளுக்கு மதிப்பளிப்பவர்கள் . இது அவள் உரிமையில் தலையிடுவதாகும் . உன் தனிப்பட்ட கருத்துரிமை போல அவளுக்கும் அவளது கருத்துகளைக் கடைப்பிடிக்க உரிமையுண்டு "  என்று சொல்லி என்னிடம் அவள் உரிமையைப் பெற்றுக் கொடுத்தார் . 


      இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் எனது சிந்து நாகரிக எழுத்தாய்வில்  தமிழ்ச் சிந்து மக்கள் முற்ற முழுக்கத்  தங்கள் வழிபாடு சார்ந்தே முத்திரைகள் வெளியிட்டுள்ளார்கள் என்றறிந்த போது  என மனையாளுக்கு நான் கொடுத்த அதே உரிமையைச் சிந்து மக்களின் வழிபாட்டுரிமையை எத்தடையுமின்றி வெளிப்படுத்தி அவர்களுக்கும் தந்து இந்த  உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உறுதியேற்றேன் . என் குடும்பச் சூழலறிந்த நண்பர்களுக்கு வியப்பு . என் கருத்துப்போலச் செய்திகளை  எத்தயக்கமும் இன்றி நான் எழுதுவதாகக் கூறுகின்றனர் .   மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர் .


      இப்போது நான் படித்துக் காட்டப்போகும் முத்திரையும் அப்படி வியப்புக்குரியதுதான் . சிந்து எழுத்தில் படவுருக்கள்  லோகோகிராபிக் சொல் வடிவங்களாக உள்ளன என்பதும் நாமறிவோம் . அவை  ஒலிநிலை வடிவங்களுக்குத் துணையாக இயங்குகின்றன .  இந்த முத்திரையும்  அத்தகைய  மூன்று  படவுருக்களை -  சொல்லசையன்   வடிவங்களை மட்டுமே  கொண்டு எழுதப்பட்டுள்ளது .  மூன்று வடிவங்களையும் நீங்கள் எளிதாக அடையாளம் கண்டு பொருளுணரலாம் . வலமிருந்து முதல் வடிவம் தேள் வடிவமும் ,  அதனோடு இணைந்த இரண்டு அசைகளுடன் ண்(ன்) - அ இணைந்து தேளண்அ =  தேளன -  தேள் அன்ன  என்னும்  சொல்லசையனாக -  Logosyllabic -  சொல் வடிவமாகவும் ,  இரண்டாவது முக ( முகம் ) என்னும் சொல்வடிவமாகவும் ,  மூன்றாவது வடிவம் வாவல் ( வௌவால் ) என்னும் சொல் வடிவமாகவும்  இணைந்து               =  தேளன்ன  முக  வாவன்  .  என்று எழுதப் பட்டுள்ளது .


      இது  மறைபொருட் குறியீட்டு முத்திரை . இதன் பொருள்  தேள்  ஓரையின் முகம் போன்ற முகம் கொண்ட  வாவன்  = தாண்டவன் என்று பொருள் . வாவல் என்ற சொல்லுக்கு  தாண்டுதல் ,  கூத்து என்று பொருளுண்டு . தாண்டி அல்லது குதித்துக் குதித்து சிவன் ஆடும் நடனமே  தாண்டவம் .  இதனை ஊர்த்துவ தாண்டவம் என்பர் . காலை உயயரத் தூக்கி ஆடுவது .  விருச்சிகம் செவ்வாயை அதிபதியாகக் கொண்டது .  இது  முருகனின் விண்மீன் . எனவே     இவை சிவ  -  முருக  வழிபாட்டுடன் தொடர்புடையவையாகும் .  விருச்சிகன் என்று சூரியனும் பிற்காலத்தில் அழைக்கப்பட்டான் . சிந்து மக்கள் தேளையும் வழிபட்டனர் .  தேளன் ,  தேளண்ண என்னும் சொற்கள் பேரளவில் காணப்படுவதோடு ,  தேளின் படமுள்ள முத்திரைகளும் மிகுதியாக உள்ளன .  


      முக வடிவைப் பாருங்கள் . முகம் என்பது  நெற்றி , மூக்கு ஆகியவை இணைந்த  படவுருவாக எழுதப்படுகிறது .  இம்முத்திரை  சிவனியம்  சார்ந்தது என்று  எளிதாகத் தெரிகிறது .  முகத்தை வரைந்த  எழுத்துக் கலைஞன்  முகத்தின் நெற்றியில்  மூன்று  கோடுகளை இட்டுள்ளான் . இது திருநீறு பூசிய நெற்றி என்றே கருத  வேண்டியுள்ளது . 


   மொக 1226 :   வாவ  -  முக  -  தேளண 

       =   தேளன்ன  முக வாவன் . 


தேள் போன்ற முகத்தோற்றமுடைய  வாவன் ஆகிய  சிவன்  என்பது பொருள் .  


      இம்முத்திரை வடிவம் நெற்றியில் முக்கோடாகத் திருநீறு  இட்டுள்ளது என்பது தெளிவு .  உள்ள இரண்டொரு  முகப்  படவுருவனிலும்  ஒன்றிரண்டில் மட்டுமே  திருநீறு  பூசிய நெற்றியுள்ளது .  சிந்து எழுத்தில்  ஒரு சிறு  கோடு  மாறுவதுகூட  பொருள் மாற்றம் தரும் . வாவன் என்பவர் சிவன் என்று குறிக்கவே  இத்திருநீறு  பூசிய  நெற்றியை  அம்மக்கள் பதிவிட்டுள்ளனர்  என்பதே உண்மை .  எனவே  நெற்றியில்   திருநீறு  இடும் வழக்கம்  சிந்துவெளி நாகரிகக் காலத்துக்கும் முன்பிருந்தே வழக்கில் உள்ளதென உறுதிபடக் கூறலாம் . குறைந்தது இக்காலம்  5000  ஆண்டுகள் என்று உறுதிபடக் கூறலாம் . சிவனியம்  இந்தியாவின் மிகத் தொன்மையான  சமயமென்று  உறுதிபடுகிறது  .  தமிழர்கள்  திருநீறு  இடும்  இவ்வழக்கத்தைப் பழங்காலம் தொட்டே கடைப்பிடித்து வருகின்றனர் .

Friday, April 9, 2021

வேத எதிர்ப்பே சித்தர் மரபு

 சித்தர்மரபு என்னும் வேத எதிர்ப்பு மரபு ❤️


சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரம் பல

தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்

விதம் வித மானவனான வேறு நூல்களும்

வீணான நூல்களை என்று ஆடு பாம்பே.


                                     - (பாம்பாட்டிச் சித்தர்)


பொய் வேதம் தன்னைப் பாராதே - அந்தப்

போதகர் சொற்புத்தி போத வாராதே


                                      - (கடுவெளிச் சித்தர்)


பார்ப்பனர்கள் கட்டிய பாழான வேதத்தைச்

சோதித்துத் தள்ளடி - குதம்பாய்

சோதித்துத் தள்ளடி            


                                      - (குதம்பைச் சித்தர்)


நேமங்கள் நிட்டைகள் 'வேதங்கள்' ஆகம நீதிநெறி ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்திர யோக நிலை நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே

சாமங்கள் தோறும் இவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே


                                     - (பட்டினத்தார்)


சாத்திரத்தைச் சுட்டு சதுர்மறையப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்


                                      - (பத்திரகிரியார்)




Monday, March 8, 2021

பெண்மையைப்பற்றி சிவவாக்கியர்

பெண்மையைப்பற்றி சிவவாக்கியர் :


பெண்களை தீட்டென்றும், தீண்டத்தகாதவர்களென்றும், பாவ யோனியில் பிறந்தவர்களென்றும், இழிபிறப்பாளர்களென்றும் ஆரிய வேதங்களும் பகவத்கீதையும் இழித்துரைக்கின்றன.


இதோ எம் தமிழ்ச்சிவவாக்கியம் யாரை எதைத்தீட்டென்கிறாய் என்று மூடர்களை இடித்துரைக்கிறார்.





அறையினில் கிடந்தபோது அன்றுதூய்மை என்றிலீர்,

துறைஅறிந்து நீர்குளித்த அன்றுதூமை என்றிலீர்,

பறையறிந்து நீர்பிறந்த அன்றுதூமை என்றிலீர்,

புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே.


48


தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!

தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?

ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்

தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.


49


சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்

மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்

சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்

செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே.


50


மாதாமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்

மாதம்அற்று நின்றுலோ வளர்ந்துரூபம் ஆனது?

நாதம்ஏது, வேதம்ஏது, நற்குலங்கள் ஏதடா?

வேதம்ஓதும் வேதியர் விளைந்தவாறு பேசடா?


134


தூமைஅற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது?

ஆண்மைஅற்று நின்றலோ வழக்கமற்று நின்றது?

தாண்மைஅற்று ஆண்மைஅற்று சஞ்சலங்கள் அற்றுநின்ற

தூமைதூமை அற்றகாலம் சொல்லும்அற்று நின்றதே!


135


ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற சீவனை

வேறுபேசி மூடரே விளைந்தவாறது ஏதடா?

நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன?

சீறுகின்ற மூடனே அத்தூமைநின்ற் கோலமே.


136


தீமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே

சீமைஎங்கும் ஆணும்பெண்ணும் சேர்ந்துலகம் கண்டதே.

தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை

தூமைஅற்று கொண்டிருந்த தேசம்ஏது தேசமே?


137


ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;

கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே

மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்

துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே.


205


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


நன்றி. வணக்கம்.

கீதையிலும் மனுநீதியிலும் பெண்கள்

 மனுஅநீதியில் பெண்கள்


மகளிர்நாளை யார் கொண்டாடலாம்? தமிழர்கள் கொண்டாடலாம், இரசிய, ஐரோப்ப, செர்மானியர்கள் கொண்டாடலாம். பெண்மையை மதிக்கும் எந்த இனமும் கொண்டாடலாம். ஆனால், ஆரியமும் ஆரியச்சார்பும் உடையவர்கள் கொண்டாடலாமா? பெண்ணை இழிபிறவி என்று கூறி ஒடுக்கியது ஆரியம். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது மகளிர்நாளைக் கொண்டாட? 😡😡😡


பெண்களைப்பற்றி_பகவான்_கிருட்டிணர்:😡




பகவத்கீதையின் 9ஆவது அத்தியாயத்தில் சுலோகம் 32 இப்படிச் சொல்கிறது.


"மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்யயே அபிஸ்யு பாப யோனய ஸ்திரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபியாந்திபராம் கதிம்"


அதாவது பெண்களும் சூத்திரர்களும் வைசிகர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பகவத்கீதைகளில் "பாவ யோனி" என்பதை "கீழான பிறப்பு", "இழி பிறப்பு" என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் நேரடியாகவே "born out of the womb of sin" என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.


பகவத் கீதையின் பார்வையிலும் பெண் என்பவள் இழி பிறப்புத்தான். அவள் ஒரு பார்ப்பன வீட்டில் பிறந்திருந்தாலும், அது செல்லுபடியாகாது.


கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான உரிமைகள் பெண்களுக்கும் மறுக்கப்பட்டுள்ளது.


முற்பிறப்பில் செய்த பாவத்தின் பயனாகத்தான் ஒருவன் பெண்ணாகவோ சூத்திரனாகவோ பிறக்கிறான் என்றுதான் இந்துமத வேதங்கள் சொல்கின்றன. அந்த வகையில் சூத்திரர்களை இழிவுபடுத்துகின்ற வேதங்கள், சாத்திரங்கள், மந்திரங்கள் போன்றவை பெண்களையும் இழிவுபடுத்துவதில் வியப்பு ஒன்றும் இல்லை.


கீதையில் 4, 5 இடங்களில் மட்டுமே பெண்களைப் பற்றி குறிப்பிடுகின்றனர். அத்தனை இடங்களிலும் பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள், இழிபிறவிகள், ஆணுக்கு அடிமையானவள் என்றே இழித்துக்கூறப்படுகிறாள்.


இவ்விழிநூல் கீதை இப்படி பெண்களை இழிவுபடுத்தும் நிலையில் பெண்களே தற்காலத்தில் இந்நூலை புனிதனமானதென்று கருதி படித்துக்கொண்டிருப்பதுதான் பேரவலம். அறமுடைய எவரும் இவ் இழிநூலைப் புனிதநூலென்று கருதலாகுமா?

மகளிர்நாள் வரலாறு

உலக_மகளிர்நாள்_உருவான_வரலாறு:





1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.


புயலாகக் கிளம்பிய பூவையரைத் துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடி துறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.


தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் #அனைத்துலகப்_பெண்கள்_நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.


#அமெரிக்கப்_பெண்கள்_புரட்சி:


அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.[3] 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.


இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!


பெப்ரவரி 28, 1909 இல் அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர். மார்ச் 25 1911 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது. தொடர்ந்து அனைத்துலகப் பெண்கள் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.


#_ரஷ்யாவில்_பெண்கள்_எழுச்சி:

1913–1914-களில் முதல் உலகப் போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினார்கள். இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.


#ஐநா_பேரறிவிப்பு:

பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலகப் பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.


நன்றி : Wikipedia தமிழ்

Monday, March 1, 2021

அவாவறுத்தலை சான்றோர் சொன்னவை

 அவாவறுத்தல்




அவாவறுத்தலைப்பற்றி சான்றோர் உரைத்தவை:


திருவள்ளுவர்-369


இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.


விளக்கம்:

ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.


புத்தர் :


ஆசையே துன்பத்திற்குக் காரணம், ஆசையைத் துறந்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்.


திருமூலர் - 2615


ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்

ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்

ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.

Saturday, February 20, 2021

உலகமொழிகளின் தாய்மொழி தமிழே

 








உலகத்தாய்மொழி நாள் 21.02.1940

உலகத்தாய்மொழி_நாள் 21.02.1940 வரலாறு:

(உலகத்தமிழ்மொழிநாள்)




உலகத்தாய்மொழிநாள் என்பது வங்கமொழிப்போரில் உயிரிழந்த 5 பேரின்  நினைவாக, வங்காள அரசின் முயற்சியால் ஐக்கிய நாடுகள் அவையின் யுனெசுகோ-வால் 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் நாள் அறிவிக்கப்பட்டு, 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் முதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது என்பது இதுவரை இருக்கிற வரலாறு. ஆனால், அதைவிட 60 ஆண்டுகால பழைய உலகத்தாய்மொழிநாள் வரலாறு தமிழர்களுக்குண்டு. அதையறிந்துகொள்வோம்.

1937ஆம் ஆண்டு இந்தி கட்டாயப்பாடமாக்கப்பட்டு இந்திய அரசால் திணிக்கப்பட்டது. அப்போது மூண்டதே முதல் இந்தி திணிப்பு எதிர்ப்புப்போர். நடத்தியவர் ஐயா பெரியார். தாய்மொழி விருப்பப்பாடமாகவும் இந்தி கட்டாயப்பாடமாகவும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல் இந்தி திணிப்புப்போரைத் தொடங்கினார். மறைமலையடிகளாரையும் நாவலர் சோமசுந்தரபாரதியாரையும் தலைமையேற்றச்செய்து, பெரியார் தொண்டராக இருந்து இப்போராட்டத்தை நடத்தினார்.

இதுவே முதல் இனப்போர், மொழிப்போர். தமிழர்கள் தம் இனம்காக்க மொழிகாக்க ஒன்றரையாண்டுகள் நெடும்போராட்டமாக இந்தி திணிப்பு எதிர்ப்புப்போராட்டத்தை நடத்தினர், பலவுயிர்களை பறிகொடுத்தனர். அதில் உயிரிழந்தவர்கள் தான் ஐயா தாளமுத்துவும் நடராசனாரும். 1940 பிப்ரவரி 21ஆம் நாள் இந்தி கட்டாயப்பாடம் என்பது ஒழிக்கப்பட்டது. தமிழர்கள் மொழிபோரில் வெற்றிகண்டனர். அதன்பிறகு, 1947, 1950 சட்டம், மீண்டும் 1965ல் இரண்டாம் இந்தி திணிப்பு எதிர்ப்புப்போர் உருவானது, இது ஒரு நீண்ட வரலாறு. (படித்தறிக)



ஐ.நா அவையால் வங்கமொழிப்போர் நினைவாக உலகத்தாய்மொழிநாள் அறிவிக்கப்படுவதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தாய்மொழிப்போர் நிகழ்த்தி வெற்றிகண்டு உலகத்தாய்மொழிநாளை உருவாக்கினர். உலகத்து மக்கள் அனைவரும் இத்தாய்மொழிநாளைக் கொண்டாடினாலும், அதற்கு முழு உரிமையுடையவர் தமிழர்களே.

இது மட்டுமின்றி, உலகமொழிகளுக்கெல்லாம் மூத்தமொழியாகவும் தாய்மொழியாகவும் இருப்பது தமிழேயாகையால் இது உலகத்தமிழ்மொழிநாளாகும்.

இந்நாளில் தாய்த்தமிழ்மொழிகாக்க நாம் சில உறுதிகளை பூணவேண்டும்.

தமிழிலேயே பேசவேண்டும்
தமிழிலேயே படிக்கவேண்டும்
தமிழில் பிறமொழி கலப்பைத் தவிர்க்கவேண்டும்
வழிபாட்டுமொழி வழக்காடுமொழி தமிழாகவே இருக்கவேண்டும்.
பிறமொழி தவிர்த்து நற்றமிழிலேயே பெயரிடவேண்டும்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழாகவே இருக்கவேண்டும்.

அனைவருக்கும் உலகத்தாய்மொழிநாள் வாழ்த்துகள்.

நன்றி. வணக்கம்

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Thursday, February 18, 2021

எது மந்திரம்? தொல்காப்பியர், திருவள்ளுவர் விளக்கங்கள்

தொல்காப்பியரும் வள்ளுவரும்: மந்திரம்🙏


தொல்காப்பியர் சொன்ன கருத்தை, அவர்வழியில் வள்ளுவரும் அதே கருத்தை சொல்லியிருக்கிறார்.





தொல்காப்பியம்,

பொருளதிகாரம், செய்யுளியல்-1425


நூற்பா:

'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்

மறைமொழிதானே மந்திரம்' என்ப.


உரை:

நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைசொல்லே மந்திரம் என்பதாகும்.


திருக்குறள், அறம், பாயிரம், நீத்தார்பெருமை - 28


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.


விளக்கம்:

நிறைவான வாக்குப்பெருமையுடைய மேன்மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன  மறைசொற்களே அடையாளம் காட்டிவிடும்.


************************


இருவேறு காலங்களில் வாழ்ந்த இறுவேறு தமிழ்ப்புலவர்களின் ஒன்றுபட்ட கருத்து. என்னே வியப்பு!!! தொல்காப்பியரை அப்படியே பின்பற்றியிருக்கிறார் வள்ளுவர்.


நன்றி. வணக்கம்.

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Saturday, February 13, 2021

காதற்சிறப்பு

 காதற்சிறப்பு : - நற்காதலன் வள்ளுவன் ❤️


திருக்குறள் : காமம்

களவியல் / காதற்சிறப்புரைத்தல் :


1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

          வாலெயி றூறிய நீர்.


இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்துவரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.


1122. உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன

          மடந்தையொ டெம்மிடை நட்பு.


உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு.


1123. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந்

          திருநுதற் கில்லை யிடம்.


நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!


1124. வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத

          லதற்கன்ன ணீங்கு மிடத்து.


ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்.


1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே

          னொள்ளமர்க் கண்ணாள் குணம்.


ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு.


1126. கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருகுவரார்

          நுண்ணியரெங் காத லவர்.


காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்.


1127. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு

          மெழுதேங் கரப்பாக் கறிந்து.


காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப்பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.


1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட

          லஞ்சுதும் வேபாக் கறிந்து.


சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.


1129. இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே

          யேதில ரென்னுமிவ் வூர்.


கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத்தந்த அன்பில்லதாவர் என்று அவரைக்கூறும்.


1130. உவந்துறைவ ருள்ளத்து ளென்று

          மிகந்துறைவ

          ரேதில ரென்னுமிவ் வூர்.


காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.


                              - நற்காதலன் வள்ளுவன் ❤️


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️


நன்றி. வணக்கம்.



தமிழ் நீடுவாழ்க

தமிழ் நீடுவாழ்க ❤️💪😍


காதொளிரும் குண்டலமும் கைக்குவளை

      யாபதியும் கருணை மார்பின்

மீதொளிர்சிந் தாமணியும் மெல்லிடையில்

      மேகலையும் சிலம்பார் இன்பப்

போதொளிர்பூந் தாளினையும் பொன்முடிசூ

      ளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்

      தாங்குதமிழ் நீடு வாழ்க!”




தமிழ்நாடு தமிழர்க்கே உரியது

தமிழ்நாடு தமிழர்க்கே உரியதுபிறருக்கன்று :


புறநானூறு 51 ஆம் பாட்டு :


பாடியவர் : ஐயூர் முடவனார் (அ) ஐயூர் கிழார்

பாடப்பட்டோன் : பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன் வழுதி.

திணை : வாகை.

துறை : அரச வாகை.

குறிப்பு : 'செம்புற்று ஈயல்போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்' என்னும் செறிவான அறவுரையைக் கூறுவது.




பாட்டு :


நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின்,

மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;

வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு

அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,

‘தண் தமிழ் பொது’ எனப் பொறாஅன், போர் எதிர்ந்து,

கொண்டி வேண்டுவன் ஆயின், ‘கொள்க’ எனக்

கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;

அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே;

நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த

செம்புற்று ஈயல் போல,

ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!


விளக்கம் :

மிகுந்துவரும் வெள்ளத்தை தடுக்கவியலாது. மிகுந்துவரும் தீயைத்தடுக்கக் குடைபிடிக்க முடியாது. மிகுந்துவரும் காற்றை எதிர்த்துநிற்கும் வலிமை யாருக்குமில்லை. வெயிலின் பெருவெளிச்சத்தையும் தடுக்கவியலாது. அதுபோல, வழுதியை எதிர்த்துநிற்க யாருமில்லை. தமிழ்நாடு, எல்லா அரசர்களுக்கும் பொது என்பதை இவன் பொறுத்துக்கொள்ளமாட்டான். தமிழ்நாடு முழுவதும் தனக்கே உரியது எனப்போரிடுவான். கொண்டி (திறை) தரவேண்டும் என்பானாயின் கொடுத்த மன்னர் அச்சமின்றி அரசாளலாம். அவனது அரவணைப்பை இழந்தவர் இரக்கங்கொள்ளத்தக்கவர். புற்றிலிருந்து கிளம்பும் ஈயல் ஒருநாள் வாழ்க்கையில் அழிவதுபோல அவர்களின் வாழ்வு அழியும்.


நன்றி. வணக்கம்.

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Tuesday, February 9, 2021

வழக்குரை காதை

கண்ணகி வழக்குரை காதை :


அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து 

இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே

இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை இழந்தாள் கடையகத் தாளென்று

அறிவிப் பாயே அறிவிப் பாயே 

                                                        - கண்ணகி


அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்

பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி

வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்

அறுவர்க் கிளைய நங்கை இறைவனை

ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்

கானகம் உகந்த காளி தாருகன்

பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்

செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்

பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை இழந்தாள் கடையகத் தாளே

                                                             - வாயிலோன்


நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்

யாரை யோநீ மடக்கொடி யோய்

                                                      - நெடுஞ்செழியன்


தேரா மன்னா செப்புவ துடையேன்

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன் மகனை யாகி

வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு

என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி

கண்ணகி யென்பதென் பெயரே.

                                                        - கண்ணகி


பெண்ணணங்கே

கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று

வெள்வேற் கொற்றங் காண்

                                                - நெடுஞ்செழியன்




நற்றிறம் படராக் கொற்கை வேந்தே

என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே

                                                           - கண்ணகி


தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி

யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே.

                                                  - நெடுஞ்செழியன்


தருகெனத் தந்து தான்முன் வைப்பக்

கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப

மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு

தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்

                                                     - இளங்கோ


பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட

யானோ அரசன் யானே கள்வன் 

மன்பதை காக்குந் தென்புலங் காவல்

என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுள்

                                                      - நெடுஞ்செழியன்


மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்

கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கி

                                                             - இளங்கோ


கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்

                                                           - கோப்பெருந்தேவி


இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி                         

                                                        - இளங்கோ


👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍


சிலம்பு முற்றிற்று.

Thursday, January 28, 2021

ஆட்டுகிடாவின் குருதிகலந்து செந்தினை தூவி முருகவழிபாடு

ஆட்டுகிடாவின் குருதிகலந்து செந்தினை தூவி முருகவழிபாடு - முறுகாற்றுப்படுத்துதல் :

சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
(திருமுருகாற்றுப்படை - 46)

சூர்மருங்கு அறுத்த சுடரிலை நெடுவேல்;
சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை (அகநானூறு - 59)




"சேயோன் மேய மைவரை உலகமும்"
                                           - தொல்காப்பியம்



குருதியொடு தூவெள்ளரிசி பலியிடல்

🌺🌺🌺

குருதியோடு செந்தினை கலந்து பரப்பி முருகியப்பறை முழக்கி முருகாற்றுப்படுத்தும் குறமகள் 🙏🌺🌺🌺🙏


"மதவலி நிலைஇய மாத்தாட் கொழவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி
சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துனையுற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட”

      - திருமுருக்காற்றுப்படை 232 - 248 அடிகள்


பிணிமுகம் - யானை
(யானையை ஊர்தியாகக்கொண்ட முருகன்)









ஆட்டின் குருதிகலந்த தினையைப் பலியாக ஏற்கும் வேலன் :


சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழலினு
மார்வல ரேத்த மேலரு நிலையினும்
வேலன் றைஇய வெறியயர் களனுங்

                           - திருமுருகாற்றுப்படை





செந்தினை குருதியொடு தூவி முருகாற்றுப்படுத்தல் :


களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி,
வளநகர் சிலம்பப் பாடிப்பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய், 
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்
(அகநானூறு 22)



நன்றி. வணக்கம்.

தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Thursday, January 21, 2021

தமிழே இறைமொழி - தெய்வத்தமிழ்

இறைவன் தமிழை ஏற்கமாட்டானா?


சமற்கிருதத்தில் தான் குழமுழுக்கு நடத்தவேண்டுமென்று சமற்கிருதத்தில் எழுதாமல் தமிழில் தான் எழுதுகிறார்கள் அறிவிலிகள். சமற்கிருதத்திலேயே எழுதியிருக்கலாமே, எதற்குத் தமிழில் எழுதவேண்டும்? சமற்கிருதத்திலேயே பேசலாமே? எதற்கு தமிழ் தேவைப்படுகிறது இவ்வஞ்சகர்களுக்கு? ஏன் தமிழைப் பயன்படுத்தவேண்டும்?




ஆரியன், அவன் மொழியில் வணங்கட்டும், தமிழர்கள் தம் தமிழ்மொழியில் வணங்குங்கள். செத்தமொழியிடம் எதற்குக் கடன்வாங்கவேண்டும்? இதுவரை யாரும் இதைச்செய்யவில்லையென்று நீங்கள் மறுப்பீராயின், இனிமேல் தமிழில் செய்வோம்.


ஒழிக ஆரியம், ஒழிக வேதம், ஒழிக செத்தமொழி சமற்கிருதம்.


என்றும் நற்றமிழே வாழ்க.


தமிழில் குடமுழுக்குச் செய்யவேண்டாம் என்று இறைவன் சொன்னால், என்மொழி அவனுக்கு தெரியாதென்றால் அவன் எனக்கு இறைவனே ஆகான். தமிழ்க்குடமுழுக்கை மறுப்பானானால் அவ்விறைவனே வந்துசொல்லட்டும். சொல்வானா எம்மிறைவன்? ஒருக்காலுமில்லை.


ஏனெனில்,


"வண்தமிழ்கொண்டு இன்பமர வல்லார்களைத் தன்னை எய்துவிப்பவன்"

                                      - ஞானசம்பந்தர்


"பண்ணிடைத் தமிழொப்பானவன்"

                                                 - அப்பர்


"நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்தவன் பாடலுக்கு இறங்கும் தன்மையாளன்"

                                           - நம்பியாரூரர்


"தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான்"


"உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின்

துறைவாய் நுழைந்தவன்"

                                           - மணிவாசகர்


"செந்தமிழ் மலர் சூடுபவன்" - சேந்தனார்


"ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவரும்

காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலை சூடுபவன்"

                    - கருவூரார்


"தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறு படைத்தவன்"

                                                - திருமூலர்


"செந்தமிழ் செப்பியவர்களைத் தன்னடியடைவைத்து இன்பம் எய்துவிப்பவன்"

                           -- இறைவனால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்காலம்மையார்.


"ஒண்முத்தமிழ் பயந்தவன்"

                   - நம்பியாண்டார் நம்பிகள்


"அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றவர்"

                                        - தெய்வச்சேக்கிழார்


"சொல்லார் தமிழிசை பாடிய தொண்டன் தனை இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு" என்றவன்"

                                          - தெய்வச்சேக்கிழார்


திருமுறையே சைவநெறிக் கருவூலம்

தென்தமிழின் தேன்பா காகும்

திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்

செவிமடுத்த செந்தமிழ் வேதம்

திருமுறையே நடராசன் கரம் வருந்த

எழுதியருள் தெய்வ நூலாம்

திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்

மலர்ந்தருளும் சிறப்புற்றாமால்.


இப்படிச் சிவநெறியருளாளர்கள் தம்திருவாய்மலர்ந்து தமிழுக்கே இறைவன் செவிசாய்ப்பான் என்று ஐயமற நிறுவியுள்ளனர். இனி எவராவது, இறைவன் தமிழை

ஏற்கமாட்டான் என்று கூறுவாரானால் அவர்களின் நாவையறுத்துத் தீயிலிடுவேன்.


*********

தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏

நன்றி. வணக்கம்

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்